மவுனம்

Posted by அகத்தீ Labels:




  “மவுனம் சம்மதம்”
என யார் சொன்னது ?

பயத்தில் உறைந்து போயிருப்பதாய்
அதனை ஏன் விளங்கிக்கொள்ளக்கூடாது ?

எதிர்ப்பின் மென்மையான வடிவமென
அதனை ஏன் உணர்ந்து கொள்ளக்கூடாது ?

பேசவே பிடிக்கவில்லை
அவ்வளவு வெறுப்பென
ஏன் அர்த்தங்  கொள்ளக்கூடாது ?

எரிச்சலில்
முகங்கொடுத்து பேச மறுப்பதாய்
ஏன் புரிந்து கொள்ளக்கூடாது ?

எல்லா மவுனமும்
ஒரே மாதிரியாக இருக்குமோ ?

மயாண அமைதியும்
தியான அமைதியும்
ஒன்றாமோ ?

வகுப்பறைய மவுனமும்
மருத்துவமனை அமைதியும்
சமமாமோ ?

குழந்தைகளின் ஆரவாரமில்லா
வீட்டின் மவுனம் இனிதாகுமா ?

துப்பாக்கி முனையில்
சாத்தியமாகும் மவுனம்
நிரந்தரமாமோ ?

மவுனம் சம்மதத்தின்
அடையாளம் அல்லவே அல்ல !
புயலின் முன்னோடி
அவ்வளவே ……. 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

0 comments :

Post a Comment