விவாதத்தின் நோக்கம் என்னவோ ?

Posted by அகத்தீ Labels:
விவாதத்தின் நோக்கம் என்னவோ ?

சு.பொ.அகத்தியலிங்கம்எந்த தொலைகாட்சி அலைவரிசையை திருப்பினாலும் மகாபாரதத் தொடர் ஒலிபரப்பாகிறது . ஒருவர் ஆயிரக்கணக்கான பக்கங்களில் மகாபாரத்தைத்தை எழுதுகிறார் . கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என ஒரு பாஜக அமைச்சர் பேசுகிறார் . இந்துத்துவ அணிதிரட்டலின் பாகமாகவே மகாபாரதம் தூக்கிப்பிடிக்கப்படுகிறது . இந்த அரசியல் சூழ் நிலையில் பழ.கருப்பையா இந்நூலை எழுதியுள்ளார் . இவர் அ இ அ தி மு க வின் சட்டமன்ற உறுப்பினர் . அந்தக் கட்சியோ திராவிட சித்தாந்தத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டது . மூடநம்பிக்கைகளை முதன்மைப்படுத்துவதில் இக்கட்சி பாஜகவுடன் ஒரு போட்டியாளராகவே களத்தில் நிற்கிறது .இதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் இந்துத்துவாவிற்கு வக்காலத்து வாங்கத் தவறுவதில்லை . இப்பின்னணியில் இந்நூலை இப்போது பழ . கருப்பையா ஏன் எழுதினார் என்கிற ஐயம் வலுவாகவே எழுகிறது .

இந்த நூல் மகாபாரதக் கதையை அப்படியே சொல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் கோணத்தில் விமர்சனபூர்வமாக அணுகி இருப்பது பாராட்டுக்குரியது ; அவரது கோணத்துடன்  முழுவதும் நம்மால்  உடன்பட முடியாது  ;எனினும் மகாபாரத்தத்தை  பழ .கருப்பையாவிமர்சனத்துக்கு  உட்படுத்தியிருப்பது நன்று .தமிழ் நடை இனிது ; வாசிக்கத் தூண்டுகிறது . முதல் அத்தியாயத்தில்  “ பாஞ்சாலி ஒரு அரசியல் மனைவி” என்ற  தலைப்பே ஒரு செய்தியைச் சொல்லும் . இந்த அத்தியாயத்திலும் நூல் நெடுகிலும் பாஞ்சாலியையும் அவர் மாமியார் குந்தியையும்  “அரசியல் பெண்டிராகவே” சித்தரிக்க முயன்றிருக்கிறார் நூலாசிரியர் . அதுமட்டுமல்ல பாஞ்சாலி விரும்பி அரசியல் அதிகார ம் மோகம்கொண்டு திட்டமிட்டுத்தான் ஐவரையும் மணக்கச் சம்மத்தித்தாள் என்றும்  ; அரசதிகாரம் பெற  ஆறாவதாகக் கர்ணனைக் கூடவும் தயாராக இருந்தாள் என நூலாசிரியர் நிறுவுகிறார் . அது அவரின் கோணம் . ஆனால் அது ஆணாதிக்கம் சார்ந்ததே என்பது என் கருத்து . பெண்ணிய நோக்கில் பாஞ்சாலியின் உள்ளக் கொந்தளிப்பை அவதானிக்க பழ.கருப்பையா தவறிவிட்டார் என்பதே என் கருத்து .

நண்பர் பழ.கருப்பையா 71 வது பக்கத்தில் முனிவர் மாண்டவியர்  இட்ட சாபத்தை விவரித்துள்ளார்  . அதில் “ நீ பிறந்த யோனியின் காரணமாக ஆட்சி உனக்கு மறுக்கப்படும்  “ என்று சரியாக ஒரு செய்தியைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ;. சூத்திரச்சியின் வயிற்றில் பிறந்ததால் விதுரனுக்கு நியாயமாக வந்து சேரவேண்டிய சக்கரவர்த்தி சிம்மாசனம் மறுக்கப்படுகிறது .இதனையும் பழ.கருப்பையா சுட்டியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது . இதே கருத்தை ஒட்டியும் - பிஷ்மரின் சாதி அகம்பாவத்தை தோலுரித்தும்  - அதுவே மகாபாரத யுத்தத்தின் அடிநாதம் என்பதை சார்ந்தும்  “ மகாபாரதத்தில் பெண்ணியம்” எனும் ஒரு நாடக நூல் இந்தியில் வெளிவந்தது .தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அலைகள் வெளியீடாகவும் வந்தது . அதுபோல் நூலாசிரியரும் முயன்றிருப்பின் நன்கு கனிந்திருக்கும் . ஆனால் நூலாசிரியர் பழ.கருப்பையா பார்வை  பெண்ணின் உளவியலைப் பற்றி கிஞ்சிற்றும் சட்டை செய்யாத ஆணின் பார்வையாகவே உள்ளது .

