பொற்கொல்லர்கள் வாழ்வைப் புரட்டிப்
போட்ட சூறாவழிகள்…
கடந்த
அறுபது எழுபது ஆண்டுகளாக நகைத் தொழிலார்கள் வாழ்வைப் புரட்டிப்போட்ட அரசின் தங்கக் கட்டுப்பாடு கெடுபிடிச் சட்டம் , பொருளாதார நெருக்கடி , கோவை
குண்டு வெடிப்பு ,கார்ப்பரேட் நுழைவு என வரிசையாக
வீசிய சூறாவழிகளின் வரலாற்றுப் பதிவே ஜனநேசன்
எழுதியுள்ள “ மின்னுவதெல்லாம்”
நாவல். .
ஒரு தொழில்
சார்ந்த சாதியின் சமூக வாழ்வில் வீசிய புயலின் தாக்கம் நாவல் நெடுக ஒரு புறம் விரிகிறது
; அதனை தங்கள் சாதிக்கு ஏற்பட்ட நெருக்கடியாக மட்டுமே பார்க்கும் விஸ்வகர்மாக்களின்
சாதிய உளவியல் ,நவீன உற்பத்தி முறையால் தவிர்க்க முடியாமல் வாழ்வியலாகும் புதிய சூழல்
எல்லாம் நாவலின் பேசு பொருள் .
ராஜகோபால்
.ரவி ,ரத்தினம் என மூன்று தலைமுறைகளூடே நகைத்தொழிலும் அவர்தம் வாழ்வும் சிந்தனையும் மாற்றம் அடைந்து வருவதினை
கூர்ந்து நோக்கி காட்சிப் படுத்தி இருக்கிறார்.
என் குடும்பத்தின்
என் பிள்ளைகள் ,சகோதரர் பிள்ளைகள் எல்லாம் காதல் திருமணம் கலப்புத் திருமணம் பண்ணிக்கொண்டதால்
எங்கள் குடும்பத்தில் பல சாதி , மதம் கலந்துபோனது .அந்தவகையில் விஸ்வகர்மா உறவும் எமக்கு
வாய்த்தது. அப்படி வாய்த்த உறவினர் ஒருவர்
குடும்ப நிகழ்வுக்கு போனபோது அவர் என்னிடம் நகைத் தொழிலில் மூன்று தலைமுறை ஏற்பட்ட
சீரழிவு குறித்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். நான் பெரிதாக குறுக்கிட்டுப் பேசாமல்
செவியை மட்டும் கடன் கொடுத்தது அப்போதுதான் .ஏன் எனில் எனக்கு எந்தவகையிலும் தெரியாத
செய்திகளை அவர் சொன்னார் . ஆனால் என்ன ’நம்ம சாதி நம்ம சாதி’ என பொருத்தமில்லாமல் அவர்
பேசியது கொஞ்சம் கஷ்டமாக இருப்பினும் அவர்
சொன்ன செய்திகளை அறிய பொறுத்துக் கொண்டேன்.
இதனை இங்கு
சுட்டக் காரணம் , இந்நாவலில் அவர் பேசியது கிட்டத்தட்ட அப்படியே காட்சிகளாக விவரிக்கப்பட்டு இருக் கிறது . ஒரு நகைத் தொழிலாளர்
சங்க நிகழ்வுக்கு பேசப் போன போது அங்குள்ள தோழர்களிடம் குறிப்பாக மறைந்த தோழர் சுகுமாரனிடம் கேட்டறிந்ததும் நினைவுக்கு வந்தது. காஷ்மீரில் க்ளட்சர் குண்டு [கொத்துக் குண்டு ]கோட்டு அழிப்பது போல் பொற்கொல்லர்கள் வாழ்வில் க்ளட்சர் குண்டாக மிஷின்
வந்துள்ளது” என அங்கு பேசி கைதட்டல் வாங்கியதும் நினைவுக்கு வருகிறது.
மொரார்ஜி
தேசாய் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வந்ததும் 14 கேரட் தங்கம் என நடைமுறைப்
படுத்த முயன்றதும் ; அதனால் பிய்த்து எறியப்பட்ட நகைத் தொழிலாளர் வாழ்வு - விஸ்வகர்மாக்கள்
[பொற்கொல்லர்கள்] வாழ்வு இன்னும் பெரும்பாலும்
கேள்விக்குறியாகவே உள்ளது என்பதும் இன்றைய தலைமுறைக்கு தெரியவே தெரியாது . அதனை இந்நூல் நன்கு பதிவு செய்து நினைவூட்டியுள்ளது
.
