உங்கள் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது ?

Posted by அகத்தீ Labels:



உங்கள் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது ?

சு.பொ.அகத்தியலிங்கம் .

    “வணக்கம் ! உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றேன்”

 “ வாங்க !அங்கிள் ! உட்காருங்க !” என அன்போடு அழைத்து நாற்கலியை இழுத்துப் போட்டனர் . அவர்களும் கட்டிலிலும் சோபாவிலுமாக உட்கார்ந்தனர் . இந்த இளம் பெண்கள் தமிழ்நாட்டின் பலபகுதியைச் சார்ந்தவர்கள் . பெங்களூரில் பணியாற்றுபவர்கள் . ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்கள் . அறையை வாடகைக்கு கூட்டாக சமைத்து சாப்பிட்டு வாழ்கிற பெண் பேச்லர்கள் .

 “ ஒண்ணும் இல்லேம்மா ! ஒரு டவுட்டு ! ஆறுமாசத்துக்கு முன்னாடி நீங்க பெங்களூருக்கு வந்த போது எப்படி இருந்தீங்க ! உங்க உடை ! உணவு ! பழக்க வழக்கம் எல்லாம் எப்படி ஆறுமாசத்தில தலைகீழா மாறிப்போச்சு ! இரவு 12 மணிக்கு பீசா கார்னரில் உட்கார்ந்திருக்கீங்க ! எப்படியம்மா இந்த தலை கீழ் மாற்றம் !”

“ அங்கிள் ! தப்பா நினைக்க மாட்டீங்க தெரியும் ! எல்லா பெண்களும் ஆண்களைப் போலவே சுதந்திரமா திரியணும்னு ஆசைப்படுறவங்கதான் ! வாய்ப்பு கிடைக்காத போது வேறு வழியே இல்லை ! வாய்ப்பு கிடைச்சா ! நிச்சயம் நூற்றுக்கு தொண்ணுறு பெண்கள் தங்களை மாற்றிக்குவாங்க !”

“ சரி ! உங்க அம்மா அப்பா ! எதுவும் சொல்ல மாட்டாங்களா ?”

 “ இப்போ நாங்க கைநிறைய சம்பாதிக்கிறோம் ! அதுனால கடுமையா அவங்களால எதுவும் சொல்ல முடியாது ! இதுல வேடிக்கை பாருங்க அங்கிள் ! அப்பா அம்மா இருண்டு பேருமா இருக்கச்சே  கொஞ்சம் கண்டிக்கிற மாதிரி சொல்லுவாங்க ! தனியா இருக்கச்சே அம்மா சொல்லுவா ‘ எங்க காலத்தில நாங்க ஆசைப்பட்டது எதுவும் கிடைக்கலே !சோற்றுக்கும் துணிக்கும் ஆம்பளைகள எதிர்பார்த்திருந்தோம் . என்ன செய்ய முடியும் ? உங்க கையில காசு இருக்கு !நீங்களாவது அனுபவிக்கிறீங்க சந்தோஷமா இருக்கு .’ இப்படி சொல்றது மட்டுமில்ல அம்மா மனசுக்குள்ளே எவ்வளவு சின்னச்சின்ன ஆசைகளைக்கூட புதைச்சி வச்சிருக்காங்க ! நாங்க .. கொஞ்சம் ஒரு மில்லி மீட்டர் மாற முயலுகிறோம் அவ்வளவுதான்..”

“ சரி ! அப்பா தனியா ஏதாச்சும் சொல்வாரா ? போங்க  அங்கிள் ! சும்மா மீடியாக் காரன்னு நிரூபிக்கிற மாதிரி கேள்வியாய் கேட்கிறீங்க ! உங்களுக்குத் தெரியும் ! அப்பாக்களுக்கு எப்பவுமே பொண்ணுக செல்லம்தானே ! காலம் மாறிக்கிட்டிருக்கு நாம பழசுலேயே இருக்க முடியுமான்னு எங்கள் கிட்ட சாமாதானம் பேசிடுவாங்க !”

ஒரு பொண்ணு சொன்னாள் , “ எங்க அம்மா அடிக்கடி எங்க அப்பாட்ட சொல்வாங்க அது என்ன நீங்க பெற்ற பொண்ணு மட்டும் உங்களுக்கு உசுரு ! யாரும் அவள ஒண்ணும் சொல்லக்கூடாது !நானு யாரோ பெற்ற பொண்ணுதானே ! என்ன வேணும்னாலும் சொல்லலாம் அப்படித்தானே .. ..”

