அன்புமிக்க தோழர் சோழ .நாகராஜ் அவர்களுக்கு ,

Posted by அகத்தீ Labels:

 



அன்புமிக்க தோழர் சோழ .நாகராஜ் அவர்களுக்கு ,

 

 

வணக்கம் ,

 

“பெரியார் : பிராமணர்களின் எதிரியா ?” எனும் தங்களின் நூல் கிடைத்தது . மகிழ்ச்சி . 2022 இறுதியில் வெளிவந்தது என நினைக்கிறேன் .தாமதமாகப் பெற்று படித்தேன். தாமதமாயினும் இப்போதேனும் வாசித்தது மகிழ்ச்சியே !

 

உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை உங்கள் நூல்வழி உணர்ந்தேன்.  மாணவப் பருவத்திலேயே பெரியாரை பின் தொடரத் தொடங்கி மார்க்சிஸ்டானார்வர்கள் நாம் இருவருமே . பெரியார் இன்னும் தேவைப்படுகிறார் என்கிற கருத்திலும் நாம் இருவரும் உடன்படுகிறோம். இதன் காரணமாகவே  சிலர் என்னோடு ஒருவித ஒவ்வாமையை தொடர்ந்து கடைபிடிப்பதும் உண்டு .

 

உங்கள் நூல் காலத்தின் தேவை . எந்த ஒரு ஆளுமையாயினும் கால ஓட்டத்தில் எதிரும் புதிருமான அரசியல் களத்தில் அவ்வப்போது எதிர்வினையாற்ற சொல்லியவை பல உறுத்தலாகவும் பல உவப்பாகவும் இருக்கும். இது இயல்பு . எனவே எந்த ஒரு மேற்கோளையும் அவர் சொல்லிய சூழலில் இருந்து தனித்துப் பார்த்தால் முழு உண்மை விளங்காது . அந்த ஆளுமை தன் ஆயுள் காலம் முழுவதும் ஆற்றிய பணியில் மேலோங்கி இருந்தது எது என்பதே கேள்வி . அளவுகோல் அதுவே ஆகும்.

 

சானாதன எதிர்ப்பு , பெண்ணுரிமை , மூடநம்பிக்கை எதிர்ப்பு ,சமூகநீதி ,பகுத்தறிவுச் சிந்தனைகள் பெரியாரின் ஆகப்பெரும் பங்களிப்பாகும் . அதனைச் சார்ந்தே  “பார்ப்பனிய எதிர்ப்பு” என்பது பெரியாரின் வழியானது .பிராமணியம் என்ற சொல்லாடல் பெரியாரிடம் இல்லை .  பழந்தமிழ் இலக்கியத்திலும் இல்லை . நீங்கள் தலைப்பில் ’பிராமணர்களின்.. ’ என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பது இன்றைய சூழலுக்கு ஏற்ற நடைமுறை உத்தி .பிழையில்லை.

 

[பார்ப்பனியம் என்ற சொல்லையே இழிவாகக் கருதி தம்மை பிராமணர் பிராமணியம் என்று சொல்ல விரும்பும் மேட்டுக்குடியினர் ஆதிக்க வெறியினர் செயலில் எனக்கு உடன்பாடில்லை .நிற்க !]

 

இந்நூலில் தாங்கள் சொல்லிய பல செய்திகள் நான் அறிந்தவையே .ஆனால் அதனை தக்க முறையில் பயன்படுத்தி உங்கள் வாதத்துக்கு மெருகூட்டியிருப்பது சிறப்பாக இருக்கிறது .

 

சிருங்கேரி சங்கராச்சாரியார் கடிதமும் பெரியார்  பதிலும் , காந்தியார் கொலையுண்ட போது , ராஜாஜி : துவேஷமும் நேசமும் ,பார்ப்பனத் தோழர்களுக்கு ஆகிய அத்தியாயங்கள் காத்திரமானவை .மிகச் சரியாகப் பயன்படுத்தி வாதத்தை முன்னெடுத்திருக்கிறீர்கள் . உங்கள் பேசுபொருளுக்கு அது நன்றாகப் பொருந்தியுள்ளது .