இந்நூலில் எனக்கு இரண்டு கூறுகள் சரியாக வந்துள்ளன . முதலாவதாக இந்நூலுக்கு  பெரிய இறைத்தன்மை பூசி இந்துத்துவ வலையில் உடனடியாக விழாமல் புனைக்கதையாகவே – கற்பனைப்படைப்பாகவே பார்த்திருப்பதும் ; அதுவும் ஆயிரம் ஆண்டுகளில் பலரால் ஊதி ஊதி இப்படி பெரிதாக்கப்பட்டிருக்கும் எனக் கூறுவதும் ;புசிய மித்திரன் காலத்தில் வர்ணாஸ்ரமத்தைப் பாதுகாக்க இடைசெருகலாக எழுதிச் சேர்க்கப்பட்டதே பகவத் கீதை என்று உறுதி செய்வதும் முதலாவது இந்நூலின் நல்லகூறாகும் . இது ஏற்கெனவே பல நல்லறிஞர்கள் ஆய்ந்து உறுதி செய்த செய்திதான் எனினும் இதனை இந்நூலாசிரியரும் முன்மொழிந்திருப்பது பாராட்டுக்குரியது .

அடுத்து பகவத கீதை குறித்த பழ.கருப்பையாவின் விமர்சனமும் பாராட்டுக்குரியதே ! அதில் ராசாசியும் பாரதியும் கூட கீதையின் வர்ணாஸ்ரம சார்பை பார்க்கத்தவறிவிடதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதும் பொருத்தமானதே ! மொத்தத்தில் கீதை வர்ணாஸ்ரம தர்மத்தைக் காப்பாற்ற புனையபட்டதே என உறுதியாக நிறுவுகிறார் . இந்த இடத்தில் முன் அத்தியாயம் ஒன்றில் சொன்ன  தருமவியாதன் கதையை நினைவூட்டி அதுவும் வர்ணாஸ்ரமத்தைக் காக்க சொருகப்பட்ட இடைச் செருகல் என்கிறார் . இந்தவகையில் பழ.கருப்பையா கீதையை விமர்சனம் செய்திருப்பது நல்லதே ; ஆயினும் கீதையில் பெண்களை பாவயோனியில் பிறந்தவர்களென இழிவு செய்வதை இவர் கவனிக்க வில்லையா ? கண்டு கொள்ளவில்லையா ? மகாபாரதமே சாதிய படிநிலையை பாதுகாக்கும் புனைவே என்பதை இவர் போகிற போக்கில் சொல்லி இருக்கிறாரே தவிர குவிமையப்படுத்தவில்லை . அதனையும் சேர்த்தே இவர் நிறுவி இருப்பின் நன்றாக இருந்திருக்கும் .

எது எப்படி ஆயினும் மேற்கூறிய இரண்டு கூறுகளில் இந்நூல் பாராட்டத்தக்கது . தருமவியாதன் கதையை இங்கு வாசகருக்காக சிலவரிகளில் சொல்வது அவசியம் . கெளசிகன் என்ற பார்ப்பனன் தவம் செய்யும் போது அவன் தலையில் எச்சமிட்ட கொக்கைப் பார்வையாலேயே எரித்தாராம் ; ஆனால்  அவர் பிச்சை எடுக்க ஒரு பாப்பாத்தி வீட்டுக்குச் சென்றபோது அந்தப் பத்தினிப்பெண் தாமதமாக வந்ததால் கோபமுற்று அவளை கண்ணால் எரிக்க முயன்றாராம் ; முடியவில்லையாம் . அவள் கற்புநெறி அவளைக் காத்துவிட்டதாம் ; அப்போது அவள் கேட்டாளாம் , ”கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா”  சரியான புரூடா .. பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்த ஒரு கதை . இதனை நூலாசிரியர் கண்டு கொள்ளவில்லை . நாமும் வாதத்துக்காக இப்போது அதனை விட்டுவிடுவோம் . கதையின் முக்கிய பகுதிக்குச் செல்வோம் . அந்தப் பெண் அவரிடம் மிதிலையிலுள்ள தர்மவியாசனிடம் போய் உபதேசம் பெறச் சொன்னாளாம் . யார் அந்த தர்மவியாசன் ? அவன் முனிவனல்ல ; அவனுக்கு ஆசிரமம் எதுவும் கிடையாது . அவன் கசாப்புக்கடை வைத்திருப்பவன் . அவனிடம் இவர் அறிந்தது என்ன தெரியுமா ? அவரவர் குலத்தொழிலை செய்வதே உயர்ந்த தர்மமாம் . அதன்படி ஒழுகுவதாலேயே அவனுக்கு அப்படிப் புகழாம் . குலத்தொழிலை செய்வதே உத்தமமாம் .எவ்வளவு அயோக்கியத்தனம் பாருங்கள் ! இதனை பழ.கருப்பையா சாடியிருப்பது நன்று .

