ஏப்ரல்
23 : உலக புத்தக தினத்தை நோக்கி,
மிருதங்கத்தின் வலியும் ரணமும் ………….
மிருதங்கத்தில்
மாட்டுத் தோல் குறிப்பாக பசுத்தோல் பயன்படுத்தப் படுகிறது எனினும் பார்ப்பனர்கள் இதனை
இசைக்கத் தயங்குவதில்லை .பிற தோல் கருவிகள் மீது காட்டும் ஒவ்வாமை இதன் மீது இல்லை
. ஏன் ?இதன் சமூக வரலாற்றை அறிய வாசலைத் திறக்கிறது டி.எம் .கிருஷ்ணா எழுதிய “மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் :செபாஸ்டியன்
குடும்பக் கலை” எனும் நூல்
“மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு
மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம் ஹே ஹே ஹே ஹே..”
2001ல் வெளிவந்த விக்ரம் நடித்த “காசி” திரைப்படத்தில் இளையராஜா இசையில் புலமைப்பித்தன் பாடலைக் கேட்டு
ரசித்தோம் ; அப்போது மாட்டுத் தோலா ? மான் தோலா என விவாதம் நடந்ததும்
என் நினைவிலாடுகிறது .
சென்ஸாருக்குத் தப்பவும் ,மதவெறியர் மிரட்டல் வருமென
பயந்தும் மாட்டுத் தோலை மான் தோலென மாற்றிப்
பாடியதாக இருக்கக்கூடும் என அன்றைக்கு சமாதனம் செய்து கொண்டோம். [ உண்மையும் அதுதான்
என உள்வட்டாரத்தவர் சொன்னார்கள் ]
பாட்டை கேட்பதைத் தவிர இசைஞானம் எதுவும் எனக்குக் கிடையாது .ஆகவே டி.எம் .கிருஷ்ணா
நூல் வந்தபோது சூட்டோடு படிக்க தோன்றவில்லை
.தற்சமயம் டி.எம் .கிருஷ்ணாவுக்கு எதிராக சனாதன
சிறு கும்பல் ஒன்று கச்சை கட்டி கனைத்தபோது
இந்நூல் மீது ஆர்வம் பிறந்தது . ஏன் எனில் கர்நாடக சங்கீதத்தை குறிப்பிட்ட சாதியின்
பிடியிலிருந்து விடுவிக்கப் போராடும் டி.எம். கிருஷ்ணாவின் ஜனநாயகப் போராட்டத்தை ஆதரிப்பது
நம் கடமை அல்லவா ? இந்த நேரத்தில் என் சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்லி விடுகிறேன்.
“சங்கராபரணம்”
எனும் திரைப்படம் வந்த பொழுது நடந்த ஓர் நிகழ்வு இங்கு நினைவுக்கு வருகிறது . நான் அப்போது ஒரு சினிமா விடாது பார்க்கும் டைப் . தோழர் சின்னையாவும் நானும் படம் பார்க்க கிளம்பிவிடுவோம். அதே போல் அப்படத்தையும் பார்த்துவிட்டோம் . மறுநாள் தீக்கதிரில் வந்த விமர்சனத்தைப் படித்ததும்
கடுப்பாகி நானும் சின்னையாவும் பேசிக்கொண்டிருந்தோம் .அப்போது பெரம்பூர் கட்சி அலுவலகத்தில்தான் சிபிஎம் மாநிலக்குழுவும் தற்காலிகமாக இயங்கி வந்தது .எங்கள் பேச்சினூடே தோழர் ஆர். ராமராஜ் வந்தார்
. நாங்கள் சொல்வதைக் கேட்டார் . அங்கே வந்த மாநிலச் செயலாளர் தோழர் ஏ பாலசுப்பிரமணியத்தை அழைத்து விஷயத்தைச்
சொல்லி கோர்த்துவிட்டார் தோழர் ஆர் .ராமராஜ்.
உடனே
ஏபி சொன்னார் , “ இண்ணைக்கு இரவுக் காட்சியில் அந்தப்படத்தை நாம் நாலுபேரும் பார்க்கிறோம் . சின்னையா ! டிக்கெட்
புக் பண்ணு !” எனச் சொல்லி காசை எடுத்துக் கொடுத்தார் .இரவு படம் பார்த்தோம்.
