பழக்கம் -வழக்கம்-ஒழுக்கம் : தேவை புதிய பார்வை

Posted by அகத்தீ Labels:

 
 
பழக்கம் - வழக்கம் - ஒழுக்கம்
தேவை புதிய பார்வை
 

சு.பொ.அகத்தியலிங்கம்

 

 

 
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இந்த வார்த்தைகள்  நம் வாழ்க்கை நெடுக தினசரி ஏதோ ஒரு வகையில் நம்மை ஆட்சி செலுத்துகிறது. இவை குறித்து கேள்விகேட்பவரை சமூகம் எதிர்மறையாகவே பார்க்கிறது. அதே நேரம் இவை காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்ற உண்மையை சமூக பொதுபுத்தி வசதியாக மறந்துவிடுகிறது. இவற்றில் எது சரி, எது தேவை, எது சுமை, எது முன்னேற்றத்திற்கு தடை என்றெல்லாம் பகுத்துப் பார்க்க நாம் முனைவதில்லை. அப்படி முயற்சி செய்வது தப்பு என்று கூட நம்மில் பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் இவைகளை கேள்விக்குள்ளாக்கி  எதிர்த்துத்தான் சமூக சீர்திருத்த இயக்கம் செயல்பட்டுள்ளது. இந்த சமூகத்தை மாற்ற விளைகிறயாரும் இவை குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வுக்குள்ளாக்குவது தவிர்க்க முடியாதது, தவிர்க்கக் கூடாது.
 
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது பழைய ஏற்பாடு; ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்பது புதிய ஏற்பாடு. விசுவாசிக்கிறவன் சொர்க்கத்திற்கு செல்வான் என்கிறது பைபிள். சந்தேகிக்கிறவன் அழிவான் என்கிறது இந்து சாத்திரங்கள். ஆனால் எல்லாவற்றையும் சந்தேகிக்கச் சொன்னார் மார்க்ஸ். எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொல்கிறது  நவீன அறிவியல். கேள்வி கேட்பவன் அந்த நிமிடம் மட்டுமே முட்டாளாக இருக்கிறான். ஆனால் கேள்விகேட்காதவன் வாழநாள் முழுவதும் முட்டாளாக இருக்கிறான் என்பது சீனப்பழமொழி.
 
துஷ்டனைக் கண்டால் தூரவிலகிப்போ என்பது பழமொழி. பாதகம் செய்வாரைக் கண்டால் மோதி மிதி என்பது பாரதி மொழி. ஙப்போல் வளை என்பது ஔவையாரின் ஆத்திச்சூடி. குன்றென நிமிர்ந்து நில் என்பது பாரதியின் ஆத்திச்சூடி. 
 
தையல் சொல் கேளேல் என்றார் ஔவை. ஆனால் பெண் சமத்துவத்திற்கு எதிரான இச்சொல்லை இன்று ஏற்க முடியுமா? முறுக்கி வளர்க்காத மீசையும் முறித்து வளர்க்காத முருங்கையும் அடித்து வளர்க்காத பிள்ளையும் உருப்பட மாட்டா என்பது சொலவடை. ஆனால் பிள்ளைகளை அடித்து இம்சை செய்வதை நவீன சிந்தனை ஏற்குமா? ஆக, நம் சிந்தனையில் செயலில் வாழ்க்கையில் பல மாறுதல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து மாறும். ஆயினும் பழக்கம், வழக்கம், ஒழுக்கம் என பொத்தாம் பொதுவாக பேசுவதும் தவறான கருத்தோட்டங்களை நியாப்படுத்துவதும் தொடரத்தான் செய்கிறது. 
 
