மறப்பதற்கும் ஓர் அரசியல் உண்டு

Posted by அகத்தீ Labels:








சோமநாதர் ஆலயத்தில் கொள்ளைய டிக்கப்பட்ட கடவுள் திருவுரு சிவனா ? ஆணா ? பெண்ணா ? மனத் என்கிற பெண் தெய்வமா? கோயில் கொள்ளையடிக்கப்பட்ட போது எப்படி இருந்தது? பின்னர் கற்பனையில் பல முறை மாற்றி மாற்றி பிரம்மாண்டமாக்கியது ஏன் ? எப்படி ? இடிக்கப்பட்ட காலத்திலும் அதைத் தொடர்ந்த ஆண்டுகளிலும் மக்கள் மனதில் என்ன பதியப்பட்டிருந்தது? அன்றைய வரலாற்றுப் பதிவுகளும் புனைவுகளும் சொல்வதென்ன? ஒவ்வொன்றையும் உள் நுழைந்து தேடித் தேடி பல்வேறு குரல்களை அதில் இனங்கண்டு ஆசிரியர் ரொமிலா தாப்பர் சொல்லியிருக்கிறார்.



மறப்பதற்கும் ஓர் அரசியல் உண்டு


சோமநாதர்வரலாற்றின் பல குரல்கள்,ஆசிரியர் : ரொமிலா தாப்பர், தமிழில்கமலாலயன்,

வெளியீடு :  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்.,41 – பி .சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட் ,
அம்பத்தூர், சென்னை – 600 098.

பக்கங்கள்:328  விலை : ரூ.300/-


 ஒரு நினைவை உருவாக்கும் போது, அந்த விஷயம் கடந்த காலத்தில் உண்மை யில் நடந்ததாகக் கோரப்படும். இந்த ஞாபகப்படுத்தல் நாணயத்தின் மறுபக்கம். எது மறக்கப்பட வேண்டுமோ அது நினைவில் வராமல் பார்த்துக் கொள்வது. ஞாபகப்படுத்த லுக்கு ஓர் அரசியல் இருப்பதைப் போலவே மறப்பதற்கும் ஓர் அரசியல் உண்டு.” என்பதை மிகச் சரியாக உணர்த்துகிறநூல்.

சோமநாதர் ஆலயத்தைக் கொள்ளையடிக்க கஜினி  பதினெட்டு முறை படை எடுத்தான் என திரும்பத் திரும்பச் சொல்லி இந்துமுஸ்லீம் பகை உணர்வை பொதுபுத்தியில் ஊட்டிவிட்டா ர்கள். ஆனால் வரலாற்றின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகள் என்ன? விருப்பு வெறுப்பு இன்றி ஆய்ந்து ஆதாரங்களோடு சிந்தனையை உசுப்பும் பல செய்திகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார் ரொமிலா தாப்பர்.

கஜினி  படை எடுப்புக்கு முன்னும் பின்னும் பல முறை சோமநாதர் ஆலயம் தாக்கப்பட்டி ருக்கிறது. கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது; அதுவும் இந்து மன்னர்களால்.   இப்படிக் கோயிலைக் கொள்ளை அடிப்பதில் பெயர் போனவர் காஷ்மீர் இந்து மகாராஜா ஹர்ஷதேவர். அவர் ஆட்சியில் கோயில் கொள்ளைக்கு  “தேவோத்பட்னாகர்கள்என்கிற அதிகாரி படையே நியமிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்திகள் எத்தனை பேருக்குத் தெரியும் ? மறக்கடிப்பின் அரசியல் அல்லவா அது!

சோமநாதர் ஆலயத்தில் கொள்ளைய டிக்கப்பட்ட கடவுள் திருவுரு சிவனா ? ஆணா ? பெண்ணா ? மனத் என்கிற பெண் தெய்வமா? கோயில் கொள்ளையடிக்கப்பட்ட போது எப்படி இருந்தது? பின்னர் கற்பனையில் பல முறை மாற்றி மாற்றி பிரம்மாண்டமாக்கியது ஏன் ? எப்படி ? இடிக்கப்பட்ட காலத்திலும் அதைத் தொடர்ந்த ஆண்டுகளிலும் மக்கள் மனதில் என்ன பதியப்பட்டிருந்தது? அன்றைய வரலாற்றுப் பதிவுகளும் புனைவுகளும் சொல்வதென்ன? ஒவ்வொன்றையும் உள் நுழைந்து தேடித் தேடி பல்வேறு குரல்களை அதில் இனங்கண்டு ஆசிரியர் ரொமிலா தாப்பர் சொல்லியிருக்கிறார்.

