செல்க 2020 … வருக 2021

Posted by அகத்தீ Labels:

 



செல்க 2020 … வருக 2021

 

 

பிறப்புச் செய்தியோ

இறப்புச் செய்தியோ

இல்லா நாளொன்றில்லை

 

நாட்களின் தொகுப்பாய்

வாரம் இருக்கையில்

மாதம் இருக்கையில்

அதுவும் அப்படித்தானே

 

ஒவ்வொரு ஆண்டும்

முடிவும் தொடக்கமும்

இந்த ஐந்தொகையோடுதான்

 

நன்றும் தீதும் கலந்ததே வாழ்வு

பெற்றதும் இழந்ததும் பெருங்கணக்காகும்

வழக்கம் போலும் வழக்கம் தவறியும்

நடந்திடும் நல்லதும் கெட்டதும்

 

 “முன்னைப் போல் இப்போது இல்லை”

காலந்தோறும் இதே வார்த்தை

தாத்தா /பாட்டி சொன்னார்

அப்பா /அம்மா சொன்னார்

நானும் சொன்னேன்

நாளை என் மகனும் /மகளும் சொல்வார்

பேரனும் பேத்தியும்கூட

இப்படியே காலம் நகரும்

 

முன்னேறியபடியே – ஆம்

முன்னேறியபடியே …

காலம் நகரத்தான் செய்யும்

ஆனால்

யாருக்கானது முன்னேற்றம்

கேள்வி தொடரத்தான் செய்யும்..

 

சிக்கி முக்கி கல்லோடு

திருப்தி அடைந்திருந்தால்…

மரவுரியோடும் மண்பாண்டத்தோடும்

மனநிறைவு கொண்டிருந்தால்… ?????

திருப்தி என்பது வளர்ச்சியின் எதிரி

தேடலே நம்மை முந்தித்தள்ளும்

 

 “துப்பாக்கிகள்

கிருமிகள்

எஃகு”

வரலாற்றை முடுக்கிய விசைகள்

என்பார்

ஜாரெட் டைமண்ட்

 

தொற்றுநோய்கள் அழிவைத் தந்தன

ஆட்டம் போட்டன ஆயினும்

அதனை வெல்லும் மருத்துவத்தையும்

மனிதகுலமே கண்டெடுத்தது

 

மார்க்சியம் ஞான தீபமேற்றி

காலத்தை வசப்படுத்த

தொடங்கிய போர் இன்னும் முடியவில்லை

 

மானுட சக்திக்கு ஈடாய்

மாற்றொன்றில்லை தோழா!

சாதி வெறி, மதவெறி சாகும்

சரித்திரப் பெருநதி ஓடும்!

 

செல்க 2020

வருக 2021

வருக ! வருக !

 

சுபொஅ.

 

குறிப்பு :

“துப்பாக்கிகள் – கிருமிகள் -எஃகு”

ஜாரெட் டைமண்ட் எழுதிய நூல் .

 


0 comments :

Post a Comment