உத்தாலகர் ,யக்ஞவல்லியர் : இந்திய தத்துவ மரபு

Posted by அகத்தீ Labels:





“தத்துவத்தின் தொடக்கங்கள்” எனும் நூல் மெய்யாகவே தத்துவத்தின் அறிமுகமாகவும், இந்திய சிந்தனை மரபின் அறிமுகமாகவும் இரண்டு பணிகளை ஒரே நேரத்தில் செய்திருக்கிறது .




தத்துவத்தின் தொடக்கங்கள்


ஆசிரியர் : தேவிபிரசாத்சட்டோபாத்யாயா ,தமிழில் : இரா.சிசுபாலன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்7, இளங்கோசாலை தேனாம்பேட்டை,
சென்னை 600 018.
பக்கங்கள் : 182 , விலை : ரூ.165/

தொ.பேசி: 044 -24332924

பக் : 182 விலை : 165/-

உத்தாலகர் ,யக்ஞவல்லியர் : இந்திய தத்துவ மரபு

 நல்மனது புறந்தள்ளப்பட்டு கொடூரமும் ,அன்பின் இடத்தில் வக்கிரமும் ,தாராளஎண்ணத்தின் இடத்தில் வெட்கமற்ற பேராசையும் இடம் பிடித்துள்ளன.முன்னேற்றத்தின் பாதையை சமைக்க வல்லதான விழுமியங்களும் பகுத்தறிவும் மூடுண்டு போயுள்ளன . தத்துவம் மட்டும்தானே இதற்கான முறிமருந்தாக இருக்கவியலும் என்பது நம்முடைய வாதமல்ல . ஆனால் தத்துவத்தின் உதவியின்றி  இவைஅப்புறப்படுத்தப்பட்டு ஆரோக்கியமான எண்ணங்கள் நிலவ வழிவகுப்பது இயலாது என்பதே நாம் கூறுவது.” என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா . 1990 ல் அவர் கூறியது 2019 ல் மேலும் வலிமையாக ஒலிக்கிறது .ஏனெனின் காலத்தின் தேவை அப்படி .

அவர் இந்திய தத்துவ சாகரத்தில் மூழ்கி முக்குளித்து முத்துக்களை எடுத்தளித்தவர் . ஆன்மீகமே அதாவது கருத்து முதல் வாதமே இந்திய சிந்தனை மரபு  என கூறிவந்த பொய்மையை உடைத்து இந்திய சிந்தனை மரபின் வேராக இருப்பது பகுத்தறிவே அதாவது பொருள்முதல் வாதமே  என்பதை அலசி ஆய்ந்து நிறுவியவர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா.

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய பல நூல்கள் ஏற்கெனவே தமிழில் வெளிவந்து தத்துவ ஆர்வலர்களை ஈர்த்திருக்கிறது . அவரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி , தத்துவத்தின் தொடக்கங்கள் , தத்துவமும் எதிர்காலம் ஆகிய இரு நூல்களை இரா.சிசுபாலன் மொழியாக்கத்தில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது .

 “தத்துவத்தின் தொடக்கங்கள்” எனும் நூல் மெய்யாகவே தத்துவத்தின் அறிமுகமாகவும், இந்திய சிந்தனை மரபின் அறிமுகமாகவும் இரண்டு பணிகளை ஒரே நேரத்தில் செய்திருக்கிறது .

 பல்வேறு கட்டங்களில் ,பல்வேறு வழி முறைகளில் நேர்முறையாகவோ ,எதிர்மறையாகவோ பங்களிப்பு செய்த உலகத் தத்துவத்தின் மைய நீரோட்டத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இந்நூலின் நோக்கம்.” என முதல் பத்தியில் நூலாசிரியர் எழுதியுள்ளது வெறும் வார்த்தை அல்ல உண்மை என்பதை இந்நூல் நிறுவியுள்ளது .

தத்துவம் என்றால் என்ன ? பல்வேறு விலங்கினங்களோடு ஒப்பிடுகையில் மனிதரே மிகவும் பலவீனமான உடலுறுப்புகளை கொண்டிருந்த போதிலும் அழியாமல் மேலாண்மை அடைந்தது எப்படி ? செயல் ,சிந்தனை ,பேச்சு எப்படி உருவானது ? பேச்சு மொழி உருவானதின் தேவையும் பலனும் என்ன ? தத்துவம் தோன்றுவதற்கு முந்தையச் சூழல் எப்படி இருந்தது ? முதல் 27 பக்கங்களில் இதற்கான சுருக்கமான ஆனால் எளிதான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

 உணவு சேகரிப்பிலிருந்து உணவு தயாரிப்புக்கு மனித குலம் மாறிய போது,எப்படி உபரிக்கு வழி ஏற்பட்டது ,தத்துவம் வேர்பிடிக்க நகர்மயப் புரட்சி எப்படி உதவியது ? ஆதி மாயவித்தைக்கும் பின்னர் தோன்றிய மதத்திற்கும் இடையிலான பரஸ்பர உறவு எத்தகையது ? கங்கை சமவெளியில் தத்துவம் தழைக்க உகந்த சூழல் நிலவியது எப்படி ? இது போன்ற சில கேள்விகளுக்கு அடுத்த 35 பக்கங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளன .

முதலில் இந்த 65 பக்கங்களை ஒரு முறைக்கு இருமுறை படித்து உள்வாங்கிய பின் அடுத்து நகர்வது புரிதலை செம்மைப் படுத்தும் .

பண்டைய கிரேக்கத் தத்துவங்களுக்கும் இந்திய தத்துவங்களுக்கும் இடையிலான பொதுத்தனமைகளையும் நுட்பமான வேறுபாடுகளையும் சட்டோபாத்யாயா நுணுகிப் பார்த்து இதில் அறிமுகம் செய்கிறார் .

இந்திய தத்துவ ஞானத்தில் பொருள் முதல் வாதத்தின் மூலவர் எனச் சொல்லத் தக்க உத்தாலகர் ஆருணியை ஆரம்ப நிலை வாசகனுக்குத் தேவையான அளவுக்கு அறிமுகம் செய்கிறார் ;அதுபோல் கருத்துமுதல் வாதத்தின் பிதாமகன் எனச் சொல்லத்தக்க யக்ஞவல்லியரையும் கிட்டத்தட்ட சம அளவில் அறிமுகம் செய்கிறார் . இருவரும் தோன்றக் காரணமானச் சமூகச் சூழலோடு இணைத்து நமக்கு பாடம் சொல்கிறார் சட்டோபாத்யாயா.

வேதங்கள் ,உபநிடதங்கள் இரண்டுக்கும் இருந்த வேறுபாடுகளையும் ; உபநிடத காலத்தில் ஓங்கி வந்த ‘ ஆன்மா’ என்கிற கருத்தோட்டத்தை உத்தாலகர் எவ்வாறு மறுத்தார் என்பது மிக முக்கியமானது .

 “கெளதமா ! ஆத்மன் என்று யாரை நீ அழைக்கிறாய் ?
உத்தாலக ஆருணியிடம் அரசன் கேட்க ,
ஓ ! அரசனே ! உண்மையில் பூமிதான் அது என்றார் . இந்தப் பதில் உண்மையில் விந்தையானது .உபநிடதத்தில் ஆதிக்கம் செலுத்திய அடிப்படையான கருத்து முதல்வாதக் கருதுகோளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது என்று அர்த்தமா ? அல்லது இக்கருதுகோள் வெறும் கட்டுக்கதை என அவர் கருதுகிறாரா ?”

இப்படி கேள்வி எழுப்பும் சட்டோபாத்யாயா அடுத்தவரியிலேயே யக்ஞ்வல்லியரையும் இதையும் ஒப்பிடுகிறார் .

 “ எவ்வாறாயினும் ‘தூய ஆவி’ அல்லது அக்கால கட்டத்தில் மாபெரும் கருத்து முதல்வாதியான யக்ஞ்வல்லியர் ‘ஒரு வெகுஜன உணர்வு நிலை’எனக் குறிப்பிட்ட விஷயத்துக்கு இடம் தராத அளவுக்கு அவர் எதார்த்தவாதியாக உள்ளார் .


“ அன்பு மிக்க ஸ்வேதகேதுவே !.நீ கற்ற கல்வியில் தற்பெருமையும் ,பெருமிதமும் கொண்டிருக்கிறாய் . இதுவரை கேள்வியுறாததைக் கேள்வியுற்று ,சிந்தனை செய்யாததைச் சிந்தித்து ,புரிந்து கொள்ள முடியாததை புரிந்து கொண்டது பற்றி நீ உன் குருவிடம் விளக்கிக் கொண்டாயா ?” என் தன் மகன் ஸ்வேதகேதுவிடம்  உத்தாலகர் கேட்பதும் , அதன் மூலம் வேதக் கல்வியின் போதாமையைச் சுட்டுவதும் அதைத் தொடர்ந்த உரையாடலும் இளைய தலைமுறை அறிய வேண்டியது.

