வாழ்வின் வலிகளைச் சொல்லும்…… ……

Posted by அகத்தீ Labels:

 


தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்தோர் கண்ணீர் துடைக்க இதுபோல் இடதுசாரி அமைப்புகள் ஏதேனும் உண்டா எனும் பெருங்கேள்வி நூலை வாசித்து முடிக்கும் போது என்னுள் எழுந்தது .

 

 


 

வாழ்வின் வலிகளைச் சொல்லும்…… ……

 

 

 

ஒரு நாள் என் அடுக்ககத்தில் நடை பயிற்சி முடிந்து உட்கார்ந்திருக்கும் போது ஒரு சகோதரி தன் தங்கை வெளிநாடு சென்றுவிட்டதை பெருமை பொங்கச் சொன்னார் .  “நாங்களும் சீக்கிரம் போய்விடுவோம் .இந்த நாட்டில் யார் இருக்க முடியும் ?” எனக் கேட்டுவிட்டு நகர்ந்தார் . [ மேல் அடுக்கு மத்திய தர மனோநிலை இது ]

 

 

அமெரிக்கக் கனவோடு அல்லது ஓரளவுபணி பாதுகாப்போடு வெளிநாடு செல்லுவோர் ஓர் வகை . இவர்களின் கனவும்கூட எந்த நேரமும் இடிந்து போய்விடக்கூடிய வஞ்சகமான அரசியல் சமூக பொருளாதார சூழலே எங்கும் கவிந்துகொண்டிருபது கவலை அளிக்கிறது . இந்நூல் அவர்களின் வாழ்வைப் பேசவில்லை .மாறாக அரபு தேசங்களில் பிழைப்பு தேடி சென்று ஏமாந்த , தோற்ற மனிதர்களின் வாழ்வைப் பேசும் நூல் .

 

 

காணாமல் போன தன் மூத்த சகோதரனைத் தேடி துபாய் சென்ற அமானுல்லா கான் , காலகதியில் தன் பெயருக்கு ஏற்ப வாழ்வைத் தொலைத்தவர்களின் மீட்பாளனாய் மாறிய கதை இது .அமானுல்லா என்றால் பாரசீகத்தில் மீட்பர் என்று பொருளாம் .

 

 

இது சுயசரிதை அல்ல . ஆனால் சுயசரிதை மாதிரி  . நினைவுக்குறிப்புகளா , ஆம் என்றும் சொல்லலாம் .ஆனால் அதுமட்டுமல்ல .இது நாவல் அல்ல நாவல் மாதிரி .சிறுகதைத் தொகுப்பும் அல்ல .ஆனால் 23 அத்தியாயங்களும் 23 சிறுகதைகதைகள்தான் ஆனால் பெருங்கதைகள் . பெருந்துயரம்.  இது வாழ்வின் வலிகளைச் சொல்லும் நூல் .இதனை நீங்கள் எப்படி அழைத்தால் என்ன ?

 

 

 “ இந்த தோற்கடிக்கப்பட்ட மனிதர்கள் யாரும் தங்களைத் தாங்களே தோற்கடித்தவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் யாரோ ஒருவரின் நலன்களுக்காகவும் ஆதயங்களுக்காகவும் தோற்கடிக்கப்பட்டவர்கள் .” எனும் அமானுல்லா கானின் வாக்குமூலம் பொய்யல்ல .உண்மை .உண்மையைத் தவிர வேறல்ல .

 

 

முதல் நான்கு அத்தியாயங்கள் அமானுல்லாகானின் வாழ்வின் வலியும் இதயமும் பேசும் . 11 மற்றும் இறுதி அத்தியாயமும் அப்படித்தான் . மீதி 17 அத்தியாயங்களும் பிறரின் வலிகள் சிறுகதைகளாய் பதிவாகி உள்ளன .அமானுல்லாகான் சாதி ,மதம் ,கடவுள் போன்றவற்றை துறந்தவன் .மானுடத்தை நேசிப்பவன் . அப்படியே வத்சலாவைத் துணிந்து திருமணமும்  செய்து கொண்டவன். இதய அறுவை சிகிட்சை செய்து கொண்டவன் . இதயத்தை ஒரு போதும் தொலைக்காதவன்  .

 

 

சுனைனா எனும் பெண் தன் குடும்பத்தை மீட்க அரபுதேசம் போய் அங்கு பாலியல் தொழிலாளியாக்கப்பட்டார் .அவரை அதிலிருந்து மீட்டு அவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த கதை .மும்தாஜின் கதையும் ,ஜெசி கதையும் இதுபோல்தான். நான் இளைஞனாக இருந்த போது புஷ்பா தங்கதுரை எனும் புனைப்பெயரில் வேணுகோபால் எழுதிய சிவப்பு விளக்கு கதைகளை ஓர் வார இதழில் படித்துள்ளேன் .அதில் கண்ணீரைவிட கவர்ச்சியே ஓங்கி நிற்கும் .இளமையின் ஹார்மோன்கள் அதைப் படிக்கத் தூண்டின . இங்கு எழுதப்பட்டவையோ கவர்ச்சி அல்ல கண்ணீரே முட்டி நின்றது . அந்த வலி நம்மையும் தொற்றிக்கொண்டது .