விஸ்வகர்மா
சாதியில் பலர் தற்கொலை செய்து கொண்டனர் . நகைத்தொழிலைவிட்டு வெளியேறி படித்து அரசு உத்தியோகம் வேறு தொழில்கள் என பலர் சென்றுவிட்டனர் ,ஆயினும் சாதிய பாசத்தையும்
சாதிய பண்பாட்டையும் விடமுடியாமலும் திருமணம்
குதிராமலும் ,காதல் திருமணத்தையும் ஏற்க முடியாமலும் படும் சிரமத்தையும் இந்நாவல் பேசுகிறது
. சுருளியம்மா போல் சில பெண் பாத்திரங்கள் இருப்பினும் அவர்தம் கண்ணீரும் கஷ்டமும்
போதுமான அளவில் இடம் பெறவில்லையே !
“ தன் மகளுக்கு தாலி செஞ்சாலும் தட்டாசரிக செம்பு
கலந்துதான் செய்வாங்காண்ணு ஊருக்குள்ளே ஒரு சொலவடை சொல்லுவாங்க..” என கிராமத்து நாட்டாமை
சுப்பையா சொன்னதைக் கேட்டு ராஜகோபால் வெடித்து
சொக்கத் தங்கம் எப்படி பல்லால் கடித்தால் பல் பதியும் என்பதை செயல் முறையில்
காட்டி , “மச்சான் ! சொக்கத் தங்கம் இப்படித்தான் இருக்கும் இதில் பத்துக்கு ஒண்ணு
செம்பு கலந்தாத்தான் நகை செய்ய முடியும்” எனச் சொல்வது அறிய வேண்டிய செய்தி .
“ புண்ணியவான் அத்வானி கோயம்பத்தூர் மண்ணுல காலெடுத்து
வச்சாரு ஊரே மத கலவரத்தில் சிக்கியது …..பாரம்பரியமா ஆசாரிமாருகிட்டே அப்பனா மகனா பழகின
துலுக்கமாரு பாபர் மசூதி இடிச்ச பிறகு இன்னிக்கு எதிரியா நிலைமை வந்திருச்சு .அயோத்தியில்
விழுந்த இடி இங்கே எரிந்தும் எரியாமலும் புகைந்து கொண்டிருக்கு.” என சொல்லும் நாவலாசிரியர்
கோவை கலவரத்துக்கு பின் நகைத்தொழில் எதிர்கொண்ட அழிவை சொல்லுகிறார் .தற்கொலை செய்து
கொண்ட ,புலம் பெயர்ந்த ,தொழில் மாறிய ,துரத்தும் துயரத்தை சுருக்கமாக அழுத்தமாகச் சொல்லுகிறார்
ஆசிரியர் .
நவீன இயந்திர
நகை உற்பத்தியில் 22 காரட் அல்ல அதைவிட குறைவான தரத்திலேயே நகை செய்ய முடியும் என்பதை
,மெல்லிய நகைகளைவிட தடிதடியான எடைகூடடிய நகைகளில் செம்பே அதிகம் .இன்னும் சொல்லப் போனால்
தங்கம் பொதிந்த செம்பு நகைகளே அவை என விளக்கமாகச் சொல்கிறது இந்நாவல் .
இங்கு வேலை
செய்வோர் நிலை , “மாமோய் ,நான் என்ன கிராக்கி வேலையா செய்யறேன் ?செய்கூலி சேதாரம் கேட்டு
வாங்க , இந்த பாக்டரியில் அவுங்களே மச்சம் சேர்த்து தங்கத்தை தகடாக கொடுத்திருவாங்க
! பத்தவைப்பு ,ஊதுறதுன்னு அய்ட்டத்தை முடிக்கிறவரை எல்லாம் மெஷின் வேலைதான் … எல்லாம்
மெஷின்ங்கிறதாலே சேதாரம் போறது ரொம்பக் கம்மி .ஆனால் நம்ம கையில் செய்யுற ஃபினிஷிங்
இல்லை . ஒரு இம்மி தங்கச் சன்னம் கூட எங்க சட்டையில ஒட்டியிறக்கூடாதுன்னு ,அவங்களே
சட்டை பேண்ட் எல்லாம் கொடுத்திடுறாங்க ,தங்கத்தில ஒரு தூசு துணுக்குகூட ஒட்டாது !வெளியே
வரும் போது அவுங்க டிரெஸ்ஸ அவுத்துக் கொடுத்திட்டு நாங்க போட்டுட்டு போன வேட்டி சட்டையோடு
வருவோம்!” கடைசி வரிகளில் துயரம் கொப்பளிக்கிறது.
