சொல்.50

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .50 [ 18 /10/2018 ]

எலித் தொல்லை ஓய்வதே இல்லை . எட்டாவது மாடிக்கும் வந்துவிடுகிறது .எலிமருந்து ,எலி பிஸ்கேட் ,எலி பேஸ்ட் எல்லாம் முயற்சி செய்தாயிற்று .பலனில்லை .எலிப் பொறியும் கருவாடுமே ஆகச் சிறந்த வழி .ஆயினும் சில வாரங்களிலேயே மீண்டும் எலி வந்துவிடும் .

கொசுவும் அப்படித்தான் எத்தனை மாடியாயினும் முகவரியைத் தெரிந்து வந்துவிடும் .விதவிதமான கொசுவத்தி மருந்து எல்லாம் அதற்கு டானிக் ஆகிவிடுகிறது . நொச்சி இலை கொஞ்சம் பலன் தரும் ஆயினும் கொசுவிலிருந்து தப்ப வலையே உத்திரவாதமான ஒரே வழி .

கரப்பான் பூச்சிக்கு நீங்கள் மருந்தை மாற்றி மாற்றி அடிக்கிறீர்கள் . தன்னை எப்படியோ அதற்கொப்ப தகவமைத்து மீண்டும் வந்து விடுகின்றன .எல்லா உயிரினங்களும் தன்னை சூழலுக்கு ஒப்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுகின்றன . வெற்றி பெறுகிறுகின்றன .

மனிதரென்ன சூழலின் அடிமையா ? இல்லவே இல்லை . மனித குலமும் தொடர்ந்து போராடி வெற்றிக்கொடி நாட்டியே வந்திருக்கிறது .

என் அறிவுக்கு எட்டியவரை பொதுவாய் எந்த விலங்கும் உயிரினமும் தற்கொலை செய்து கொள்வதில்லை . தனக்குத் தானே குழி வெட்டிக் கொள்வதில்லை .ஆனால் மனிதர் மட்டுமே தற்கொலை செய்கின்றனர் . இயற்கையை ஒட்ட உறிஞ்சி தமக்குத்தாமே குழிபறித்துக் கொள்கின்றனர் . ஆயுதங்களைக் குவித்து தமக்குத்தாமே கொள்ளிவைத்துக் கொள்கின்றனர் . நச்சுப் புகைகளால் ,விஷக்கழிவுகளால் காற்றை ,நீரை மாசுபடுத்தி பேரழிவை விளைவித்துக் கொள்கின்றனர் .

எலியும் ,கொசுவும் ,கரப்பான் பூச்சியும் இன்னபிறவும் தாக்குதல்களைத் தாங்கி மீண்டெழுகிறதே தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதே அதுபோல் உங்கள் சந்ததியால் முடியுமா ? இல்லை அழிந்துதான் போகவேண்டுமா ? யோசித்தால் விழிப்போம் ! யோசிக்க மறந்தால் வீழ்வோம் .வேறென்ன சொல்ல … .

















































































COL.49

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .49 [ 17 /10/2018 ]

ஒரு முறை மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார் , “ நான் சிறு வயதாயிருக்கும் போது டிராபிக் போலீஸாக வரவேண்டும் என ஆசைப்பட்டேன் .ஏனெனில் அவர் கையைக் காட்டினால்தான் எல்லா வண்டியும்  நிற்கிறது .போகிறது .அவரே அதிக அதிகாரம் உள்ளவர் என நினைத்தேன்.”

பொதுவாக குழந்தையாய் இருக்கும் போது ஒன்றில் இருக்கிற ஆர்வ்ம் போகப்போக குறைந்து இன்னொன்றுக்குத் தாவிவிடுகிறது . பலர் கல்லூரியில் சேரும் போது இருந்த ஆர்வம் வேகமாய் வற்றி இன்னொரு பக்கம் திரும்பிவிடுகிறது .