இன்னொரு பொண்ணு இடைமறைத்தாள் , “ நேற்று அமிதாபச்சன் மருமகள் ஐஸ்வர்யராய் என்ன சொன்னாங்க தெரியுமா ? பெண்ணின் தேவைகளையும் அபிலாசைகளையும் குடும்பத்தார் ஒரு போதும் புரிந்து கொள்வதில்லை ..கோடீஸ்வரியா இருந்தாலும் இதுதான் நிலைமை..”

இன்னொரு பெண் சொன்னாள் , “ அங்கிள் ! நாளைக்கே எங்களுக்கு கல்யாணம் ஆயிடலாம் ! வர்றவன் எப்படி இருப்பான் யாருக்குத் தெரியும் ஆனால் ஒண்ணு எல்லா அம்பிளைங்களும் அதிகாரத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுருவாங்களா என்ன ?”

இப்படி எங்கள் உரையாடல் நீண்டது . ஒவ்வொரு பெண்ணும் ஆடை விஷயத்தில் அட்டுமல்ல எல்லாவற்றிலும்  தனக்கு முழுசுதந்திரம் இருக்க வேண்டுமென்றே விரும்புகிறாள் . தங்கள் மீது ஆண்கள் அதிகாரம் செலுத்துவதாகக் கருதுகிறாள் ! இதில் கிராமம் நகரம் எதிலும் வேறுபாடு கிடையாது ! ஆனால்  மீற பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை ! கிடைத்தால் விடுவதில்லை ! இதுவே யதார்த்தம் ! ஆண்கள் மனைவியிடம் ஒரு போதும் நியாயமாக நடந்து கொள்ளமாட்டார்கள் அதிகாரமே செலுத்துவார்கள் என இவர்கள் நம்புவது பிழையாமோ !

“ உங்கள் மனைவியின் மனதில் என்ன இருக்கிறது ?”

இக்கேள்விக்கு டக்குன்னு ஆண்கள் சொல்லுவாங்க ,” கடலின் ஆழத்தை கண்டாலும் பொம்பள மனசின் ஆழத்தைக் காணமுடியாது”.

இதைவிட நழுவல் பதிலை வேறெதிலும் காணமுடியாது .உண்மை என்னவெனில் காலங்காலமாய் மதம் , சாதி , சம்பிரதாயம் இவற்றின் பேரால் பெண்களின் ஆசைகளை தடுத்தும் ; உணர்வுகளை மிதித்தும் மனதை ரணமாக்கிவிட்டது சமூகம் ! ஆண்கள் மனம்போல் மேய்ந்துதிரிய பெண்களின் மனதுக்கு மிகப்பெரிய பூட்டை மாட்டிவிட்டது . அதனை திறப்பதற்கான சாவியைக்கூட தங்கள் இடுப்பில் சொருக்கிக்கொண்டு திரிகிற கூட்டம்தான் இப்படி கூசாமல் பெண்மனதின் ஆழத்தை பகடி செய்கிறது . இப்போது நீராவியின் அழுத்தம் அதிகமாகி கொதிகலனின் மூடியைத் தள்ளி கொஞ்சம் வெளிவருகிறது ! இதைக் கண்டு மிரண்டால் எப்படி ! கொதிகலன் வாயை மத சாதி மூடியால் இறுக மூட எத்தணிப்பவது பெரும் அழிவுக்கே வழிகோலும் !



மும்பையைப் போல் டெல்லியோ ; டெல்லியைப் போல் பெங்களூரோ ! பெங்களூரைப் போல சென்னையோ , சென்னையைப் போல் நெல்லையோ மாறவில்லை என கூறலாம் ; கிராமம் வேறு நகரம் வேறு என வாதிடலாம் ; ஆனால் மாற்றம் தீயைப்போல எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது .. தொலைதூரக் கிராமத்தின் கடைசி குடிமகள் முதல் டெல்லி முதல் குடிமகள் வரை பெண்களின் உள்ளத்தில் சமத்துவச் சூறாவளி மையம் கொண்டுள்ளது .


இதனை உணராமல் கலாச்சாரக் காவலர்கள் வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கி சுழற்ற எத்தணிக்கிறார்கள் ; சூறாவளி சுழன்றடிக்கும்போது சின்னா பின்னாமாய் சிதறிக்கப்படுவார்கள் !


0 comments :

Post a Comment