“ஒரு மனிதனின் தன்மானம், சமூகநிலை,தனிமனித மரியாதை இவற்றிற்கு பங்கம் ஏற்படுகிற போது அவன் பிறப்பெடுத்த இனத்தின்பெயரால் அவன் இழிவு படுத்தப்படும்போது அவன் இதுவரை நம்பி வந்த கடவுளரைப் புறந்தள்ள முடிவெடுக்கிறான் .”
சு.பொ.அகத்தியலிங்கம் .
நான் சிறுவனாயிருந்த போது சுசீந்திரத்தில் என்ஆச்சி மடியில் படுத்துக் கொண்டு அவர் சொன்ன தீவட்டிக் கொள்ளைக்காரன் கதைகளைக் கேட்டு நடுங்கி இருக்கேன். இந்த நாவலைப்புரட்டத் தொடங்கியதும் என் மனதில் அந்தப் பழைய நினைவுகள் குமிழியிட்டன.
தாது வருஷப் பஞ்சம் மக்களைப் புரட்டிப் போட்டது. தமிழகத்தில் தென் கோடியில் திருநெல்வேலிச் சீமையில் எப்போதும் வென்றான் கிராமத்திலிருந்து நாட்டாமை முத்துமாடன் நாடார், மணியன் நாடார், மாரியப்பன் மூவர் குடும்பமும்பஞ்சம் பிழைக்க தேனிக்கு இடம்பெயர்ந்தனர். சுமார் 200 ஆண்டுக்குமுந்தைய தமிழகம்; போக்குவரத்துவசதி இல்லை. தம் வீடு, வயல்எல்லாவற்றையும் விட்டுவிட்டு பஞ்சத்தின் கொடுமையால் கால்நடையாகவே தேரிக்காட்டிலிருந்து தேனிக்கு அக்குடும்பம் பயணிப்பதூடே கதை தொடங்குகிறது.
முத்துமாடன், அவர் மகன் அய்யம் பெருமாள் என்ற ஆசிர்வாதம், அவர் மகன் முத்துபாக்கியம் ஆகிய மூவர் வாய்வழி மூன்று பாகமாய் திருநெல்வேலிச் சீமையைவிட்டு இடம் பெயர்ந்து தமிழகம் முழுவதும் பரவிய நாடார்அல்லது சாணார் சமூக மக்களின் வரலாறு இந்நாவலில் விரிகிறது. எப்படிப்பட்ட சமூக, அரசியல் ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அச்சமூகம் உயரத்தை எட்டியது; அதற்கான வலிமிகுந்த போராட்டம், கடும் உழைப்பு, உறவின் முறையாய் ஒன்றிணைந்து அரவணைத்தது எல்லாம் கதைப்போக்கில் சொல்லப்பட்டுள்ளது .நாடார் சமூகத்தில் நிறைய பேர் கிறித்தவத்துக்கு மாறியது ஏன்,எப்படி என்பதும் சமூக ஒடுக்குமுறையின் வேரும் மிக நுட்பமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
எங்கு போனாலும் குல தெய்வமும் காளியம்மனும் நாடார்மக்களோடு பிணைந்தே இருப்பர்;அந்தச் சமூகத்தில் மதமாற்றம் நிகழ்ந்தது எப்படி ?முதல் பாகம் முடிவில் முத்துமாடன் சொல்கிறார்
“ஒரு மனிதனின் தன்மானம், சமூகநிலை,தனிமனித மரியாதை இவற்றிற்கு பங்கம் ஏற்படுகிற போது அவன் பிறப்பெடுத்த இனத்தின்பெயரால் அவன் இழிவு படுத்தப்படும்போது அவன் இதுவரை நம்பி வந்த கடவுளரைப் புறந்தள்ள முடிவெடுக்கிறான் .”
இந்த வலிமிகுந்த பயணத்தை, நாயக்கர் ஆட்சிகால கொடுமைகளை பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியிலும் தொடரும் ஒடுக்குமுறையை விவரிக்கிறது இந்தப் பாகம்.
அடுத்த பாகமோ அய்யம் பெருமாள் என்ற ஆசிர்வாதம் மூலம் நகர்கிறது. உழைப்பும் அரவணைப்புமாய் வியாபாரம் பல்கிப் பெருக தேவாரம் தாண்டி மலைக்கும் விரிகிறது. சொத்து பத்து தோட்டம் துரவு எனப் பெருகுகிறது.
காசோலையில் ஒருவன் ஏமாற்றுகிறான், பெருமழை, இருப்பதை எல்லாம் அடித்துச் செல்கிறது, பொறுப்பற்ற உறவின் அலட்சியத்தால் நெருப்பு தின்றழிக்கிறது. வசதியாய் வாழ்ந்த குடும்பம் அல்லாடுகிறது.முத்துமாடனின் மகன்களான வெள்ளையப்பன் என்ற அமிர்தசாமி, ஆகாசமாடன் என்ற அருளானந்தம், அய்யம்பெருமாள் என்ற ஆசீர்வாதம் மூவரும் தந்தை மறைவுக்குப் பின்னும் கூட்டுக் குடும்பமாய் தொடர்கின்றனர்.ஆனால் அங்கேயும் காலகதியில்பொருளாதார நெருக்கடியும் பொறுப்பற்ற சில உறவாலும் பெண்களிடையே லேசாக விரிசல் தோன்ற சகோதரர் மூவரும் உட்கார்ந்து பேசி இணக்கமாய்ப் பிரிந்தனர்.
