எதிர்மறையாய் பேசுவதுதான் பகுத்தறிவா ?

Posted by அகத்தீ Labels:






எதிர்மறையாய் பேசுவதுதான் பகுத்தறிவா ?

சு.பொ.அகத்தியலிங்கம்

1 ]மதத்தில் ஆயிரம் நல்ல விஷயம் இருக்கிறது ; அதைப் பேசுங்கள் ; அல்லது அமைதியாய் இருங்கள் ; அதைவிடுத்து குறைகளை மட்டும் பட்டியல் போடுவது என்ன நியாயம் ? எதையும் எதிர் மறையாகப் பார்ப்பதுதான் பகுத்தறிவா ? முற்போக்கா ?

2] மதமே கெட்ட விஷயமெனில் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாக அவை சமூக சக்தியாக நீடிப்பது எப்படி ? மதத்தைக் கேள்வி கேட்பவர் மட்டுமே புத்திசாலியா ? விஞ்ஞானிகள் பலரும் மத நம்பிக்கையுடையோராய் இருந்துள்ளனரே !

3 ]இங்கே இந்து மதத்தில் தீண்டாமை போன்ற மனிதத்தன்மையற்ற பழக்கங்கள் எப்படியோ ஒட்டிக்கொண்டுள்ளது ; அதனை மதத்தை மெய்யாக நேசிப்போர் யாரும் விரும்பவில்லை ; அதை எதிர்த்துப் போராட எல்லோரும் தயார் ; ஆயின் இந்து மதம் போல் சகிப்புத்தன்மை உள்ள மதம் எது ? இதனை நீங்கள் மறுக்க முடியுமா ?

4 ]விவேகானந்தர் , ராமகிருஷ்ண பரம ஹம்சர் போன்ற மகான்கள் போதித்தவை சமூக மேம்பாட்டுக்கு உதவவில்லையா ? அவர்கள் தங்கள் மதம் என அவர்கள் பெருமைப்பட்ட இந்து மத்தை ஏற்பதில் உங்களுக்கு என்ன தயக்கம் ? யேசுவும் முகமது நபியும் போதித்த கருணை , சகோதரத்துவம் இவற்றை ஏற்பதில் என்ன தயக்கம் ? மதத்தை அப்படியே பார்க்கக்கூடாதா ? ஏன் நாத்திகம் என எதிர் நிலை எடுக்கிறீர்கள் ?

5 ]இந்திய  மண் ஆன்மீக மண் . இந்திய தத்துவம் ஆன்மீகமயமானது . இதனை ஐரோப்பிய தத்துவப் பார்வையால் – மேற்கின் அளவுகோலால் அளப்பது என்ன நியாயம் ?

கேள்விகள் - 5

1 ]மதத்தில் ஆயிரம் நல்ல விஷயம் இருக்கிறது ; அதைப் பேசுங்கள் ; அல்லது அமைதியாய் இருங்கள் ; அதைவிடுத்து குறைகளை மட்டும் பட்டியல் போடுவது என்ன நியாயம் ? எதையும் எதிர் மறையாகப் பார்ப்பதுதான் பகுத்தறிவா ? முற்போக்கா ?