இந்நூல் எட்டு அத்தியாயங்களைக் கொண்டவை.   “பரந்து பட்ட ஆறு மூலத்தரவுகளைப் பற்றியே விவாதிக்கப் போகிறேன்.” என  ஆசிரியர் தெளிவுபடுத்திவிடுகிறார் . “ஆனால், மிக நன்கறியப்பட்டு வந்திருப்பதைப் போல சுல்தான்கஜினிபடை எடுப்புகள் குறித்து எந்த ஒரு தகவலையும்- சம்ஸ்கிருத ஆவணங்கள் நமக்குத் தரவில்லை.ஆகவே அதற்குப் பிறகு தொடர்ச்சியாக வந்திருப்பவை எல்லாம் முற்று முழுதாக முஸ்லீம் வரலாற்றாளர்கள் வாக்கு மூலத்தைச் சார்ந்ததே.” எனக் கூறும் .கே, மஜூம்தாரை தாப்பர் சுட்டுகிறார்.

பிரபாஷா என்ற புனிதத் தலத்தில் எட்டு மனைவியரை ஒரு பிராமணருக்கு தானமாக வழங்கியதை ஒரு ஷத்ரபா அரசனின் மருமக னான உஷாவதத்தாபதிவு செய்திருக்கிறான்.” ஆனால்பிரபாஷாவில் பாசுபத சைவ இனக்குழு வுடன் தொடர்புபடுத்தக்கூடிய  ஒரு கோயில் சிவனுக்கோ, சோமநாதருக்கோ  கி.பி பத்தாம் நூற்றாண்டுக்கு முன் எங்கும் குறிப்பிடப்பட வில்லை.”

 திரிவேணி சங்கமத்தைக் குவிமையமாகக் கொண்ட புனித யாத்திரை ஸ்தலமாக சோமேஸ்வரம் இருந்தது என்பதும்; ஜூனாகத் அரசர் ராக்ரஹாரிபு  பிரபாஷாவுக்கு போகவிடாமல் பக்தர்களைத் தடை செய்த விபரமும்; பக்தர்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவரமும் கூட தெரிகிறது. அதன் பிந்தைய காலகட்டத்தில் சோமநாதரை வழிபட வரி விதிக்கப்பட்டதும்; அது மிகவும் அதிகமாக இருந்ததும் தெரிகிறது. கடல் வணிகம், கடற்கொள்ளை இரண்டுக்கும் பேர்போன நகரமாகவே அது இருந்துள்ளது.வர்த்தகமும் மதமும் அங்கு இணைக்கப்பட்டிருந்தது.”

இது போன்ற வரலாற்று பின்புல ஆய்வோடு முதல் இரு அத்தியாயமும் உள்ளன.

மூன்றாவது அத்தியாயம்  “சோமநாதர் ஆலய இடிப்பு கொள்ளை பற்றிய துருக்கிய பாரசீக விவரணைகளைஅலசுகிறது. முகமது வின் படை எடுப்பை ஆசிரியர் மறுக்கவோ மறைக்கவோ செய்யவில்லை. மாறாக இக்கொள்ளையின் காரணம் மதப் பகைமையா? அதிகாரப் போட்டியா ? செல்வக் கொள்ளையா? என்பதை ஆதாரங்களோடுப் புலானாய்கிறார்

சோம்நாத் என்பது சு.மனத் எனும் பெண் தெய்வத்தின்  குறியீடே . இது மெக்காவில் இருந்த மூன்று பெண் தெய்வங்களில் ஒன்று எனவும்; இரண்டு உடைக்கப்பட்டு விட்டது.இன்னொன்று இங்கு கொண்டுவரப்பட்டு சோம்நாத் ஆக்கப்பட்டது. அதை அழிக்கவே படை எடுப்பு நடந்ததாக ஒரு கதையாடல் உண்டெனக் காட்டுகிறார்.  பாரசீக துருக்கிய விவரணைகளில் கஜினியை ஒரு கதாநாயகனாகச் சித்தரிக்க வழக்கமாக மன்னரைப் புகழ்ந்து பேச அதீத விவரிப்புகள் இடம் பெறுவதுபோல் செய்துள்ளனர். இந்துத்துவாவாதிகள் அதையே ஊதுகின்றனர்.  

