இந்நாவல் என்னுள் வாலிபர் சங்க நாட்களை மீட்டுக்கொண்டுவந்தது .

Posted by அகத்தீ Labels:

 


 

 

 


 

இந்நாவல் என்னுள் வாலிபர் சங்க நாட்களை மீட்டுக்கொண்டுவந்தது .

 

 

 

1979 சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி முதல் மாநில மாநாட்டுக்கு முன்பே திருப்பூருக்கு நான் சில முறை சென்றேன் . அப்போது தொடங்கி வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய காலம் வரையும் அதன் பின்னரும் திருப்பூர் எனது உணர்வோடு கலந்தது . எண்ணற்ற முறை சென்றுள்ளேன்.

 

இந்நாவலில் உயிரோடு உலவும் பலரோடு நான் இணைந்து பணியாற்றி இருக்கிறேன் . புனைப்பெயரில் உலவும் சிலரும் அப்போது எம்மோடு பயணித்தவர்தாம்.

 

இந்நாவல் என்னுள் வாலிபர் சங்க நாட்களை மீட்டுக்கொண்டுவந்தது .

 

அனஸ் என்கிற வளரிளம் பருவ இளைஞன் ,அவன் அம்மா ஜெமீலா அப்பா ஷேக் பரீத் தங்கை அஜிதா இவர்களே மைய கதா பாத்திரங்கள் .வறுமையில் வறுபட்ட போதும் பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அரசியல் ஜீவிகள் .[ அறிவு ஜீவிகள் என்றொரு சொல் இருக்கும் போது அரசியல் ஜீவிகள் என்றொரு சொல்லும் இருக்கலாம்தானே ]

 

திருப்பூரின் தொழில் வளர்ச்சி , தொழிலாளர் வாழ்க்கை ,தொழிற்சங்கங்களின் எழுச்சி , போராட்டம் ,நொய்யல் ஆற்றின் சீர்கேடு ,சமூக பொருளாதார ,அரசியல் பின்புலம் இவை கதைக் களமாகி இருக்கிறது . இது ஓர் இடதுசாரி அரசியல் நாவலே !

 

“ ஜெமீலா அம்மா குறித்து ஆவணப்படுத்தும் முயற்சியில்தான் இதைத் தொடங்கினேன்…. புதினமாய் முடிந்திருக்கிறது.” என்கிறார் நாவலாசிரியர் சம்சுதீன் ஹீரா . ” நானும் கடந்த காலங்களில் இடது சாகசவாதத்தால் ஈர்க்கப்பட்டுக் கொஞ்சகாலம் எட்டிப் பார்ட்த்துவிட்டு திரும்பி வந்தவன்.”என்கிற சம்சுதீன் , சிபிஐ ,சிபிஎம் , நக்சல் இவற்றுக்கிடையே அன்றைய இளைஞர்கள் மாறி மாறி ஈர்க்கப்பட்ட பின்னணியை நன்கு விவரித்திருக்கிறார் .

 

என் வாலிபர் சங்க வாழ்க்கையில் மிக அதிகக் கூட்டங்களில் ,போராட்டங்களில் , அமைப்புப் பணிகளில்  பங்கேற்ற முதல் மூன்று மாவட்டங்களில் திருப்பூருக்கு இடம் உண்டு. முதல் நாள் என்னோடு வாலிபர் சங்கக் கூட்டத்தில் சிரிக்க சிரிக்க பேசிய ஒரு தோழரும் ,உணர்ச்சிகரமாக பாடிய தோழரும் மறுநாள் நக்சல் பக்கம் நகர்ந்ததும் நான் கண்ட காட்சி . ஆனால் அவர்களின் அரசியல் ஊசலாட்டம் குறித்து தோழர் தங்கவேலுவும் ,உன்னிகிருஷ்ணனும் இன்னும் சிலரும் கவலையோடு முன்பே உரையாடி இருந்தோம் . ஆகவே அந்த நகர்வு திடீர் அதிர்ச்சி அல்ல. அதைத் தொடர்ந்து முன்னணி ஊழியர்களுக்கு அரசியல் போதிக்க தனிக்கவனம் செலுத்தினோம். தோழர் பி.ராமச்சந்திரன் இதில் அதிக அக்கறை காட்டி ஊழியர்களை வளர்த்தெடுக்க உதவினார் .

 

திருமணம் செய்து கொள்ளாமல் ,ஆஸ்த்மா நோயுடன் போராடிக்கொண்டே அசைக்க முடியா தத்துவார்த்த உறுதியுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள  உன்னிகிருஷ்ணன் போன்ற தோழர்கள்  நாவலில் ஒரு பாத்திரம் மட்டுமல்ல . திருப்பூர் வர்க்கப் போரட்ட வரலாற்றிலும் ஓர் அங்கமாகும்.