 

 

வாழ்வின் நெருக்கடி சூழலில் பிறந்து விட்ட குழந்தைகள் சட்ட விரோதமானவை .எனவே கைதுக்கு பயந்து பலவருடம் வெளி உலகையே அறியாமல் ஒற்றை அறைக்குள் வாழ நேர்ந்த அந்தக் குழந்தைகளின் கதை ; அப்துல்லாவின் மகளும் ,பாபுவின் குழந்தைகளும் வாசிப்பவரை தூங்க விடாது . 14 வருடம் அறைக்குள்ளே மட்டும் வாழும் ஒரு குழந்தையைப் பற்றி யோசித்தால்கூட நெஞ்சு அடைக்கும் .

 

 

அயலக மண்ணின் விசா காலம் முடிந்த பின்னர்  அல்லது வேறு ஏதேனும் சூழலில் சிக்கி வாழ்வை இழந்தோரின் வலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை . ஆயின் அவை மானுடத்தின் வலிகள் .இந்த வலிகளை உணர்வோரும் உதவிக்கு ஓடுவோரும் இன்னும் இந்த மண்ணில் இருக்கின்றனர் .இன்னும் மீதமிருக்கிறது மானுடம் எனும் நம்பிக்கையை இந்நூல் பதிவு செய்கிறது .

 

 

சாதி ,மதம் ,கடவுள் நம்பிக்கை எல்லாவற்றையும் மீறியது வாழ்வில் வலியும் , உதவும் மானுடமும் நூலின் காத்திரமான செய்தி இது .

 

 

“எவ்வளவு மனிதர்கள் எவ்வளவு விதவிதமான கதைகள் .அவர்களுக்கு மாமருந்தாய் சுட்டெரிக்கும் பாலையில் தாகம் தீர்க்க வந்த பாலைச் சுனைநீர் அமானுல்லா .” என்கிற அ.கரீம் வார்த்தை மெய் .

 

 

 “ இந்த நினைவுக் குறிப்புகளில் புதைந்து கிடப்பது தனிமையான ஒரு தலைபட்சமான சாட்சியமல்ல .சிறைச்சாலைகள் ,விபச்சார விடுதிகள் ,புகலிடங்களில் இருந்து ஒரு காலத்தில் அமானுல்லாகானுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன . அவர்களை கைவிடாமல் ,அமானுல்லாகான் அவர்களின் அழுகையை பின் தொடர்ந்தார் .இந்நூலில் உள்ள அனைத்துப் பாத்திரங்களும் அதனைப் பின்பற்றிய வாழ்க்கை முறைகளிலிருந்து உருவானவை.” என்கிறார் நூலாசிரியர் . ஆம். ஒவ்வொன்றாய் சொல்ல இயலாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டே கடந்து செல்கிறேன் நான் .

 

 

கேரளாவில் இருந்து அரபு தேசங்களுக்கு சென்றவர்கள் அதிகம் . கேரளத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரபின் எண்ணை டாலர் தினார் வாசம் இருக்கும் .வலியும் இருக்கும் .

 

 

அங்குள்ளோரின் வலியை போக்க  “ஹர்ஜா இந்தியா அசோசியேஷன்” இடதுசாரி அமைப்பான ”மாஸ் ஹர்ஜா” என இரண்டு முக்கிய அமைப்புகள் உண்டு . அதனோடு பயணப்பட்ட அமானுல்லாகானின் நினைவுச் சித்திரமே இந்நூல் .

 

 

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்தோர் கண்ணீர் துடைக்க இதுபோல் இடதுசாரி அமைப்புகள் ஏதேனும் உண்டா எனும் பெருங்கேள்வி நூலை வாசித்து முடிக்கும் போது என்னுள் எழுந்தது .

 

 

மலையாள ஊடகங்கள் போல் தமிழ் தொலைகாட்சிகளும் ஊடகங்களும்  இப்படி புலம் பெயர்ந்தவர் மீட்க துயர்துடைக்க தங்கள் ஊடகங்களை ஒரு கருவியாக்கி இருக்கிறார்களா ? [ ஈழத் தமிழ் அகதிகள் பிரச்சனை தனி அரசியல் .அதனை இதனோடு குழப்ப வேண்டாம்.]

 

சுனில் லால் மஞ்சாலும் மூடு இந்நூலை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.தமிழ் படைப்பை வாசிப்பதைப் போல் நான் உணர்ந்தேன் என்கிறார் உதயசங்கர். உண்மைதான்.அழுகைக்கு மொழி ஏது ?

 

 

 

அமானுல்லாவின் ஞாபகங்கள் பாலைச் சுனை

ஆசிரியர் : தீபேஷ் கரிங்புங்கரை ,

தமிழாக்கம் : சுனில் லால் மஞ்சாலுமூடு ,

வெளியீடு :பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,

E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com

பக்கங்கள் :192 , விலை : ரூ. 200 /

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

08/02/2024.

 

 

 

 


0 comments :

Post a Comment