 

வேதமறுப்பு என்பது தமிழ் மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது . அதை நீங்களும் சுட்டி இருக்கிறீர்கள் . அந்த பாரம்பரியத்தின் நீட்சியாகவும் நவீன தேவைக்கு ஏற்பவும் பார்ப்பனிய எதிர்ப்பை அதிதீவிரமாக முன்னெடுத்ததுதான் பெரியாரின் தனித்துவம் .அதில் அவர் வெற்றியும் பெற்றார் . இந்நூலில் அதனை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாமோ என நான் நினைக்கிறேன்.

 

பொதுவாய் நாத்திகம் பேசுகிறவர்கள் ஓர் குறுகிய வட்டதிற்குள் முடக்கப்படுவதே உலக வழக்கு . ஆயின் அறுவை சிகிட்சை கத்தி போன்று கூர்மையாக நாத்திகம் பேசி வெகுஜன திரளின் அங்கீகாரம் பெற்றவராய் திகழ்வது எளிதல்ல ;பெரியாரின் வெற்றியின் பின் இருந்த தமிழர் சமூக உணர்வு கொஞ்சம் பேசப்பட்டிருக்க வேண்டும்.

 

இதனை நன்கு உணர்ந்தவர்கள்தாம் தோழர்கள் ஏ.பாலசுப்பிரமணியம் , எம்.ஆர்.வெங்கட்ராமன் ,கே.முத்தையா போன்ற மார்க்சிஸ்ட் தலைவர்கள் .வாலிபர் சங்கத்தில் நான் பணியாற்றத் துவங்கிய போது என் உரைகளில் பகுத்தறிவு வாதம் தூக்கலாக இருக்கும் . அதனால் ஒரு சாராரின் கடும் விமர்சனத்துக்கு ஆளான போது என்னைத் தட்டிக்கொடுத்து தொடர்ந்து அப்படிப் பேச ஊக்கமளித்தவர்கள் அவர்கள் . மநுதர்மத்தை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையை தீக்கதிரில் வெளியிடச் செய்து என்னை அங்கீகரிக்கச் செய்தவர்கள் .

 

அரசியல் களத்தில் பெரியாரும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து பணியாற்றிய நிகழ்வுகளும் உண்டு ; முரண்பட்டு மோதிய நிகழ்வுகளும் உண்டு . தங்கள் நூலில் 95 ஆம் பக்கத்தில் அப்படி ஒரு நிகழ்வைச் சுட்டி இருக்கிறீர்கள் .இப்படி நிறையச் சொல்லலாம். இன்று பொது தளத்தில் பாசிசத்தை வீழ்த்த இணைந்து செயல்பட வேண்டிய காலகட்டம் . இதனை உணராத மதி கெட்ட சிலர் எதை எதையோ உளறித் திரியலாம் . ஆயினும் காந்தி ,அம்பேத்கர் ,நேரு ,பெரியார் போன்ற ஆளுமைகளை மறுவாசிப்பு செய்து ஜனநாயகப் போரில் துணைகோடல் அவசியத் தேவை .அதற்கு உங்கள் நூலும் உதவும். நம் கட்சியிலும் உள்ள தோழர்கள் உங்கள் நூலைப் படித்தல் அவசியம்.

 

இந்து வேறு ,இந்துத்துத்துவா வேறு ,மதநம்பிக்கை வேறு மதவெறி வேறு என பாசிச எதிர்ப்பு அணிதிரட்டலில் புரிதல் மேலோங்கி வருதல் போல பார்ப்பனிய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பல்ல ; பார்ப்பனிய எதிர்ப்பே இந்துத்துத்துவ எதிர்ப்பின் குவிமையம் என்கிற புரிதல் மேம்பட உங்கள் நூல் போல் நிறைய வர வேண்டும்.

 

வாழ்த்துகள்,

 

தோழன்,

சுபொஅ.

10/02/24.


0 comments :

Post a Comment