ஒவ்வொரு முறையும் பாடுபட்டுச் சேர்த்த சொத்தை இழப்பதும் மீண்டும் உழைத்து சேர்ப்பதும் அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் கூட்டு உழைப்பின் மகிமை.ஒரு கட்டத்தில் கூலி வேலைக்கு செல்லும் அளவுக்குத் தோற்ற போதும் மீண்டும் உழைத்து காண்டிரக்ட் எடுத்துவேலை செய்யும் அளவு முன்னேறியது சாதாரண விஷயமல்ல .
ஆசிர்வாதத்தின் மகன் முத்து பாக்கியம் ஆசிரியர். அக்குடும்பத்திலும் பலர் ஆசிரியராகின்றனர். அதே வேளை முத்துபாக்கியம் சுதந்திரபோரில் ஜெயிலுக்குப் போகிறான். காங்கிரஸாய் ஜெயிலுக்குப் போனவன் டிராட்ஸ்கியிஸ்டாகத் திரும்புகிறான்.
காமராஜர் காலம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க முத்துபாக்கியம் அதில் பெரிதும் ஈடுபடுகிறான்; போனஇடத்தில் எல்லாம் முத்திரை பதிக்கிறான். தேவாரம் அருகே காமாட்சிபுரம் அவனது சேவைக்கும் முனைப்புக்கும் ஈடுகொடுக்கிறது.ஆனால் காலம் வேறுதிசையில் நகர்கிறது.முத்து பாக்கியம் ஓய்வு பெறுவதோடு நாவல் நிறைகிறது .
நாவலை முடிக்கும் போது , முத்துபாக்கியம் பாத்திரம் மூலம் ,தம் உழைப்புக்கும்நேர்மைக்கும் அங்கீகாரமோ ,மரியாதையோ கிடைக்காத சூழலில் சுயமரியாதையோடுவெளியேறும் வலியை சொல்லி சற்று நேரம் அசைபோட வைத்துவிட்டார் நாவலாசிரியர் .
நாவலின் தொடக்கமும் முடிவும் என்னவோ என்னோடு ஆத்மார்த்தமாக ஒன்றிவிட்டது
நாவலை முடிக்கும் போது , முத்துபாக்கியம் பாத்திரம் மூலம் ,தம் உழைப்புக்கும்நேர்மைக்கும் அங்கீகாரமோ ,மரியாதையோ கிடைக்காத சூழலில் சுயமரியாதையோடுவெளியேறும் வலியை சொல்லி சற்று நேரம் அசைபோட வைத்துவிட்டார் நாவலாசிரியர் .
நாவலின் தொடக்கமும் முடிவும் என்னவோ என்னோடு ஆத்மார்த்தமாக ஒன்றிவிட்டது
உறவின் முறையாய் திரண்டநாடார் சமூக ஒற்றுமை ஆக்கப்பூர்வமான திசையில் செல்வதாகவே கதையாடல் சொல்கிறது. சாதிக் கலவரம் குறித்து சில நிகழ்வுகள் பேசப்படினும் சாதி, மதமாக திரள்வதின் அபாயம் சரியாக நாவலில் தோலுரிக்கப்படவில்லையோ என்கிற எண்ணம் எழுகிறது. ஒரு வேளை கதைக் களம் பெரும் பகுதி கிட்டத்தட்டவிடுதலைக்கு முந்தையதாக இருப்பதால் அன்று சாதிய அணிதிரட்டல் தம் சமூக முன்னேற்றம், தம் சமூக நிலை நிறுத்தம் இவை சார்ந்ததாகவே இருந்திருக்கக்கூடும். பெரியார் கூட ஆதியில் சாதி சங்க மாநாடுகளில் பேசி இருக்கிறார். சாதிய ஆதிக்கம் பற்றிய விவரிப்பில் வடுகர் ஆதிக்கம் குறித்த செய்தி அதிகம் உண்டு; ஆயின் மனுவாதி கருத்தாதிக்கம் குறித்த – சனாதனம் குறித்த பார்வைசரியாகப் பதிவாகவில்லை. இது கதைக்களம் சார்ந்து தற்செயலானது என்றும் நம்பலாம், இன்று வடுகர் எதிர்ப்பை முன்னிலைப் படுத்தும் தமிழ் தேசியர் அரசியலாகவும் இருக்கலாம். முத்து பாக்கியத்தைடிராட்ஸ்கியிஸ்டாக சித்தரித்திருப்பதோடு இதையும் இணைத்து பார்த்தால் அது பிழையா?
நாவல் நெடுக இயற்கையோடும்,சமூக ஆதிக்கத்தோடும் மல்லுக் கட்டி ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் மீண்டெழும் தன்னம்பிக்கை,போராட்டம், உழைப்பு இவற்றை உரக்கப் பேசுகிறது. ஆனால் முடிவில் ஓர் விரக்தி கவ்வுவது இயல்பானதாக இருப்பினும். வேறு திசையில் நாவல் நகர்த்தப்பட்டிருக்கலாமோ என்கிற எண்ணமும் துளிர் விடுவதைதவிர்க்க முடியவில்லை. ஆசிரியர் அமல்ராஜின் நுண்ணியபார்வையும் சமூக வரலாற்றுப் புரிதலும் கதையில் உயிர் துடிப்பாய் உள்ளது. பாராட்டுக்கள்.
தேரிக்காடு [ நாவல் ] , ஆசிரியர் : அமல்ராஜ் , வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
7 ,இளங்கோ தெரு ,தேனாம்பேட்டை ,சென்னை- 600 018.
பக்கங்கள் : 280 . விலை .ரூ.240/
நன்றி : தீக்கதிர்
,புத்தக மேசை , 29/04/2019.
0 comments :
Post a Comment