தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 12 ] ஏன் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணையக் கூடாது ?

Posted by அகத்தீ Labels: ,

 






தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 12 ]

ஏன் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணையக் கூடாது ?

 

கேள்வி :

மார்க்சியம் ,கம்யூனிசம் எல்லாமே வெளிநாட்டு இறக்குமதி சித்தாந்தம்தானே ! அந்த ஒரே சித்தாந்தத்துக்குள் சிபிஐ ,சிபிஎம் , நக்சல் இப்படி எண்ணற்ற பிளவுகள் ஏன் ? சண்டைபோட்டு தனித்தனி கட்சியாகப் போனபின்பு இடதுசாரி ஒற்றுமை என்ற வேடம் ஏன் ? ஏன் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணையக் கூடாது ?

 

பதில் :

 

இக்கேள்விகளை வேண்டாத யாரோ வெறுப்பில்க் கேட்டதாக நான் கருதவில்லை ; கம்யூனிஸ்டுகளின் மீது  மாளாக் காதலும் அக்கறையும் கொண்ட நல்லுள்ளத்தின் கேள்வியாகவேப் பார்க்கிறேன் .சுருக்கமாகப் பதில் சொல்ல முனைகிறேன்.

 

மார்க்சியம் ,கம்யூனிஸம் எல்லாம் வெளிநாட்டில் உருவானவைதான் . ஏன் இன்று நாம் பேசுகிற ஜனநாயகம் ,அரசியல் கட்சிகள் போன்ற பலவும்கூட இறக்குமதிதான்.

அண்டைவீட்டில் வாங்கிய  மெழுகுவர்த்தி என்பதால் நம் வீட்டில் வெளிச்சம் தராமல் போய்விடுமோ ! மின்சாரமும் , விமானமும் , கம்ப்யூட்டரும் , ஏஐயும் , அறிவியல் கண்டு பிடிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டுக்கு மட்டுமே உரியதா என்ன ?

அவை மனித குலத்துக்கு உரியன ; அது போலத்தான் மார்க்சியமும் கம்யூனிஸமும் உலகம் முழுமைக்கும் , பாட்டாளி வர்க்க விடுதலைக்கான ஆயுதம் . ஏனெனில் இது சமூக அறிவியல் சித்தாந்தம் .

 

நான் முந்தையக் கேள்வி பதிலில் சுட்டிக்காட்டியது போல , மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் தவமிருந்து இறைவனிடம் பெற்ற வரமல்ல இவை . தனக்கு முந்தைய மற்றும் சமகாலத் தத்துவஞானிகள் ,சமூக அறிஞர்கள் , வரலாறு ,தத்துவம் ,பொருளாதாரம் இவற்றைப் பழுதறக் கற்று ; அவற்றில் வேர்கொண்டு வளர்த்தெடுத்த சமூக அறிவியலே மார்க்சியம் . ‘ சோஷலிசத்தின் வரலாற்று பரிணாமத்தை’ பிறகொரு கேள்வி பதிலில்ப் பார்ப்போம் .

 

மார்க்சியம் என்பது சுயம்பாய் எழுந்த தத்துவம் அல்ல . நெடிய தேடலில் மார்க்ஸ் பலநாட்டு தத்துவம் ,பொருளாதாரம் ,அரசியலூடே கண்டடைந்தது . உருவாகும்போதே சர்வதேசத் தன்மையோடுதான் உருவானது . “ சுருக்கமாகச் சொல்வதெனில் ஜெர்மன் தத்துவம் ,பிரிட்டிஷ் பொருளாதாரம் , பிரெஞ்சு சோஷலிசம் என்கிற மூன்று தோற்றுவாய்களில் இருந்து மார்க்சியம் உருவானது.” [ பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசலாம்.]

 

“ எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்” என்கிற கனவும் , “ வாழ்வின் பொருளென்ன?” என்கிற தேடலும் காலங்காலமாக உலகெங்கும் பேசப்பட்டப் பொருள்தான் . இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அந்தக் கனவும் தேடலும் நிறையவே உண்டு .அறவோர் அவரவர் அறிவுக்கு எட்டியவரை விடை சொல்ல முயன்றனர் .  ‘அடி முடி’யைக் கண்டு சொன்னவர் மார்க்ஸும் எங்கெஸும் தான் . அவர் ஒரு நாட்டுக்கு உரியவர் அல்லர் .மனித சமூகத்துக்குச் சொந்தமானவர் . அவரும் அவர் தத்துவமும் நமக்கும் சொந்தம் அல்லவா ?

 

உலகிலுள்ள நாடுகளின் வரலாறும் வளர்ச்சிப் போக்குகளும் ஒரேப் போல் இருந்ததில்லை . இப்போதும் இல்லை.  எனினும் இவைகளுக்குள் சில ஒற்றுமைகளும் உண்டு ஆழமான முரண்பாடுகளும் உண்டு .இவற்றை உள்வாங்கி சரியான பாதையைக் கண்டடைந்து நடைபோடச் சொல்வதே மார்க்சியம் .

 

 “Concrete analysis of a concrete situation is the living soul of Marxism."  “காத்திரமானச் சூழலில் காத்திரமான ஆய்வு என்பதே மார்க்சியத்தின் உயிர்நாடி”, என்பார் தோழர் லெனின் . இதன் ஆழ்ந்த பொருள் என்ன ?

1. ரெடிமேட் ஃபார்முலா கிடையாது

புத்தகத்தில் இருப்பதை அப்படியே எடுத்து எல்லா இடத்திலும் ஒட்ட முடியாது. ஒவ்வொரு நாட்டின் நிலைமையும் வேறு என்பதை உள்வாங்க வேண்டும் . I = PNR /100 எனக் கணிதச் சூத்திரத்தை உபயோகித்து தனிவட்டி கணக்கிடுவது போல் மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் பயன் படுத்தக் கூடாது .முடியாது .

