குடும்பத்திலும் நாட்டிலும்

Posted by அகத்தீ Labels:

 


குடும்பத்திலும் நாட்டிலும்





 

 

எப்போதும்

தலைவர் சர்வாதிகாரியாகவே இருக்கிறார்

கடினமாகவோ மென்மையாகவோ!

 

நிரந்தர இரண்டாமிடத்தவர்

புழுங்கிக் கொண்டே இருக்கிறார்

கூடுதலாகவோ குறைவாகவோ!

 

மூத்த குடிமக்கள்

புறக்கணிப்பதாய் புலம்பித்தீர்க்கிறார்கள்

பகீரங்கமாகவோ மனதிற்குள்ளோ !

 

இளையதலைமுறை

கோபத்தோடேதான் மோதுகிறார்கள்

மூத்தோர் வழிவிடவில்லை என்றே !

 

குழந்தைகளைக்

கொண்டாடுவதாய் பேசிக்கொண்டே

கூண்டுக்கிளி ஆக்கவே முயல்கிறார்கள் !

பாசம் வேஷம் நீதி அநீதி

விசுவாசம் துரோகம் லாபம் நட்டம்

ஏற்றம் இறக்கம் நட்பு பகை

 

குடும்பத்திலும் நாட்டிலும்

எல்லாம் இப்படித்தான்

ஜனநாயகம் பேச்சோடுதான்!

 

போராடித்தான்

எங்கும் எல்லோரும்

மூச்சுவிட முடிகிறது !

 

சுபொஅ.


போகி நெருப்பை ஊதிப் பெரிதாக்கு

Posted by அகத்தீ Labels:

 

போகி நெருப்பை ஊதிப் பெரிதாக்கு


போகி நெருப்பை ஊதிப் பெரிதாக்கு - கொடும்
வேளாண் சட்டங்களைக் கொளுத்திக் கரியாக்கு !
திருதராஷ்டிர ஆலிங்கனம் மகாபாரதத்தோடு
முடியவில்லை ; நீதிபதி ஆசனத்திலும் உண்டு….
ஒப்புக்கு கதைகேட்டு ஓய்ந்தவனா எம்விவசாயி ?
வரலாறுநெடுக வஞ்சகத்தை துரோகத்தை சகுனிகளை
சந்தித்து மீண்டவரே எம்உழவர் பெரும்படையும்
சிந்தித்து முடிவெடுத்தார் ; போராட்டம் தொடரும்
போகி நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதுபோல்
நெஞ்சில் கனன்றெரியுது எம்உழவர் கோபாக்னி
எரியட்டும் ஆணவ ஆட்சி ! எரியட்டும் காவி - கார்ப்பரேட் அநீதி !
பொங்கட்டும் புதுநீதி ! உழவர் உழைப்பாளர் சமூகநீதி !
சுபொஅகத்தியலிங்கம்.
13 ஜனவரி 2021.

பொங்கள் நன்னாளில் புத்தி வந்தது

Posted by அகத்தீ Labels:

 


