வாழ்க்கைக்கு கனல் மூட்டியவன்

Posted by அகத்தீ Labels:




வாசகர்கள் கருத்துக்கள்

உங்கள் கருத்துகளை பதிவு செய்ய

பெயர்
மின் அஞ்சல்
கைப்பேசி எண்
உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யவும்

 
 

நவ கடோபநிஷத்

Posted by அகத்தீ Labels:

 
 
 
நவ கடோபநிஷத்


ருத்தலும் வாழ்தலும்
ஒன்றென ஆகா!
நான் , நீ , நாம் - இங்கு
இருந்தென்ன சாதித்தோம் ?

உண்டலும் உடுத்தலும்
உறைதலும் மகிழ்தலும்
கண்டலும் கற்றலும்
இச்சையும் வித்தையும்
பெற்றலும் வளர்தலும்
பாசமும் பகைத்தலும்
இருத்தலின் நிமித்தம்
இயல்பாய் நிகழ்வன.

வாழ்தலின் நோக்கம்
இசைபட வாழ்தலும்
புகழோடு தோன்றலுமே
பிறப்பின் பொருளாமோ!
இமைக் கதவை திறப்பீர
ஊரோடு ஒத்து வாய்மூடி நின்று
சீறுவது சீறாமல்
கொடுமைக்கு இணங்கலோ!

ஊரே எதிர்ப்பினும்
உறவே பகைக்கினும்
அநீதியை எதிர்ப்பதில்
அங்குலம் பிசகாமல்
குன்றென இருத்தலே
வசை மிகினும்
இகழ்ந்தொதுக்கினும்
வாழ்வின் பொருளாகும்.

நொடியில் நிகழும் மரணம் -பிறர்க்கு
சுமையற்ற மரணம் நிகழின் நன்றே!
பிறப்பும் இறப்பும் உன் வசமோ
எந்த நொடியும் வருமே மரணம்!
வாழும் ஒவ்வொரு கணமும்
மனதும் அறிவும் போற்ற மானுடம் வாழ
ஆற்றுவீர் வசைதாங்கிப் பொதுப்பணி!!!
 
 
காலம் தோறும் வெல்வாய்!

விதையில் பிறப்பெடுத்து - என்றும்
காலத்தை வென்றெடுத்து
கண்ணீரில் மிதக்கவிட்டு -இன்று
காவியமானவரே வாலி!

துட்டுக்கு மெட்டுக்கு கைதட்டுக்கு
பாட்டென்று சொன்னாய் ! - ஆனாலும்
சாகாத பாடல்களில் - என்றும்
சாகாத புகழ்கொண்டாய்!

மதம் உனக்கு பிடிக்கும் - ஆயின்
மதம்பிடித்து அலைந்ததில்லை..
மனிதத்தை மறந்ததில்லை - அதனால்
மக்கள் நெஞ்சத்தில் நிலைத்துவிட்டாய்!

பிறரை மதிக்கத் தெரிந்தவன் மனிதன்
உயிராய் நேசிக்கத் தெரிந்தவன் கவிஞன்
நாட்டை வழிநடத்தத் தெரிந்தவன் தலைவன்
நாட்டை பாட்டில் படம்பிடித்தவன் கவிஞன்

வாலி! நீ மனிதன் ! நீ கவிஞன்!- நீ
வாழ்ந்த போதும் மறைந்த பின்னும்
நீ வடித்த கவிதை மின்னும் - அது
காலம் தோறும் வெல்லும்!
 
காலம் சொன்னவை..

ழையும் வெயிலும் ஒருசேர
மனதில் இன்பம் அலைமோத
தேநீர் கோப்பையில் சுகம்கண்டு
கவிதைக் கனவில் எனைமறந்து
கண்ணை விழித்தபடி தூங்குகிறேன்
காலம் சொன்னவை ஏராளம்.

ஊரைப் பெயரை மறைத்தாலும்
உருவை மறைக்க இயலாதே!
தாய்ப்பாலோடு உண்ட மொழி
சாகும் வரை தலைகாட்டும்
பண்ணிப் பண்ணிப் பேசிடினும்
நம்மின் அடையாளம் அதுவேதான்.

மேல்நிலையாக்க மோகத்தில்
தன்னிலை மறைத்து அலைவானேன்?
நாமாயிருப்பதே நம்பலம் என்பதை
நாளும் உணர்த்துமே வரலாறு - அந்த
நாமென்பது சாதிமதத்தில் சங்கமமில்லை
வியர்வைக்கு இல்லை வேறுபாடு...

-சு.பொ.அகத்தியலிங்கம்
 
 
 
 
 

யோகா செய்தால் பசி எடுக்காதா ?

Posted by அகத்தீ Labels:




யோகா செய்தால் பசி எடுக்காதா ?

சு.பொ.அகத்தியலிங்கம்
 
யோ கா , பிராணாயாமம், தியானம் இவை சர்வ ரோக நிவாரணியாக தற்போது விற்கப் படுகிறது . பரபரப் பும் பதற்றமும் மிகுந்த இன்றையச் சூழலில் இவற்றின் அவசியத்தை யாரும் குறைத்து மதிப்பிட இயலாது; ஆனால் இவை குறித்த பார்வை மிகவும் பழுதுபட்டதாக உள்ளது. ஆன்மிக மத மயக்கம் தருவதாக வும் ஃபேக் சயின்ஸ் என ஆங்கிலத் தில் அழைக்கப்படும் போலி அறி வியல் சாரத்தோடும் சந்தைப்படுத் தப்படுகிறது. யோகாசனக் கலை : ஒரு வாழ்க்கைத் துணை என்கிற இந்த நூல் அதற்கு மிகச் சிறந்த உதாரண மாக உள்ளது.

யோகா என்பது உடற்பயிற்சி போன்றதே, ஆனால் இது உள் ளுறுப்புகளுக்கான பயிற்சி. இது பிராணாயாமம் எனப்படும் மூச் சுப்பயிற்சியோடு இணந்தது. தியானம் எனப்படுவது உள்ளத்தை அதாவது சிந்தனையை ஒருமுகப் படுத்தும் பயிற்சியாகும். இவை அனைத்தும் உடல் நலனுக்கு அவ சியமானது.

இதில் யாருக்கும் ஐய மில்லை . இது அனைத்து பிரிவு மக்களுக்கும் உரியதாகும். ஆனால் இதனை மதத்தோடு சேர்த்து பிசை வது தேவையற்றது. பொருளற்றது.இந்நூலில் முன்னுரை தொடங்கி முதல் எட்டு அத்தியாயம் முடிய 47 பக்கங்கள் பார்வைக்கோளாறு மிகுந்தவை யாகவே உள்ளன.

யோகா கடவுள் நம்பிக்கையற்றவர் களுக்கு கடவுள் நம்பிக்கையளிப்ப தாகக் கூறுவதும்; இந்து தர்ம நெறி களைக் கொண்டு அமையப் பெற்ற தாகக் கூறுவதும்; ஆத்ம தரிசனம், ஆன்மிகத் தேடல் என்றெல்லம் ஜோடனை செய்வதும் அனைத் துப் பகுதி மக்களும் இதனை பயில மனத் தடைகளை உருவாக்கி விடும்.


பசிக்கும் பொழுது உணவு கிடைக்காமல் போனால் தொண்டை குழியில் சம்யமம் செய்தால் பசிதாகம் அற்றுப் போய் விடுகிறது (பக்கம் 27 ) தாரணை, தியானம் , சமாதி மூன்றும் சேர்ந்தால் சம்யமம் என்கிறார் நூலாசிரியர். இந்த வாதம் பகுத்தறிவுக்கு உகந்ததா? பசிப்பிணிக்கு இது தீர்வாகுமா?

அதுபோல், இறையரு ளையும், உலகில் பொருளையும் ஒருங்கே பெற யோகாசனக் கலை மிகவும் உதவும் ( பக்கம் 11) என்கிறார். யோகா உடல் நலம் சார்ந்தது . அதற் கும் மேல் பொருளீட்ட உதவும் என்பது எப்படி சரியாகும் ? நூலாசிரியர் யோகா பயிற்சியளிப்பதன் மூலம் பொருளீட்டலாம் ; ஆனால் அது பொது நியதியாக முடியாது . மனம் புருஷனில் அடங்காத பூவை பெண் போல என்றும் , பரமார்த்திக வாழ்வு எனப்படும் பகுத்தறிவுக்கு அப்பாற் பட்ட வாழ்வு இருப்பதாகவும் , ஸ்தூல சரீரம் , சூக்ஷ்ம சரீரம் , காரண சரீரம், மகாகாரண சரிரம் என்றெல்லாம் அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடி யாத விவகாரங்களைக் கூறுவதும், நூலாசிரியரின் அறிவியல் பார்வைக் குறைவையும் சமூக சிந்தனையின்மை யையும் சுட்டுகிறது.

உடற்பயிற்சியும் யோகாசனமும் எதிர் எதிரானது அல்ல ; மாறாக ஒன் றோடொன்று நெருக்கமானது. பின்னிப் பிணைந்தது. ஆனால் நூலா சிரியர் இவற்றை எதிர் எதிராக நிறுத் துவது ஆபத்தான பார்வையாகும். மேலும் உடற்பயிற்சியால் அவசர புத்தியும் குறுக்குப் புத்தியும் ஒழுக்கக் கேடும் ஏற்படும் என்பதும், பிற்போக்கு சிந்தனைகளும் சுயநல எண்ணங் களும் பேராசைகளும் பெருகும் என்பதும் அடிப்படை ஆதாரமற்ற தாகும். அது போல் யோகாசனத்தால் முற்போக்கு சிந்தனைகளும் பொது நல எண்ணங்களும் ஒழுக்கமான வாழ்க்கையும் பெருகும் என்பதும் அதீத கற்பனையே ! வெறும் விளம் பரச் சொல்லாடலே.

சுரப்பிகள் குறித்தும் உளவியல் குறித்தும் சில அறிவியல் தகவல்கள் இந்நூலில் விரவப்பட்டிருந்தாலும் பொதுவில் ஃபேக்சயின்ஸாகவே இந்நூல் அமைந்துள்ளது.உப்பு, சர்க் கரை , முட்டை , அரிசி , பால் என ஐந் தையும் தவிர்க்கச் சொல்வது மருத்துவ அறிவியலுக்கு புறம்பானது. யாருக்கு எது தேவை எது தேவை இல்லை என் பதை அவரவர் உடல் நலன் சார்ந்து மருத்துவர் தாம் முடிவு செய்யவேண் டும் . பொதுவாகக் கூறுவது பிழையா கும் . மேலும் ஊட்டச்சத்து குறைவாக உள்ளோர் அதிகம் வாழும் நாட்டில் பாலையும், முட்டையையும் தவிர்க்கச் சொல்வது சமூக விரோதப் பார்வை யாகும்.

இப்படி பழுதான பார்வையைப் பேசும் முதல் 47 பக்கங்களைத் தொடர்ந்து யோகா செயல் விளக்கம் உள்ளது. அது குறித்து அத்துறை விற் பன்னர்கள் மட்டுமே கருத்துக் கூற இயலும். பாமரப்பார்வையில் பய னுள்ளதாகவே படுகிறது . ஆயினும் எல்லா யோகாசனத்தையும் எல்லோ ரும் செய்யக்கூடாது என்பதை வல்லு னர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள் செய்யக்கூடா தவை, கர்ப்பிணிப்பெண்கள் செய்யக் கூடாதவை என விதிவிலக்குகள் உண்டு. ஆனால் இந்நூலில் அந்தத் தெளிவு இல்லை.

யோகாசனக் கலை என்கிற பெய ரில் திசை திருப்பும் இந்துத்துவ முயற் சிகளுக்கு இந்நூல் துணை போகிறதோ என்கிற ஐயம் இந்நூலை வாசிக்கும் போது ஏற்படுகிறது . இது போல் யோகா குறித்து வெளிவந்துள்ள எண்ணற்ற நூல்களையும் அறிவியல் கண்கொண்டு பார்க்கத் தவறினால் நம்மையறியா மலேயே நாம் இந்துத் துவ மாயையில் வீழ்ந்து விட நேரிடலாம்.


யோகாசனக் கலை : ஒரு வாழ்க்கைத் துணை,

ஆசிரியர்கள் : கே . எஸ் . அழகிரி , திருமதி சிவகாமி,
வெளியீடு : நர்மதா பதிப்பகம்,

10, நானா தெரு , பாண்டி பஜார்,

தி.நகர் , சென்னை 600 017.

பக் : 164 , விலை : ரூ. 120.

   
   
    

பழக்கம் -வழக்கம்-ஒழுக்கம் : தேவை புதிய பார்வை

Posted by அகத்தீ Labels:

 
 
பழக்கம் - வழக்கம் - ஒழுக்கம்
தேவை புதிய பார்வை
 

சு.பொ.அகத்தியலிங்கம்

 

 

 
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இந்த வார்த்தைகள்  நம் வாழ்க்கை நெடுக தினசரி ஏதோ ஒரு வகையில் நம்மை ஆட்சி செலுத்துகிறது. இவை குறித்து கேள்விகேட்பவரை சமூகம் எதிர்மறையாகவே பார்க்கிறது. அதே நேரம் இவை காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்ற உண்மையை சமூக பொதுபுத்தி வசதியாக மறந்துவிடுகிறது. இவற்றில் எது சரி, எது தேவை, எது சுமை, எது முன்னேற்றத்திற்கு தடை என்றெல்லாம் பகுத்துப் பார்க்க நாம் முனைவதில்லை. அப்படி முயற்சி செய்வது தப்பு என்று கூட நம்மில் பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் இவைகளை கேள்விக்குள்ளாக்கி  எதிர்த்துத்தான் சமூக சீர்திருத்த இயக்கம் செயல்பட்டுள்ளது. இந்த சமூகத்தை மாற்ற விளைகிறயாரும் இவை குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வுக்குள்ளாக்குவது தவிர்க்க முடியாதது, தவிர்க்கக் கூடாது.
 
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது பழைய ஏற்பாடு; ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்பது புதிய ஏற்பாடு. விசுவாசிக்கிறவன் சொர்க்கத்திற்கு செல்வான் என்கிறது பைபிள். சந்தேகிக்கிறவன் அழிவான் என்கிறது இந்து சாத்திரங்கள். ஆனால் எல்லாவற்றையும் சந்தேகிக்கச் சொன்னார் மார்க்ஸ். எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொல்கிறது  நவீன அறிவியல். கேள்வி கேட்பவன் அந்த நிமிடம் மட்டுமே முட்டாளாக இருக்கிறான். ஆனால் கேள்விகேட்காதவன் வாழநாள் முழுவதும் முட்டாளாக இருக்கிறான் என்பது சீனப்பழமொழி.
 
துஷ்டனைக் கண்டால் தூரவிலகிப்போ என்பது பழமொழி. பாதகம் செய்வாரைக் கண்டால் மோதி மிதி என்பது பாரதி மொழி. ஙப்போல் வளை என்பது ஔவையாரின் ஆத்திச்சூடி. குன்றென நிமிர்ந்து நில் என்பது பாரதியின் ஆத்திச்சூடி. 
 
தையல் சொல் கேளேல் என்றார் ஔவை. ஆனால் பெண் சமத்துவத்திற்கு எதிரான இச்சொல்லை இன்று ஏற்க முடியுமா? முறுக்கி வளர்க்காத மீசையும் முறித்து வளர்க்காத முருங்கையும் அடித்து வளர்க்காத பிள்ளையும் உருப்பட மாட்டா என்பது சொலவடை. ஆனால் பிள்ளைகளை அடித்து இம்சை செய்வதை நவீன சிந்தனை ஏற்குமா? ஆக, நம் சிந்தனையில் செயலில் வாழ்க்கையில் பல மாறுதல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து மாறும். ஆயினும் பழக்கம், வழக்கம், ஒழுக்கம் என பொத்தாம் பொதுவாக பேசுவதும் தவறான கருத்தோட்டங்களை நியாப்படுத்துவதும் தொடரத்தான் செய்கிறது. 
 
முதலில் பழக்கம் என்பதை எடுத்து கொள்வோம். எங்கள் ஊர்பழக்கம், அல்லது எங்கள் சாதிப்பழக்கம் என்கிற பெயரால்  பிறப்பின் போதும் அல்லது   மரணத்தின் போதும் வாழ்க்கை நெடுக்கிலும் பல சடங்குகள் தீர்மானிக்கப்படுகின்றன. அவை அறிவியல் பூர்வமாக இன்றைக்கு பொருந்துமா என்று நாம் யோசித்து பார்ப்பதில்லை. உதாரணமாக பெண் பூப்படைவதை ஒட்டி செய்யப்படுகிற சடங்குகளும் அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு சொல்லப்படுகிற அறிவுரைகளும் பெண் அடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளாகவே  உள்ளன. ஆனாலும் அதை எந்த கேள்வியும் கேட்காமல்  கடன் வாங்கியாவது செய்கிற பழக்கம் தொடரத்தான் செய்கிறது. 
 