படித்தபின் பிழைப்புக்காகத் தேடுகிற வேலை பெரும்பாலும் மனதுக்கு உகந்ததாக இல்லாமல் வாழ்க்கை நிர்ப்பந்தத்திற்கு ஓடிக்கொண்டிருப்போரே அதிகம் .எதிர்பார்ப்பின் ஏமாற்றமும் வலியும் எல்லோரிடமும் ஏதோ ஒரு அளவில் இருக்கத்தான் செய்யும் .

வாழ்க்கைப் பாட்டிற்கு ஏதோ ஒரு வேலை ; தன் ஈடுப்பாட்டிற்கு இலக்கியம் , விளையாட்டு ,சமூகசேவை ,இசை ,அரசியல் என ஏதாவது ஒன்றைத் தேர்ந்து ஓடிக்கொண்டே இருப்பவர்கள் ஓரளவு மன அழுத்தமின்றி நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் . தன் ஈடுப்பாட்டிற்குரிய துறையில் வெற்றிக்கொடி நட்டு வாழ்பவர்கள் மிகச் சொற்பமே!

இதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் அனைத்து சுதந்திரமும் வாய்ப்பும் பெண்களுக்கு கிடைத்துவிடுமா ? கிடைக்காது .அதன் வலியை காயத்தை ஆண் சமூகம் உணர்வதுகூட இல்லை .நம் சமூக கட்டமைப்பு அப்படி .அதையும் மீறி சாதிக்க வருகிற பெண்கள் மீது வீசப்படும் சொல்லம்புகள் சொல்லும் தரமன்று.

ஆணோ பெண்ணோ தனக்குப் பிடித்த ஓர் துறையில் காலூன்றி நடக்க ஏற்ற சமூக அமைப்பும் சூழலும் இங்கு இல்லை .லாபவெறியில் தறிகெட்டலையும் சுரண்டல் சமூகமே இது . இந்த சுரண்டல் அமைப்பை தகர்த்தால்தானே உங்கள் வலியும் காயமும் உங்கள் சந்ததிக்காவது குறையும் மெல்ல ; மெல்ல மறையும்.

சரி ! சரி ! அதற்காக ஒரு வார்த்தையேனும் ஒரு அசைவேனும் உங்களிடம் உண்டா கொஞ்சம் அசைபோடுங்கள்! !













































































சொல்.48

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .48 [ 16 /10/2018 ]

அந்தக் காலம் போல் இந்தக் காலம் இல்லை . இப்படிச் சொல்லாத பெரியவர்கள் மிகக்குறைவு.இதில் வேடிக்கை என்னவெனில் அவர்கள் இளைஞர்களாக இருந்த போது அவர்களின் தாத்தாவும் இதே வார்த்தைகளைச் சொன்னார்கள் என்பதுதான்.

காலம் ஓடிக்கொண்டே இருக்கும் .மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் . நல்லதும் கெட்டதும் கலந்தேதான் மாற்றங்கள் இருக்கும் . கடந்த காலத்தின் நல்லவற்றை அல்லது தமக்கு பிடித்தவற்றை மட்டும் அசைபோட்டு அங்கலாய்ப்பது பெரியோர் இயல்பு . புதியதின் நல்வாய்ப்பை மட்டுமே பார்த்து பழமையைப் பழிப்பது இளையோர் இயல்பு .

முன்பெல்லாம் ஒரு தலைமுறை என்பது குறைந்தது 35 வருடங்களாவது இருக்கும் .அப்போது மாற்றங்கள் மெதுவாக நிகழ்ந்தன .இப்போது பதினைந்து வருடங்களில் ஒரு தலைமுறை சிந்தனை மாறிவிடுவதாய் பத்தாண்டுகளுக்கு முன்னர் சொன்னார்கள். மாற்றம் அவ்வளவு வேகம் கொண்டுள்ளது .இப்போது பத்தே ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிடுகின்றன .