இந்த ஆதங்கம் நியாயமானது . மதத்தின் தோற்றம் அன்றைய சமூகத் தேவைகளிலிருந்தே வந்தது . அன்றைய சமூகத்துக்கு தேவையென கருதிய சமூக ஒழுங்கை நிலைநிறுத்த மதம் உதவியது . எனவே மதங்களின் உபதேசங்களில் பொய் சொல்லாதே , திருடாதே என்பன போன்ற நற்கூறுகள் பேசப்பட்டன . அவை சமூகத்திலிருந்து மதம் உள்வாங்கிக் கொண்டவையே !மதம் ஆரம்பத்தில் தத்துவப் போரில் முன் நின்றது .ஆனால் உலகம் முழுவதும் எல்லா தத்துவ ஞானிகளும் கடவுளிடம் சரணடையவில்லை ; மாறாக இயற்கையோடு இணைந்தே சிந்தித்தனர் . எனவே கடவுள் , மத நம்பிக்கை எவ்வளவு பழமையானதோ ; கடவுள் , மத மறுப்பும் அவ்வளவு பழமையானது . மதம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அனறைய சமூகத்தேவையிலிருந்து சில நல்லுபதேசங்களை நல்கி உள்ளது . மறுக்க இயலாது . ஆனால் சமூக மாற்றத்தை மதம் விரும்புவதில்லை .மதத்தின் குறைகள் அதிகம் என்பதோடு தீங்கு பயப்பவையாக இருப்பதாலும் ; கேள்வி கேட்டு ஆராய மதம் தடையரண் ஏற்படுத்தி விசுவாசம் என்கிற பெயரில் சரண்டையச் சொல்வதாலும் ; மதத்தை விமர்சிப்பது தவிர்க்க இயலாததாகிறது . இன்றைய சுரண்டல் வர்க்க சமூக அமைப்பு தொடர்ந்து நீடிக்க மதம் ஊன்று கோலாகிறது . விபரம் தெரியாத யாரோ ஒரு சிலர் மதத்தின் சமூகதோற்றுவாயை நிராகரிக்கலாம் ஆனால் மார்க்சிஸ்ட்டுகள் சரியாகவே மதத்தின் சமூகப்பாத்திரத்தை மதிப்பிடுகிறார்கள் ,  “ மதம் என்பது துவக்கம் முதலே மெய்யான அவசியத்தின் அறிவெல்லை கடந்ததான உணர்வாகும்” என்றார் மார்கஸும் எங்கெல்ஸும் .ஆகவே அறிவினைப் பயன்படுத்துவோர் மதத்தின் சகல கூறுகளையும் அலசியபின் அது என்றும் சுரண்டும் வர்க்கத்தின் கேடயமே எனக் கூறுகின்றனர் . ஆட்சியாளர்களுக்கு ஆதிக்க வர்க்கத்துக்கு –ஆதிக்க சக்திகளுக்கு  எதிராகமக்கள் கிளர்ந்தெழுவதை பின்னிக்கு இழுக்கும் சூக்குமமான கரங்களே மதபோதனைகள் .  “ மதத்தின் விமர்சனம்தான் எல்லா விமர்சனங்களுக்கும் முகவுரையாக உள்ளது” என காரல் மார்க்ஸும் எங்கெல்சும் சொல்வது ஆழ்ந்த பொருளுடையதன்றோ !

2] மதமே கெட்ட விஷயமெனில் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாக அவை சமூக சக்தியாக நீடிப்பது எப்படி ? மதத்தைக் கேள்வி கேட்பவர் மட்டுமே புத்திசாலியா ? விஞ்ஞானிகள் பலரும் மத நம்பிக்கையுடையோராய் இருந்துள்ளனரே !