 

2. Concrete Situation  காத்திரமானச் சூழல் என்றால் என்ன?

அந்தந்த நாட்டின்  பொருளாதார நிலை, சமூக கட்டுமானம் ,வர்க்க அமைப்பு, பண்பாட்டுச் சூழல் , தத்துவப் பின்புலம் , அரசியல் சக்திகள், சமூக உளவியல்,  வரலாற்றுப் பின்னணி - இவை எல்லாம்  சேர்த்ததே காத்திரமானச் சூழல் .

 

3. Concrete Analysis  காத்திரமான ஆய்வு என்றால் என்ன?

மேலே குறிப்பிட்ட அனைத்து சூழலையும் உள்வாங்கிப் பொதுவாகப் பேசாமல், களத்தில் இறங்கி, தரவுகளோடு, உண்மை நிலவரத்தோடு  ஒப்பிட்டு ; மாறிவரும் உலக அரசியல் ,சமூக ,பொருளாதார நிலைகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்வது என்பதாகும் .

 

சுருக்கமா சொன்னால்:

 

பொதுக் கோட்பாடு ஒன்றுதான், ஆனால் அதைப் பயன்படுத்தும் விதம் ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்டுக்கும் குறிப்பிட்ட சூழ்நிலைக்கும் ஏற்ப மாறும். அது தவிர்க்க முடியாதது .

 

இந்தியாவுக்கு ஏற்ற புரட்சிப் பாதை எது  என்பதை மேற்கூறிய வழியில் கண்டடைய முயன்றோரிடையே   மாறுபாடுகள் தோன்றின . இது இயல்பானது . இந்தியாவின் பன்மைத்துவமும் சிக்கலான வர்ண சாதிய கட்டமைப்பும் அதற்குரிய முடிச்சுகளைக் கொண்டிருந்தது .உலகச் சூழலும் ஒன்றுபட்டதாக இல்லை . இந்நிலையில்  வர்க்க பலா பலத்தை கணிப்பதிலும் , வியூகத்தை வடிவமைப்பதிலும்  வேறுபாடுகள் தலைதூக்கின . இந்த சித்தாந்த மோதலில் சிபிஐ ,சிபிஎம் ,நக்சல் என கம்யூனிஸ்ட் கட்சி பிளந்ததது . மேலும் பல பிளவுகளும் தோன்றின . கால ஓட்டத்தில் சுயவிமர்சனத்தோடு ஒவ்வொரு கட்சியும் தம் பாதையை பரிசீலித்துள்ளன . தேவையான திருத்தங்களைச் செய்துள்ளன . தங்கள் கட்சித் திட்டத்தைப் புதுப்பித்துள்ளன  . பழைய நிலைபாடுகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன . முன்னிலும் இப்போது புரிதல் தெளிவாகி உள்ளது .அதேவேளை முரண்பாடுகளும் முழுவதும் நீங்கிவிடவில்லை ; ஆயினும் முன்பு இருந்த கசப்பு வெகுவாகக் குறைந்துள்ளது . எனவே காலத்தின் தேவை கருதி ‘ இடதுசாரி ஒறுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்’ என்கிற ஆகச்சரியான வீயூகத்தை வகுத்துள்ளனர் . இதனை இப்போதைக்கு உறுதியாகப் பற்றி நிற்பின் நிச்சயம் பலபடி முன்னேற இயலும் .

 

 ‘கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணைந்தால் மக்களிடையே நம்பிக்கைத் துளிர்விடுமே’ என அக்கறையோடு சிலர் யோசனை சொல்வது உண்டு . எனக்கும்கூட அந்த ஆசை ஆழமாக உண்டு . ஆசை வேறு ,யதார்த்தம் வேறு அல்லவா ? நேபாள நாட்டின் அனுபவமும் உலகின் பிற நாட்டு அனுபவங்களும் ; ‘ அது அவ்வளவு எளிதானது அல்ல , சவாலானது’ என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கிறது . புரட்சி நடந்த நாடுகளின் வரலாற்றிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்ததும் ; மோதியதும் உண்டு .மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபடுவதற்கு உரிய காலமும் களமும் கூட  இன்னும் அமையவில்லை . இப்போதைக்கு  ‘இடதுசாரி ஒற்றுமை’ , ‘இடது ஜனநாயக ஒற்றுமை’ ,  ‘பாசிசத்துக்கு எதிரான போராட்ட ஒற்றுமை’ என்கிற பல்முனை வியூகத்தோடு இயங்குவது தவிர்க்க இயலாதது .

 

 ‘கம்யூனிஸ்டுகளின் எதிர்காலம் என்ன ஆகும்’ என சில ஆளும் வர்க்க அறிவு ஜீவிகள் கேலியும் கிண்டலுமாக எழுதியும் பேசியும் வருகின்றனர். அவர்களுக்கு பதில் சொல்லும் முகத்தான் , “ கம்யூனிஸ்டுகள் இல்லாவிடில் இந்தியாவின் எதிர்காலம் என்ன ஆகும் ?” என கவலையோடு கேள்வி எழுப்புகிறார்  பொருளாதார வல்லுநர் தோழர் பிரபாத் பட்நாய்க் . ஆம் .அந்த மெய்யான கவலையோடு  ‘இடதுசாரி ஒற்றுமைக்கும் ஒன்றுபட்ட போராட்டத்துக்கும்’ முன்னுரிமை அளிப்போம்.

 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

 

 

 

14 /11 /26.

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். முந்தைய கேள்வி பதில்களை வாசிக்க  akatheee.blogspot.com    

 

  

 

  


0 comments :

Post a Comment