தன்மானம் மிக்க மக்களின் நிலம்

Posted by அகத்தீ Labels:

 


தன்மானம் மிக்க மக்களின் நிலம்  

 

 தன்மானம் மிக்க மக்களின் நிலம்” என ஓர் நாட்டிற்கு பெயர் இருக்க முடியுமா ?

 

மேற்கு ஆப்ரிக்காவில் தற்போது இருக்கிறது என்பதே அதன் பதில் .

 

1895-96 களில் மோசி பேரரசரை [ மோங்கோ நபா ] விரட்டியடித்து வாகாடூகாவை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் கைப்பற்றியது . போபோ ,சார்னோ ,லூபி ,குகரூன்சி ,கோர்மாஞ் ,பெல்த் ,துவெரெக் போன்ற இனக்குழுக்களை பணிய வைக்க பிரான்ஸ் பல ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது . 1919 ல் மொத்த பகுதிகளையும் இணைத்து “ ஹூட் வோட்டா” / “ அப்பர் வோட்டா” என்ற ஓர் நாட்டை அதிகாரபூர்வமாக உருவாக்கியது பிரெஞ்சு ஏகாதிபத்தியம்.

 

ஏகாதிபத்தியத்தால் ஒரு நாடக்கப்பட்ட இப்பகுதியில் பல பழங்குடி இனத்தவர் , அறுபதுக்கும் மேற்பட்ட மொழிகள் ,இஸ்லாம் ,கிருத்துவம் ,பூர்வகுடி சமயங்கள் என வேற்றுமைகள் மலிந்த நாடு .பிரெஞ்சு ஆதிக்கத்தால் பிரெஞ்சு மொழி இவர்கள் மீது திணிக்கப்பட்டு பொதுமொழி தோற்றம் கொடுத்தது .மேல்தட்டு மக்கள் மொழியாகவே அது இருந்தது .

 

1981 செப்டம்பர் 13 அன்று ஒரு ராணுவப் புரட்சி மூலம் தாமஸ் சங்காரா பதவிக்கு வந்தார் . அவர் தங்களது நிலப்பகுதிக்கு புதிய பெயர் சூட்ட நினைத்தார் .

 

 “ புதிய அரசின் அடையாளம் பன்முகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள் . பிரெஞ்சுக்காரர்கள் தங்களுக்கு கொடுத்த ஹூட் வோட்டா என்ற பெயருக்கு மாற்றாக தங்கள் மக்கள் சார்ந்து ,ஆப்ரிக்க அடையாளம் சார்ந்து தங்கள் நாட்டின் பெயர் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். இரண்டாவதாக நாட்டில் உள்ள பலதரப்பட்ட இனங்களின் பண்பை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள் . எனவே பர்கினா ஃபாசோ எனும் பெயர் பலமொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டது .

 

அதன் அர்த்தத்தைப் பொதுவாக மொழிபெயர்த்தால் ‘ தன்மானமிக்க மக்களின் நிலம்’ எனப் பொருள்வரும். இதில் பர்கினா என்ற வார்த்தை மோர் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது . அது மோசி மக்கள் பேசுவது . அந்த மொழியில் ‘பர்கினா’ என்ற சொல்லின் அர்த்தம் ‘தகுதியான மக்கள்’ அல்லது ‘கண்ணியமிக்க மக்கள்’ என்பதாகும்.  ‘ஃபாசோ’ என்ற வார்த்தை ஜூலா என்ற மொழியில் இருந்து எடுக்கப்பட்டது . இதன் பொருள் ‘வீடு’ அல்லது ‘குடியரசு’ எனப்படும் . [ அந்நாட்டு மக்களை  ‘பார்க்கினபே’ என அழைக்கலாயினர்] இந்த பார்க்கினபேயில் வரும் ‘பே’ எனும் விகுதி ஃபுல்ஃபுல்டெ மொழியில் இருந்து எடுக்கப்பட்டது.அது பெல்த் மக்களின் மொழியாகும் .”

 

1884 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்பெயர் சூட்டப்பட்டது . அப்போதைய பிரதமர் தாமஸ் சங்காரா இதனைச் சாதித்தார்.

 

இங்கே நம் நாட்டில்  “இந்திய ஒன்றியம்” என அரசமைப்பு சட்டத்தில் உள்ள பெயரைச் சொன்னாலே சங்கிகளுக்கு வயிறு எரிகிறது .வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள் . பல மொழி பல இனம் கொண்ட நம் நாட்டில் எல்லா திட்டங்களுக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டப்படுவதும் எல்லா துறையையும் அதன் அலுவலகங்களையும் சமஸ்கிருதத்திலேயே அழைப்பதும் எவ்வளவு அநீதியானது யோசித்துப் பாருங்கள் .சுழற்சி முறையில் ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒவ்வொரு மொழியில் பெயர் வைக்க வேண்டும் என்கிற பரந்த இதயமும் ஜனநாயக உணர்வும் இல்லாத முரட்டுப் பக்தர்களிடம் நாடு சிக்கிக்கொண்டிருக்கிறது .பர்கினா ஃபாசோ என்கிற ஒரு குட்டி நாட்டிற்கு இருக்கும் இதயம்கூட இங்கே இல்லையே !

 

நாட்டிற்கு புதிய பெயர் சூட்டியது மட்டுமல்ல ; மொழிப் பிரச்சனையிலும் ,பன்முகப் பண்பாட்டை ஏற்று எதிர்கொள்வதிலும் சங்காராவின் பரந்த பார்வையும் அணுகும்றையும்கூட நாம் அறிய வேண்டிய - பாடம் படிக்க வேண்டிய செய்தியே . நூலைப் படித்து அறிவீர் .

 

தாமஸ் சங்காரா என அழைக்கப்படும் தாமஸ் இசிடோர் நூயல் வோட்ரா [பின்னர் வோட்ரா  என்பதை சங்காரா என மாற்றிக்கொண்டார் அவர் தந்தை எனவே இவரோடும் சங்காரா ஒட்டிக்கொண்டது.] 1987 அக்டோபர் 15 ஆம் நாள் , 39 வயதில் சங்காரா கொல்லப்பட்டார் . கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் மட்டுமே பதவில் இருந்த சங்காரா மக்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார் .

 

இவர் ஆட்சிகாலமும் இவரது முற்போக்கான மக்கள் நலன் சார்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் செயல்பாடுகளும் இன்றும் நாம் கற்க வேண்டியவையே ! அதே சமயம் தேர்தல் ஜனநாயகம் குறித்த பார்வையின் போதாமை , கெடுபிடி ,கறாறர் தன்மை எல்லாம் எதிரிக்கு இடம் கொடுத்தது .

 

அ.சி.விஜிதரன் தொகுத்து மொழிபெயர்த்திருக்கிற “ தாமஸ் சங்காரா வாழ்வும் பணியும்” என்கிற 430 பக்க நூல் இதனை விரிவாக பேசுகிறது .இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் . நான் மார்ச் 5 ,2020 ல் சென்னைப் புத்தகக் காட்சியில் அவரிடம் பெற்றேன் . எப்படியோ என் புத்தக அடுக்கின் அடியில் சிக்கி இப்போதுதான் படித்தேன் . தாமதமாயினும் படிதுத்துவிட்டது மனநிறைவைத் தருகிறது .சிந்தன் புக்ஸ் வெளியீடு .விலை.ரூ.450/

 

சங்காரா இடதுசாரி சிந்தனை உள்ளவர் . லெனினின்  ‘அரசும் புரட்சியும்’ நூலை பெரிதும் வழிக்காட்டியாகக் கொண்டவர்  அவரின் பொருளாதாரக் கொள்கை எதுவென அமெரிக்கப் பத்திரிகையாளர் கேட்டார் .அவர் நிலச்சீர்திருத்தம் ,தொழில்மயமாதல் என்றெல்லாம் சொல்லுவார் என எதிர்பார்த்தார் .

 

அவரோ , “ நாங்கள் பாசனத்திற்கு அணைகள் கட்டுவதன் மூலம் இன்னும் அதிகமாக உணவு உற்பத்தி செய்ய இயலும், மேலும் பள்ளிகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் கட்டுவோம் .நாட்டில் ஆங்காங்கு சிறிய கடைகள் அமைத்து மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வோம். எங்கள் நாட்டின் மக்கள் சக்தியைப் பயன்படுத்தி நாட்டில் இருவேளை உணவும் குடிக்க நல்ல குடிநீரும் கிடைக்கச் செய்வோம் .இதுதான் எங்கள் பொருளாதாரக் கனவுகள்.” என்றார். மண்ணுக் கேற்ப செதுக்குப்படுவதுதானே மார்க்சியம்.

 

இந்நூலில் அவர் உரைகள் ,பேட்டிகள் பல இடம் பெற்றுள்ளன . எல்லாவற்றையும் இங்கு பேச இடமில்லை .படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் .

 

ஒன்று கடன் குறித்து அவர் ஆற்றிய உரை முக்கியமானது . உலக வங்கி திணித்த கடனை ,” இந்தக் கடனுக்கும் நமக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை .அதனால்தான் அதைத் திருப்பிச் செலுத்த முடியாது என்கிறோம்…….

கடன் பிரச்சனையை நாம் அறநெறிக் கொள்கையாக நாம் பார்க்கக்கூடாது . கடனை திருப்பிச் செலுத்துதல் அல்லது செலுத்தாமல் இருப்பது மானம் சார்ந்த பிரச்சனையே அல்ல…..

நாம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது .ஏனென்றால் அதில் நமக்கு எந்தப் பங்கும் இல்லை . நாம் திருப்பிச் செலுத்த முடியாது ஏனென்றால் அதில் நமது பொறுப்பு என்று ஒன்றும் இல்லை . நாம் திருப்பிச் செலுத்த முடியாது ஏனென்றால் ,பெரும் செல்வத்தில் கொழித்துக் கொண்டிருக்கும் அவர்கள் நமக்கு திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு பெரும் கடனைக் கொண்டிருக்கிறார்கள். இரத்தக் கடன் அது . நாம் சிந்திய இரத்தத்தின் கடன் அது .அவர்கள் கொழுத்துப்போன கடன் அது.”

 

தான்சானிய பிரதமர் ஜூலியஸ் நைரேரேவும் இதுபோல் சர்வதேச நிதி நிறுவனக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என நிலை எடுத்தவர் என்பதை இங்கு நிலை எடுத்தவர் .

 

தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலைக்காக பெருங்குரல் கொடுத்தவர் சங்காரா. தன் நாட்டு குடிஉரிமையை அவருக்கு வழங்கி முழக்கமிட்டவர் .காஸ்ட்ரோவோடு நட்பு பாராட்டியவர் . “ கருத்துகளை உங்களால் கொல்ல முடியாது “ என சே குவேரா நினைவஞ்சலியில் முழக்க மிட்டவர் .ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஊறியவர் . அவர் ஏகாதிபத்தியம் குறித்து இண்டர்காண்டினெண்டல் பிரஸ்ஸுக்கு அளித்த நேர்காணலில் சொல்கிறார் ;

 

“ உங்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஏகாதிபத்தியம் என்பதை நான் கோட்பாடாக மட்டுமே புரிந்து வைத்திருந்தேன் . அதிகாரத்தில் அமர்ந்த பின்பே எனக்குத் தெரியாத ஏகாதிபத்தியத்தின் உண்மையான பல தன்மைகளை அறிந்து கொண்டேன். ஏகாதிபத்தியம் பற்றி நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் .இன்னும் அதன் தன்மைகள் பலவற்றைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன்.கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது .

 

நடைமுறையில் ஏகாதிபத்தியம் ஒரு கொடூர விலங்கு .அந்த கொடூரமான விலங்கு நகங்கள் ,பெரும் கொம்பு , நச்சுப்பல் என எல்லாவற்றையும் கொண்டு தாக்குகிறது .அதற்கு இரக்கமே இல்லை. அதன் விஷம் அத்தனை வீரியமானது . அதை ஒரு வீராவேசப் பேச்சின் மூலமாக நடுங்கச் செய்துவிட முடியாது .அதற்கு இதயம் இல்லை .அதற்கு மனச்சாட்சி என்பதே இல்லை .

 

ஒரு நல்ல விசயம் என்னவென்றால் , ஏகாதிபத்தியம் எந்த அளவுக்கு ஆபத்தானது என்று நாங்கள் கண்டுபிடிக்க ,கண்டுபிடிக்க இன்னும் அதை எதிர்த்துப் போராடி அதை வீழ்த்த வேண்டும் என்று மட்டும் எங்களுக்குத் தோன்றுகிறது . அதை எதிர்க்கும் ஒவ்வொரு முறையும் அதற்கு ஆதரவாக புதிய சக்திகள் இருப்பதை நீங்கள் காணலாம்.”

 

சங்காரா ஏன் கொல்லப்பட்டார் யாரால் கொல்லப்பட்டார் என்பதற்கு இந்த நெடிய மேற்கோள்களே பதில் சொல்லுமே !

 

நூலாசிரியர் சங்காரா படுகொலை நிகழ்வைச் சொல்கிறார் .ஆயின் அதன் பின்னாலுள்ள ஏகாதிபத்திய கொடுங்கரங்களை இன்னும் வலுவாகச் சொல்லியிருக்கலாமோ என என்னக்குத் தோன்றுகிறது .

 

சிறந்த தொகுப்பு .சிறந்த மொழியாக்கம் . எழில்மிகு பதிப்பு . காலங்கடந்து தமிழில் வந்தாலும் தேவையான அறிவாயுதமே ! பாடம் படிக்க  செய்திகள் நிறைந்த நூல். ஐயமில்லை.

 

நூலைப் பெற : 94451 23164 / kmcomrade@gmail.com

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

13/10/2021.

0 comments :

Post a Comment