மாறாதது எதுவுமில்லை .மாற்றங்களே நிரந்தரம் . மாற்றங்களூடே தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் , தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வதும் காலத்தின் கட்டாயம் .

பெரியவரோ இளைஞரோ அன்றாடம் நிகழும் மாற்றங்களை உள்வாங்கி தன்னை வளர்த்துக் கொள்ளாவிடில் தொழிலில் ,வாழ்க்கையில் ,சமூகத்தில் தோற்கடிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுவிடுவோம் ! இதுதான் காலநியதி ! இது தனிநபருக்கு மட்டுமல்ல .நிறுவனங்களுக்கு ,இயக்கத்துக்கு அனைத்துக்கும் பொருந்தும் .

மாற்றங்களூடே உங்களைச் செதுக்கிக்கொண்டே இருங்கள் !









































































சொல்.47.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .47 [ 15 /10/2018 ]

சிலரின் ஞாபக சக்தி வியக்க வைக்கும் .எதைச் சொன்னாலும் மிகத் துல்லியமாக நினைவுகூர்ந்து சொல்லிவிடுவார்கள் .வருடம் ,மாதம் ,நாள் ,பெயர் எதுவும் தப்பாது .

சிலருக்கு தன் தொலைபேசி எண்கூட நினைவில் இருக்காது ;தப்புத்தப்பாகவே சொல்வர் .அதிலும் கைபேசி வந்தபிறகு எல்லாம் அதற்குள் அடங்கிவிட ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் சுருங்கிவிட்டது .

வீட்டில் ஆண்களின் ஞாபக சக்தி சோதனைக்குள்ளாகும் .அலுவலகம் விட்டு வரும்போது வாங்கிவருவதாகச் சொன்னவற்றை மறந்து வந்ததே அதிகம் .அது உண்மையில் ஞாபக மறதியா அல்லது காரிய மறதியா என்பது இதுவரை சந்தேகத்துக்கு உரியதாகவே உள்ளது.

இந்த புடவை இங்கு டூர் போகும் போது வாங்கியது , இந்த குண்டான் அந்தத் திருவிழாவில் வாங்கியது என ஒவ்வொன்றிலும் ஞாபகச் சுவடுகளைத் தடவிப்பார்த்து மனைவி சொல்லும் போது கணவன் முகத்தில் அசடு வழியும் .

ஏன் இந்த நிலை ? ஒரு வேளை ஆண்களைவிட பெண்களுக்கு ஞாபக சக்தி அதிகமோ ?அப்படி எல்லாம் இல்லை .ஞாபக சக்திக்கு பாலின பாகுபாடெல்லாம் கிடையாது .எதில் மனம் லயித்து செய்கிறோமோ அது ஞாபகத்தில் நிலைக்கும் .

ஞாபகம் என்பதுகூட ஈடுப்பாட்டின் இன்னொரு அளவுகோல் என்று சொல்லிவிடலாம் . இதில் வேடிக்கை என்னவெனில் எதை எதை நினைவில் வாழ்நாளெல்லாம் சுமக்க வேண்டுமோ அதை மறந்துவிடுவதும் ; எதை எதை அவ்வப்போதே மறந்துவிட வேண்டுமோ அதைத் தூக்கிச் சுமந்து தானும் வருந்தி பிறரையும் வருத்தப்பட வைப்பதும்தான் .

ஞாபகம் மட்டுமல்ல ஞாபக மறதியும் வாழ்க்கை மகிழ்ச்சியின் ரகசியமே ! எதெது எனத் தேர்வதில்தான் துயரத்தின் களிம்பும் காயமும் அடங்கும் .







































































சொல்..46

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .46 [ 14 /10/2018 ]

வரவுக்குள் வாழ வேண்டும் போதனை சரிதான் .ஆனால் யாராலும் பின்பற்ற முடியாமல் இருப்பதேன் ? பல காரணங்கள் உண்டு .

முதல் காரணம் , சம்பளம் மாதாமாதம் ஏறாது . வருவாய் உயரவு மிகமிகக் கடினம் .ஆனால் விலைவாசி தினசரி ஏறும் .மாதாந்திர குடும்ப பட்ஜெட் வீங்கிக்கொண்டே போகும் .
இரண்டு , எதிர்பாரா மருத்துவச் செலவுகள் .
மூன்று ,பிள்ளைகளின் கல்விச் செலவு
நான்கு , உறவு ,நட்பு என எதிர்பாராமல் வரும் திருமணம் ,கருமாதி இதர செலவுகள்
ஐந்து , எதிர்பாராச் செலவுகளுக்காக வாங்கிய கடன் அதற்கான வட்டி என பெருகிக்கொண்டே போகும் புற்றுநோய்
ஆறு , திடீர் வேலை இழப்பு ,ஊதிய இழப்பு போன்றவை
ஏழு ,குடி ,சூது போன்ற வழியில் பணத்தை இழத்தல்
எட்டு ,ஆடம்பர மோகம் , நுகர்வெனும் பெரும்பசி
ஒண்பது ,அடுத்தவரைபோல் மினுக்க ஆசைப்பட்டு கடன்வலையில் சிக்குதல்
பத்து .குடும்பத்தாரின் ஊதாரித்தனம்

இன்னும் பல இவற்றுள் நம்மால் தவிர்க்க முடிந்தவையும் உண்டு ;நம் கைக்குள் அடங்காததும் உண்டு .

என்ன செய்வது ? மாதந்தோறும் கணவன் –மனைவி உட்கார்ந்து பேசி குடும்பப் பட்ஜெட் போடுங்கள் . தவிர்க்கக்கூடியதை தவிருங்கள் .அது கடன் புதை சேற்றில் சிக்கமாலிருக்க உதவும் . கவுரவத்துக்காகவோ மரியாதைக்காகவோ எதையும் செய்ய வேண்டாம் .உங்கள் சக்தி எவ்வளவோ அதனோடு நிறுத்துங்கள் !

பிள்ளைகளுக்கும் வீட்டு நிலையை திறந்த புத்தகமாய் சொல்லி வளருங்கள் .உங்கள் வலி அவர்களுக்குத் தெரிய வேண்டும்!

உங்கள் வீட்டு பட்ஜெட்டுக்கும் , அரசு போடும் நாட்டுப் பட்ஜெட்டுக்கும் உள்ள தொடர்பை யோசிக்கத் தொடங்குங்கள் ..அரசியல் விழிப்புணர்வின் மூலவிதை அதுதான்….

போதனைகளால் புண்ணு ஆறாது . போராட்டமே வாழ்க்கை !!





































































சொல்.45

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .45 [ 13 /10/2018 ]


 வாசிப்பு என்பது வெறுமே பழக்கமல்ல ,பண்பாட்டின் கூறு . புத்தகத்தைக் காதலித்தவர் ஒருபோதும் அதனை தூக்கி எறியமாட்டார்.

வாசிக்க எனக்கு நேரமே இல்லை என்பது வெறும் சாக்கு . சீரியல் பார்க்காமல் இருக்கிறீர்களா ? அரட்டை அடிக்காமல் இருக்கிறீர்களா ? கொஞ்சாமல் ,சண்டை போடாமல் இருக்கிறீர்களா ? வாசிப்பில் லயித்துவிட்டால் நேரம் தானே கிடைக்கும்.

புத்தகத்தை எடுத்தால் தூக்கம் வருகிறதா ? ஆம் என்போரே அதிகம் . முதலில் உங்களை காந்தமாய் ஈர்க்கும் புத்தகத்தில் வாசிப்பைத் துவங்குங்கள் .அதன் தரம் .தகுதி பற்றி அலட்ட வேண்டாம் . வாசிக்க வாசிக்க உங்கள் ரசனையும் தேடலும் தானாகவே மேம்படும் .ஆகவே முதலில் பிடித்ததில் தொடங்குங்கள் !

எழுத்துக்கூட்டி வாசிப்பது ,சொற்களாய் வாசிப்பது ,வாக்கியங்களாய் வாசிப்பது , பத்திகளாய் வாசிப்பது ,மனதுக்குள் வாசிப்பது ,உரக்க வாசிப்பது ,தனியாய் வாசிப்பது ,கூட்டாய் வாசிப்பது , அமைதியான இடத்தில் வாசிப்பது ,ஓடும் ரயிலில் வாசிப்பது ,வாசிப்பதே வேலையாய் செய்வது ,வேலையின் நடுவே வாசிப்பது ,அடடா வாசிப்பது என்பதில்தான் எத்தனைவகை ? எத்தனை சுவை ?

மீண்டும் சொல்கிறேன் . வாசிப்பு என்பது வெறுமே பழக்கமல்ல ,பண்பாட்டின் கூறு . புத்தகத்தைக் காதலித்தவர் ஒருபோதும் அதனை தூக்கி எறியமாட்டார்.

சென்றவாரம் முழுவதும் புதிய புத்தகம் எதுவும் வாசிக்காதாவர் வார்த்தையில் நறுமணம் வீசுவதில்லை என்பது சீனப் பழமொழி.

உங்கள் வார்த்தையில் நறுமணம்வீச வாசியுங்கள் ! தொடர்ந்து வாசியுங்கள் ! வாசித்ததை அடுத்தவருடன் பகிருங்கள் ! அதன் இன்பமே தனி !


































































சொல்.44

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .44 [ 12 /10/2018 ]


 ஆச்சி ! பக்கத்தில இருக்குற அனுமார் கோயிலுக்கு போகாமல் ஏன் தூரமா நடந்துபோய் அம்மன் கோயிலுக்கு போற ….”

இது என் பேரன் என் மனைவியிடம் கேட்டது .

இதையே வேறுமாதிரி யோசியுங்கள் . அருகிலேயே அழகழகாய் கோயில்கள் இருக்க திருப்பதி ,சபரிமலை என மாநிலம்விட்டு மாநிலம் போவதேன் ? உழைத்து சேர்த்த நாலுகாசை அங்கே சென்று கொட்டுவதேன் ?

எங்கும் நிறைந்தவன் இறைவன் என்று சொல்லிவிட்டு ;இல்லை இல்லை அந்த ஊரில் இருக்கும் அந்த சாமிக்கே பவர் அதிகம்னு சொல்வது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இல்லையா ?

இங்கே இறை நம்பிக்கையைவிட சடங்கு ,சம்பிரதாயம் ,மூடத்தனம் ,பைத்திக்காரத்தனம் எல்லாம் பேயாட்டம் போடும் . கடவுள் நம்பிக்கையினால் அல்ல சடங்கு ,சம்பிரதாயத்தைக் காக்கவே மூச்சைப் பிடித்து பேசுவர் . சாதி என்று வந்துவிட்டால் மதம்கூட இரண்டாம் பட்சம் ஆகிவிடும் .

இந்த மண்ணில் சித்தாந்தப் போர் நடத்துவது அவ்வளவு எளிதல்ல .மூடத்தனமும் , கண்மூடி வழக்கமும் , கேள்வி கேட்காமல் அடிபணியும் இழிவும் , சாதி ,மத போதையும் மிக்க சமூகத்தில் முட்டி மோதி விழுந்து எழுந்து ஊர்ந்து நடந்து செல்ல வேண்டியிருக்கும் .

உங்கள் வீட்டில் இதற்கான கேள்வியை துவக்கலாமே … முதலில் எம் பேரனின் கேள்வி பெருங்கேள்வி ஆகட்டும் !