மறுநாள் சொன்னார் , “ ஒடுக்கப்பட்ட ஓர் சாதியில் பிறந்த ஒரு சிறுவன் கர்நாடக இசையில் மேலெழுந்து வருவது ஓர் பாராட்ட வேண்டிய ஜனநாயகச் செய்தியே ! சினிமா மசாலாவில் நாம் எதிர்பார்க்கிற எல்லாமுமா கிடைக்கும் ? உங்க விமர்சனம் சரியே !” என்றவர் தீக்கதிருக்கு போண் செய்து பேசி இரண்டொரு நாளில் இன்னொரு தோழர் [ எஸ் ஏ பி என நினைவு ] எழுதிய
விமர்சனம் வரச் செய்தார் . சாதியத்தை எதிர்க்கிற அல்லது மீறுகிற எதுவாயினும் ஆதரிக்க வேண்டும் என்பதில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் உறுதியாக இருந்தார்
. அது தெளிவான வழிகாட்டல் அல்லவா
?
இந்த நிகழ்வை
அசைபோடக் காரணம் டி.எம்.கிருஷ்ணாவின் முயற்சியில் விமர்சனங்கள் இருக்கக்கூடும் ,ஆயினும் நோக்கம் ஜனநாயகத் தன்மை
கொண்டது அல்லவா ?அவருக்கு தோள் கொடுப்போம். அதன் ஒரு பகுதியே இந்நூலைப் படிக்க என்னைத்
தூண்டியது. நீங்களும் வாசியுங்கள்.
மிருதங்கமும்
மத்தளமும் ஒன்றா வெவ்வேறா ? நானறியேன்.ஆயினும் ஒன்று என்றே நான் கருதுகிறேன் . கர்நாடக
சங்கீதக் கச்சேரிகளில் மிருதங்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவமான இடம் உண்டு . இன்னும்
சொல்லப் போனால் கர்நாடக சங்கீதத்தையும் மிருதங்கத்தையும் பிரித்துப் பார்க்கவே இயலாது
. அப்படிப்பட்ட மிருதங்கத்தின் உருவாக்கத்தில்
சிந்திய வியர்வையை ஒருவர் ஆவணப்படுத்துவது என்பதே மிகப்பெரிய விஷயம் .
கிட்டத்தட்ட
நான்கு ஆண்டுகளுக்கு மேல் உழைத்து அலைந்து திரிந்து விவரங்களை அக்கறையோடு சேகரித்து
, அவர்களோடு இரண்டறக் கலந்து உயிர் நாடியை கிரகித்து இந்நூலை எழுதி இருக்கிறார் டி.எம்
.கிருஷ்ணா . சாதியத்தின் கோரக் கரங்கள் எப்படி எல்லாம் இயக்கி இருக்கின்றன என்பதை தன்னால்
இயன்றவரை உள்வாங்கி சொல்ல முயன்றிருக்கிறார் .
“ மிருதங்கம்
பற்றிய இந்நூல் ,சமூக அரசியல் , அழகியல் , வேதியல் , உயிரியல் , ஒலியியல் ,பொறியியல்
, இயற்பியல் ஆகியவற்றை உள்ளடக்கியது.” என நன்றி சொல்லும் போது டி.எம்.கிருஷ்ணா சொல்வது
மிகை அல்ல.
மிருதங்கம்
ஆட்டுத் தோல் ,எருமைத் தோல் ,பசுத்தோல் ஆகிய மூன்றும் சேர்த்து செய்யப்படுவதை ,அதன்
பின்னால் உள்ள சாதிய தீண்டாமையை இந்நூல் உரக்கவே பேசுகிறது . மிருதங்க வித்துவான்கள்
பெரும்பாலும் பார்ப்பனராக இருக்கும் போது [விதி விலக்குகளும் உண்டு] , இந்த மிருதங்கத்தை
உருவாக்கும் கைவினைஞர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருப்பது தற்செயலானதா
? இதன் வரலாற்று வேர் எது ? இந்நூல் தேடுகிறது .
மிருதங்க
உருவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ,மேம்படுத்தல்கள் இவற்றின் பின்னால் மிருதங்க
உலகில் புகழ்கொடி நாட்டிய மணி ஐயரே இருந்ததாகச் சொல்லப்படும் கூற்றை நூலாசிரியர் மறுக்கிறார்
. மிருதங்க உற்பத்தியில் ஈடுபட்ட கைவினைஞர்கள்
,பணியாளர்கள் பங்களிப்பை எப்படி நிராகரிக்க
முடியும் என டி எம் கிருஷ்ணா கோபப்படுகிறார் . அதனையொட்டி மணி ஐயர் குறித்த ஓர் விமர்சனத்தை
முன் வைக்கிறார் , “மிருதங்கத்த்தின் வடிவமைப்பிலும் தன்மையிலும் ஏற்பட்ட வளர்சிக்கான
பெருமையையும் வரித்துக் கொள்ளும் ஆணவம் இதில் தெரிகிறது.இந்த ஆணவத்தை மீறி புனித முகம்
காட்டவும் அவரால் முடிகிறது .”
தஞ்சாவூர்
பாணி ,சென்னை பாணி ,ஆந்திர பாணி ,கர்நாடக பாணி
என வெவ்வேறு மிருதங்க உற்பத்தி மையங்கள் உருவான பின்னணி ,அதில் சம்மந்தப்பட்ட
குடும்பங்கள் , சாதியத்தின் பங்கு , வாழ்க்கை முறை ,மிருதங்கம் உருவாக தேவைப்படும்
கூட்டு உழைப்பு ,அதில் தோல் தொழிலாளர் ,ஆசாரி , மிருதங்கம் செய்யும் கைவினைஞர்கள் எனஒவ்வொருவரின் வரையறுக்கப்பட்ட இடம் , நவீன உலகில்
ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்கள் என எல்லாவற்றையும் ஆவணபடுத்தும் முயற்சியே
இந்நூல் .
இந்நூல் ஒவ்வொரு
கட்டத்திலுமான தொழில் நுட்பக் கூறுகளையும் அதற்கு தேவைப்படும் கைவினைஞர்களின் உழைப்பையும்
அனுபவத்தையும் மிக காத்திரமாகப் படம் பிடிக்கிறது .அது குறித்து விரிவாகப் பேச எனக்கு
ஞானம் போதாது . ஆகவே இங்கு பேசவில்லை .வாசகர்கள் படித்து உள்வாங்க அன்புடன் வேண்டுகிறேன்
மிருதங்க
வித்துவான்களுக்கும் மிருதங்கம் செய்யும் கைவினைஞர்களுக்கும்
இடையிலான உறவின் தன்மை மிகவும் சிக்கலானது . பெரும்பாலும் உயர் சாதியினரான வித்துவான்கள்
பெரும்பாலும் தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மிருதங்க கைவினைஞர்களோடு நெருக்கமாக இணைந்து
தம் தேவையை பெற வேண்டிய சூழலில் ஏற்படும் சமூக முரண்கள் இந்நுல் நெடுக ஊடும் பாவுமாய்
வந்துள்ளது .
“மேல் நிலையில்
இருப்பவர்கள் கீழே இருப்பவர்களை பெருந்தன்மையோடு நடத்தும் போக்கு சமூகத்தின் அதிகார
அடுக்குகளை மறு உற்பத்தி செய்கிறது “ எனவும் , “ இந்த பாசாங்கில் எல்லோரும் பங்கு கொண்டனர்”
என்றும் சொல்லிச் செல்கிறார் டி.எம் .கிருஷ்ணா . இது நுட்பமான அவதானிப்பு .இப்படி நிறைய
தருணங்களில் இந்நூலில் டி.எம்.கிருஷ்ணா பேசியுள்ளார் .
11 அத்தியாயங்களின்
தலைப்பைப் பாருங்கள் ! எவ்வளவு நுட்பமாக ஆழமாக
இந்நூலில் டி.எம் .கிருஷ்ணா பயணித்திருக்கிறார் என புலனாகும். 1] தஞ்சாவூரில் வேர்
கொண்ட மரபு , 2. சென்னை நோக்கி ,3.சென்னை மிருதங்கச் சிற்பிகள் , 4.உருவம் தந்த மரச்
சிற்பிகள் ,5. தோலின் ஆழம் , 6. தோலில் பிறக்கும் தாளம் ,7.சுண்ணாம்பும் கல்லும் ,
8.குச்சி-கம்பி : மாபெரும் விவாதம் ,9.தமிழகத்திற்கு அப்பால் , 10. பெண்களின் பங்களிப்பு
, 11. மிருதங்கச் சக்கரவர்த்தி .
ஒரு மிருதங்கத்தின்
பின்னால் இவ்வளவு உழைப்பா ? இவ்வளவு வலியா ?
தோல் தொழில்
இழிவானதாக மநு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது
.இத்தொழில் ஈடுபடுபவர்கள் தீண்டத்தகாதவர்களாக
மநு வரையறுத்திருக்கிறது .பறை ,தவில் உட்பட எல்லா தோல் கருவிகளும் ஆலயங்களில் வெகு
தொலைவில் நிறுத்தப்படும் போது பசுத்தோலால் செய்தாலும் மிருதங்கம் நெருங்க முடிகிறதே
எப்படி ?