சோமநாதாவிலும் அதன் சுற்றுப்புறத்திலும் சமஸ்கிருத சாசனங்கள்என்கிற நாலாவது அத்தியாயம், பிராமணர்களுக்கும் சமணர்க ளுக்கும் சாளுக்கிய மன்னர் வழங்கிய மானியம், சலுகை, இனாம் இவற்றைச் சொல்லு கிறது.கோவாவை ஆண்ட கடம்பர் குல அரசன் சோமநாதர் ஆலயத்தைப் பார்வை யிட்டதை  கி.பி 1038 ஆம் ஆண்டு சாசனம் சொல்கிறது. சோமநாதாவைக் கொள்ளையிடும் உள்ளூர் அப்`ஹிரா ராஜாக்கள், மற்றும் கடற்கொள்ளையர் குறித்து 12 ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னன் குமார பாலா வெளியிட்ட சாசனம் குறிப்பிடுகிறது. சமஸ்கிருத சாசனங்களின் சுல்தானின் ஆட்சி குறித்த நேர்மறையான, எதிர்மறை யான பதிவுகள் உண்டு.ஆயினும் 19 ஆம் நூற்றாண்டில் சிலர் வரைந்து காட்டியது போன்ற மனக்காயமோ கோபமோ சமூகத்தில் இருந்ததை  ஆவணங்கள் நிறுவவே இல்லை.

 “ வாழ்க்கை வரலாறுகள் , காலவரிசைப் படியான வரலாறுகள், காவியங்கள்எனும் நாலாவது அத்தியாயம் சுவையான தகவல் மிகுந்தது. சமணப் பதிவுகள் எதிலும் இந்துமுஸ்லீம் பகைமை காணப்படவில்லை. அராபியர், –பாசுபதர், –சமணர் இவர்களிடையே ஒரு இணக்கமும் வியாபார உறவும் நிலவின. மசூதி கட்ட உதவும் அளவுக்கு இது அமைந்திரு ந்தது. பொதுவான இந்துமுஸ்லீம் பகை எப்போதும் இருக்கவில்லை ,அரபிய முஸ்லீம் உள்ளூரில் நல்லுறவோடும் இணக்கமாகவுமே இருந்துள்ளனர் . ராஜபுத்திரர்துருக்கியர் என குவிமையப்பட்டதே மோதலும் பகையும்.

 மிகப் பெரும் காவியங்களான  ‘பிரித்விராஜ் ரஸோவோ’, ‘பிரத்விராஜ் விஜயாவோசோம்நாதர் ஆலயத்தின் மீது கஜினி படை எடுப்பை சொல்லவே இல்லை .ஹம்மிரா மகாகாவியம் அல் தீன் கால்ஜியுடன் மோதலைச் சித்தரித்தாலும் சக ராஜபுத்திர அரசர்களின் துரோகத்தை அயர்வுதரும் பட்டியலாகத் தருகிறது. முகமது வெற்றி கொள்ள ஆலயத்தின் ரகசிய வழியை மாதவா என்கிற பிராமணரே காட்டிக்கொடுத்த தகவலும் உண்டு. ஆலயம் கட்ட , நிர்வகிக்க,  வணிகர், மன்னர் உதவிகள் வலுவாக இருந்துள்ளன.  கலாச்சார ,அரசியம் ஆதிக்க மையமாகவும், வணிக கேந்திரமாகவும்  கோவில் விளங்கியது விளக்கப்பட்டுள்ளது .