மனிதகுலம் தழைக்கத் தொடங்கி சுமார் நாற்பது லட்சம் ஆகிறது . இதில் நீங்கள் சொல்லுகிற இரண்டாயிரம் வருடமோ ஐயாயிரம் வருடமோ மிகப்பெரிதல்ல ஏனெனில் மதமும் கடவுளும் இல்லாமல் மனிதகுலம் நெடுங்காலம் வாழ்ந்துவந்திருக்கிறது இல்லையா ? நீங்கள் சொல்லுகிற காலகட்டத்திலும் இதற்கு எதிரான போர் தொடர்ந்தே வந்திருக்கிறது ; மேலும் வறுமையும் அறியாமையும் தொடரும்வரை அல்லது சமத்துவமும் விழிப்புணர்வும் ஓங்கும் வரை மதமும் நீடிக்கும் . நீடிப்பதாலேயே நியாயமாகிவிடாது .அதுமட்டுமல்ல மதம் வரைந்த சித்திரங்கள் தத்துவங்கள் பொய்யென அறிவியல் தொடர்ந்து மெய்பித்துக்கொண்டே வருகிறது .அறிவியலறிஞர்கள் சிலருக்கு கடவுள் மத ஆச்சாரம் இருக்கலாம் ; ஆனால் அவர்களின் கண்டுபிடிப்புகள் மதத்தை கேலிசெய்துகொண்டிருக்கிறதே ! ஒரு துறையில் அறிஞர் எனில் அவர் எல்லாதுறையும் தெரிந்தவரல்ல ; கணிதமேதை ராமானுஷம் கல்லூரி தேர்வில் மூன்றுமுறை கோட்டைவிட்டார் அதற்காக அவர் கணித மேதை இல்லை என்று சொல்ல முடியுமா ? அல்லது கணிதமல்லாத துறையில் அவர் சொல்வதை ஏற்க முடியுமா ? படிமலர்ச்சி கோட்பாடுஅல்லது பரிணாம கோட்பாட்டைக் கண்டு பிடித்த சார்லஸ் டார்வின் கிறுத்துவத்தில் இறுதிவரை நம்பிக்கை வைத்திருந்தார் ஆனால் அவரின் படிமலர்ச்சிக் கோட்பாடு கிறுத்துவ படைப்புக் கோட்பாட்டை தலைகீழாக பிய்த்தெறிந்து விட்டதே ! ஒரு குட்டிக்கதை . ஓரு மகத்தான ஓவியர் ஒரு அற்புதமான ஓவியம் வரைந்தார் . அதை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார் . அதை பார்வையிட்ட ஒரு முதியவர் . கால் செருப்பு முறையாக இல்லை என்றார் . அதைக்காது கொடுத்துக் கேட்ட ஓவியர் அவர் சொல்வது சரியென்பதை உணர்ந்து திருத்தம் செய்தார் . பெரியவரும் மகிழ்ந்தார் . ஆனால் கொஞ்சம் மேலே போய் படத்திலுள்ள முதியவரின் மூக்கு சரியில்லை , காது சரியில்லை என ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தார் . ஓவியர் அமைதியாகச் சொன்னார்  . “உங்களுக்கு தெரிந்ததில் சொன்னீர்கள் , சரி , ஏற்றுக்கொண்டேன் சரியாகத் தெரியாதவற்றை இப்போது சொல்கிறீர்கள் என்னால் ஏற்க முடியாது .” அதுபோல்தான் விஞ்ஞானிகளாகட்டும் அல்லது துறை சார்ந்த நிபுணர்களாகட்டும் அவர்கள் துறையில் கண்டறிந்தவற்றை ஏற்றுக்கொள்வோம் ; அதற்காக அவர்கள் உளறுகிற அனைத்தையும் ஏற்கவேண்டிய கட்டாயம் இல்லை .

3 ]இங்கே இந்து மதத்தில் தீண்டாமை போன்ற மனிதத்தன்மையற்ற பழக்கங்கள் எப்படியோ ஒட்டிக்கொண்டுள்ளது ; அதனை மதத்தை மெய்யாக நேசிப்போர் யாரும் விரும்பவில்லை ; அதை எதிர்த்துப் போராட எல்லோரும் தயார் ; ஆயின் இந்து மதம் போல் சகிப்புத்தன்மை உள்ள மதம் எது ? இதனை நீங்கள் மறுக்க முடியுமா ?

தீமை இருப்பதை ஒப்புக்கொள்வது முதல்படி ; அதோடு நின்றால் எப்படி ? அதனைத்துடைத்தெறிய என்ன செய்தீர்கள்? தீண்டாமையை நியாயப்படுத்துகிற சடங்குகள் , சம்பிரதாயங்கள் , புராணக்கதைகள் , நூல்கள் ,பழக்கவழக்கங்கள் அனைத்தயும் சமரசமின்றி தூக்கி எறியத்தயாரா ? சாதியைத் தலைமுழுகத் தயாரா ? இல்லாவிடில் வெறும் ஒப்புதல் வாக்குமூலம் என்பது சும்மா கண்துடைப்பே ! சகிப்புத்தனமையுள்ள மதம் என்பதன் அளவுகோல் எது ? வாளும் துப்பாக்கியும் மட்டுமல்ல ; சமூக பகீஸ்காரம் ; சாதி இழிவு இவற்றைவிட கொடிய வன்முறை ஆயுதம் எது ? ; உளவியல் சித்திரவதை வேறெது ? பிற மத கலப்பு இருக்கட்டும் ; சாதியை மறந்து இந்துக்கள்  என்கிற ரீதியில் திருமணம் செய்ய இயலுமா ? அண்ணன் தம்பியாய் பழகுவோம் என வித்தாரம் பேசுவோர் மாமன் மச்சானும் ஒரு வகை உறவுதானே அதனை ஏற்க என்ன தயக்கம் ? வெடிக்குண்டுகளைவிட கொடூரமான ஒடுக்குமுறை சாதிய ஒடுக்குமுறையும் ஆணாதிக்கமுமே . வெள்ளிக்கிண்ணத்தில் ஊட்டினாலும் ஊசியாய் ஏற்றினாலும் விஷம் விஷமே !