முதலில் பழக்கம் என்பதை எடுத்து கொள்வோம். எங்கள் ஊர்பழக்கம், அல்லது எங்கள் சாதிப்பழக்கம் என்கிற பெயரால்  பிறப்பின் போதும் அல்லது   மரணத்தின் போதும் வாழ்க்கை நெடுக்கிலும் பல சடங்குகள் தீர்மானிக்கப்படுகின்றன. அவை அறிவியல் பூர்வமாக இன்றைக்கு பொருந்துமா என்று நாம் யோசித்து பார்ப்பதில்லை. உதாரணமாக பெண் பூப்படைவதை ஒட்டி செய்யப்படுகிற சடங்குகளும் அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு சொல்லப்படுகிற அறிவுரைகளும் பெண் அடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளாகவே  உள்ளன. ஆனாலும் அதை எந்த கேள்வியும் கேட்காமல்  கடன் வாங்கியாவது செய்கிற பழக்கம் தொடரத்தான் செய்கிறது. 
 
பழக்கம், வழக்கம் இந்த இரண்டு சொல்லிற்கும் தெளிவான வரையறை செய்வது இயலாத காரியம். நடைமுறையில் இரண்டும் குழம்பியே இருக்கிறது. அக்கா மகளை திருமணம் செய்து கொள்வது எங்கள் குலவழக்கம்தான் என்று பல இடங்களில் நியாயப்படுத்தப்படுகிறது.  மிக நெருங்கிய இரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது பல உடல் சிக்கல்களை உருவாக்கும். பிறக்கிற குழந்தை ஊனமுற்றவர்களாக பிறக்க வாய்ப்பு அதிகம் என்கிறது மருத்துவ அறிவியல். ஆனால் அத்தை மகள், அக்காள் மகள் இவர்களை திருமணம் செய்வது இன்னும் தொடரத்தான் செய்கிறது. 
 
அதே சமயம் சில பிரிவினரிடையே சகோதர உறவில் திருமணம் செய்கிற பழக்கமும் உண்டு. இதில் எது சரி, எது தப்பு என்று மிகப் பெரிய விவாதம் சமூகத்தில் நடைபெறுகிறது. சகோதர முறையில் திருமணம் செய்வதை மிகவும் ஒழுக்ககேடாக கருதுகிற விமர்சிக்கிற ஒரு கூட்டம் இருக்கிறது.  உண்மையில் அத்தை மகள் அல்லது சித்தி மகள் என்பதில் மிகப்பெரிய வேறுபாடு எல்லாம் அறிவியல் ரீதியாக இல்லை. இரண்டும்  குடும்ப மரத்தின் இருவேறு கிளைகளே. இரண்டு வழி திருமணங்களும் அறிவியல் பூர்வமாக ஏற்கத்தக்கது அல்ல. 
 
ஆக பழக்கம், வழக்கம் என்ற பெயரால் உறவுமுறைக்குள் கெட்டியாக நின்று கொண்டு இப்படி திருமணம் செய்து கொள்வது  மிகப் பெரிய சமூக சவாலாக வருங்காலத்தில் உருவெடுக்கும்.குறிப்பாக அகமண உறவுமுறை இந்திய சமூகத்தில் வலுவாக இன்னும் நீடிப்பதும்; அதிலும் நெருங்கிய உறவுமுறைக்குள் திருமணங்கள் நடைபெறுவதும் வருங்காலத்தில் உடல்ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரித்து விடும் என மரபியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். ஆயினும் பழக்கம், வழக்கம், சம்பிரதாயம், சாஸ்திரம், சாதிப்பெருமை, மத பெருமை என்கிற பெயரால் இந்த தவறான பழக்க வழக்கம் இன்னும் நியாயப்படுத்தப்படுகிறது.
 
 காதல் நம் பண்பாட்டின் கூறு என்று பெருமை பேசிக் கொண்டே காதலர்களுக்கு கொள்ளிவைப்பது ஏன்? சாதி, மத, வெறியன்றி வேறு என்ன? காதல் திருமணம் என்பது ஒழுக்ககேடு அல்ல. உயரிய பண்பாடு என்று உரக்கச் சொல்ல வேண்டாமா? 
 