 “இன்னும் மற்றவர்களின் கண்ணோட்டம்எனும் ஆறாவது அத்தியாயம், சமூகத்தின் அடிநீரோட்டமாய் விளங்கிய நல்லிணக்கம் குறித்த விபரங்களைத் தருகிறது. பாஹ்ராய்ச்சில் உள்ள காஜிமியான் கல்லறை பதினான்காம் நூற்றாண்டு முதலே பெரும் எண்ணிக்கையிலான இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் புனிதத்தலமாய் விளங்கி இருக்கிறது. சூஃபி மரபு, புராணிக மரபு, ஷாக்த மரபு, பீர், ஃபக்கீர், வாலி, சாது, குரு, சித்தர் இவற்றின் வடிவமாகவும் அவர் கருதப்படு கிறார்

 “காலனிய விளக்கங்களும் தேசியவாத எதிர்வினைகளும்என்கிற ஏழாவது அத்தியாய மும் , “நினைவுகளைக் கட்டமைத்து வரலாறு எழுதுதல்என்கிற நிறைவு அத்தியாயமும் நாம் இங்கு முதல் பத்தியில் குறிப்பிட்டதை நிறுவுகிறது.  பிரிட்டிஷார் தங்களை யோக்கியர்களாக் காட்டிக்கொள்ள இந்திய வரலாற்றை இந்துகாலகட்ட வரலாறு, இஸ்லாமிய காலகட்ட  வரலாறு, பிரிட்டிஷ் கால வரலாறு என பகுத்து அதில் முஸ்லீம் கொடுங்கோன்மை என்கிற கதையாடலை நுட்பமாகச் செய்தனர் .

 எல்லன்பரோ என்பவர் சோமநாதர் ஆலயம் தாக்குதல் குறித்து அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டைகள் அதிகம் . சோமநாதர் ஆலய நெடுங்கதவு களவாடப்பட்டதாக ஒரு புனைவு மெய்போல் பேசப்பட்டது . கடைசிவரை அது புனைவுதான் .பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அது வெறும் கட்டுக்கதை என நிறுவி யுள்ளார்

இருபதாம் நூற்றாண்டில் தேசிய அரசியல்வாதிகளின் நடுவே கே.எம்.முன்ஷி எழுதிய குஜராத் வரலாறும் , அவரின் வரலாற்று நாவல்களும் எல்லன்பரோவின் புளுகை மேலும் ஊதி பகையை விசுறிவிட்டன. அவருக்கு கிடைத்த அமைச்சர் பதவியும் இதற்கே பயன்பட்டது. இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவராகவும் இருந்துள்ளார் .

விடுதலைக்குப் பின் சோமநாதர் ஆலயத்தை மறுகட்டுமானம் செய்யும் நிகழ்வு அரசியலாக்கப்பட்டது. அரசு கோவில் கட்டுமானத்தில் ஈடுபடக்கூடாதென நேரு கூறியதும், ராஜேந்திரபிரசாத், பட்டேல் போன்றோர் அதற்கு எதிர் நிலைபாடு எடுத்ததும் கடந்து போகிற வெறும் செய்தி அல்லபின்னர் பாபர் மசூதி தகர்ப்பிற்கும் இன்றைய பாசிச பாஜக பேயாட்டத்துக்கும் விதை ஆனது அந்நிகழ்வு .

ஒரு குறிப்பிட்ட புள்ளியில் பத்தொன்ப தாம் நூற்றாண்டில்கடந்த கால மனக்காய த்தின் நினைவுசீராக ஒற்றைத் தன்மை கொண்ட தாக உருவாக்கப்படுகிறதுகடந்த கால நினைவின் மீது பூசப்பட்ட மதச்சாயத்தைக் கட்டு டைத்துப் பார்த்துள்ள இந்நூல் சோமநாதர் ஆலயம் தொடர்பான பல குரலைப் பதிவு செய்துள்ளது; ஒற்றைக் குரல் எவ்வளவு ஆபத்தானது என்பது வரலாறு நமக்கு சொல்லும் பாடம்.  
மிகச் செறிவான நூலை சிக்கல் சிடுக்கில்லா மொழிநடையில் நமக்குத் தந்த கமலாலயன் மிகவும் பாராட்டுக்குரியவர் .

களச் செயல்பாட்டாளர்கள் கற்றுத் தெளிய வேண்டியகை ஆயுதமாகும் இந்நூல் 2004ல் ஆங்கிலத்தில் வெளிவந்தது . 2017 ல் தமிழில் வெளிவந்தது.  தாமதமாக இப்போதுதான்  படித்தேன் , இப்போது முன்னிலும் அதிகம் தேவைப்படும் நூல் என்பதில் ஐயமில்லை.


சு.பொ.அகத்தியலிங்கம் .

நன்றி : புத்தக மேசை ,தீக்கதிர் , 7/10.2019.


0 comments :

Post a Comment