பழக்கம், வழக்கம் இந்த இரண்டு சொல்லிற்கும் தெளிவான வரையறை செய்வது இயலாத காரியம். நடைமுறையில் இரண்டும் குழம்பியே இருக்கிறது. அக்கா மகளை திருமணம் செய்து கொள்வது எங்கள் குலவழக்கம்தான் என்று பல இடங்களில் நியாயப்படுத்தப்படுகிறது.  மிக நெருங்கிய இரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது பல உடல் சிக்கல்களை உருவாக்கும். பிறக்கிற குழந்தை ஊனமுற்றவர்களாக பிறக்க வாய்ப்பு அதிகம் என்கிறது மருத்துவ அறிவியல். ஆனால் அத்தை மகள், அக்காள் மகள் இவர்களை திருமணம் செய்வது இன்னும் தொடரத்தான் செய்கிறது. 
 
அதே சமயம் சில பிரிவினரிடையே சகோதர உறவில் திருமணம் செய்கிற பழக்கமும் உண்டு. இதில் எது சரி, எது தப்பு என்று மிகப் பெரிய விவாதம் சமூகத்தில் நடைபெறுகிறது. சகோதர முறையில் திருமணம் செய்வதை மிகவும் ஒழுக்ககேடாக கருதுகிற விமர்சிக்கிற ஒரு கூட்டம் இருக்கிறது.  உண்மையில் அத்தை மகள் அல்லது சித்தி மகள் என்பதில் மிகப்பெரிய வேறுபாடு எல்லாம் அறிவியல் ரீதியாக இல்லை. இரண்டும்  குடும்ப மரத்தின் இருவேறு கிளைகளே. இரண்டு வழி திருமணங்களும் அறிவியல் பூர்வமாக ஏற்கத்தக்கது அல்ல. 
 
ஆக பழக்கம், வழக்கம் என்ற பெயரால் உறவுமுறைக்குள் கெட்டியாக நின்று கொண்டு இப்படி திருமணம் செய்து கொள்வது  மிகப் பெரிய சமூக சவாலாக வருங்காலத்தில் உருவெடுக்கும்.குறிப்பாக அகமண உறவுமுறை இந்திய சமூகத்தில் வலுவாக இன்னும் நீடிப்பதும்; அதிலும் நெருங்கிய உறவுமுறைக்குள் திருமணங்கள் நடைபெறுவதும் வருங்காலத்தில் உடல்ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரித்து விடும் என மரபியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். ஆயினும் பழக்கம், வழக்கம், சம்பிரதாயம், சாஸ்திரம், சாதிப்பெருமை, மத பெருமை என்கிற பெயரால் இந்த தவறான பழக்க வழக்கம் இன்னும் நியாயப்படுத்தப்படுகிறது.
 
 காதல் நம் பண்பாட்டின் கூறு என்று பெருமை பேசிக் கொண்டே காதலர்களுக்கு கொள்ளிவைப்பது ஏன்? சாதி, மத, வெறியன்றி வேறு என்ன? காதல் திருமணம் என்பது ஒழுக்ககேடு அல்ல. உயரிய பண்பாடு என்று உரக்கச் சொல்ல வேண்டாமா? 
 
இதுபோல் நாம் வாழ்க்கை நெடுக கருவறை தொடங்கி கல்லறை வரை எண்ணற்ற  சடங்குகளும் பழக்கங்களும், வழக்கங்களும் நம்கை பீடித்துள்ளன. அவை குறித்து ஓர் அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு நம் சமூகம் தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
 
புலால் மறுப்பு என திருக்குறளில் ஒரு அத்தியாயமே உண்டு.  புலால் பழக்கம் நல்லதா கெட்டதா? இது மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் ஒரு விதமான கெட்டித்தட்டிப்போன கருத்தோட்டமாக உள்ளது. சைவம், அசைவம் என உணவு பழக்கத்தை சமயம் சார்ந்து இருகூறாக வைத்துள்ளனர். அது எப்படி சரியாக இருக்க முடியும். ஆதி மனிதன் பச்சைக் கறியைத்தான் சாப்பிட்டான். நெருப்பில் சுட்டுச்சாப்பிடுவதற்கு பல ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான். பச்சைக்காய்கறிகளைத் தான் சாப்பிட்டான். வேக வைத்து சாப்பிட அறிந்ததே வெகுகாலத்திற்கு பின்னர் தான். மசாலாவின் சுவையை அறிந்தது சில ஆயிரம் ஆண்டுகள் முன் தான். புலால் சாப்பிடுவது அதாவது மாமிசம் சாப்பிடுவது மனிதனின் இயல்பு.  புலால் மறுப்பு தான் அதற்கு மாறானது. சைவம் அசைவம் என்ற சொல்லாடலே தவறு. புலால் உண்போர் புலால் மறுப்போர் என்றோ - புலால் பழக்கம் மரக்கறி உணவு பழக்கம் என்றோ தான் சொல்ல வேண்டும்.  புலால் வேண்டுமா வேண்டாமா என்பதை சமயமோ சாதியோ முடிவு செய்யக்கூடாது அவரவர் சுயவிருப்பமும் உடல் நலனும் சார்ந்து அவரவருக்கு எது தேவை என்பதை முடிவு செய்வது தான் அறிவியல் பூர்வமான பழக்கமாகும். இதற்கு மாறான எல்லாம் சமூக அராஜகமே. 
 
ஒருவர் இறந்து போனால் அவரை எரிப்பதற்கு எடுத்துச் செல்லும் போது கொள்ளிச்சட்டி ஏந்தி போவதும்; மேளதாளம் கொட்டிச் செல்வதும் நடக்கிறது. ஆதிகாலத்தில் நெருப்பு என்பது அபூர்வ பொருளாக இருந்தது. தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே தீயை சுமந்து செல்லவேண்டியது தேவையாக இருந்தது. ஆகவே அந்த காலக்கட்டத்தில் கொள்ளிச்சட்டி ஏந்தினர். ஆனால் இன்றைக்கு மின்சார சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்துச் செல்வோரும் கொள்ளச்சட்டி ஏந்துவது எந்த வகையில் அறிவுபூர்வமானது. அதுபோல் ஆதி காலத்தில் பிணத்தை எரிக்க செல்லும்மிடம்  ஒதுக்கு புறமாகவும், புதர்காடாகவும் இருப்பது தவிர்க்க இயலாது. அங்கே நரி போன்ற விலங்குகள் தொல்லைத் தரக்கூடும். ஆகவே விலங்குகளை விரட்ட மேளதாளம் கொட்டிச் செல்வது தேவையாக இருந்தது. இன்றைக்கு அது தேவையா?
 
 
ஒழுக்கம் குறித்து பேசாத மதங்களோ, நீதிநெறி இலக்கியங்களோ, சமூக சிந்தனையாளர்களோ இருக்கவே முடியாது. அதே சமயம் எது ஒழுக்கம் , எது ஒழுக்கமின்மை என்பது குறித்த பார்வையில் சமூகத்தில் குழப்பமும், பிற்போக்குதனமும், ஆதிக்க வெறியும், சாதியும், பெண்ணடிமைத்தனமும் கோலோச்சவே செய்கின்றன. பொய்சொல்லக்கூடாது, திருடக்கூடாது, குடிக்கக்கூடாது, கொலைசெய்யக்கூடாது, ஏமாற்றக்கூடாது, வஞ்சகம் செய்யக்கூடாது, புறம்பேசக்கூடாது இது போன்ற பொதுவான கட்டளைகளை காலம் காலமாக கேட்டு வருகிறோம். இனியும் அவை தொடரும். இவற்றை பொதுவாக சொல்லுகிற போது நியாயமாக தோன்றுகிறது. ஆனால் கொஞ்சம் அலசத்துவங்கினால் அது பெரும் விவாதப்பொருளாகிவிடுகிறது. 
 
பொய்சொல்லக்கூடாது என்பது சரியே. ஆனால் மத நூல்கள் சொல்வது எல்லாம் பொய்தானே. சொர்க்கம், நரகம் என்பது பொய்தானே. கடவுள் என்பது பொய்தானே. பாவம் புண்ணியம் என்பது வெறும் கற்பிதம் தானே. பொய் சொல்லக்கூடாது என்று சொல்லி விட்டு மதநம்பிக்கையை கைவிடக்கூடாது என்று சொல்வது முரண்பாடானது அல்லவா? 
 
திருடக்கூடாது மிகச்சரி. நாகரிக சமூகத்தில் திருட்டு என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. ஆனால் சொத்துடமையின் வேர்எங்கே என்று அலசினால் அது  பிறர்சொத்தை - பிறர்உழைப்பை - பிறர்சேமிப்பை திருடியது என்கிற பேருண்மை பளிச்சிடும். இது சுரண்டலின் கூறாக உள்ளது. அப்படியானால் இந்த திருட்டை எதிர்ப்பது தேவையா இல்லையா? பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என இழப்பதற்கு எதுவும் இல்லாத உழைப்பாளியைப் பார்த்து ஒழுக்க உபதேசம் செய்பவர்கள்; சுரண்டலின் அடிப்படையே அடுத்தவருக்கு உரியதை அபகரிப்பது என்பதை உணர்வார்களா? அப்படியானால் இந்த சுரண்டலை எதிர்க்க வேண்டாமா? 
 
கணவனுக்கு அடங்கியவளாகவே மனைவி இருக்க வேண்டும் அதுவே பெண்ணுக்குரிய ஒழுக்கம் என்று இன்றும் நடைமுறையில் சமூக பொது புத்தியில் வலுவான கருத்து உள்ளது. ஆனால் இது பெண்ணடிமைத்தனத்தின் குரல் அல்லவா? ஒழுக்கம் என்பது மனைவிக்கு கணவன் அடங்குவதோ அல்லது கணவனுக்கு மனைவி அடங்குவதோ அல்ல இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு; குறை நிறைகளை அங்கீகரித்து - விட்டுக் கொடுத்து வாழ்வதே ஆகும். ஆனால் எந்த ஒழுக்க உபதேசிகளும் இதனை வலியுறுத்துவதில்லையே ஏன்? 
 
தீண்டாமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லையே ஆனால் இந்தியாவில் மட்டும் இந்த பழக்கம் ஏன்? அது மட்டுமல்ல சாதிய ரீதியாக ஒழுக்கக் கோட்பாடுகள் திணிக்கப்படுவது ஏன். உதாரணமாக பிராமணர்கள் பூணுல் அணிகிறார்கள். அவர்கள் இருபிறப்பாளர்கள் என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது.  ஆனால் பிராமணப் பெண்கள் ஏன் பூணுல் அணிவதில்லை? மற்ற சாதிகளுக்கு பூணுல் அணியும் உரிமை ஏன் இல்லை? திருமணத்தின் போது மணமகனுக்கு பூணுல் அணிவித்து திருமணம் செய்யப்படுகிறது. இதன் பொருள் என்ன? சூத்திரர்களுக்கு திருமணம் செய்ய மநு உரிமை வழங்கவில்லை எனவே பூணுல் அணிவித்து அந்த கொஞ்ச நேரம் மட்டும் அவனை பிராமணன் ஆக்கி திருமணம் செய்வதும் முடிந்ததும் பழையபடி சூத்திரனாக்குவதும் தொடர்கிறது. ஆனால் கேள்வி எழுப்பாமலே இந்தப் பழக்க வழக்கத்திற்கு பணிந்து போகிறார்கள். ஆனால் இதை மீறி  பதிவுத் திருமணமோ, சுயமரியாதை திருமணமோ செய்பவரை ஒழுக்கம் குறைந்தவராகவோ அல்லது வித்தியாசமான பிறவியாகவோ பார்க்கிற போக்கே சமூகத்தில் இன்னும் தொடர்கிறது. இந்த மநுவின் ஒழுக்க நீதிகள் தொடரலாமா? 
 
பொதுவாக பழக்க வழக்கம் என்பது பண்பாட்டின் ஒரு கூறாகவும்; ஒழுக்கம் என்பது பண்பாட்டின் கருத்து நீரோட்டமாகவும் கருதப்படுகிறது. ஆனால் அந்த சமூகம் அடிமை சமூகமாக இருக்கிற போது அடிமை எஜமானன் என்கிற சமூக பிரிவினையை நியாயப்படுத்தவே பழக்கம், வழக்கம், ஒழுக்கம் அனைத்தும் பின்னப்பட்டன. அந்த சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகமாக மாறியபோது அதற்கொப்ப நிலப்பிரபு, பண்னையடிமை என்கிற சுரண்டலை நியாயப்படுத்த இவை வலுப்படுத்தப்பட்டன. மற்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ சிந்தனை உற்பத்தி கருவி சார்ந்து உருவானது - செயல்பட்டது. ஆனால் இந்தியாவில் அது சாதி என்கிற கொடூரமான பிரிவினையாய் சமூகத்தை மேல்கிழாய் - படிநிலையாய் குதறிப்போட்டு விட்டது. அது இன்னும் தொடர்கிறது.  முதலாளித்துவ சமூகம் பிற நாடுகளில் பழக்கம், வழக்கம்,  ஒழுக்கம் இவற்றில் காலத்திற்கு ஒப்ப பல மாறுதல்களை கொண்டு வந்தது. ஆனால் இந்திய சமூகத்தில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத் தோடு கைகுலுக்கிக் கொண்டு பழைய ஏற்பாடுகளை கெட்டியாக தொடர்கிறது. ஆகவே இந்திய சமூகத்தில் - தமிழ்ச்சமூகத்தில் நாம் இன்று பின்பற்றுகிற - உபதேசம் செய்கிற  பழக்கம், வழக்கம், ஒழுக்கம்  பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ காலக்கட்டத்தைச் சார்ந்தவையே. அவை சாதியத்தை தூக்கிப்பிடிப்பவையே. நீதிநூல்கள் ஒழுக்க உபதேசங்கள் இவை அனைத்தும் இந்த அடித்தளத்தில் இயங்குபவையே. எனவே கண்மூடித்தனமாக  இவற்றை பின்பற்றுவது ஆபத்தானது. 
 
இதன் பொருள் பொய்சொல் என்பது அல்ல. திருடு என்பது அல்ல. பிறன்மனை திருடு என்பது அல்ல. மாறாக சமத்துவம், சகோதரத்துவம், தோழமை மிகுந்த; ஜனநாயகம் சார்ந்த புதிய பார்வை தேவை என்பது தான். எந்த ஒரு பழக்கம், வழக்கம், ஒழுக்கம் ஆனாலும் அது சாதிய ஆதிக்கத்தை எதிர்க்கிறதா அல்லது மறைமுகமாகவோ, நேரடியாகவோ கெட்டிப்படுத்துகிறதா? என்ற அளவுகோலால் மதிப்பீடு செய்ய வேண்டும். அதேபோல பெண் சமத்துவத்திற்கு உகந்ததா எதிரானதா என்கிற தராசில் எடைபோட வேண்டும். சாதி ஆதிக்கத்தை உடைக்க - பெண் அடிமைத்தனத்தை நொறுக்க  நம்மிடம் உள்ள பல பழக்க வழக்கங்களை ஒழுக்க நியதிகளை தலைகிழாக  மாற்றியாக வேண்டும். இதை செய்கிற போது உன்னை கலகக்காரன் அடங்காதவன் வில்லங்கமான பேர்வழி என சனாதன பேர்வழிகள் வசைமாரி பொழியலாம்.  அதனை ஏற்றுக் கொண்டு தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும்.
 
 
 “அடி! உடை! நிர்மானி” என்றார் மார்க்சிம் கார்க்கி. தமிழகத்தில் திராவிட இயக்கம் வைதீக கோட்டையை அடித்து உடைக்க சம்மட்டி தூக்கியது. ஆனால் நிர்மானிக்க வேண்டிய சமூகம் குறித்து தெளிவும் தொலைநோக்கும் இல்லாததால் அவர்களின் போராட்டம் விரும்பிய திசைவழி  தொடரவில்லை. அதனால் தான் பண்பாட்டில்  விபரிதங்கள் ஏற்பட்டுவிட்டதாக தற்போது கலைஞர் கருணாநிதி ஒரு திருமண விழாவில் கவலைப்பட்டார். கவலை நியாயமானது. ஆனால்  அதன் காரணத்தை அவர் அலசமாட்டார். திராவிட இயக்கம்  இனி அதை செய்யாது. பொது உடமை இயக்கம் தான் இதற்கான சமூக கருத்துப்போராட்டத்தை சரியான திசை வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அதுவும் இன்றைய ஊடகங்கள் பரபரப்புக்காகவும் விற்பனைக்காகவும் பழையவற்றிற்கு தங்க முலாம் பூசி சந்தைப்படுத்துகிறது. இந்த ஊடக வியாபாரிகளால் பண்பாட்டுத் தளத்தில்  ஏற்பட்டுள்ள மிக்பெரிய  தாக்கங்களை எதிர்கொள்ள இடது சாரி ஊடகங்கள் ஊக்கமுடன் செயல்பட வேண்டிய காலம் இது. சமூக நீதி - சமூக மாற்றம் இவற்றை மையஇழையாக கொண்டு  புதிய ஒழுக்க நெறிகளை சமூகத்திற்கு வழங்கவும்; சமத்துவம், ஜனநாயகம் இவற்றின் மேல்வலுவாக கட்டப்படுகிற கோட்டையாக புதிய பழக்க, வழக்க பண்பாட்டத் தடத்தை கட்டியமைக்கவும் இடது சாரி ஊடகங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம் இது. தீக்கதிர் பொன்விழா ஆண்டில் இப்பணியில் நாம் எவ்வளவு தூரம் செய்துள்ளோம் என்பதையும் எவ்வளவு செய்யத் தவறியுள்ளோம் என்பதையும் காய்தல் உவத்தல் இன்றி அலசி அறிய வேண்டும். அதை ஆதாரமாக கொண்டு அடுத்து வரும் ஆண்டுகளில் புதிய தடத்தில் முன்னிலும் வலுவாய் முன்னிலும் உறுதியாய், முன்னிலும் தெளிவாய், முன்னிலும் வேகமாய் பயணித்தாக வேண்டும். நிச்சயம் செய்வோம். 
 
[ தீக்கதிர் பொன்விழா மலரில் வெளியானது]

மார்க்ஸை பயில்வது என்பதன் பொருள்

Posted by அகத்தீ Labels:




மார்க்சை பயில்வது என்பதன் பொருள்...



சு.பொ. அகத்தியலிங்கம்

 
   " நாம் ஒரு புதிய கொள்கையுடன் ; இதுதான் உண்மை - இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக்கோட்பாட்டுத்தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை . உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்" இப்படிச் சொன்னவர் கார்ல் மார்க்ஸ்.
அந்த மார்க்ஸையும் அவர் தந்த சமூக விஞ்ஞானமான மார்க்சியத்தையும் ஐயம்திரிபற கற்பது பாட்டாளி வர்க்க விடுதலைக்கு முன்நிபந்தனை ஆகிறது. அதிலும் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று கூப்பாடுபோடுகிறவர்களுக்கு மத்தியில் - மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக்கி மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகக் கூர்தீட்டுகிறவர்களுக்கு மத்தியில் செயல்படுகிற முன்னணிப் படைவீரர்கள் மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானத்தின் இயங்கியல் சாரத்தை உட்கிரகிப்பது இன்றைக்கு மிகமிக அவசியம்.

அதற்காக மார்க்ஸைப் பயில வேண்டும் . இதன் பொருள் மார்க்ஸை தேவதூதனின் வருகையைப் போல் தரிசிக்க முயல்வது அல்ல. மார்க்ஸ் என்னும் மாமேதை எப்படி உருவானார் என்பதை வரலாற்று இயங்கியல் கண்ணோட்ட்த்தில் பயில்வது தேவைகிறது . அதற்கு டேவிட் ரியாஜெனோவ் எழுதிய  மார்க்ஸ் எங்கெல்ஸ் ;வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம்  என்ற நூல் பெரிதும் உதவும். அதுபோல மார்க்சியத்தை ஒரு சமூக அறிவியலாகப் பயின்றிட விக்டர் ஆஃபேன் ஸீவ் எழுதிய  மார்க்சிய லெனினிய தத்துவம் நிச்சயம் கைகொடுக்கும்.

சாமிநாத சர்மா எழுதிய காரல் மார்க்ஸ் வாழ்க்கைவரலாறு ஆரம்ப நிலையில் மார்க்ஸ் குறித்த எழுச்சியூட்டும் சிந்தனையை நெஞ்சில் விதைக்கும் ஐயமில்லை. ஆனால் களப்போராளிகளுக்கு அதுமட்டுமே போதுமானதல்ல மேலும் ஆழமான புரிதல் தேவை. அதற்கு கருவியாக பல நூல்கள் வந்துள்ளன . ஹென்ரி வோல்கவ் எழுதிய கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாற்றைக் கூறும்   மார்க்ஸ் பிறந்தார்  எனும் நூல் , ஒண்பது ஆசிரியர்கள் கூட்டாகத் தொகுத்த   கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு  உள்ளிட நூல்களை நுட்பமாக வாசிப்பதும் அதன் தொடர்ச்சியாக இந்நூலை வாசிப்பதும் புரிதலில் தெளிவையும் விசாலப்பார்வையையும் உருவாக்கும்.

 மார்க்ஸும் எங்கெல்ஸும் எவ்வாறான நிலைமைகளிலும் சுற்றுச்சூழல்களிலும் வளர்ந்து சிந்தனை  பெற்றனர் என்பதை கூர்மையாகப் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்வோம் .  "ஒவ்வொரு தனிமனிதனும் , குறிப்பிட்ட சமூகச்சூழலின் படைப்பே ஆவான்  சாதனை ஒன்றை உருவாக்கும் எந்த ஒரு மேதையும் அதை தனக்கு முன்னால் அடையப்பெற்ற சாதனைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்குகிறான் . சூன்யத்திலிருந்து அவன் உதிக்கவில்லை"  இவ்வாறு கூறும் ரியாக்ஜெனோவ் 9 அத்தியாயங்களில் வரலாறு எப்படி மார்க்ஸை செதுக்கியது ? ; வரலாற்றை  பாட்டாளிவர்க்கத்துக்கு சாதகமாக மடைமாற்ற சிந்தனைக் களத்திலும் செயல் களத்திலும் எவ்வாறு மார்க்ஸ் இயங்கினார்  இதில் எங்கெல்ஸின் பாத்திரம் யாது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைகண்டிருக்கிறார்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துகள் அனைத்தையும் சேகரித்து தொகுத்து ஆவணப்படுத்தும் பணியில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் என்ற முறையில் மார்க்சின் சிந்தனையின் பரிணாமத்தை நன்கு உட்கிரகித்தவர் ரியாஜெனோவ் ; எனவே அவரால் மார்க்ஸை மிகச்சரியான கோணத்தில் இந்நூலில் அறிமுகப்படுத்த முடிந்துள்ளது .

முதல் அத்தியாயத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கம் மேலோங்கி வளந்த காலகட்ட்த்தில் மார்க்ஸ் , எங்கெல்ஸ் 20,25 வயதுப் பருவத்தினராய் அதை எதிர்கொண்டனர் , அது அவர்கள் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதென வாதிடுகிறார்.

ஜெர்மனியில் புரட்சிகர இயக்கத்தின் தொடக்க நாட்கள் குறித்த அலசலோடு  எனக்கு கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது  என்று மார்கஸ் கூறிய காலகட்டத்தினையும்  டாய்ட்ஷ் பிரான் ஷென் ஜார்புச்சேர் என்கிற ஏட்டில் எழுதத்துவங்கிய காலதிலேயே 1843 புரட்சிகர ஜனநாயகவாதி என்பதிலிருந்து கம்யூனிஸ் சிந்தனைக்கு மார்க்ஸ் மாறத்துவங்கினார்  இரண்டாவது அத்தியாயத்தில் நூலாசிரியர் விவரிக்கிறார்.என்பதையும்

இளம் ஹெகலியாராக கல்லுரி நாட்களில் விளங்கிய மார்க்ஸ்  கருத்துமோதலில் விமர்சனங்களூடே ஹெகலையும் பியர்பாக்கையும் மறுத்தும் உட்கொண்டும் புரட்சிகர தத்துவத்தை நோக்கி படிமலர்ச்சி அடைந்த வரலாற்றை மூன்றாம் அத்தியாயம் பேசுகிறது.

கம்யூனிஸ்ட் லீக்கின் உருவாக்கம் அதில் மார்க்சின் செயலூக்கமிக்க பாத்திரம் கம்யூனிஸ்ட் அறிக்கையின் தோற்றம் இவை குறித்து பேசும் நாலாவது அத்தியாயம் சுவைமிக்கது மட்டுமல்ல நிறைய தகவல்களையும் பரிசீலனைகளையும் உள்ளடக்கியது . மார்க்சின் அமைப்பு சார்ந்த பணிகள் ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் நூலாசிரியர் அக்குறையை இந்நூலில் நிறைவு செய்துள்ளார்.

1848 ன் ஜெர்மன் புரட்சி குறித்து அலசும் 5 வது அத்தியாயம் புரட்சியின் தோல்வி  கம்யூனிஸ்ட் லீக் கலைக்கப்பட்டது என புதிய சூழலை சரியாகப் படம் பிடிக்கிறது . அதில் மார்க்ஸின் பாத்திரம் ஒரு கட்டத்தில் அவரது தவறான அனுமானம், அதிலிருந்து மீண்டது என மார்க்சின் சிந்தனை வளர்ச்சி நன்கு பதியப்பட்டுள்ளது.