இதுபோல் நாம் வாழ்க்கை நெடுக கருவறை தொடங்கி கல்லறை வரை எண்ணற்ற  சடங்குகளும் பழக்கங்களும், வழக்கங்களும் நம்கை பீடித்துள்ளன. அவை குறித்து ஓர் அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு நம் சமூகம் தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
 
புலால் மறுப்பு என திருக்குறளில் ஒரு அத்தியாயமே உண்டு.  புலால் பழக்கம் நல்லதா கெட்டதா? இது மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் ஒரு விதமான கெட்டித்தட்டிப்போன கருத்தோட்டமாக உள்ளது. சைவம், அசைவம் என உணவு பழக்கத்தை சமயம் சார்ந்து இருகூறாக வைத்துள்ளனர். அது எப்படி சரியாக இருக்க முடியும். ஆதி மனிதன் பச்சைக் கறியைத்தான் சாப்பிட்டான். நெருப்பில் சுட்டுச்சாப்பிடுவதற்கு பல ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான். பச்சைக்காய்கறிகளைத் தான் சாப்பிட்டான். வேக வைத்து சாப்பிட அறிந்ததே வெகுகாலத்திற்கு பின்னர் தான். மசாலாவின் சுவையை அறிந்தது சில ஆயிரம் ஆண்டுகள் முன் தான். புலால் சாப்பிடுவது அதாவது மாமிசம் சாப்பிடுவது மனிதனின் இயல்பு.  புலால் மறுப்பு தான் அதற்கு மாறானது. சைவம் அசைவம் என்ற சொல்லாடலே தவறு. புலால் உண்போர் புலால் மறுப்போர் என்றோ - புலால் பழக்கம் மரக்கறி உணவு பழக்கம் என்றோ தான் சொல்ல வேண்டும்.  புலால் வேண்டுமா வேண்டாமா என்பதை சமயமோ சாதியோ முடிவு செய்யக்கூடாது அவரவர் சுயவிருப்பமும் உடல் நலனும் சார்ந்து அவரவருக்கு எது தேவை என்பதை முடிவு செய்வது தான் அறிவியல் பூர்வமான பழக்கமாகும். இதற்கு மாறான எல்லாம் சமூக அராஜகமே. 
 
ஒருவர் இறந்து போனால் அவரை எரிப்பதற்கு எடுத்துச் செல்லும் போது கொள்ளிச்சட்டி ஏந்தி போவதும்; மேளதாளம் கொட்டிச் செல்வதும் நடக்கிறது. ஆதிகாலத்தில் நெருப்பு என்பது அபூர்வ பொருளாக இருந்தது. தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே தீயை சுமந்து செல்லவேண்டியது தேவையாக இருந்தது. ஆகவே அந்த காலக்கட்டத்தில் கொள்ளிச்சட்டி ஏந்தினர். ஆனால் இன்றைக்கு மின்சார சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்துச் செல்வோரும் கொள்ளச்சட்டி ஏந்துவது எந்த வகையில் அறிவுபூர்வமானது. அதுபோல் ஆதி காலத்தில் பிணத்தை எரிக்க செல்லும்மிடம்  ஒதுக்கு புறமாகவும், புதர்காடாகவும் இருப்பது தவிர்க்க இயலாது. அங்கே நரி போன்ற விலங்குகள் தொல்லைத் தரக்கூடும். ஆகவே விலங்குகளை விரட்ட மேளதாளம் கொட்டிச் செல்வது தேவையாக இருந்தது. இன்றைக்கு அது தேவையா?
 