 

திருப்பூரில் வாலிபர் சங்கமும் தொழிற் சங்கமும் தோள் இணைந்து போராடியது மறக்க முடியாத அனுபவம் . தினசரி தெருமுனைக்கூட்டமும் பஞ்சப்படி நாடகமும் அதிலும் அன்றைய பேச்சுவார்த்தையில் நிலவரம் உட்பட நாடகத்தில் சேர்க்கப்படும் . பஞ்சப்படி நாடகத்தை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை என்கிற அளவுக்கு வீச்சானது .தோழர் விழிப்பு நடராஜனும் ,மணிக்குமாரும் மறகக்கூடிய பெயரா ?யுகவிழிப்பு மாத இதழும் நினைவில் வந்து போகிறது . நானும் பல தெருமுனை போராட்டக் கூட்டங்களில் பங்கேற்றதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

 

அனசின் தந்தயும் நக்சலோடு தொடர்புடையவர்  , அனஸ் டிங்கர் ஒர்க்‌ஷாப் வேலை ,கைமடியாள் ,டெய்லர் என உழைப்பவனாகவும் , வாலிபர் சங்கம் ,கட்சி , தத்துவத் தேடல் ,புரட்சி ஆர்வம் ,நக்சல் ஈடுபாடு என நகர்ந்து சிறைபட்டு கையறு நிலையில் நிற்பதோடு நாவல் முடிகிறது . அதிதீவிர அரசியல் கணக்கு பிழை என்கிறது இந்நாவல் . நல்ல செய்திதான். அனஸின் மென்மையான காதல் உணர்வு நயம்பட சொல்லப்பட்டுள்ளது . ஜெமீலா பாத்திரம் கனமானது .தாய்மையும் சமூக அக்கறையும் மிக்க வீரத்தின் வார்ப்பு . வரலாற்றில் வாழ்ந்த மனுஷி நாவலிலும் வாழ்கிறார் .

 

‘ஏலி ஏலி லாமா சபக்தானி’[ தேவனே தேவனே !என்னை ஏன் கைவிட்டீர் ] என்கிற பைபிள் வசனத்தோடு நாவல் முடிகிறது .சபக்தனி எனும் சொல் அதிலிருந்து பெறப்பட்டதே . ஓர் குறியீடாகவே அதனைக் கையாண்டிருக்கிறார்.

 

அந்த காலத்தில் தண்ணீருக்காகவும் குடியிருப்புக்காகவும் அடிப்படை வசதிகளுக்காகவும் தமிழ் நாடு முழுவதும் வாலிபர் சங்கம் நடத்திய போராட்டங்கள் நினைவில் சுழல்கிறது .

 

அந்த திருப்பூர் மண்ணில் மதவெறி சக்திகள் வேர்கொண்டது கவலையளிக்கிறது .இந்நாவல் வழி திருப்பூரின் வர்க்கப் போராட்ட வரலாற்றை ஒரு பருந்துப் பார்வை பார்க்க வைத்த சம்சுதீன் ஹீராவுக்கு வாழ்த்துகள் . “மெளனத்தின் சாட்சியங்கள்” நாவல்  மூலம் அழுத்தமான கால்தடம் பதித்தவரின் இரண்டாவது நாவல் .ஒரு சிறுகதைத் தொகுப்பும் வந்துள்ளது .

 

 “ வெப்பமான காலத்தின் திருப்பூர் நகரில் வாழ்ந்த உணர்வைத்  தருவதில் இந்நாவல் வெற்றி பெற்றுள்ளது.” என்கிற தமிழ்ச்செல்வன் கருத்தை வழிமொழிகிறேன். கதை போகிற போக்கில் தன் சொந்த சொந்த நிர்ணயிப்புகளை ஆங்காங்கு தெளித்துச் செல்கிறார் சம்சுதீன் என்கிற இரா.ஈஸ்வரனின் கருத்தும் மிகச்சரியானதே .

 

இளம் தோழர்களே இந்நாவலை வாசிக்காமல் இருந்துவிடாதீர்கள் !

 

சபக்தனி [ புதினம்] , ஆசிரியர் : சம்சுதீன் ஹீரா

வெளீயீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : 044  24332924 / 8778073949,

E mail : bharathiputhakalayam@gmail.com /  www.thamizhbooks.com  

பக்கங்கள் :272 , விலை : ரூ. 270 /

 

 

 

 

சு.பொ.அ.

4/01/2024.

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment