நவ கடோபநிஷத்

Posted by அகத்தீ Labels:

 
 
 
நவ கடோபநிஷத்


ருத்தலும் வாழ்தலும்
ஒன்றென ஆகா!
நான் , நீ , நாம் - இங்கு
இருந்தென்ன சாதித்தோம் ?

உண்டலும் உடுத்தலும்
உறைதலும் மகிழ்தலும்
கண்டலும் கற்றலும்
இச்சையும் வித்தையும்
பெற்றலும் வளர்தலும்
பாசமும் பகைத்தலும்
இருத்தலின் நிமித்தம்
இயல்பாய் நிகழ்வன.

வாழ்தலின் நோக்கம்
இசைபட வாழ்தலும்
புகழோடு தோன்றலுமே
பிறப்பின் பொருளாமோ!
இமைக் கதவை திறப்பீர
ஊரோடு ஒத்து வாய்மூடி நின்று
சீறுவது சீறாமல்
கொடுமைக்கு இணங்கலோ!

ஊரே எதிர்ப்பினும்
உறவே பகைக்கினும்
அநீதியை எதிர்ப்பதில்
அங்குலம் பிசகாமல்
குன்றென இருத்தலே
வசை மிகினும்
இகழ்ந்தொதுக்கினும்
வாழ்வின் பொருளாகும்.

நொடியில் நிகழும் மரணம் -பிறர்க்கு
சுமையற்ற மரணம் நிகழின் நன்றே!
பிறப்பும் இறப்பும் உன் வசமோ
எந்த நொடியும் வருமே மரணம்!
வாழும் ஒவ்வொரு கணமும்
மனதும் அறிவும் போற்ற மானுடம் வாழ
ஆற்றுவீர் வசைதாங்கிப் பொதுப்பணி!!!
 
 
காலம் தோறும் வெல்வாய்!

விதையில் பிறப்பெடுத்து - என்றும்
காலத்தை வென்றெடுத்து
கண்ணீரில் மிதக்கவிட்டு -இன்று
காவியமானவரே வாலி!

துட்டுக்கு மெட்டுக்கு கைதட்டுக்கு
பாட்டென்று சொன்னாய் ! - ஆனாலும்
சாகாத பாடல்களில் - என்றும்
சாகாத புகழ்கொண்டாய்!

மதம் உனக்கு பிடிக்கும் - ஆயின்
மதம்பிடித்து அலைந்ததில்லை..
மனிதத்தை மறந்ததில்லை - அதனால்
மக்கள் நெஞ்சத்தில் நிலைத்துவிட்டாய்!

பிறரை மதிக்கத் தெரிந்தவன் மனிதன்
உயிராய் நேசிக்கத் தெரிந்தவன் கவிஞன்
நாட்டை வழிநடத்தத் தெரிந்தவன் தலைவன்
நாட்டை பாட்டில் படம்பிடித்தவன் கவிஞன்

வாலி! நீ மனிதன் ! நீ கவிஞன்!- நீ
வாழ்ந்த போதும் மறைந்த பின்னும்
நீ வடித்த கவிதை மின்னும் - அது
காலம் தோறும் வெல்லும்!
 
காலம் சொன்னவை..

ழையும் வெயிலும் ஒருசேர
மனதில் இன்பம் அலைமோத
தேநீர் கோப்பையில் சுகம்கண்டு
கவிதைக் கனவில் எனைமறந்து
கண்ணை விழித்தபடி தூங்குகிறேன்
காலம் சொன்னவை ஏராளம்.

ஊரைப் பெயரை மறைத்தாலும்
உருவை மறைக்க இயலாதே!
தாய்ப்பாலோடு உண்ட மொழி
சாகும் வரை தலைகாட்டும்
பண்ணிப் பண்ணிப் பேசிடினும்
நம்மின் அடையாளம் அதுவேதான்.

மேல்நிலையாக்க மோகத்தில்
தன்னிலை மறைத்து அலைவானேன்?
நாமாயிருப்பதே நம்பலம் என்பதை
நாளும் உணர்த்துமே வரலாறு - அந்த
நாமென்பது சாதிமதத்தில் சங்கமமில்லை
வியர்வைக்கு இல்லை வேறுபாடு...

-சு.பொ.அகத்தியலிங்கம்
 
 
 
 
 

0 comments :

Post a Comment