பொங்கள் நன்னாளில்
புத்தி வந்தது


விடியக் காத்திருக்கும் இரவில்
மொட்டவிழ்ந்தது ஓர் கனவு
பேசும் முகம் புலப்படவில்லை
பேச்சு மட்டும் தெளிவாய்க் கேட்டது …
“ யார் நீங்கள் ?”
நடுங்கும் குரலில் நான் கேட்டேன் .
“ கடவுள்”
என்றது கம்பீரமாய் ..
“ உருவம் புலப்படவில்லையே ?
நம்புவது எப்படி ?
சந்தேகக் கணையைத் தொடுத்தேன் …
கை கொட்டி உரக்கச் சிரித்தார்
மெல்ல வாய் திறந்தார்
“ உழவனின் வியர்வையில்
நானிருப்பேன்
உழைப்பவன் குருதியில்
உறைந்திருப்பேன்
பசிப்பவன் முன்பு
ரொட்டியாய் வருவேன்
தவிக்கும் வாய்க்கு
தண்ணீராய் தெரிவேன்
நீங்கள் கட்டும்
பிரமாண்ட கோயிலிலோ
சர்ச்சிலோ மசூதியிலோ
நானில்லை
வியர்வையில்
ரத்தத்தில்
கண்ணீரில்
நானிருப்பேன்
குருதேவர் ரவீந்திர நாத் தாகூரும்
தேசப்பிதா காந்தியும் அதைத்தான்
எப்போதும் சொன்னார்கள்
உழவு செய்யாவிடில்
நாற்று நடாவிடில்
உரம் இடாவிடில்
நீர் பாய்ச்சாவிடில்
ஒரு கவளம் சோறுமின்றி
உலகமே முடங்கிப் போகும்
முற்றும் துறந்த முனிவரும்
பசியால் தவத்தை மறப்பார்
ஆம்… அதைத்தான்
வள்ளுவனும் சொன்னார்
‘உழவினார் கைமடங்கின் இல்லை இல்லை விழைவதும்
விட்டோம் என்பார்க்கும் நிலை ..’
உழைப்பைப் போற்று
உழவைப் போற்று
அங்கே நான் இருப்பேன்…”
கடவுள் பேசி மறைந்தார்
நான் விழித்தேன்
பொங்கள் நன்னாளில்
புத்தி வந்தது மக்களுக்கு
ஆட்சியாளருக்கு அல்ல...
சுபொஅ.

செல்க 2020 … வருக 2021

Posted by அகத்தீ Labels:

 



செல்க 2020 … வருக 2021

 

 

பிறப்புச் செய்தியோ

இறப்புச் செய்தியோ

இல்லா நாளொன்றில்லை

 

நாட்களின் தொகுப்பாய்

வாரம் இருக்கையில்

மாதம் இருக்கையில்

அதுவும் அப்படித்தானே

 

ஒவ்வொரு ஆண்டும்

முடிவும் தொடக்கமும்

இந்த ஐந்தொகையோடுதான்

 

நன்றும் தீதும் கலந்ததே வாழ்வு

பெற்றதும் இழந்ததும் பெருங்கணக்காகும்

வழக்கம் போலும் வழக்கம் தவறியும்

நடந்திடும் நல்லதும் கெட்டதும்

 

 “முன்னைப் போல் இப்போது இல்லை”

காலந்தோறும் இதே வார்த்தை

தாத்தா /பாட்டி சொன்னார்

அப்பா /அம்மா சொன்னார்

நானும் சொன்னேன்

நாளை என் மகனும் /மகளும் சொல்வார்

பேரனும் பேத்தியும்கூட

இப்படியே காலம் நகரும்

 

முன்னேறியபடியே – ஆம்

முன்னேறியபடியே …

காலம் நகரத்தான் செய்யும்

ஆனால்

யாருக்கானது முன்னேற்றம்

கேள்வி தொடரத்தான் செய்யும்..

 

சிக்கி முக்கி கல்லோடு

திருப்தி அடைந்திருந்தால்…

மரவுரியோடும் மண்பாண்டத்தோடும்

மனநிறைவு கொண்டிருந்தால்… ?????

திருப்தி என்பது வளர்ச்சியின் எதிரி

தேடலே நம்மை முந்தித்தள்ளும்

 

 “துப்பாக்கிகள்

கிருமிகள்

எஃகு”

வரலாற்றை முடுக்கிய விசைகள்

என்பார்

ஜாரெட் டைமண்ட்

 

தொற்றுநோய்கள் அழிவைத் தந்தன

ஆட்டம் போட்டன ஆயினும்

அதனை வெல்லும் மருத்துவத்தையும்

மனிதகுலமே கண்டெடுத்தது

 

மார்க்சியம் ஞான தீபமேற்றி

காலத்தை வசப்படுத்த

தொடங்கிய போர் இன்னும் முடியவில்லை

 

மானுட சக்திக்கு ஈடாய்

மாற்றொன்றில்லை தோழா!

சாதி வெறி, மதவெறி சாகும்

சரித்திரப் பெருநதி ஓடும்!