இத்தொழில்
ஆசாரிகள் மட்டுமே இருந்த நிலை மாறிடிச்சு , எல்லா சாதியும் முஸ்லீம் உட்பட எல்லா மதமும் ,பெங்காலி உட்பட பிற
மாநிலத்தவரும் ஈடுபடும் நிலையாகிப் போனது . சாதிக்கொரு தொழில் என்பது உடைபடுவது நல்லதே
ஆயின் பாதிக்கபடுவோர் துயர் மீட்புக்கு அரசு செய்ததென்ன ? மோடி அரசின் “விஸ்வகர்மா திட்டம்” நடைமுறை சாத்தியமற்ற டேக்
அப் ஆகாத விமானம். ஆனால் அது இந்நாவலில் இடம் பெறவில்லை. ஒரு வேளை நாவல் எழுதப்பட்டது
அதற்கு முன்பாக இருக்கக்கூடும்.
ஆந்திரமாநிலம்
சித்தூரில் பிராமணர்களுக்கும் விஸ்வகர்மாக்களுக்கும் நடந்த வழக்கு விஸ்வகர்மாக்களுக்கு
சாதகமாக முடிந்த செய்தி ஒரு பத்தியில் உள்ளது . இது முக்கிய நிகழ்வு . மநு தர்மத்திற்கு
எதிரான வெற்றி .அ.மார்க்ஸ் இது குறித்து விரிவாக ஒரு நூல் எழுதி உள்ளார் . இதனை ஒரு
அத்தியாயமாக விரிவாக இந்நூலில் சேர்த்திருக்கலாம் .
விடுதலைப்
போரில் சென்னையில் இந்திய தேசிய காங்கிரஸின்
மூன்றாவது மாநாடு பக்துருதீன் தயாப்ஜி தலைமையில் நடந்த போது மூக்கணாச்சாரி என்பவர்
தமிழில் பேசி தேசிய அரசியலில் தாய்மொழியை முன்னிறுத்தியது அன்றைக்கு பெரும் பிரச்சனை
ஆனது .அன்று அவர் பேசியது நகைத்தொழில் உட்பட சிறுதொழில் நசிவைப் பற்றித்தான். இதுபோன்ற
வரலாற்று செய்திகளை , விடுதலைப் போரில் விஸ்வ கர்மா பங்கினை [ செ.திவான் சிறு நூலாகவே
வெளியிட்டிருக்கிறார் ] ,தியாகராஜ பாகவதர் ,என் எஸ் கிருஷ்ணன் போன்ற கலை மேதைகள் இச்சமூகத்தில்
மலர்ந்ததை போகிற போக்கில் சொல்லி இருக்கலாமோ !
கடைசி அத்தியாயம்
ஆசிரியரின் எதிர்கால கனவு திட்டமாக உள்ளது . கனவு மெய்ப்படும் என நம்பிக்கையோடு நாவலை
நிறைவு செய்கிறார் ஜனநேசன் . பொதுவாக பொற்கொல்லர்கள்
விஸ்வகர்மாக்கள் வாழ்வில் நகைத் தொழிலில் கடந்த
அற்பதாண்டுகளுக்கு மேலாக ஏற்பட்ட அழிவுகள் ,மாற்றங்களை நாவல் வடிவில் இந்நூலில் புனைவாகச் சொல்லி இருக்கிறார் ஜனநேசன் . இந்த வாழ்வியல்
வரலாறு இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள நிச்சயம் உதவும் .வாசிப்பீர் !
மின்னுவதெல்லாம்
[ நாவல் ] ஆசிரியர் : ஜனநேசன் ,
வெளியீடு
: நன்னூல் பதிப்பகம் , மணலி – 610203 ,திருத்துறைப் பூண்டி .
Email : nanoolpathippagam@gmail.com
பக்கங்கள் : 124 , விலை : ரூ.150/
சு.பொ.அகத்தியலிங்கம்.
29/04/2024.
0 comments :
Post a Comment