பழங்கதை பேசுவதுபோல் புவிக்கதை...
பழங்கதை பேசுவதுபோல்
புவிக்கதையை பேசும் புத்தகமே நிர்மல் எழுதிய ‘நிலமும் பொழுதும்’. இந்த பூமிக்கோளம்
எப்படி எப்போது உருவானது என்பது குறித்த அறிவியலின் வளர்ச்சி வரலாற்றோடு புவியியல்
வரலாற்றைச் சொல்லும் நூல். வாசிக்க வேண்டிய புத்தகமே ! நிர்மலின் இரண்டாவது புத்தகம்
இது . ‘காணாமல்போன தேசங்கள்’ இவரின் முதல் புத்தகம் . வேதியல் படித்தவர் .சுற்றுச்சூழல்
வல்லுநர்.
“ நம்மைத் தாங்கும்
பூமியை வழிபடுவதைக் காட்டிலும் அதை இன்னும் தீவிரமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.” என்கிற
நூலாசிரியரின் பார்வை மிகச் சரியானதே .ஆதியில் பல்வேறு நாடுகளில் மதங்களில் சொல்லப்பட்ட
, பூமியை கடவுள் படைத்த பதினோரு கதைகளைச் சொல்லும் போதே இதனை எப்படி மறுக்கப் போகிறார்
என்கிற கேள்வி எழுகிறது .தொடர்ந்து புவியில் அறிவியலாய் வளர்ந்த வரலாற்று செய்திகளூடே
பழைய கதையாடல்கள் மெல்ல உதிர்வதை சொல்லிவிடுகிறார் .
தோழர் எஸ் ஏ பெருமாள்
வகுப்பை கேட்பதுபோல் பொதுவாக உணர்ந்தேன் . தன் பரந்த வாசிப்பு மூலம் துல்லியமான தகவல்களைத்
தேடித் தொகுக்கவும் முனைந்திருக்கிறார் நிர்மல் . எளிமையாகச் சொல்ல வேண்டும் என்கிற
எத்தனம் நூல்நெடுக பார்க்கலாம்.
இந்த பூமியின்
வயது 460 கோடி ஆண்டுகள் என மொட்டையாகச் சொல்லாமல் அதனை எவ்வாறு கண்டடைந்தோம் என்கிற
அறியலின் அடிப்படையையும் சொல்கிறார் . அது நம் பார்வையை விசாலமாக்கும் .
“என்னடா உங்க அறிவியல் ? நேற்றுச் சொன்னதை இன்று
மறுக்கும் “ என ஆன்மீகவாதிகள் கிண்டலடிப்பது உண்டு . புவியைப் பற்றிய ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
முந்தைய தவறுகளைக் களைந்து உண்மையை நோக்கி பயணிப்பதை படிப்படியாக இந்நூலில் சொல்லிச்
செல்கிறார் .
ஆனமீகம் வறட்டுத்
தனமாய் தன் பழைய கோட்பாட்டை கிளிப்பிள்ளைபோல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிறுத்துவ
பாதிரிகள் சிலர் ஆய்வில் இறங்கியதையும் ,தங்கள் மதக் கோட்பாட்டை நிரூபிக்க இறங்கி உண்மையை
நெருங்கியதையும் சொல்கிறார் .
எப்படி புதிய கண்டுபிடிப்புகள்
புதிய பார்வையைக் கொண்டு வந்தன என்பதையும் சுட்டுகிறார் .தான் மேலோட்டமாகச் சொல்லுவதாகச்
சொன்னாலும் இந்நூலில் நிறைய தகவல்கள் அடுக்கி இருக்கிறார் .
இந்த புவிக்கோளம்
ஐந்து பேரழிவுகளைத் தாண்டி வந்திருப்பதையும் இன்னொரு பேரழிவை விரைவு படுத்துவதும் அல்லது
தடுத்து நிறுத்துவதும் மனிதர்கள் கையில்தான் இருக்கிறது .இது ‘மனிதர்களின் ஆளுமைக்காலம்’
என்கிறார் நூலாசிரியர் .
ஆசிரியரின் தமிழ்
மண் மீதான பற்று நூல்நெடுக வெளிப்படுகிறது . அதில் உண்மையும் உண்டு ; மிகையும் உண்டு
. அறிவியலால் மட்டுமே பேரழிவைத் தடுக்க முடியாது என்கிற நூலாசிரியர் மதங்களும் கோட்பாடுகளும்
இந்த உண்மையைப் புரிந்து வழிகாட்டுவதன் மூலமே சாத்தியமாகும் என கடைசியில் திடுதிப்பென
எவ்வாறு முடிவுக்கு வந்தார் ? கேள்வி எழுகிறது
.
நிலமும் பொழுதும்
ஆசிரியர் : நிர்மல்
எழுத்து பிரசுரம்.
பக்கங்கள் :
212 . விலை : ரூ.260 /
சு.பொ.அகத்தியலிங்கம்.
5/11/2021.
0 comments :
Post a Comment