 

செல்க 2020

வருக 2021

வருக ! வருக !

 

சுபொஅ.

 

குறிப்பு :

“துப்பாக்கிகள் – கிருமிகள் -எஃகு”

ஜாரெட் டைமண்ட் எழுதிய நூல் .

 


எது முக்கியம் ?

Posted by அகத்தீ Labels:

 


எது முக்கியம் ?

 

 


 

தலையே ! தலையே !

மேலே இருக்கும் முடியைவிட

உள்ளே இருக்கும் மூளையா முக்கியம் ?

 

கண்ணே ! கண்ணே !

புருவத்தின் ஒப்பனையைவிட

பார்வையா முக்கியம் ?

 

காதே ! காதே !

ஜால்ரா ஓசையைவிட

போராட்ட முழக்கமா முக்கியம் ?

 

வாயே ! வாயே !

மந்திர உச்சாடணத்தைவிட

கேள்வி கேட்பதா முக்கியம் ?

 

முகமே ! முகமே !

முகமூடி அணிவதைவிட

ரெளத்திரம் பழகலா முக்கியம் ?

 

கையே ! காலே !

தொழுது அடிபணிவதைவிட

போரிட அணிவகுப்பதா முக்கியம் ?

 

உயிரே ! உடலே !

கூனிக்குறுகி குற்றேவல் புரிவதைவிட

மனிதனாய் எழுவதா முக்கியம் ?

 

மனிதா ! மனிதா !

சொரணையற்று சங்கியாய் இருப்பதைவிட

சுயமரியாதையோடு வீழ்வதே மேல் !

 

சுபொஅ.

 

 


உங்கள் கண்ணீரில்

Posted by அகத்தீ Labels:

 


உங்கள் கண்ணீரில்




உங்கள் கண்ணீரில்
உப்பில்லை
ஈரமில்லை
வருத்தமில்லை
ஆனாலும் நீங்கள்
அழுகிறீர்கள் ! – அது

கார்ப்பரேட் அழுகை
விவசாயிகளின் மீதான
கரிசனத்தால் நீங்கள்
அழவில்லை !
போராட்ட நெருப்பை
அணைக்க அழுகிறீர் !
மன்னிக்கவும்
அழுவதுபோல் நடிக்கிறீர் !
உங்கள் அழுகை தொழுகை
எல்லாமும் மகாநடிப்பே !

மோடிஷா !
உங்களை நான் மட்டுமல்ல
ராமன் ,சிவன் ,முருகன் ,துர்க்கா
அல்லா ,ஏசு ,சீக்கிய குரு நானக் ,
சத்புருஷர் ,மகாவீர்
உட்பட எந்தக் கடவுளும்
கடவுளின் தூதரும்
நம்பமாட்டோம் !

போராடும் விவசாயிகளே!
உங்களுக்கே
எங்கள் ஆசீர்வாதங்கள்!!!!

ஏனெனில்
நாங்கள் இருப்பதே
உழைப்பாளிகள்
வியர்வையில்தானே!

சுபொஅ. 

உயிர்ச் சரடு ……. ….. ……

Posted by அகத்தீ Labels:

 


உயிர்ச் சரடு ……. ….. ……

 

இயற்கையின் கொடும் சீற்றங்கள்

கடும் தொற்று நோய்கள்

 

உயிர் கொல்லும் பஞ்சங்கள்

கொடுங்கோலரின் அடக்குமுறைகள்

 

கொன்றழிக்கும் யுத்தங்கள்

மத ,இன ,சாதி மூர்க்க மோதல்கள்

 

லாபவெறி தலைக்கேறிய சுரண்டல் பேயாட்சிகள்

மனிதத்தை ,பசுமையை காவு கேட்கும் மூடச் சுயநலம்

 

அனைத்தையும் தாண்டித் தாண்டி பயணிக்கும்

மானுடத்தின் உயிர்ச் சரடு எது ?

 

வாழ்வின் மீதான காதலும் போராட்டமுமே !அன்பெனும்

ஆணிவேரில்தான் மானுடத்தின் சாதனைகள் அனைத்தும் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.