4 ]விவேகானந்தர் , ராமகிருஷ்ண பரம ஹம்சர் போன்ற மகான்கள் போதித்தவை சமூக மேம்பாட்டுக்கு உதவவில்லையா ? அவர்கள் தங்கள் மதம் என அவர்கள் பெருமைப்பட்ட இந்து மத்தை ஏற்பதில் உங்களுக்கு என்ன தயக்கம் ? யேசுவும் முகமது நபியும் போதித்த கருணை , சகோதரத்துவம் இவற்றை ஏற்பதில் என்ன தயக்கம் ? மதத்தை அப்படியே பார்க்கக்கூடாதா ? ஏன் நாத்திகம் என எதிர் நிலை எடுக்கிறீர்கள் ?

 “ சித்தர்களும் யோகிகளும் / சிந்தனையில் ஞானிகளும்  /புத்தரோடு யேசுவும் / உத்தமர் காந்தியும்  / எத்தனையோ உண்மைகளை / எழுதி எழுதி வச்சாங்க / எல்லாந்தான் படிச்சீங்க / என்ன பண்ணி கிழிச்சீங்க?” எனப்  பட்டுக்கோட்டை பாடியது நினைவுக்கு வந்தது . அது போகட்டும் . நீங்கள்  குறிப்பிடும் மகான்கள் பல நல்ல சேதிகளைச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் .எடுத்துக்காட்டாய் , விவேகானந்தர்  சிறுவர்கள் கையில் பகவத் கீதையைத் திணிக்காதே !கால் பந்து கொடு என்றார் ! மதமாற்றம் வாளால் சாதிக்கப்பட்டது என்பதை மறுத்து தாழ்த்தப்பட்டோரை இழிவு செய்ததின் எதிர்வினை என்றார் , பசுவதை தடை கோரிக்கை மனுவில் கையெழுத்துப்போட கேட்டபோது மறுத்து மாட்டுக்கறி சாப்பிடுவது அவர்கள் உரிமை தேவை என்றார் , எக்காலத்திலும் மசூதிகள் எதையும் இடிக்கச்சொல்லவில்லை இவற்றை எந்த மதவெறி அமைப்பு பின்பற்றுகிறது ?ராமகிருஷ்ணர் என்றாவது எங்காவது சர்ச்சுக்கு தீவைக்கச் சொன்னாரா ? மதவெறியை மூட்டச் சொன்னாரா ? இல்லையே ! ஆயின் , மதவெறி அமைப்புகள் அவர்கள் பெயராலேயே இன்று மதவெறியை எப்படி விசிறிவிட முடிகிறது ? ஊசியின் காதில் ஒட்டகங்கள் போனாலும் பணக்காரன் சொர்க்கத்துக்கு போகமுடியாதென போதித்த ஏசு எப்படி பின்னர் முதாலாளிகள் கைக்கருவி ஆக்கப்பட்டார் ?சமத்துவம் போதித்த முகமதுநபியின் போதனைகளை பின்பற்றிக்கொண்டே அதனை மீறுவது எப்படி சாத்தியமாயிற்று ! இநத மகான்களை மதவெறியர்கள் என்றோ சமூகத்தின் எதிரிகள் என்றோ முற்போக்காளர்கள் ஒரு போதும் நிராகரிக்க மாட்டார்கள் .  போதனைகளால் சமூகம் திருந்தாது .சமூகக்கொடுமையின் வேர் சொத்துடமையாளர்களின் ஆதிக்கமே ! இருப்பவன் இல்லாதவன் வேறுபாடே சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனை . ஆனால் இந்த அடிப்படையை இவர்களின் போதனையோ வழிக்காட்டுதலோ மாற்றாது என்பது மட்டுமல்ல ; அதனை சகித்துக்கொள்ளவும் கற்பனை சொர்க்கத்திற்காக இப்பூமியில் துன்பப்படுவதைப் பாக்கியமாகவும் கருதச் சொல்லுகிறது .  இவர்களை  எதிர்நிலையில் கொண்டு சேர்க்கக்கூடாது எனினும் இவர்களும் மதத்தின் ஒரு கூறே என்கிற முறையில் அணுகுவது தவிர்க்க இயலாது .மதத்தின் மீதான விமர்சனமே எல்லா தத்துவ விமர்சனங்களுக்கும் முகவுரை என முன்பே எடுத்துக்காட்டியது இவர்களுக்கும் பொருந்தும் அன்றோ ! பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்கும் இத்தகைய விமர்சனங்கள் அவசியத் தேவையே ! எனவே நாத்திகத்தை நோக்கி - அதன் வளர்ந்த கட்டமான இயங்கியல் பொருள் முதல் வாதத்தை நோக்கி மானுடம் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக நகர்வது காலத்தின் கட்டளையாகும் . அது என்ன இயங்கியல் பொருள் முதல் வாதம் இந்தக் கேள்வி-பதில் தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம் .