 
ஒழுக்கம் குறித்து பேசாத மதங்களோ, நீதிநெறி இலக்கியங்களோ, சமூக சிந்தனையாளர்களோ இருக்கவே முடியாது. அதே சமயம் எது ஒழுக்கம் , எது ஒழுக்கமின்மை என்பது குறித்த பார்வையில் சமூகத்தில் குழப்பமும், பிற்போக்குதனமும், ஆதிக்க வெறியும், சாதியும், பெண்ணடிமைத்தனமும் கோலோச்சவே செய்கின்றன. பொய்சொல்லக்கூடாது, திருடக்கூடாது, குடிக்கக்கூடாது, கொலைசெய்யக்கூடாது, ஏமாற்றக்கூடாது, வஞ்சகம் செய்யக்கூடாது, புறம்பேசக்கூடாது இது போன்ற பொதுவான கட்டளைகளை காலம் காலமாக கேட்டு வருகிறோம். இனியும் அவை தொடரும். இவற்றை பொதுவாக சொல்லுகிற போது நியாயமாக தோன்றுகிறது. ஆனால் கொஞ்சம் அலசத்துவங்கினால் அது பெரும் விவாதப்பொருளாகிவிடுகிறது. 
 
பொய்சொல்லக்கூடாது என்பது சரியே. ஆனால் மத நூல்கள் சொல்வது எல்லாம் பொய்தானே. சொர்க்கம், நரகம் என்பது பொய்தானே. கடவுள் என்பது பொய்தானே. பாவம் புண்ணியம் என்பது வெறும் கற்பிதம் தானே. பொய் சொல்லக்கூடாது என்று சொல்லி விட்டு மதநம்பிக்கையை கைவிடக்கூடாது என்று சொல்வது முரண்பாடானது அல்லவா? 
 
திருடக்கூடாது மிகச்சரி. நாகரிக சமூகத்தில் திருட்டு என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. ஆனால் சொத்துடமையின் வேர்எங்கே என்று அலசினால் அது  பிறர்சொத்தை - பிறர்உழைப்பை - பிறர்சேமிப்பை திருடியது என்கிற பேருண்மை பளிச்சிடும். இது சுரண்டலின் கூறாக உள்ளது. அப்படியானால் இந்த திருட்டை எதிர்ப்பது தேவையா இல்லையா? பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என இழப்பதற்கு எதுவும் இல்லாத உழைப்பாளியைப் பார்த்து ஒழுக்க உபதேசம் செய்பவர்கள்; சுரண்டலின் அடிப்படையே அடுத்தவருக்கு உரியதை அபகரிப்பது என்பதை உணர்வார்களா? அப்படியானால் இந்த சுரண்டலை எதிர்க்க வேண்டாமா? 
 
கணவனுக்கு அடங்கியவளாகவே மனைவி இருக்க வேண்டும் அதுவே பெண்ணுக்குரிய ஒழுக்கம் என்று இன்றும் நடைமுறையில் சமூக பொது புத்தியில் வலுவான கருத்து உள்ளது. ஆனால் இது பெண்ணடிமைத்தனத்தின் குரல் அல்லவா? ஒழுக்கம் என்பது மனைவிக்கு கணவன் அடங்குவதோ அல்லது கணவனுக்கு மனைவி அடங்குவதோ அல்ல இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு; குறை நிறைகளை அங்கீகரித்து - விட்டுக் கொடுத்து வாழ்வதே ஆகும். ஆனால் எந்த ஒழுக்க உபதேசிகளும் இதனை வலியுறுத்துவதில்லையே ஏன்? 
 
