சுழலும் என்றும்.
சுழலும் அனைத்தும்
சு.பொ.அகத்தியலிங்கம்.
ஆண்டு முழுதும்
அடைமழை என்றால்
அகிலம் தாங்குமோ ?
கோடை வறட்சியே
நிரந்தரம் என்றால்
குவலயம் என்னாகும் ?
நடுக்கும் குளிரே
எப்போதும் என்றால்
பொறுக்குமோ பூமி ?
இலையுதிர் காலம்
இல்லாமல் போனால்
புதியன துளிர்ப்பது எப்போது ?
வசந்தம் மட்டுமே
சாசுவதம் என்றால்
தேடல் என்பது எதை நோக்கி ?
ஒற்றைப் பருவமே
நிரந்தரம் என்றால்
முடங்குமே வளர்ச்சி !
மாறி மாறி பருவ காலம்
சுழலும் போதே
சுழலும் அனைத்தும்
மழையும் காற்றும்
வெயிலும் பனியும்
எல்லை மீறும் சில போது
இயற்கை ஆட்டம் பாடம் சொல்லும்
இயற்கையோடு வாழப்பழகு !
இயற்கையை வெல்லப் போரிடப் பழகு !
நீ வாழும் உலகும்
நீ வாழும் வாழ்வும்
சுழலும் என்றும் !!!!
16 மே 2019. இரவு .8.30.
0 comments :
Post a Comment