5 ]இந்திய  மண் ஆன்மீக மண் . இந்திய தத்துவம் ஆன்மீகமயமானது . இதனை ஐரோப்பிய தத்துவப் பார்வையால் – மேற்கின் அளவுகோலால் அளப்பது என்ன நியாயம?


இந்தியா ஆன்மீக பூமி என்பது ஒரு கற்பிதம் . பிடிச்சா பிள்ளையார் வழிச்சா சாணி என்றொரு சொலவடை உண்டு ; சாமியாகவும் சாணியாகவும் பார்க்கும் உளவியல் நம் சமூகத்தின் ஊடும்பாவுமாய் இயைந்த சிந்தனை .இந்தியாவின் மரபு எனக் கறாராக வரை யறுக் கப்படக்கூடிய தத்து வத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராய்கிற போது கடவுளுக்கு அங்கே இடம் தேடுவது வேண்டாத வேலையே என்பது தெளிவாகும். இந்தியாவின் தத்துவங்களில் இரண்டே இரண்டை மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை என மிகுந்த தயக்கத்துடன் கூறலாம் .
 முக்கியமான இந்திய தத்துவங் களுக்குள் வேதாந்தமும் (அதுவும் கூட ஒரளவுக்கே எனலாம்) நியாய - வைசேசிசமும் குறிப்பாகப் பிற் கால நியாய - வைசேசிசமும் மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை.இதற்கு மாறானவை பவுத்தம், சமணம், பூர்வ - மீமாம்சம், சாங்கியம், லோகாயதம் மற்றும் ஆதி நியாய - வைசேசிசம் ஆகியன; அவையனைத்தும் தீவிரநாத்திகவயமானவை. ஆக,இந்திய ஞானத்தில் நாத்திகத்திற்கு ஆகப்பெரும் பங்குண்டு .இதனை  சட்டோபாத்யாயா தன் நூலில் விவரித்துள்ளார். இந்திய நாகரீகத்தின் வரலாற்றைப் பின்னோக்கி நுணுகி ஆராய்ந்து பார்க்கும் போது வரலாற்றுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில் அங்கே கடவுளே காணப்படவில்லை என்பதால் நாம் புரிந்து கொண் டிருக்கிற பொருளிலான மதம்இருக்கவில்லை என்பதை அறியமுடிகிறது
ஈஸ்வர வாதமென அழைக்கப் பட்ட கடவுள் கோட்பாடு ; அதற்கு எதிர்நிலையில் நிரீஸ்வர வாதம் எனப்படும் கடவுள் மறுப்பு கோட் பாடு என இரண்டு சிந்தனைப் போக்கு உருவானதே நம் வரலாறு . இந்திய மண் ஆன்மீக மண் என்பது வெறும் கட்டுக்கதை .லோகாயவாதமும் சாங்கியமும் வளமான பொருள் முதல்வாதச் சிந்தனையின் ஆதிமூலத்தை நமக்குக் காட்டும் . நாத்திகம் , ஆத்திகம் , பகுத்தறிவுவாதம் என்கிற செற்றொடர்களுக்கு அப்பால் பொருள்முதல்வாதம் , இயங்கியல் பொருள்முதல் வாதம் , கருத்துமுதல் வாதம் என்பதை இந்தியச் சூழலில் – தமிழகச் சூழலில் நாம் பயின்றால் பலகுழப்பங்களுக்கு விடைகிடைக்கும் . தமிழகமும் தமிழக தத்துவ மரபும் வலுவான பொருள்முதல்வாத அடிப்படை கொண்டது .

நன்றி ; வண்ணக்கதிர்  தீக்கதிர் 1 பிப் 2015

0 comments :

Post a Comment