1850  களில் பிற்போக்குவாதம் தலைதூக்கிய பின்னணியில் மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்த்திய தத்துவப்போர் மிகமுக்கியமானதாகும் . முதல் அகிலத்தின் தோன்றிய சூழல் அதில் மார்க்சின் பாத்திரம்  1867-68 நெருக்கடி  தத்துவத்தின் வறுமை , தூரிங்கிற்கு மறுப்பு போன்ற நூல்கள் எப்படி தத்துவ மோதலில் மலர்ந்தன  அவை எப்படி சரியான கண்ணோட்ட்த்தை வளர்தெடுக்க உதவின  மூலதனம் நூல் எவ்வாறு கருக்கொண்டு வளர்ந்தது  எங்கெல்ஸ் மார்க்ஸ் உறவின் ஆழம் எத்தகையது  சிந்தனைக்களத்தில் இருவரும் எப்படி இணைஇசையமைப்பாளர்கள் போல் செயல்பட்டனர் என விரிந்த சித்திரத்தை அடுத்தடுத்து வந்த அத்தியாயங்களில் நூலாசிரியர் திறம்பட விளக்கி உள்ளார்.

இறுதி அத்தியாயம் இருவரும் நமக்கு விட்டுச் சென்றுள்ள கருத்துப் பொக்கிஷத்தை அடையாளம் காட்டுகிறது . கருத்துகளோடு மோதி மோதித்தான் மார்க்சியம் எனும் சமூக அறிவியல் படிநிலை வளர்ச்சி பெற்றது என்பதையும் ; ஆகவே அந்த அறிவு ஊற்று மேலும் மேலும் சுரக்கும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மார்க்சிய அறிவியலை வெறுமே தத்துவவியாக்கியானமாகப் பயிலாமல் அறிவியலாகப் பயில்வது இன்றையத் தேவை. அதற்கு இந்நூலைத் தொடர்ந்து விக்டர் ஆல்பேன் ஸீவ் எழுதிய மார்க்சிய லெனினிய தத்துவம் என்ற நூலை வாசிப்பது அவசியம். இந்நூல் வழக்கமான பாணியில் நெடுங்கட்டுரைகளாக அமையாமல் பாடக்குறிப்புபோல் வரைபடங்கள் , அட்டவணைகள் , விளக்கப்படங்கள் என அமைந்துள்ளதால் வாசகர்கள் எளிதில் உள்வாங்க இயலும்.

மேலும், "மார்க்சியத் தத்துவத்தை முழுமையடைந்த மீறக்கூடாத ஒன்றாக நாம் கருதவில்லை; மாறாக அது அறிவியலின் அடிக்கல்லை மட்டுமே இட்டுள்ளது என்று தெளிவாகவே உள்ளோம் ; சோஷலிஸ்டுகள் , வாழ்க்கையின் வேகத்துடன் இணைந்து செல்ல விரும்பினால் , அவர்கள் அந்த அறிவியலை அனைத்து திசைகளிலிருந்தும் வளர்க்க வேண்டும் . இந்த தத்துவம் பொதுவான வழிகாட்டும் கொள்கையை மட்டும் அளிக்கிறது ; அக்கொள்கைகள் இங்கிலாந்தில் பிரான்ஸிலிருந்து வேறுவிதமாகாவும், பிரான்சில் ஜெர்மனியிலிருந்து வேறுவிதமாகவும் , ஜெர்மனியில் ரஷ்யாவிலிருந்து வேறுவிதமாகவும் பொருத்திப் பார்க்கப்பட்டன"  என்கிறார் லெனின்.

தமிழக மற்றும் இந்திய தத்துவ மரபை உள்வாங்கி இதுபோல் பொருத்திப் பார்த்து ஓர் நூலாக்கித் தருவோன் இந்திய  தமிழக பாட்டாளி வர்க்கத்திற்கு பெரும் தொண்டாற்றியவனாவான் . அத்துடன் விஞ்ஞானி ஜெயராமன் எழுதி ஆங்கில மார்க்ஸிஸ்ட் காலாண்டிதழில் வெளிவந்த  - மார்க்சிய தத்துவத்தின் இன்றைய பொருத்தப்பாடு குறித்த  இன்றைய காலகட்டம் வரையிலான அறிவியல் வளர்ச்சியோடு இணைந்த  அந்தக் கட்டுரையும் உடனே தமிழாக்கம் செய்யபட்டு வெளியிடப்படவேண்டும். ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய  மார்க்சிய தத்துவம் : ஓர் தொடக்க பாடம் , எமிலி பார்ன்ஸ் எழுதிய மார்க்சிய தத்துவம் உள்ளிட்ட நூல்களையும் தேடித்தேடி படிப்பதும் பதிப்பிப்பதும் மிகமிக அவசியம்.

மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல செயலுக்கான வழிகாட்டி என்று திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி ஆனந்தப் படுவது மட்டும் போதாது ; மாறாக அந்த அறிவியலை இப்போதையத் தேவைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப படிப்பதும் உள்வாங்குவதும் பிரயோகிப்பதும் அவசியம். ஆம் அந்தப் பயணத்தின் ஒரு கூறாக இவ்விரு நூல்களைப் பழுதறக் கற்போம் முதலில்.

1 மார்க்ஸ் எங்கெல்ஸ் : வாழ்வும் எழுத்தும்
ஆசிரியர் : டேவிட் ரியாஜெனோவ்,
தமிழில் : அபராஜிதன்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ தெரு , தேனாம்பேடை,,
சென்னை 600 018.
பக் :256 , விலை : ரூ.160.

2 மார்க்சிய லெனினிய தத்துவம்
ஆசிரியர் : விக்டர் ஆஃபேன் ஸீவ்,
தமிழில் : ஆர்.பெரியசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ தெரு , தேனாம்பேடை,, சென்னை 600 018.
பக் : 168 , விலை : ரூ.200.
   
   

ஒவ்வொரு நொடியையும்…

Posted by அகத்தீ Labels:

ஒவ்வொரு நொடியையும்
[ அகவை அறுபதில் ஒரிரு வார்த்தைகள் ]


இன்று[ 15 ஜூன் 2013 ] எனக்கு அகவை அறுபது . பிறந்த நாளன்று தமிழ் நாட்டுக்கு வெளியேபெங்களூரில் வசிக்க நேர்வது இதுவே முதல் முறை . வாழ்வில் இன்று இன்னொரு நாளே . ஆயினும் முதுமையின் தலைவாசலில் நுழைவது வளர்ச்சியின் அடுத்தகட்டமல்லவா ?அந்த பூரிப்பு என்னுள் சில்லென்று வருடுகிறது.

 2011 தொடங்கி பிறந்த நாளன்று சில செய்திகளை தெரிவிப்பதை வாடிக்கையாக்கி உள்ளேன் .அகவை 58 ல் ஓய்வெனப்படுவது யாதெனக்கேட்டு என் கருத்துகளை பதிவிட்டிருந்தேன். அகவை 59 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுவருவது குறித்து திருப்தி தெரிவித்திருந்தேன் .


http://akatheee.blogspot.in/2012/06/2.html

 ஆம், இப்போது நான் கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினராகவோ - தீக்கதிர் இணை ஆசிரியராகவோ - வேறு எந்த முக்கிய பொறுப்பிலும் இல்லை . என் சுயவிருப்பத்தினை ஏற்று என்னை இவற்றிலிருந்து விடுவித்த கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் .கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் - கட்சியின் முழுநேர ஊழியராகவும் - தீக்கதிர் ஆசிரியர் குழுவிலும் தொடர்கிறேன். என்னால் இயன்ற அளவு கட்சிப் பணிகளில் கட்சி வழிகாட்டுதல்படி தொடர்வேன் .என் எழுத்துப் பணிக்கும் கருத்துப்பரப்பல் பணிக்கும் இறுதி மூச்சுவரை ஒய்வு இல்லை. மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானத்தை பின்பற்றி நடந்ததற்காக வாழ்வில் பெருமிதம் கொள்கிறேன் . தொடர்ந்து அதே பாதையில் பயணிப்பதையே பெரும்பேறாகக் கருதுகிறேன்

பொதுவாழ்வில் ஈடுபடுவோர் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொறுப்புகளிலிருந்து விலகி - அதே சமயம் அனுபவத்தை வீணாக்காமல்  அமைதியாகப் பணியாற்றும் பக்குவம் பெறவேண்டும் என்பது எனது நெடுநாள் வாதம் . அந்த சோதனை முயற்சியில் என்னை நான் ஈடுபடுத்தியுள்ளேன். அதன் சிரமங்களும் வலியும் இருக்கத்தான் செய்கிறது .சில சமயங்களில் தர்மசங்கடமான சூழலில்  சிராய்ப்புகளோடு தப்புவது அவ்வளவு எளிதல்ல. ஏற்கெனவே வரலாற்று எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன் இது குறித்து எச்சரித்திருந்தார் , எனவே   அதிர்ச்சிகள் எதிர்பாராததாக இல்லை.சமாளிப்பதும் சாத்தியமாயிற்று . எது எப்படி இருப்பினும் இப்பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதி பூண்டுள்ளேன் . வலியில்லாமல் வாழ்க்கை ஏது ? தயங்கிநின்றால் ஆகுமா ? காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டே காலடியை உறுதியாக முன்வைக்கிறேன் .  

