ஒரு பக்தனும் ஒரு தொண்டனும்

Posted by அகத்தீ Labels:

ஒரு பக்தனும் ஒரு தொண்டனும்
“அலகு குத்தி
அங்கப் பிரதட்சணம் செய்து
மாலையிட்டு
மண்சோறு தின்னும்
பக்தனையும்..

கொடிதூக்கி
கோஷம் போட்டு
போஸ்டர் ஒட்டி
பொறந்த நாள் கொண்டாடும்
தொண்டனையும்...

. கடைசிவரை அப்படியே
வைத்திருப்பதன் மூலம்
தங்கள் இடங்களைத்
தக்கவைத்துக் கொள்கிறார்கள்
கோயிலில் கடவுளும்
கோட்டையில் தலைவனும்”
- ஆனந்த விகடன் 3-7-2013 சொல் வனம் பகுதியில் பெ.மணிகண்டன் எழுதிய இந்தக் கவிதை பிரசுரமாகி இருந்தது .

இத னைப் படித்த என் மகள் எனக்கு வாசித்துக் காண்பித்து பாராட்டினாள். நானும் சபாஷ் என்றேன். உரையாடல் கவிதையில் சுற்றிச் சுழன்றது.சமூக ரணத்தைப் படம்பிடித்திருப்பதால் கவிதை நெருப்புத் துண்டாய் தெறித்து விழுந் திருக்கிறது. ஆயினும் பக்தனின் அறியாமை யும் தொண்டனின் ஏமாளித்தனமும் ஒரே தன்மையுடையதா? என்ற கேள்வி எங்கள் உரையாடலில் ஓங்கி எழுந்தது.

பக்தனின் அறியாமை அல்லது நம்பிக்கை இரண்டு அடிப்படைக் கூறுகளை உள்ளடக் கியது. முதலாவதாக, பிஞ்சுப் பருவத்தி லேயே பெற்றோராலும் உடன் இருப்போர் களாலும் சமூகத்தாலும் பதியம் போட்டு வளர்க்கப்பட்ட முள்மரம் அது.வளர்ந்த சூழ லும் வாழும் சமூகமும் அதை முற்றச்செய்து கொண்டிருக்கிறது. அடுத்ததாக, வாட்டி வறுக்கும் பிரச்சனைகளிலிருந்து ஒவ்வொருத் தனும் விடுபடவே விரும்புகிறான். குறுக்கு வழி தேடுகிறான்.கடவுள் நம்பிக்கை ஒத் தடம் கொடுக்க ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு தற்காலிக நிவாரணமாகிறது. ஏக்கப் பெரு மூச்சாய் இதயம் இல்லாதவர்களின் இதயமாய் அது செயல்படுகிறது. கவலையை மறக்க போதையில் மூழ்குவோர் சிலர்; கட வுள் மற்றும் சடங்குகளில் மூழ்குவோர் பலர். ஆம், கடவுள் மத நம்பிக்கை அபினாக செயல்படுகிறது. அதே சமயத்தில் தன் முயற்சியை போராட்டத்தைக் கைவிடாத வன் பிரச்சனைகளிலிருந்து மீண்டெழுந்து முன்னேறுகிறான். அப்படியின்றி வெறுமே கண்மூடித்தனமாய் சடங்குகளில் மூழ்கு பவன் புதை சேற்றில் அமிழ்கிறான்.நாத்திகர்கள் அல்லது தமிழக பகுத்தறிவு வாதிகள் தர்க்கபூர்வமாய் கடவுளை மறுக்கின்றனர். மார்க்சியர்கள் அறிவியல்பூர்வமாய் இதனை அணுகுகின்றனர். இருசாரார் எண்ணிக்கையும் குறைவே. ஏதோ ஒரு வகை யில் ஏதோ ஒரு மத நம்பிக்கையின் பிடிமானத் திலேயே பெரும்பாலோர் உள்ளனர்.இது திடீ ரென முளைத்ததல்ல. நாள்பட்ட ரணம். இதன் தன்மையும் சிகிச்சையும் நுட்பமானவை.

தொண்டனின் அரசியல் ஏமாளித்தனம் வேறுவகையானது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என பன்னெடுங்காலம் பயணப்பட் டது மனித சமூகம். மறுபுறம் அதற்கு எதிரான கலக முயற்சிகளும் தொடர்ந்தன. மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பதை ஒருகட்டத்தில் மறுதலித்து சிரமறுக்கும் வேந்தனை எதிர்த்து ஜனநாயகம் கண்டது சாதாரணச்செய்தியா? வியர்வையும் குருதியும் கொட்டியன்றோ ஜன நாயகப் பாதை அமைக்கப்பட்டது. அன்றைய மன்னராட்சியின் மிச்சசொச்ச நிலப்பிரபுத்துவ சிந்தனையும் பழக்கவழக்கங்களும் இன்னும் தொடரவே செய்கிறது. தனிநபர் துதி என்கிற கொடிய தொற்றுநோய் இன்னும் நம்மைப் பீடித் துள்ளது. தத்துவத்தின் இடத்தில் தனிப்பட்ட தலைவரை நிறுத்துவதும் - கொள்கையின் இடத்தில் வெற்று கோஷங்களை நிறுத்துவதும். நோய்க்குறியாகும். ஆனால் அரசியலை சமூக பொருளாதார பண்பாட்டு அறிவியலாய் புரிந்து கொள்ளாமல் தனிநபர் கவர்ச்சியில் மயங்கி நிற்பதும் தனிநபர் துதியில் தன்னை இழப்பதும் இதன் தன்மைகள்.இந்த அரசியல் ஏமாளித் தனத்தினையும் பக்தனின் அறியாமையும் ஒரே நேர்கோட்டில் வைக்க இயலாது. வைக்கக் கூடாது.அரசியல் ஏமாளித்தனம் என்பதின் உண்மைச் சாரம் எதில் அடங்கி இருக்கிறது என்றால் ஒவ்வொரு ஆரவாரமான சொற்றொடருக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் நலம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலிருப்பதில் அடங்கியிருக்கிறது. இந்த வர்க்க ஞானம் வந்தால் விடுதலை பெறமுடியும்.வாழ்கைப் போராட்டமும் வர்க்கப்போராட்டமும் அதனை நமக்கு கற்றுக்கொடுத்துவிடும்.

ஆக,தொண்டனின் ஏமாளித்தனம் நீடிக்க இயலாது. சுற்றுச்சூழல் அவனை விழிப்புணர்வின் பக்கம் தள்ளிவிடும்.ஆனால் பக்தனை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல.கடவுளை நம்புகிறவன் முட்டாள் என முத்திரை குத்துவதும் அரசியல் சாக்கடை என அசிங்கப்படுத்து வதும் வெளிப்பார்வைக்குத் தீவிரமாகத் தோன் றும், ஆனால் இரண்டும் சுரண்டும் வர்க்க திற்கே இறுதியில் சேவகம் செய்யும்.குடும்பம் நடத்தவும் அரசியல் நடத்தவும் அறிவியல் தேவை எனச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கூறியது இங்கே மெய்யாகிறது. கவிஞன் உணர்ச்சி வசப்பட்டால் கவிதை கிடைக்கும். ஆயின் சமூகம் சிந்திக்க மறந்து உணர்ச்சி வசப்பட்டால் பேராபத்து ஏற்படும். சிந்திக்க கற்றுக்கொடு! போராட கற்றுக்கொடு எல்லாவற்றையும் மாற்றிவிட இயலும். மாறாதது ஏது மில்லை.. கவிதையும்தான்.
   

0 comments :

Post a Comment