56 இஞ்ச் மெகா தவம்

Posted by அகத்தீ Labels:




56 இஞ்ச் மெகா தவம் .

அடர் வனம்
கொடும் விலங்குகள்
அலைந்து திரிந்த வண்ணம் இருந்தன .
எதற்கும் கலங்காமனதினனாய்
பகவத் கீதை சுட்டிய  ‘ஸ்திதப் பிரக்ஞனாய்’
அவர் கடும் தவத்தில்…
முள்ளின் மீது
ஒற்றைக் காலில்
வெறும் கெளபீனத்துடன்
இரவு ,பகல் ,மழை ,பனி ,வெயில்
எதையும் பொருட்படுத்தாமல்
பசி ,தாகம் மறந்து தவம்.

அவரைச் சுற்று கரையான் புற்று
பாம்புப் புற்று
மேலே விழுந்து புரளும் சடாமுடி
ஒரு நாளல்ல
இரண்டு நாளல்ல
ஒரு வாரமல்ல
இரு வாரமல்ல
மாதக் கணக்கில் தவம் .

தேவ கன்னியர் நடனமோ,இசையோ,
நாசியைத் துளைக்கும் நறுமணமோ
பசியைத் தூண்டும் அறுசுவை வாசமோ
அவர் தவத்தை அசைக்கவே இல்லை.

தேவலோகம் மிரண்டது
பூலோகம் அல்லோகல்லப் பட்டது
அனைத்து டிவியும் அடர்வனம் நோக்கி
எங்கும்  எல்லோர் நாவிலும் அதே பேச்சு
தவம் .இது மெகா தவம் .
அடடா ! இத்தனை நாள்
அன்ன ஆகாரமின்றி தவமிருப்பினும்
56 இஞ்ச் நெஞ்சு அப்படியே இருந்தது
புன்முறுவல் மாறவே இல்லை
 “ராம் ,ராம்,ஜெய் ராம் ,ஸ்ரீ ராம்’
 என நா ஜெபித்தபடியே இருந்தது .

ராமபிரான் மனமிரங்கினார்
பக்தனுக்கு அருள்புரிய
புஷ்பக விமானத்தில் பறந்து வந்தார்.

 “பக்தா !உம் தவத்தை மெச்சினோம்
வேண்டும் வரம் கேள் !”
ஸ்ரீராம் வாய் திறந்தார் .

சிரித்தபடியே வெளியே வந்த
தவ சீலரைக் கண்டதும்
ராமன் மயங்கி விழுந்தார் .

போட்டோ ஷாப்பில் தானும் ஏமாந்ததை
ஸ்ரீ ராமன் எப்படி வெளியே சொல்ல முடியும் ?

56 இஞ்ச் என்றால் சும்மாவா ?


சு.பொ.அகத்தியலிங்கம்.



0 comments :

Post a Comment