தேவை ஒரு பதவி , ஒரு விசிடிங் கார்டு …????
அரசியலில் பலருக்கு ஏதோ ஒருவித ஆர்வம் பொதுவாய் இருக்கும் அதனாலேயே அவரவர் ஏதோ ஓர் கட்சியின் உறுப்பினராக இருப்பார் என்பது பொருளல்ல ; அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை .
சிலர் ஏதேனும் ஓர் கட்சியில் தீவிரமாய் அல்லது சாதரணமாய்ச் செயல்படத் துவங்குவர் அதற்கு அக்கட்சியின் கொள்கை ஈர்ப்பு / அக்கட்சி தலைமை மீதான நம்பிக்கை / மதம் ,சாதி ,இனம் ஏதோ ஒன்றின் மீதான பற்று / உள்ளூர் விரோத குரோத எதிர்நிலை என ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம் .
கொள்கை சார்ந்து படித்து , விவாதித்து, போராட்டங்களில் ஈடுபட்டு புடம்போட்டு வார்க்கப்படுகிற லட்சியவாத அரசியல்வாதிகளும் உண்டு . எண்ணிக்கையில் குறைவாயினும் இவர்களின் தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்திருக்கிறது.
யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்களுக்கும் ஊருக்கு இரண்டு பேர் கிடைத்து விடுகிறார்களே எப்படி ? சாதி அல்லது உபசாதி இப்படி ஏதேனும் தொடர்பு ஒரு காரணம் ; ஆயின் அதுமட்டுமல்ல.
இளைஞர்களில் ஒரு மிக மிகச் சிறு பகுதியினர் வெகுசீக்கிரம் செல்வாக்கு பெற வேண்டும் , செல்வம் ஈட்ட வேண்டும் என அவசரப் படுகின்றனர் . அவர்கள் ஏற்கெனவே வேர்விட்ட கட்சிகளில் சேர்ந்து பொறுப்புகளைப் பெறுவது மிகச் சிரமம் .
தாங்கள் போலிஸ் ஸ்டேசன் . அரசு அலுவலகம் இவற்றோடு தொடர்பு கொள்ளவும் , கட்டை பஞ்சாயத்துகள் ,கமிஷன் பேரங்கள் செய்யவும் ஒரு விசிட்டிங் கார்டு தேவை .தன் லெட்டர் ஹெட்டில் ஒரு பதவி தேவை ,வாகனத்துக்கு ஒரு கொடி தேவை ,இவை அவருக்கு செல்வாக்கையும் செல்வத்தையும் கொண்டுவர ஒரு வழி .
ஆகவேதான் அதற்கேற்ப சில கட்சிகளை தேர்ந்தெடுத்து சேர்கின்றனர் .தமிழகம் நெடுக்க இது போன்றோரைக் காணலாம். இது பழைய பாணி .
இப்போது இப்படி கட்டை பஞ்சாயத்து , போலிஸுக்கும் அரசு அலுவலகங்களிலும் கமிஷன் ஏஜெண்டு ,ரவுடித்தனம் ,இப்படி இருப்போரின் சாதி ,உபசாதி எல்லாம் கணக்கிட்டு தம் கட்சியில் சேர்த்துக் கொள்ள பாஜக தீவிரமாக முயற்சிக்கிறது . அதற்காக பணத்தை வாரி இறைக்கிறது .அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டியும் வழிக்கு கொணர்கிறது .
மறுபுறம் உயர் அதிகாரிகள் ,பேராசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பலவீனங்களை சரியாக அறிந்து அதை கையில் எடுத்து பேசியும் ஆசைவார்த்த்தை காட்டியும் மிரட்டியும் பாஜகவில் சேர்க்க முயற்சிக்கின்றனர் .
சமூகநீதி ,சமத்துவம் , ஒடுக்கப்பட்டோர் உழைக்கும் மக்கள் நலம் விரும்புவோர் அரசியல் களத்தில் இன்னும் நுட்பமாக - இன்னும் பரவலாக - இன்னும் ஆழமாக - இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டியதையே இச்சூழல் உரக்கச் சொல்கிறது .
சுபொஅ.
0 comments :
Post a Comment