சொந்த வாழ்வில் என்  மனைவியும் மகளும் மகனும் என் இலட்சியத்தை மதிப்பவர்களே .பின் தொடர்பவர்களே !  மகளும் சரி - மகனும் சரி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதும் - அதுவும் காதல் திருமணமாக அமைந்ததும் பெருமகிழ்ச்சி.சாதி மறுப்புத் திருமணம் - காதல் திருமணம் என்கிற உயர் நோக்கத்தைவரதட்சணை இன்றி இருவீட்டாரும் மனமுவந்து ஏற்று முன்நின்று நடத்த சில சடங்குகளோடு சமரசம் செய்துகொள்ளவேண்டி இருந்தது. மொத்தத்தில் மனநிறைவான திருமணமே.

சொந்த வாழ்வில் பணம் பண்ணும் வித்தையை இன்றுவரை கற்றேனில்லை. இதனால் ஏற்பட்ட உரசல்களும் மன உழைச்சலும் இந்த நொடிவரைத் தொடரத்தான் செய்கிறது . சொத்தாக எதையும் சேர்த்துவைக்கவில்லை கடனைத் தவிர... இன்னும் இரண்டு மாதங்களில் தொல்லை தரும் பெரும் கடன்களிலிருந்து கிட்டத்தட்ட விடுபட்டுவிடுவேன்..பெங்களூரில் மகன் வீட்டிலும்  - சென்னையில் மகள் வீட்டிலும் எஞ்சிய காலம் இனிதே கழியும் என நம்புகிறேன்.
மனைவியின் உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பினும் - ஆயூர்வேத சிகிட்சை தொடர்ந்து மூன்று வருடங்கள் செய்யவேண்டும் என்பதால் விரைவில் மீண்டும் மனைவி சிகிட்சைக்காகத் திருவனந்தபுரம் செல்வோம். எனது உடல் நிலை மருத்துவர் வழிகாட்டுதல்படி சீராக உள்ளது.

இதுவரை என் எழுத்துப்பணியில் மலர்ந்தவை :

1]சிந்திக்கும் வேளையில் குறள்
2]என் கேள்விக்கு என்ன பதில் ? [ அறிவியல் விழிப்புணர்வு சிறார்  சித்திரக்கதை ]
3]பாசிசம் பழசும் புதுசும் [ மொழி பெயர்ப்பு ]
4] விடுதலைத் தழும்புகள் [ தமிழக அரசு விருது பெற்றது ]
5] மனித உரிமை வரலாறும் அரசியலும் [ திருப்பூர் தமிழ் சங்க விருது ]
6]காதலும் வாழ்வும் : பழந்தமிழ் இலக்கியத்தில்
7]ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்
8]சமுத்திரத்தின் படைப்புலகம் [ தொகுப்பாசிரியர் ]
9]கீதை தரும் மயக்கம்
10]சிங்காரவேலரைப் பயில்வோம்
11]சாதியம் : வேர்கள் - விளைவுகள் - சவால்கள்
12]பார்வை புதிது பயணம் நெடிது [ ஆர். உமாநாத் வாழ்க்கை ]
13] பொதுவுடைமை வளர்த்த தமிழ்
14]பூக்களோடும் போர்முரசுகளோடும் [ வாலிபர் சங்க ஆரம்பகால வரலாறு ]
15]கோடிக்கால் பூதமடா : ஜீவாவின் கவிதைப் பயணம்
16]குடும்பத்தில் கூட்டாட்சி

 [இவற்றுடன் இயக்கம் சார்ந்து எழுதிய பிரசுரங்கள் பலவும் உண்டு. மேலும் நூலாகாத எழுத்துகளும் உண்டு. பாதியிலே நின்று போயுள்ள - முடிக்க வேண்டிய நூல்களும் உண்டு]

புதிய நூல்கள் சில விரைவில் எழுதி முடிக்கும் எண்ணம் உள்ளது. பெங்களூரில் வசிக்கும் நாட்களை அதற்குப் பயன் படுத்த திட்டமும் உள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில்  [ டி.ஒய்.எப் . ]பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட துடிப்பான காலமாகட்டும் - அனுபங்களையும் பக்குவத்தையும் கற்றுத்தந்த இருபதாண்டுக்கு மேலாகத் தொடரும் தீக்கதிர் பணியாகட்டும் - பொதுவாக 35 ஆண்டுகாலத்திற்கும் மேற்பட்ட எழுத்துப்பணி , கருத்துப்பரப்பும் பணி , கட்சி இயக்கப் பணியாகட்டும் அனைத்தும் என்னுள் மறக்க முடியாத ஆழமான முத்திரைகளைப் பதித்துள்ள..

நான் கடந்து வந்த பாதையில் சந்தித்த ஏமாற்றங்கள் , தோல்விகள் , பெற்ற காயங்கள் அநேகம். அவை எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
நான் சமூகமாற்றம் விழைகிற போராளி ; ஆனால் பதவி மோகமும் சுயநலமும் மிகுந்த அரசியல் களத்தில் ஏமாளி ; என் மனைவி மக்களின் இந்த விமர்சனத்தை நான் வழிமொழியவும் முடியாதுமறுதலிக்கவும் முடியாது. கையறு நிலை எனக்கு…..
 
நண்பர் வீரமணி டெல்லியிலிருந்து என் பிறந்த நாள் வாழ்த்தாக வீரம் விளைந்தது நாவலில் இருந்து ஒரு மேற்கோளை - அதுவும் நான் வாலிபர் சங்க மேடைகளில் அடிக்கடி பயன்படுத்திய மேற்கோளை அனுப்பி இருந்தார் . அதனையே நிறைவாக இங்கு பதிவு செய்கிறேன்.

“Man's dearest possession is life. It is given to him but once, and he must live it so as to feel no torturing regrets for wasted years, never know the burning shame of a mean and petty past; so live that, dying, he might say: all my life, all my strength were given to the finest cause in all the world──the fight for the Liberation of Mankind”

மனிதனது மதிக்க முடியாத இனிய உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக நான் என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடி வைக்கக் கூடுமாதலால் மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

― Nikolai Ostrovsky in the How the Steal was tempered.
(
வீரம் விளைந்தது)

ஆம், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்ஒவ்வொரு அடிவைப்பையும் அந்த திசைவழியில் செலுத்தவே முயல்கிறேன்; எனது பலத்தோடும் பலவீனத்தோடும்..

நன்றி
சு.பொ.அகத்தியலிங்கம்

சிலையை ரசித்தோம்... ஆனால்... ?

Posted by அகத்தீ Labels:





சிலையை ரசித்தோம்... ஆனால்... ?
சு. பொ. அகத்தியலிங்கம்
கோயிலுக்கு ஆத்திகர்களும் போவார்கள். நாத்திகர்களும் போவார்கள். ஆத்திகர்கள் அங்குள்ள சாமி சிலைகளை பக்தி சிரத்தையோடு கும்பிடுவார்கள். ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். நாத்திகர்கள் புராணங்களைக் கிண்டல் அடிப்பார்கள், வேறு சிலர் அங்குள்ள சிற்பங்களை கலைக்கண்ணோடு பார்த்து ரசிப்பார்கள். வெளிநாட்டிலிருந்து கூட சுற்றுலாப் பயணிகள் வந்து கோயில் சிற்பங்களில் அழகில் சொக்கி நிற்பதை நாம் கண்டிருக்கிறோம்.  ஆனால் எப்போதாவது ஒவ்வொரு சிற்பத்திற்கும் பின்னால் ஒரு பெரிய சமூக கண்ணோட்டம் ஒளிந்து கொண்டிருப்பதை யோசித்து பார்த்திருக்கிறோமா ? அதிலும், பொதுவாக பெண் சிற்பங்கள் எப்படி செதுக்கப்படுகிறது? ஆணின் எந்த பக்கம் வைக்கப்படுகிறது? எவ்வளவு உயரத்தில் வைக்கப்படுகிறது? என்பதை எல்லாம் நாம் கூர்ந்து பார்த்ததில்லை. முனைவர் பெ. நிர்மலா ஒவ்வொரு சிற்பத்தையும் கூர்ந்து பார்த்திருக்கிறார். ஆழ்ந்து பயின்றிருக்கிறார்.  பெண் சிற்பங்களுக்கு பின்னால் ஆணாதிக்க சிந்தனை வலுவாக இருப்பதை; புராணக்கட்டுக்கதைகள் மூலம் பெண் அடிமைத்தனம் வலுவாக வேருன்றப்பட்டிருப்பதை; மூடநம்பிக்கைகள் விரவப்பட்டிருப்பதை ஆசிரியர் அலசி நமக்கு எடுத்து காட்டுகிற போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
  "மநு கூறும் ஆதிக்க மரபினரின் குறியீடுகளே  கோயில்கள். இக்கோயில்களை உருவாக்கிய ஆதிக்க சக்திகள் இயற்கை மரபு மற்றும் உலோகாயத மரபுகளை அழித்து , அந்த இடத்தில் வைதீக மரபை, கட்டமைத்தார்கள். இதற்கான காட்சி வழித்தரவுகளே கோயில்கள். இக்கோயில்கள் சார்ந்த கலை ஆய்வுள் முன்னேடுக்கப்படும் அளவுக்கு அவற்றிலிருக்கும் கருத்துநிலை சார் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. சிற்பங்களின் கலை நுணுக்கம் குறித்து பேசும், வல்லுநர்கள், அவற்றிலிருக்கும் பெண் அடிமை கருத்துநிலை குறித்து அக்கறை கொள்வதில்லை; ஏனெனில் இவ்வகையான கலை வல்லுநர்கள் அடிப்படையில் ஆணாதிக்க மன நிலையினராகவே உள்ளனர். சிற்பக்கலையின் அழகியல் என்பது பெண்களை கட்மைப்பதில் செய்திருக்கும் தில்லு முல்லுகளை வக்கரங்களை அதிகாரங்களை இனங்காண்பதில்லை. சிற்பங்களின் கோணங்களில் சொக்கிப்போகும் வல்லுநர்பெருமக்கள் பெண் தொடர்பான கேவலங்களை அவை காட்சிப்படுத்தப்படுவதைக் கவனத்தில் எடுத்தார்களா என்பது சந்தேகம். நிர்மலாவின் இந்நூல் மேல் குறித்த அவலங்களை மிகவும் நுணுக்கமாக அம்பலப்படுத்தும் பணியை செய்கிறது. ஆணாதிக்க மரபில் உறுவான இன்னொரு காமசூத்திரங்களாகவே கோயில் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பதை இந்நூல் விரிவாகப் பேசுகிறது"என்று முன்னுரையில் அரசு கூறுவது மிகையல்ல.
பொதுவாக பெண் சிற்பங்கள் எல்லாம் இடது பக்கமாகவே அமைக்கப்படுவது ஏன்? சில சிற்பங்களில் வலது பக்கமாகவும் அமைந்தது எதனால்? வெளிப்பார்வைக்கு மிக எளிதாக தோன்றும் இக்கேள்வி இந்து மதத்தில் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கிற அடிமை நிலையின் வெளிப்பாடே என்பதை தக்க சான்றாதாரங்களுடன் நிர்மலா நிறுவுகிறார்.
 பெண் ஆணுக்கு அடங்கிய மனைவியாக - மதம் பாராட்டும் பத்தினியாக பெண்ணை காட்டுகிற போது இடது பக்கம்  பெண்ணை நிறுத்துவதும், ஆணுக்கு அடங்காமல் திமிறுகிற பெண்ணை அல்லது எதிர்த்து போராடுகிற பெண்ணை அல்லது காமநுகர்ச்சியை சித்தரிக்கும் வேளையில் பெண்களை வலது பக்கம் சித்தரிக்கிறார்கள் என்பது இந்நூலில் வலுவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல மேல் கீழ் என சிற்பங்களை செதுக்குவதும், இவ்வாறு உயர்வு தாழ்வு அடிப்படையில் தான் என்பதையும்; துய்மை புனிதம் என்பன போன்ற எதிர் நிலை கருத்தாக்கங்களும் ஆணாதிக்க மனோநிலையின் அடிப்படையில் சிற்பங்களை செதுக்குவதிலும் எப்படி எல்லாம் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்நூல் நெத்தியடியாக உரைக்கிறது. 
சிற்பங்களைப் பற்றி கூறுகிற போது  அதனோடு இணைந்த பல்வேறு புராணகதைகளின் வக்கிரமான ஆதிக்க மனோபாவத்தை மிக நுட்பமாக நிர்மலா நூல் நெடுக அம்பலப்படுத்தி கொண்டே செல்கிறார்.  சிலை செய்கிற கல்லைத் தெர்ந்தெடுக்கிற போது கூட மணியோசை போன்ற நாதம் என்றால் அக்கல்லில் ஆண்சிலை வடிப்பதையும் தாளம் போன்ற ஓசையிருந்தால் அதில் பெண் சிலை வடிப்பதையும்; இவர் சுட்டிக்காட்டுகிற போது அதிர்ச்சி ஏற்படுகிறது . சமூகத்திற்குள் ஊடுருவியிருக்கிற ஆதிக்க கருத்தோட்டத்தின் குரூரம் பளிச் என புலப்படுகிறது.  அதேபோல ஆணாதிக்கத்தை எதிர்த்த பெண் தொன்மங்களையும் , பெண் கடவுள்களையும் அது தொடர்பான சிற்பங்களையும் எடுத்துக் காட்டி சமூகத்திற்குள் பெண் விடுதலை சாம்பல் பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பதை தக்க உதாரணங்களோடும் புராண கதைககளோடும் சொல்லி சென்றிருப்பது பாராட்டுக்குரியது. சூரிய சந்திர பற்றி கருத்தோட்டம் கூட எப்படி ஆண் பெண்ணாக கையாலப்பட்டிருப்பது என்பதை -  ராசிகள் வர்னாசரம அடிப்படையில்  பிரிக்கப்பட்டிருப்பது என்பதை அந்த கருத்துக்கேற்பவே செதுக்குகிற சிற்பங்களும் அதற்குரிய இடம் வழங்கப்படகிறது என்பதை, பெண்களை வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் அடக்கியே வைத்திருக்கிற சமூக இழிவு சிற்பக்கலையிலும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை  இந்நூலில் பரவலாக எடுத்துக் காட்டுகிறார். 
வரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், முத்தேஸ்வரர் கோயில், மதங்கேஸ்வரர் கோயில், கைலாச நாதர்கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் என பத்து கோயில் சிற்பங்களை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அதே சமயம் இந்த சிற்பங்களுக்குள் மட்டும் நின்று விடாமல் பொதுவாக பெண் பற்றிய பார்வை இந்திய சமூகத்தில் குறிப்பாக இந்து வர்ணாஸ்சரம அமைப்பில் எவ்வளவு கீழானதாக இருந்தது என்பதை சிற்பங்கள் மூலம் ஆணித்தரமாக நிறுவுகிறார்.

இந்நூலினுடைய மொழி நடை மிகவும் நுட்பமானது.   மொழி பிறந்தது பெண் கடவுளர்களிடமிருந்து  என்று பொதுவாக கதைகள் புனையப்பட்டதை ; வாழ்க்கை அனுபவத்தில் தாய்வழியாகவே குழந்தை பேசக்கற்று கொள்கிறது என்பதை; சொல்லுவதோடு நின்றுவிடாமல்; தற்போது சொல்லாடல் (மொழி) பெண்ணின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் சிக்குண்டு கிடக்கிறது என்பதை நிர்மலா உதாரணங்களோடு எடுத்து காட்டுகிறார்.  ஆணுக்கும் , பெண்ணுக்கும் இறுதியான பண்புகளை ஏற்றிச் சித்தரிக்கும போக்கு அறிவியல் சார்ந்ததாக இல்லை என்பதை ஏங்கெல்ஸ் மேற்கோளோடு எடுத்து காட்டுகிறார்.   இந்த நூல் ஒருவகையில், சிற்பக்கலையில் ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துகிறது. இன்னொரு வகையில் நமது புராண மரபில் வேரோடி இருக்கிற ஆணாதிக்கம் மற்றும் சாதி ஆதிக்கம் இவற்றின் கோர முகத்தை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. நூலை படித்து முடித்த பிறகு சிற்பம் ஓவியம் எதைப் பார்த்தாலும் அதற்குள் பொதிந்து கிடக்கும் கருத்தாதிக்கத்தைப் பற்றி  கொஞ்சநேரமாவது மனதிற்குள் ஒரு உறுத்தல் ஏற்படத்தான்  செய்யும். 
தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்
முனைவர். பெ. நிர்மலா
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
97/55, என்.எஸ். கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம் , சென்னை - 600 024
பக்: 408 விலை ரூ. 280/-