கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை முன் நிறுத்தலாமா ?

Posted by அகத்தீ Labels:






 கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை முன்னிறுத்தலாமா ?


சு.பொ.அகத்தியலிங்கம் . 


1.   வேதத்தில் அறிவியல் கருத்துகள் இருக்கிறது என்றால் கேலி செய்கிறீர்கள் ஆனால் தமிழிலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் உள்ளதெனச் சொன்னால் நெஞ்சை நிமிர்த்துகிறீர்கள் .. ஏன் இந்த இரட்டை நிலை ?


2.   கடவுள் இல்லை என்கிறீர்கள் ! திருக்குறளில் கடவுள் வாழ்த்து உண்டே ! திருக்குறளை மட்டுமே ஏற்பது ஏன் ?

3.   பஞ்சபூதங்களைச் கண்டு சொன்ன நம் பண்டைய தத்துவ ஞானிகளைக் கொண்டாடுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?

4.   முடுக்கு விசை இல்லாமல் எந்தப் பொருள் இயங்கும் ? ஒரு மேசை தானாக நகராது .நாம்தான்  நகர்த்தி வைக்கவேண்டும் – அவ்வளவு பெரிய பூமியை ,சூரியனை . இந்த பிரபஞ்சத்தை இயக்குவது யார் ?வெளி சக்தி இன்றி ஏதேனும் இயக்கம் உண்டோ ? அப்படி இயக்குவிப்பவனே இறைவனென அறியலாகாதோ ? “ அவனின்றி ஓரணுவும் அசையாது” என்பதை நீவீர் உணர்வது எப்போதோ ?

5.   அறிவியல் ரீதியாக மதத்தை , கடவுளை விமர்ச்சிக்கிறவர் நீங்கள் ; முரட்டுத்தனமாகக் கடவுளை எதிர்க்கும் – மத நம்பிக்கையாளர்கள் மனதைப் புண்படுத்தும் – பார்ப்பணர்களை இழிவு படுத்தும் பெரியாரை நீங்கள் முன்னிறுத்தலாமா ? மார்க்ஸும் என்கெல்ஸும் இதைத்தான் கற்றுக் கொடுத்தாரா ?



வழக்கம் போல் கேள்விகள் குறுக்கும் நெடுக்குமாய் போய்க் கொண்டிருக்ககின்றன ; ஒரிடத்தில் கவனத்தைக் குவித்து விவாதம் செய்வது அறிவியல் முறை . ஆனால் இடக்கு மடக்காய் கேள்விகேட்டு மடக்குவதே மதவாதிகள் வழிமுறை .. எது எப்படியிருப்பினும் நாம் ஓயமுடியாது .. கேள்வியும் பதிலுமாய் நம் தேடலைத் தொடர்வதைத் தவிர வேறு வழி கிடையாது.


1] வேதத்தில் அறிவியல் கருத்துகள் இருக்கிறது என்றால் கேலி செய்கிறீர்கள் ஆனால் தமிழிலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் உள்ளதெனச் சொன்னால் நெஞ்சை நிமிர்த்துகிறீர்கள் .. ஏன் இந்த இரட்டை நிலை ?


எப்போதும் எமக்கு ஒரே நிலைதான் ; சமூக அறிவியல் சார்ந்த பார்வை மட்டும்தான் உண்டு .முதலில் அறிவியல் என்பது நேற்று முளைத்த புதிய துறை என எண்ணுவதும் ஒரு வகை மூடநம்பிக்கையே . மனிதன் பரிணமித்த நாள் தொடங்கி இன்றுவரை அறிவியலுக்கு ஒரு தொடர்ச்சி உண்டு . அறிவியலும் தொழில் நுட்பமும் கடந்த இரு நூற்றாண்டுகளாய் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுகிறது . இதனை உள்வாங்கியே பேச வேண்டும் .

பல்லாயிரம் ஆண்டுகளாய் மானுடயினம் போராடிப்போராடி முன்னேறிய ஒவ்வொரு அசைவிலும் அறிவியலின் கூறு நிச்சயம் உண்டு .நெருப்பைக் கண்டுபிடித்தது , சக்கரம் கண்டு பிடிக்கப்பட்டது . விவசாயம் கண்டு பிடிக்கப்பட்டது . எல்லாமே முன்னேற்றமே .முட்டி மோதி விழுந்து இழந்து அனுபவத்தில் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்திருக்கலாம் ;சிலவற்றைப் படைத்திருக்கலாம் . சிலவற்றை கனவு கண்டிருக்கலாம் ஆனால் அவற்றில் அறிவியலின்  கூறுகள் நிச்சயம் இருக்கும் ; காலகதியில் மேலும் பல உண்மைகளை அவர்கள் கண்டு சொல்லியிருக்கவும் கூடும் .

ஆகவே வேதத்திலும் சரி ,பண்டை இலக்கியங்களிலும் சரி இப்படிப்பட்ட சில தெறிப்புகள் தென்படுகின்றன . உலகெங்கிலும் எல்லா புராதன இலக்கியங்களிலும் இக்கூறு நிச்சயம் இருக்கும் .இவற்றை மறுப்பது முரட்டுத்தனம் . ஆனால் அதற்குள்ளேயே எல்லாம் அடக்கம் என்கிற அபத்தமான வாதத்தில்தான் பிரச்சனை .

அண்மையில் ஒரு வார இதழில் இன்றைய அலைபேசியின் முன்னோடி நமது காகபுசண்டர் சித்தர் என எழுதியிருந்தது .அவரின் கற்பனையும் கனவும் இன்றைய அலைபேசியை பெரிதும் ஒத்திருக்கலாம் ஆனால் அலைபேசி அன்று கண்டுபிடிக்கப்படவில்லையே ஏன் ?  நம் புராணங்களில் புஷ்பஹவிமானத்தை கற்பனை செய்திருக்கலாம் – பாட்டி சொன்ன கதைகளில் மாயக் கம்பளமாக கனவு கண்டிருக்கலாம் ; ஆயினும் விமானம் அப்போது உருவாகவில்லையே ஏன் ?பிள்ளையார் தலை பிளாஸ்டிக் சர்ஜரியின் முன்னோடி என  மார்தட்டலாம் ஆனால் அந்தவார்த்தையேகூட இப்போது உருவானது என்பதறிக ! தசாவதாரத்தில் ஒரு பரிணாம வளர்ச்சி கற்பனையுள்ளது . ஆயினும் டார்வின் ஆய்வுக்குப் பிறகே அது அறிவியலாரால் ஏற்கப்பட்டது .மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது . ஏனெனில் கனவும் கடவுள் கதையும் அறிவியலாகாது . அறிவியல் என்பதற்கு நிரூபனம் அவசியம் . சோதனைக்குட்படுத்துவது கட்டாயம் . மேலும் அறிவியல் படைப்புகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் கூட ஓரிரவில் உதித்ததல்ல ; காலகதியில் பலரால் தொடர்ந்து முயற்சிக்கப்பட்டு ; தட்டுத்தடுமாறி வந்தவையே .

கற்பனைக்கு அது எதுவும் தேவை இல்லை . கற்பனையில் தற்செயலாக சில அறிவியல் உண்மை கலந்திருக்கலாம் . ஆயினும் அது அறிவியல் சாதனை என ஒப்ப இயலாது . அறிவியல் கனவு எனக் கொளவது கூட எந்த அளவு சரி என்பதை அறிவியலார்தான் முடிவெடுக்க இயலும் .