அறம் காலந்தோறும் மாறும் தன்மையுடையது என்பதில் நூலாசிரியருக்கும் உடன்பாடு ஆயினும் அதனையும் சொல்லிச் செல்கிறார் அவ்வளவே !  “ தருமம் வெல்ல எத்தனை அதருமங்கள் “ “ பழிக்கு பழியே உந்துவிசை” என்கிற மைய அச்சிலேயே இந்நூல்சுழல்கிறது . ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு நியாயம் இருக்கிறது என்பதே மகாபாரதம்  நெடுக புதைதுள்ள சேதி என்கிறார்  தருமன் , பிஷ்மர் , துரியோதனன், கர்ணன்  என ஒவ்வொருவருக்கும் உள்ள சிறந்த பண்புகளையும் இழிந்த கூறுகளையும் சேர்த்து பட்டியலிடுகிறார் மகாபாரத்தை புரிய இந்த விவாதங்கள்  உதவலாம் . சில இடங்களில் மார்க்சியம் கூறும் சமூககாலகட்டம் உள்ளிட்ட சமூக அளவுகோலை தன் வாதத்துக்கு துணையாகச் சொல்லிடினும் இறுதியில் 287 வது பக்கத்தில் முடிவாக சோஷலிச அமைப்பு மீதும் அவநம்பிக்கையை விதைக்கிறார் .

எது எப்படி இருப்பினும் இவர் தமிழ்நடையில் சொக்க முடிகிறதே தவிர - இவர் மகாபாரத்தை நன்கு வாசித்துள்ளார் எனக் கூறமுடிகிறதே தவிர  - இந்நூல் கூர்முனையாய் எதைநோக்கி நகர்கிறது என்பது கடைசிவரை தெளிவாகவே இல்லை . இவர் தினமணி வைத்தியநாதனிடம் முன்னுரை பெற்றிருப்பதும் ; சோவுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி அவரிடம் முன்னுரை பெற இயலாததை பதிவு செய்திருப்பதும் தற்செயலானதே என நம்புவோமாக!திராவிட இயக்கம் சார்ந்த அரசியல் கலாச்சாரத்தை இவர் இந்நூலில் பொருத்தம் இல்லாவிடினும் நுழைத்து நையாண்டி செய்திருப்பதும் ; அதே சமயம் வாய்ப்பு நிறைய இருந்தும் இந்துத்துவா மதவெறி அரசியலை ஜாடையாகக்கூட  - மெலிதாகக் கூட கண்டிக்காததும் தற்செயலானது எனக் கூறயியலுமா ? சாதி பாகுபாட்டை இந்நூலில் விமர்சத்திருப்பினும் தருமபுரி சம்பவத்தை தொடர்ந்து இவரின் எதிர்வினை   ; சாதியை மறுத்து கலப்புத் திருமணம் செய்வதை எதிர்ப்பதாகவே இருந்தது என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி . முதல் பத்தியின் முடிவில் கூறியதை மீண்டும் கூறுகிறேன் ;.. இப்பின்னணியில் இந்நூலை இப்போது பழ . கருப்பையா ஏன் எழுதினார் என்கிற ஐயம் வலுவாகவே எழுகிறது .

மகாபாரதம் மாபெரும் விவாதம் ,
ஆசிரியர் : பழ . கருப்பையா ,
வெளியீடு :கிழக்கு பதிப்பகம் ,
177 / 103 , முதல் தெரு ,
அம்பாள் பில்டிங்கஸ் , லாயிட்ஸ் சாலை ,
ராயப்பேட்டை , சென்னை – 600 014.

பக் : 312 , விலை : ரூ. 250//
நன்றி :தீக்கதிர் , புத்தகமேசை , 1 பிப் 2015a


0 comments :

Post a Comment