புத்தரை ஞான மார்க்கமாக அறிமுகம் செய்யும் போதே ,புத்தர் கடந்து போன கண சமூக ஜனநாயகத்தை மீட்டெடுக்க முயற்சித்து தோற்றதையும் ; அவரது சங்கக் கருத்தோட்டமே அந்த கண சமூகக் கனவில் கட்டமைக்கப்பட்டது என்பதையும் நன்கு நிறுவுகிறார் சட்டோபாத்யாயா.

அன்றைய சமூகத்தில் பிராமணிய சத்திரிய மேலாண்மையும் ஒத்துழைப்பும் எப்படி இருந்தது ? இவ்விரு சாராரும் அளவற்ற செல்வம் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டதையும் ஆதிக்கம் செலுத்தியதையும் , விவசாயம் மற்றும் உடலுழைப்பு மிக இழிவாகக் கருதப்பட்டதையும் அதற்கொப்பவே உபநிடதங்களும் யக்ஞவல்லியரும் புனைந்த தத்துவம் உதவின என்பதையும் நன்கு சுட்டுகிறார் . விழிப்பு நிலையை அல்ல தூக்க நிலையையே அவை பெருமையாகப் பேசின என போட்டுடைக்கிறார் . அதுவும் விழிப்பு நிலையை மறுத்து கனவற்ற தூக்க நிலை என சொல்லி மெல்ல நகர்ந்து மரணமே தீர்வாக முடிகிறார் யக்ஞவல்லியரும் உபநிடதங்களும் .

இந்நூலில் உத்தாலகரின் பொருள்முதல்வாதச் சிந்தனையின் மேன்மையையும் ,யக்ஞ வல்லியரின் கருத்து முதல்வாதச் சிந்தனையின் பலவீனத்தையும் ஆரம்ப வாசகருக்கு போதுமான அளவுக்கு தெளிவு படுத்தி விளக்கம் கொடுத்துள்ளார் அதுவும் சமூக வேரோடு அறிமுகம் செய்கிறார் .

இந்நூலின் சிறப்பு என எதைக் கூற வேண்டுமெனில் ஆரம்பநிலை வாசகரை மனதில் கொண்டு உலக தத்துவ ஞானத்தோடு இந்திய தத்துவ ஞானப் பங்களிப்பையும் மிகச் சரியாகாச் சொல்லியிருப்பதுதான் . அதோடு மதம் எப்படி ஆளும் வர்க்க அடக்குமுறைக்கு தேவையாய் இருக்கிறது என்பதைச் சுட்டி, உழைக்கும் வர்க்க விடுதலைக்கு பொருள்முதல்வாத தத்துவத் தேவையை வலுவாகச் சொல்லுகிறார் .

இந்நூலின் பலவீனம் என்பது சட்டோபாத்யாயாவின் பார்வை கங்கை சமவெளிக்கு தெற்கே செல்லவில்லை என்பதே . ஒரு வேளை அவர் பார்வை தமிழர் தத்துவ மரபுவரை ஊடுயிருக்குமெனில் மேலும் அதிக புதிய வெளிச்சக் கீற்றுகளை தரிசிக்க - அறிமுகம் செய்ய வாய்ப்பாய் இருந்திருக்கும் .

நல்ல தமிழ் நடையில் மொழியாக்கம் செய்திருக்கும் இரா.சிவபாலனுக்கு வாழ்த்துகள் .

 ’இயக்கம்’ எனும் ஆழமான பொருள் மிக்க சொல் பல இடங்களில்  ’இலக்கம்’ என வந்திருப்பதும் ; ’தாக்கம்’ என்கிற சொல் ’தூக்கம்’ என சில இடங்களில் வந்திருப்பதும் பொருள் மயக்கம் தருவதாகிவிடும் .மெய்ப்பு பார்ப்பதில் கூடுதல் கவனம் தேவை என வலியுறுத்திவிட்டு ; இந்நூலை கொணர்ந்த பாரதி புத்தகாலயத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் .

சு.பொ.அகத்தியலிங்கம்.
[ 29 ஜூன் 2019 ல் எழுதியது . முகநூலில் பிரசுரமாவது 10/10/2019.]








0 comments :

Post a Comment