தீண்டாமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லையே ஆனால் இந்தியாவில் மட்டும் இந்த பழக்கம் ஏன்? அது மட்டுமல்ல சாதிய ரீதியாக ஒழுக்கக் கோட்பாடுகள் திணிக்கப்படுவது ஏன். உதாரணமாக பிராமணர்கள் பூணுல் அணிகிறார்கள். அவர்கள் இருபிறப்பாளர்கள் என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது.  ஆனால் பிராமணப் பெண்கள் ஏன் பூணுல் அணிவதில்லை? மற்ற சாதிகளுக்கு பூணுல் அணியும் உரிமை ஏன் இல்லை? திருமணத்தின் போது மணமகனுக்கு பூணுல் அணிவித்து திருமணம் செய்யப்படுகிறது. இதன் பொருள் என்ன? சூத்திரர்களுக்கு திருமணம் செய்ய மநு உரிமை வழங்கவில்லை எனவே பூணுல் அணிவித்து அந்த கொஞ்ச நேரம் மட்டும் அவனை பிராமணன் ஆக்கி திருமணம் செய்வதும் முடிந்ததும் பழையபடி சூத்திரனாக்குவதும் தொடர்கிறது. ஆனால் கேள்வி எழுப்பாமலே இந்தப் பழக்க வழக்கத்திற்கு பணிந்து போகிறார்கள். ஆனால் இதை மீறி  பதிவுத் திருமணமோ, சுயமரியாதை திருமணமோ செய்பவரை ஒழுக்கம் குறைந்தவராகவோ அல்லது வித்தியாசமான பிறவியாகவோ பார்க்கிற போக்கே சமூகத்தில் இன்னும் தொடர்கிறது. இந்த மநுவின் ஒழுக்க நீதிகள் தொடரலாமா? 
 
பொதுவாக பழக்க வழக்கம் என்பது பண்பாட்டின் ஒரு கூறாகவும்; ஒழுக்கம் என்பது பண்பாட்டின் கருத்து நீரோட்டமாகவும் கருதப்படுகிறது. ஆனால் அந்த சமூகம் அடிமை சமூகமாக இருக்கிற போது அடிமை எஜமானன் என்கிற சமூக பிரிவினையை நியாயப்படுத்தவே பழக்கம், வழக்கம், ஒழுக்கம் அனைத்தும் பின்னப்பட்டன. அந்த சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகமாக மாறியபோது அதற்கொப்ப நிலப்பிரபு, பண்னையடிமை என்கிற சுரண்டலை நியாயப்படுத்த இவை வலுப்படுத்தப்பட்டன. மற்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ சிந்தனை உற்பத்தி கருவி சார்ந்து உருவானது - செயல்பட்டது. ஆனால் இந்தியாவில் அது சாதி என்கிற கொடூரமான பிரிவினையாய் சமூகத்தை மேல்கிழாய் - படிநிலையாய் குதறிப்போட்டு விட்டது. அது இன்னும் தொடர்கிறது.  முதலாளித்துவ சமூகம் பிற நாடுகளில் பழக்கம், வழக்கம்,  ஒழுக்கம் இவற்றில் காலத்திற்கு ஒப்ப பல மாறுதல்களை கொண்டு வந்தது. ஆனால் இந்திய சமூகத்தில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத் தோடு கைகுலுக்கிக் கொண்டு பழைய ஏற்பாடுகளை கெட்டியாக தொடர்கிறது. ஆகவே இந்திய சமூகத்தில் - தமிழ்ச்சமூகத்தில் நாம் இன்று பின்பற்றுகிற - உபதேசம் செய்கிற  பழக்கம், வழக்கம், ஒழுக்கம்  பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ காலக்கட்டத்தைச் சார்ந்தவையே. அவை சாதியத்தை தூக்கிப்பிடிப்பவையே. நீதிநூல்கள் ஒழுக்க உபதேசங்கள் இவை அனைத்தும் இந்த அடித்தளத்தில் இயங்குபவையே. எனவே கண்மூடித்தனமாக  இவற்றை பின்பற்றுவது ஆபத்தானது. 
 