எனது பாட்டிகள் இட்லி அவித்தார்கள் ; ஆனால் நீராவி எஞ்சின் கண்டுபிடிக்க 1609 ல் ஸ்பானிஷ் விஞ்ஞானி ஜெரோனிமோ பியோமோண்ட் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது . அப்போதும் அது செயலுக்கு வரவில்லை .1698ல் தாமஸ் சேவரி முயற்சித்தார் எனினும் 1791ல் ஜேம்ஸ் வாட் முயற்சிக்கு பின்னரே அது நீராவி எஞ்சின் ஆனது .ஆக ஜெரோனிமொ தொடங்கி ஜேம்ஸ் வாட் வரைகூட ஏறத்தாழ 182 வருடங்கள் எவ்வளவு முயற்சிகள் .. விபரங்கள் சேகரித்தால் அதுவே ஒரு நூலாகும் . ஜேம்ஸ் வாட் வெற்றிக்கு முன்னதாக இடலி அவிக்க நீராவியைப் பயன்படுத்திய பாட்டியின் அனுபவ ஞானம் தொடங்கி – அவருக்கு முன்னே முயன்றவர்கள் வரை அனைவரின் தோள்மீது ஏறிஅமர்ந்துதான் ஜேம்ஸ் வாட் பார்த்தார் . அறிவியல் என்பது ஒரு தொடர் முயற்சி .கனவும் கற்பனையும் கூட அதனை உசுப்பி விட்டிருக்கலாம் .அதில் வேதமும் விலக்கல்ல – தமிழ் இலக்கியமும் விலக்கல்ல – பாட்டி கதைகளும் விலக்கல்ல .

பிரச்சனை என்னவேனில் கனவும் கற்பனையும் மட்டுமே அறிவியல் அல்ல . அங்கேயே நின்று போகாமல் தொடர்ந்து பயணித்தவர்களின் உழைப்பும் தேடலுமே அறிவியல் சாதனைகள் . இதனைப் புரியாமல் நான் புறப்பட்ட இடத்திலேயே நின்று கொள்கிறேன் . அங்கேயே எல்லாம் இருக்கிறது என வாதிடுவது வறட்டுத்தனம் . நடைமுறை சாத்தியமற்றது . வேதத்தில் எல்லாம் இருக்கிறது என மதவெறியோடு கூக்குரலிடும்போது அதற்குப் பதிலளிக்கிறோம்; இதன் பொருள் இனம் சார்ந்தோ – மொழி சார்ந்தோ இப்படி எழும் கூக்குரலை அங்கீகரிக்கிறோம் என்பதல்ல . எதுவுமே நம்மிடம் இல்லை என்பது எவ்வளவு  அறியாமையோ ; அதேபோல் எல்லாமே நம்மிடம் ஏற்கனவே இருக்கிறது என்பதும் அறியாமையே .நம் நாடும் உலக அறிவியல் கருவூலத்திற்கு தனக்குரிய பங்கை கூடுதலகாவோ குறைவாகவோ செலுத்தியிருக்கிறது ; பெற்றும் இருக்கிறது .இதனை அறிவியலார்தான் எடை போடவேண்டும் ; மதவெறி அரசியல் அளவுகோல் கொண்டல்ல என்பதே எம் வாதம் .



2] கடவுள் இல்லை என்கிறீர்கள் ! திருக்குறளில் கடவுள் வாழ்த்து உண்டே ! திருக்குறளை மட்டுமே ஏற்பது ஏன் ?

