ஒரு ராஜாவுக்கு அறிவியல் துறை....

Posted by அகத்தீ Labels:

 

[ நேற்று ஒரு கதையை மீண்டும் கேட்டேன் . தெரிந்த கதைதான் . ஆயினும் இன்று அவசியம் சொல்லப்பட வேண்டிய கதை . கதை சொன்னவர் தாமஸ் பிராங்கோ . சொன்ன இடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 22 வது மாநில மாநாடு .பி எம் சி தொழில்நுட்ப கல்லூரி .ஓசூர். ]

 

ஒரு ராஜாவுக்கு அறிவியல் துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க ஆசை உண்டானது . தகுதியானவரை தேர்வு செய்ய போவதாய் தண்டோரா போட்டார் . பெருங்கூட்டம் திரண்டது . ராஜா சொன்னார் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் .சரியாகச் சொல்வோருக்கு பதவி .

 

ராஜா கேட்டார் ;

 

நான் ஒரு கண்ணாடித் தொட்டியில் விழிம்புவரை தண்ணீர் நிரப்பினேன் . அதில் உயிருள்ள மீனை விட்டேன் .நீர் ஒரு சொட்டு வெளியேறவில்லை .அந்த மீனை சாகடித்து தொட்டிநிரம்பிய தண்ணீரில் போட்டேன் .நீர் கொட்டியது . ஏன் ?

 

யாராலும் பதில் சொல்ல முடியவில்லை .

 

ராஜா 24 மணி நேர அவகாசம் கொடுத்து சபையைக் கலைத்தார் .

 

மறு நாள் வேடிக்கை பார்க்க கூட்டம் திரண்டதே தவிர பதில் சொல்ல ஆளில்லை .

 

ஆனால் ,ஒரு இளைஞன் மேடை ஏறினான் . “ ராஜா ! நான் பதில் சொல்லத் தயார் .நீங்கள் கோபப்படக்கூடாது…” என கேட்டான் .

 

ராஜா சொன்னார் , “ நான் கோபப்பட மாட்டேன் .தண்டிக்க மாட்டேன்” என உறுதியாய்ச் சொன்னார் .

 

இளைஞன் சொன்னான் , “ ராஜா ! நீங்கள் பொய் சொன்னீர்கள் ! நான் நேற்று பலமுறை நீங்கள் சொன்ன சோதனையைச் செய்து பார்த்தேன் . உயிருடன் மீனைப் போட்டாலும் கொஞ்சம் தண்ணீர் வெளியேறியது . செத்த மீனைப் போட்டாலும் வெளியேறியது . இதுவே ஆர்க்கிமிடீஸ் அறிவியல் விதியும் கூட .”

 

ராஜா மகிழ்ந்தார் . அவனையே அறிவியல் துறைக்கு அமைச்சராக தேர்வு செய்தார் .

 

இக்கதையைச் சொல்லிவிட்டு பிராங்கோ சொன்னார் , யார் சொன்னாலும் எவ்வளவு பெரியவர் சொன்னாலும் தப்பை தப்பு என்று சொல்லும் மன உறுதியே அறிவியலின் முதல் நிபந்தனை .

 

திரும்பத் திரும்ப சோதித்தறி என்பது இரண்டாவது நிபந்தனை .

 

[ நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன் . இங்கே டிமோவின் அத்தனை புராணப் புளுகையும் அறிவியல் என்று சான்றளிப்பதுதானே அறிவியலார் அறமாகிப் போனது . நீதி மன்ற நீதியாகிப் போனது . அதிகார ஆணையாகிப் போனது . எங்கே போகிறோம் ?]

 

வாழ்த்துரை வழங்கிய ஆதவன் தீட்சண்யா நன்கு தத்துவ உரை நிகழ்ந்தினார் . “ தன்னை பொருள்முதல் வாதியாய் அறிவித்துக் கொள்வதே அறிவியலாளர் கடமை என்றார் . நாட்டு நடப்பை நன்கு பகடி செய்தார் .

 

இராணுவ ஆய்வறிஞர் டில்லிபாபு துவக்க உரை நிகழ்த்தினார் . அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்க மக்களுக்கான அறிவியலை அனுபவ கல்லில் உரைத்து விளக்கினார் .

 

அறிவார்ந்த துவக்க நிகழ்வுதான் . பங்கேற்றோர் எண்ணிக்கைதான் கவலைக்குரியது .

 

ஓசூரில் தொழிலாளி வர்க்கத்தில் இடதுசாரி இயக்கத்தில் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு பெரும் பஞ்சமோ ? இல்லையே ! எங்கோ ஒருங்கிணைப்பில் பிழை நேர்ந்துள்ளது .அவ்வளவே !

 

சுபொஅ.

24/02/24.



0 comments :

Post a Comment