இதன் பொருள் பொய்சொல் என்பது அல்ல. திருடு என்பது அல்ல. பிறன்மனை திருடு என்பது அல்ல. மாறாக சமத்துவம், சகோதரத்துவம், தோழமை மிகுந்த; ஜனநாயகம் சார்ந்த புதிய பார்வை தேவை என்பது தான். எந்த ஒரு பழக்கம், வழக்கம், ஒழுக்கம் ஆனாலும் அது சாதிய ஆதிக்கத்தை எதிர்க்கிறதா அல்லது மறைமுகமாகவோ, நேரடியாகவோ கெட்டிப்படுத்துகிறதா? என்ற அளவுகோலால் மதிப்பீடு செய்ய வேண்டும். அதேபோல பெண் சமத்துவத்திற்கு உகந்ததா எதிரானதா என்கிற தராசில் எடைபோட வேண்டும். சாதி ஆதிக்கத்தை உடைக்க - பெண் அடிமைத்தனத்தை நொறுக்க  நம்மிடம் உள்ள பல பழக்க வழக்கங்களை ஒழுக்க நியதிகளை தலைகிழாக  மாற்றியாக வேண்டும். இதை செய்கிற போது உன்னை கலகக்காரன் அடங்காதவன் வில்லங்கமான பேர்வழி என சனாதன பேர்வழிகள் வசைமாரி பொழியலாம்.  அதனை ஏற்றுக் கொண்டு தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும்.
 
 
 “அடி! உடை! நிர்மானி” என்றார் மார்க்சிம் கார்க்கி. தமிழகத்தில் திராவிட இயக்கம் வைதீக கோட்டையை அடித்து உடைக்க சம்மட்டி தூக்கியது. ஆனால் நிர்மானிக்க வேண்டிய சமூகம் குறித்து தெளிவும் தொலைநோக்கும் இல்லாததால் அவர்களின் போராட்டம் விரும்பிய திசைவழி  தொடரவில்லை. அதனால் தான் பண்பாட்டில்  விபரிதங்கள் ஏற்பட்டுவிட்டதாக தற்போது கலைஞர் கருணாநிதி ஒரு திருமண விழாவில் கவலைப்பட்டார். கவலை நியாயமானது. ஆனால்  அதன் காரணத்தை அவர் அலசமாட்டார். திராவிட இயக்கம்  இனி அதை செய்யாது. பொது உடமை இயக்கம் தான் இதற்கான சமூக கருத்துப்போராட்டத்தை சரியான திசை வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அதுவும் இன்றைய ஊடகங்கள் பரபரப்புக்காகவும் விற்பனைக்காகவும் பழையவற்றிற்கு தங்க முலாம் பூசி சந்தைப்படுத்துகிறது. இந்த ஊடக வியாபாரிகளால் பண்பாட்டுத் தளத்தில்  ஏற்பட்டுள்ள மிக்பெரிய  தாக்கங்களை எதிர்கொள்ள இடது சாரி ஊடகங்கள் ஊக்கமுடன் செயல்பட வேண்டிய காலம் இது. சமூக நீதி - சமூக மாற்றம் இவற்றை மையஇழையாக கொண்டு  புதிய ஒழுக்க நெறிகளை சமூகத்திற்கு வழங்கவும்; சமத்துவம், ஜனநாயகம் இவற்றின் மேல்வலுவாக கட்டப்படுகிற கோட்டையாக புதிய பழக்க, வழக்க பண்பாட்டத் தடத்தை கட்டியமைக்கவும் இடது சாரி ஊடகங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம் இது. தீக்கதிர் பொன்விழா ஆண்டில் இப்பணியில் நாம் எவ்வளவு தூரம் செய்துள்ளோம் என்பதையும் எவ்வளவு செய்யத் தவறியுள்ளோம் என்பதையும் காய்தல் உவத்தல் இன்றி அலசி அறிய வேண்டும். அதை ஆதாரமாக கொண்டு அடுத்து வரும் ஆண்டுகளில் புதிய தடத்தில் முன்னிலும் வலுவாய் முன்னிலும் உறுதியாய், முன்னிலும் தெளிவாய், முன்னிலும் வேகமாய் பயணித்தாக வேண்டும். நிச்சயம் செய்வோம். 
 
[ தீக்கதிர் பொன்விழா மலரில் வெளியானது]

2 comments :

  1. AIESES

    good article. every one should read and grasp it. kng

  1. ULAGAMYAAVAIYUM (உலகம்யாவையும்)

    சிந்தனையைத் தூண்டும்படி அமைந்த அருமையான கட்டுரை.

Post a Comment