நேற்றின் தொடர்ச்சிதான் இன்று . இன்றின் தொடர்ச்சிதான் நாளை . நம் முன்னோர்களை முட்டாளாக்கிவிட்டு நாம் அறிவாளி எனக் கிரீடம் சூடிக்கொள்ள இயலாது . அதே போல் அவர்கள்  சொன்னார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் அப்படியே ஏற்க வேண்டிய அவசியமும் இல்லை . அறம் . பொருள் ,இன்பம் என முப்பால் வகுத்து வாழ்வியல் கூறுகளை மிக நுட்பமாக வள்ளுவன் சொல்லியிருக்கிறான் . “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.” என சாதியத்தை மீறிய அவனது சிந்தனை உயர்ந்தது ;  “ எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்” அதில் மெய்ப்பொருள் காணச் சொல்லிஅறிவின் முகவரியை அடையாளம் காட்டியவன் – அதிலும் சந்தேகிக்கிறவன் நரகிற்குப் போவான் என மதவாதிகள் மிரட்டிய காலத்தில் மெய்ப்பொருள் தேடெனச் சொன்னது முன்னோக்கி செலுத்துவதன்றோ! . விசும்பின் துளிவீழின்அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிதென இயற்கையோடு இயைந்தவன் வள்ளுவன் ,இடனறிதல் , காலமறிதல் ,வலியறிதல் , இனியவை கூறல் , சொல்வண்மை , உழவு  ..இப்படி குறளில் பெரும்பகுதி காலத்தை மீறி நிற்கும் வாழ்வியல் ஞானமாகும் ஆகவேதான் குறளைப் போற்றுகிறோம் ; தோள் மீது சுமக்கிறோம் . அதே சமயம் வள்ளுவனும் அவன் வாழ்ந்த காலத்தின் படைப்பே . அக்காலத்தில் ஆதிக்கம் செலுத்திய கருத்துகளின் சில அவனிடத்திலும் பிரதிபலிக்கவே செய்யும் . கடவுள் நம்பிக்கை மிகுந்த சமூகத்தின் பிரதிநிதியே அவன் . அவனிடம் கடவுள் வாழ்த்து வெளிப்பட்டதில் வியப்பில்லை ஆயினும் அதில் மதவெறியோ  துவேஷமோ எதுவும் இல்லை ; அவன் பொதுவாகவே சித்தரித்தான் . பின்னர் வந்த உரையாசிரியர்கள் அவனைச் சைவ , சமண சிமிழுக்குள் அடைக்க முயன்றனர் .ஒருவேளை அவன் அப்படி இருந்திருக்கவும் கூடும் .இப்போது இந்துமதவெறியர் அவர்களின் குடுவைக்குள் அடைக்க முயலுகின்றனர் ;அனைத்தையும் மீறித்தான் வள்ளுவன் பொதுமறையாய் எழுந்து நிற்கிறான் .இந்நிலையில் வள்ளுவனை உயர்த்திப்பிடிக்க அவனது கடவுள் வாழ்த்து ஒருபோதும் குறுக்கீடாக முடியாது . வள்ளுவன் சொன்னதிலும் காலத்திற்கு ஒவ்வாத சில கருத்துகள் இருக்கிறது என்பதை பெரியார் பகீரங்கமாகவே சொன்னார் . குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் எனச் சொன்ன குறள் அவனுக்கும் பொருந்தும் ; ஆகவே வாழ்வியல் ஞானம் ஓங்கி நிற்கும் குறளைப் போற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்.



3 ] பஞ்சபூதங்களை கண்டு சொன்ன நம் பண்டைய தத்துவ ஞானிகளைக் கொண்டாடுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?

மேலே உள்ள கேள்விகளின் தொடர்ச்சிதான் இது . இந்திய தத்துவ ஞானமும் தமிழக தத்துவ ஞானமும் மிகுதியும் பொருள் முதல் வாதம் சார்ந்தவை என தொடர்ந்து கூறி வருகிறோம் . அதில் பஞ்சபூதங்களே அனைத்துக்கும் அடிப்படை என கண்டு சொன்னதும் அடங்கும் .அன்றைய அறிவியல் சூழலில் அப்படி கண்டு சொன்னதே மகத்தான புரட்சி .தமிழ் காப்பியமான “ நீலகேசி” காட்டும் பூதவாதி பஞ்சபூதங்களே மெய்ப்பொருள் எனக்கொண்டாடுவான் ; மேலும்

“ ஐந்தும் கூடி அறிவு இன்பம் ஆதியாய்
வந்து தோன்றி மது மயக்கும் ஆற்றலின்
நந்தி நாளும் குடர் சுடர் நாட்டம் போல்
சிந்தினால் அவை சென்று இனம் சேருமே”

மா முதலிய ஐந்து பொருட்களினால் வடிக்கப்பட்ட மதுவிலே போதை உண்டாவது போல் ; ஐந்து பூதங்கள் கூடும் போது அறிவு இன்பம் பிறக்கிறது . வளர்கிறது . கவிழ்ந்தால் குடமும் குடத்திலிட்ட விளக்கும் அழிவது போல் அழியும் . அவையவை அந்தந்த பூதங்களோடு கலக்கும் என்கிறார் .

அன்றே இவ்வளவு தெளிவாய் யோசித்தது வியப்பளிக்கிறது . இன்று இப்புரிதல் மேலும் மேலும் மேம்பட்டிருக்கிறது .இப்படி ஐம்பூதங்களை அடையாளா கண்ட பூதவாதிகள் அல்லது பொருள் முதல் வாதிகள் போற்றுதலுக்கு உரியோரே !

இவர்கள் பஞ்ச பூதங்களை பூஜிக்கவில்லை மாறாகப் புரிந்து கொள்ள முயன்றனர் . இந்த அணுகுமுறை அறிவியலுக்கு உகந்ததே ! பஞ்ச பூதங்களை பூஜிக்கும் வைதீக மரபைத்தான் நாம் கேள்வி கேட்கிறோம். நிராகரிக்கிறோம். பஞ்ச புதங்களை புரிந்து செயல்படும் பகுத்தறிவு மரபைப் போற்றுகிறோம் . முன்னெடுக்கிறோம்.


இன்று நீர் என்பது ஹெச் டூ ஒ அதாவது ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்சிஸன் ஒரு பங்கும் என்கிற புரிதல் வந்த பின் ; நீர் , நிலம் ,நெருப்பு, ஆகாசம் , காற்று இவைகளின் உள்ளீடாய் உள்ள அணுக்கள் மட்டுமல்ல அதினும் நுணுகி குவார்க்குகள் .துகள்கள் , நியூட்டிரினோ என இயற்பியல்ஆய்வுகள் மேலும் நுட்பமாய் முன்னேறிக்கொண்டிருக்கின்ற நிலையில் பஞ்ச பூதங்கள் என்பது கூட பழம் பார்வையாகிவிட்டதெனில் மிகை அல்ல . நான் விஞ்ஞானி அல்ல ; எனவே இதற்கு மேல் அறிவியலை சொல்வது பிழைகளுக்கு வழியாகுவிடும் .

ப.கு.ராஜன் எழுதிய  “புரட்சியில் பகுத்தறிவு : மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்” புத்தகத்தையோ அது போன்ற நூல்களையோ தேடி வாசியுங்கள் .

ஒன்றை உறுதியாகச் சொல்ல இயலும் அறிவியல் வளர்ச்சி புரிதலை ஆழப்படுத்தியிருக்கிறது அகலப்படுத்தியிருக்கிறது எனினும் நா.வானமாமலை சொல்வது போல ; “ இந்திய தத்துவ வாதிகளில் மிகப்பலர் நாத்திகக் கொள்கை கொண்டவர்கள் .அவர்களுடைய தத்துவத்திறன் உலகிலேயே சிறந்தது .உலக நாத்திக இலக்கியத்தில் இந்திய தத்துவத்தின் பங்கு முக்கியமானது . இன்றுகூட இந்திய நாத்திக வாதிகளின் தருக்க ரீதியான வாதங்களுக்கு கடவுள்வாதிகள் பதில் சொல்வது மிகக்கடினம்.”

4] முடுக்கு விசை இல்லாமல் எந்தப் பொருள் இயங்கும் ? ஒரு மேசை தானாக நகராது .நாம்தான்  நகர்த்தி வைக்கவேண்டும் – அவ்வளவு பெரிய பூமியை ,சூரியனை . இந்த பிரபஞ்சத்தை இயக்குவது யார் ?வெளி சக்தி இன்றி ஏதேனும் இயக்கம் உண்டோ ? அப்படி இயக்குவிப்பவனே இறைவனென அறியலாகாதோ ? “ அவனின்றி ஓரணுவும் அசையாது” என்பதை நீவீர் உணர்வது எப்போதோ ?

மிக நுட்பமான வாதம் . இதற்கு நா.வானமாமலை கூறிய விளக்கம் மிகச் சரியாக வழிகாட்டுக்கிறது .” இவ்வுலகம் அடிப்படையில் பொருட்களால் ஆனது . பொருட்களிலே உள்ளார்ந்து இருக்கும் நியதிகளால் பொருள் – இயக்கம் தோன்றுகிறது . ‘ அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்ற கடவுளை நம்புவோரின் கூற்றை ‘ அணுக்கள் தங்களுடைய சக்தியினாலேயே அசைகின்றன’. ‘அவனது’ தலையீடு அவசியமில்லை என நவீன அணுவியல் நிரூபித்துள்ளது . பலிகளாலும் , காணிக்கைகளாலும் ,ஜபங்களாலும் , பிரார்த்தனைகளாலும் மாற்ற முடியாத விஞ்ஞான விதிகளுக்கு உட்பட்டே பிரபஞ்ச இயக்கம் நிகழ்கிறது என்றோ - இதனால் மனிதன் விஞ்ஞான விதிகளின் கைகளில் ஒரு பந்து போல எவித சுதந்திரமும் அற்றவன் என்றோ இதற்குப் பொருளல்ல ; ‘ விஞ்ஞான விதிகளை மனிதன் அறிய முடியும்; அறிந்து அவ்வறிவால் பொருள்களின் இயக்கத்தை நெறிப்படுத்த இயலும்’ என்று விஞ்ஞானம் வெளிப்படுத்தியுள்ளது . இன்று எத்தனை சக்திகள் விஞ்ஞான விதிகளை அறிந்ததால் அவனுக்கு பணிபுரிகின்றன .” நவீன உலகில் அறிவியல் பல்வேறு கிளைகளைப் பரப்பி வளர்வதின் அடிப்படை இதுவன்றோ .

இன்று நேற்று அல்ல அந்த காலத்திலேயே – பன்னெடுங்காலத்துக்கு முன்பே  சாங்கியர்கள் உலக இயக்கத்திற்கு கடவுளைக் காரணமாக்காமல்  பொருள் தன் இயற்கையால் மாற்றமடைகிறது என்றனர் . 

“தயார் நிலையிலிருக்கும் பொருட்களின் சிக்கலான கலவையாக இந்த உலகத்தைப் புரிந்து கொள்ளக்கூடாது ; மாறாக நிகழ்முறைகளின் ஒரு கலவையாகக் கொள்ளவேண்டும்.” என்பார் ஏங்கல்ஸ் .

சில நாத்திகவாதிகள் இந்த உலகத்தை , நம் உடலை ஒரு இயந்திரத்தோடு ஒப்பிடுவர் . ஆனால் உண்மை அதுவல்ல . இயந்திரமெனில் அதனை இயக்கும் ஆரம்ப உந்து விசை அல்லது முடுக்குவிசை எதுவென கேள்வி எழவே செய்யும் ; அதன் விளைவு ‘ அனைத்தின் மீதான ஒரு சக்தி அல்லது ஒருவன்’ என்கிற கடவுள் வாதத்தில் இறுதியில் தள்ளிவிடும் .பல நாத்திகர்கள் தடுமாற்றத்திற்கு இந்த அணுகுமுறை காரணமாகிவிடுகிறது .


எங்கெல்ஸ் குறிப்பிடுவார் , “ இயக்கம் பருப்பொருளின் இருத்தல் முறையாகும் . இயக்கமில்லாமல் பருப்பொருள் எங்கும் எப்போதும் இருந்ததில்லை .இருக்கவும் முடியாது .அண்டவெளியில் இயக்கம் பல்வேறு விண்வெளிப் படிமங்கள் மீதான சிறு திரள்களின் யாந்தீரிக இயக்கம் - வெப்பம் அல்லது மின் அல்லது காந்த ஓட்டங்கள்  - வேதியல் இணைவு அல்லது சிதைவு அல்லது உயிரிப் பொருள்கள்
எனக்குறிப்பிட்ட ஒவ்வொரு தருணத்திலும் ; உலகிலிருக்கும் பருப்பொருளின் ஒவ்வொரு அணுவும் இயக்கத்தில் இந்த வடிவங்களில் ஒன்றில் அல்லது மற்றதில் அல்லது ஒரே நேரத்தில் பலவடிவங்களில் இருந்து வருகிறது . ஓய்வு அனைத்தும் ,சமன் நிலை அனைத்தும் ஒப்பீட்டளவில் மட்டுமே .” என்கிறார் . இதனை இனி வரும் உரையாடல்களில் இன்னும் நுட்பமாய் பார்க்கலாம் .

இருட்டில் நடக்கிறோம் என யாரும் கண்ணை மூடிக்கொண்டு நடப்பதில்லை . ஏனெனில் இருட்டு என்பது ஒப்பீட்டளவில் குறைந்த வெளிச்சமே என்கிற அறிவியல் விளக்கம் தெரியாதவராக இருப்பினும் அனுபவ அடிப்படையில் கண்ணை திறந்தபடி நடப்போம் . சற்று நேரத்தில் இருட்டில் கூட கொஞ்சம் வழி புலப்படும் . அதுபோலவே அனைத்தையும் அறிய முயலுங்கள் கைக்கூடும் .


5] அறிவியல் ரீதியாக மதத்தை , கடவுளை விமர்ச்சிக்கிறவர்கள் நீங்கள் முரட்டுத்தனமாகக் கடவுளை எதிர்க்கும் – மத நம்பிக்கையாளர்கள் மனதைப் புண்படுத்தும் – பார்ப்பணர்களை இழிவு படுத்தும் பெரியாரை நீங்கள் முன்னிறுத்தலாமா ? மார்க்ஸும் என்கெல்ஸும் இதைத்தான் கற்றுக் கொடுத்தாரா ?

இந்தக் கேள்வி மிகுந்த முக்கியத்துவம் உடையது ; எதிர் தரப்பினர் மட்டுமல்ல சில நேரங்களில் நண்பர்களும் இக்கேள்வியை எழுப்புகின்றனர் .

 லெனின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக பார்த்தால் அவர் தொழிலாளிவர்க்கத்திற்கு தத்துவ [நாத்திக ]போதனை செய்யாததால் ஏற்படும் விளைவுகளை எச்சரித்துள்ளார் . இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் உரையாடும்போது நாத்திக பிரச்சாரத்தை வற்புறுத்தியுள்ளார் .
சோவியத் நாட்டில் புரட்சி நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னே  1922ல் மதக்கருத்துகளை எதிர்த்து நாத்திகத்தைப் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டியதை வலியுறுத்தினார் . மதக் கருத்துகளினால் மக்கள் மனம் இறுகிக்கிடப்பதையும் ; அதனால் புதிய மனித நேயமோ முற்போக்கு சிந்தனையோ வளராமல் தடைபடுவதையும் சுட்டிக்காட்டினார் . புரட்சிக்கு முன்பும் பலமுறை இதனை தெளிவு படுத்தியிருப்பினும் புரட்சிக்குப் பின் இன்னும் அழுத்தமாய்ச் சொன்னார் .

 “ எல்லா மொழிகளிலும் இப்பொருள் பற்றி – நாத்திகம் பற்றி எழுதப்பட்டிருக்கும் நூல்களை எல்லாம் கவனமாகப் படித்து ; அவற்றிலிருக்கும் முக்கியமான கருத்துகளை விமர்சனம் செய்தல் வேண்டும் ; அல்லது மதிப்புரை எழுதவேண்டும்” என்றார் லெனின். தன் நாட்டிலே மட்டுமே தத்துவம் உள்ளது என வெத்து பெருமை பேசாமல் – மார்க்சியம் எல்லாம் சொல்லிவிட்டது என சுயதிருப்தி கொள்ளாமல் ; பிறநாட்டார் சிந்தனைகளையும் கொண்டு சேர்க்கச் சொன்னார் ; ஏனெனில் அவர் மெய்யான மார்க்சிஸ்ட் .

இதைச் சொன்னதும் பார்த்தீர்களா ! பார்த்தீர்களா! லெனின் விமர்சனத்தோடுதானே எழுதச் சொன்னார் – அதுவும் கவனத்தோடு என்று நண்பர்கள் குதிக்கக்கூடும் .இன்னும் படியுங்கள் ;

 “எங்கெல்ஸ் தமது காலப் புரோலிட்டேரியன் தலைவர்களுக்கு . 18 ஆம் நூற்றாண்டின் தீவிர நாத்திக நூல்களை மொழிபெயர்க்கும்படி ஆலோசனை கூறினார் .18- வது நூற்றாண்டின் தீவிரமான புரட்சிவாதிகளின் எழுத்துகளில் அறிவியல் பூர்வமற்ற கருத்துகளும் , அப்பாவித்தனமான வாதங்களும் மிகுதியாக உள்ளன . ஆயினும் இவற்றையெல்லாம் சுருக்கி , அடிக்குறிப்புகள் கொடுத்து, அறிவியல் பூர்வமான மதம் பற்றிய விமர்சனங்கள் எழுதவேண்டும் .18ஆம் நூற்றாண்டில் முன்னேற்றம் கண்டிருந்த மத எதிர்ப்புக் கருத்துகளைச் சுட்டிக்காட்ட தற்காலத்திய பதிப்பாளர்களுக்கு தடை விதிக்கவில்லை.”