ஒரு முறை
தோழர் டி.கே.ரங்கராஜன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் , “ மிருதங்க கலையில் பல பிராமணர்கள்
ஜொலிக்கிறார்கள் ,ஆனால் தவில் இசைப்பதில் எந்த பிராமணனாவது ஈடுபட்டிருக்கிறானா ? ஏன்
ஈடுபடுவதில்லை ?” இக்கேள்வியும் விசாரிக்கப்பட வேண்டியதே . இப்படி எண்ணற்ற கேள்விகளை
இந்நுல் என்னுள் எழுப்புகிறது .
மாதம்மாள்
,அஸ்வத்தம்மாள் போன்ற சில பெண்கள் சமூக எதிர்ப்பையும் மீறி மிருதங்க கைவினைஞர்களாக
மாறிய கதை ஒரு காத்திரமான பதிவு . மிருதங்கம் செய்யும் கைவினைஞர்களின் மனைவிமார்களே
இடையீடுகள் ,கிசுகிசுக்கள் மூலம் பல சமூக அவலங்களை வெளிப்படுத்துகின்றனர் என்கிறார்
டி .எம்.கிருஷ்ணா ஓரிடத்தில் .
இன்னொரு இடத்தில்
சொல்கிறார் ,” ‘சர்வம் தாள மயம்’ என்னும்
தமிழ்த் திரைப்படத்தின் கதை இதுதான் .மிருதங்கம் செய்பவரின் மகன் மிருதங்கம் வாசிக்கக்
கற்றுக்கொள்வதில் உள்ள சவால்களை இந்தப் படம் பேசுகிறது .கலைஞருக்கும் கைவினைஞருக்கும்
இடையிலான உறவு ,சமூக நுட்பங்கள் ஆகியவற்றை ஆழமாகக் கையாள இந்தப் படம் தவறிவிட்டது
.இருண்ட பகுதிக்குள் பயணிக்கவும் சொல்லப்படாத வார்த்தைகளைக் கேட்பதற்கும் படம் தயாராக
இல்லை . சாதியை அது காங்கிரீட் சுவர் போல் அது சித்தரித்தது .ஆனால் உண்மையில் சாதி
கொல்லைப்புற கதவுபோல் செயல்படுகிறது.” டி.எம்.கிருஷ்ணாவின் நுட்பமான இந்த அவதானிப்பை
இந்நூல் முழுக்கக் காண முடிகிறது .
“ஒரு பக்கம்
உயர் சாதியினரின் கலை வெளிப்பாடும் கற்கும் சூழலும் ,மறுபக்கம் விளிம்பு நிலையில் உள்ள
மிருதங்கக் கைவினைஞர்கள் என்று இரு மாறுபட்ட உலகங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்
என்பது எனக்கு உறைத்தது . இந்த இரு உலகங்களும் நடைமுறை வசதிகளுக்காக மட்டுமே சந்தித்துக்
கொள்கின்றன. சாதி என்பது தொழில் அடிப்படையிலான அல்லது அவரவர் திறமை அடிப்படையிலான சமூக
ஏற்பாடு என்றும் , பிறப்பின் அடிப்படையிலான சமூக ஏற்பாடு அல்ல என்றும் பிராமணர்கள் தரப்பில்
ஒரு பொய் தொடர்ந்து சொல்லப்படுகிறது . கலைஞர்கள் கைவினைஞர்கள் இடையே இருக்கும்
ஊடாட்டமும் இடைவெளிகளும் இந்தப் பொய்யை மறு உற்பத்தி செய்கின்றன .இதன் விளைவாகப் பண்பாட்டு
ரீதியாகப் ‘பிறர்’ என்னும் பிரிவு உருவாகிறது .” இப்படி வாக்குமூலம் தருகிற டி. எம்.கிருஷ்ணாவும்
பிறப்பால் ஒரு பிராமணரே .ஆயினும் உள்ளிருந்து வரும் இக்கலக்குரல் நன்று. தேவையானது
.
நூலைத் தமிழில்
தந்த அரவிந்தனுக்கும் வாழ்த்துகள் .
இந்நூலை எல்லோரும்
வாசிப்பீர் !
சனாதன எதிர்ப்பை
முறியடிக்க
டி.எம்.கிருஷ்ணாவின்
பக்கம் துணை நிற்பீர் !
மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்
:செபாஸ்டியன் குடும்பக் கலை
ஆசிரியர்
: டி.எம்.கிருஷ்ணா , தமிழில் : அரவிந்தன்,
வெளியீடு
: காலச்சுவடு பப்பிளிகேஷன்ஸ் [பி]லிட்., 669 ,கே.பி.சாலை , நாகர்கோவில் 629001. E
mail : publications@kalachuvadu.com
/ 91-4652 /278525 .
பக்கங்கள்
: 328 , விலை : ரூ.195/
சு.பொ.அகத்தியலிங்கம்
.
21/4/2024.
0 comments :
Post a Comment