இப்படி கூறியதோடு நில்லாமல் லெனின் தொடர்ந்து சொல்வதுதான் கேள்விக்கு பதிலாய் அமைகிறது ;

கோடிக்கணக்கான மக்கள் [ முக்கியமாக விவசாயிகளும் தொழிலாளர்களும் ] எழுத்தறியாமையிலும் . மதப்பிரச்சாரங்களிலும் மூடத்தனத்திலும் ஆழ்ந்து கிடக்கும் பொழுது , மார்க்சிய கல்வி எனும் அறிவொளி பாயச் செய்யலாம் என்று மார்க்சியவாதிகள் கருதினால் அது பெரும் தவறாகும் .இம்மக்கள் பெருங்கூட்டத்திற்கு பல்வேறுவிதமான நாத்திக எழுத்துகளை அளித்தல் அவசியமானது .வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலிருந்து உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் .அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் நாம் அவர்களைச் சந்திக்கவேண்டும்.மத மயக்கத்தினின்றும் அவர்களை விழிப்புறச் செய்ய வேண்டும்.அவர்கள் எழுச்சிபெறச் செய்வதற்கு பல்வேறு முறைகளைக் கையாளவேண்டும்.” எனவும் தெளிவாகச் சொன்னார் .

இன்றைய இந்திய , தமிழகச் சூழ்நிலைகளில் பெரியாரும் , அம்பேத்கரும் விழிப்புணர்வுக்கு மிகமிக அவசியமானவர்கள் . அதிலும் மதவெறியும் பாசிசமும் கவ்வும் அரசியல் சூழலில் இவர்களை முன்னிறுத்துவது மார்க்சிஸ்ட்டுகளின் கடமையாகும் . இவர்களின் பேச்சும் எழுத்தும் செயல்களும் இன்றைய சூழலை எதிர்கொள்ள வலுதரும் என்பதை மார்க்சிஸ்ட்டுகள் உணர்ந்தே செயல்படுகின்றனர் . இது பிழையல்ல ; மிகச்சரியான வழி .

“ மார்கஸ் எங்கல்ஸ் இவருடைய  முக்கியமான நூல்களை நாம் [ ரஷ்ய மொழியில் ] மொழி பெயர்த்துள்ளோம் . பழமையான நாத்திகம் . பழமையான பொருள் முதல் வாதம் . இவற்றிற்கு மார்க்ஸும் எங்கல்ஸும் அளித்த பிழைதிருத்தங்கள் மக்கள் மனதைக் கவராமல் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை . மார்சிஸ்ட்டுகளாய்த் தங்களைக் கருதிக்கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுவதில்லை . அறிவு வளர்ச்சி பெறாத மக்கள் மதப் பிரச்சனைகள் பற்றி ஒரு அறிவுக்கூர்மையான போக்கை உண்டாக்கவும் – மதம் பற்றிய அறுவுக்கூர்மையான விமர்சனம் செய்ய மக்கள் கற்றுக்கொள்ளவும் ; ஓர் எழுச்சியை உண்டாக்குவது தமது கடமை என்று கம்யூனிஸ்ட்டுகள் உணரவேண்டும்”

இதனை நன்கு உள்வாங்கியதால்தாம் தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகள் , மார்க்சிஸ்ட்டுகள் பெரியாரையும் , அம்பேத்கரையும் தோளில் சுமக்கிறார்கள் . இது காலத்தின் கட்டளை அல்லவா
….

நன்றி : தீக்கதிர் வண்ணக்கதிர் இணைப்பு 23-08-2015




0 comments :

Post a Comment