நாமும் ஷிபாகுஷா ஆகாமலிருக்க…

Posted by அகத்தீ Labels:




நாமும் ஷிபாகுஷா ஆகாமலிருக்க…







சு .பொ . அகத்தியலிங்கம்.
 

“மனிதனின் ஞாபகங்கள் காலப்போக்கில் மறந்துவிடக்கூடியவை .அதுபோல் அவர்களது செயல்களும் வாழ்க்கை முறைகளும்காலத்திற்குத் தகுந்தாற் போல மாறிக்கொண்டே வரும்.ஆனால் கேமராமூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் மறந்துவிட்ட அனைத்தையும் நம் கண்முன் நிறுத்தும் .இப்போது நாம்`ஹிரோஷிமா ,நாகசாகியைப் பார்க்கும்போது அந்த அழிவுகளின் சுவடு இருக்காது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் மூலம் அந்த கொடூரங்களைப் பார்க்க முடியும் .”யோசுக்கோ யம்ஹட்டா சொன்னவையே மேலே உள்ளவை . இவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் நாள் அதாவது - நாகசாகியில் அணுகுண்டு வெடித்த இரண்டாம் நாள் படங்கள் எடுத்தவர் .


அப்போது அவர் உடலின் மீது தாக்கிய கதிர்வீச்சால் புற்று நோய்ஏற்பட்டு 1965 ல் 48 வயதில் மரணமடைந்தார் .இந்த நூல் நெடுக அவர் எடுத்த படங்கள் நம் மனச்சாட்சியை உலுக்கிக்கொண்டே இருக்கின்றன .



‘ஹிபாகுஷா’ என்போர் அணுகுண்டு வீச்சில் உயிர்தப்பிய ஆனால் கதிர்வீச்சின்கொடூரதாக்குதலுக்கு ஆளாகி கடும்நோயையும் சொல்லொணா வேதனையையும் தாங்கித் திரியும் நடமாடும் சாட்சிகள்.இப்படி உயிர்தப்பிய ‘ஹிபாகுஷா’வான ஒரு பெண் அண்மையில் ஸ்கைப் மூலம் தன் துயர நினைவுகளை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பகிர்ந்து கொண்டார் . இன்னும் சில `ஹிபாகுஷா’க்கள் ஜப்பான் தொண்டு நிறுவனக் கப்பலான பீஸ் போட்டில் 24 நாடுகளுக்கு அமைதிப் பயணம் மேற்கொண்டனர். `ஹிரோகோ ஹடாகேயமாவுக்கு அணுகுண்டு வீச்சின் போது வயது ஆறு.அவர் சொல்லுகிறார் , “நான் போராட்டத்தைத் தொடர என்னிடம் சக்தியில்லை .சாவுக்குப் பயப்படவில்லை . ஆனால் , அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர் என்கிற முறையில் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றிய நினைவுகளை முன்னெடுத்துச் செல்வது என் கடமை.”



அப்படி என்ன ? அதையும் பார்ப்போம்...அணுகுண்டு விழுந்த 1000 அடி ஆரத்தினுள் இருந்த அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்; வலியை அறியும் முன்னே உயிர் போய்விடும். 2000 அடி ஆரத்தினுள் இருந்தவரோ துள்ளத்துடிக்க கருகி இறப்பர் . 2000 அடி ஆரத்திற்கு அப்பால் இருப்போர் 80 முதல் 95 சதம் வரை தீக்காயங்களோடு குத்துயிரும் குலையுயிருமாய் துடிதுடிப்பர் ; மருத்துவ உதவியும் உடனே நெருங்க வாய்ப்பு இருக்காது ;பெரும்பாலோர் இறந்து போவர் ; மீதமிருப்போர் `ஹிபாகுஷா எனப்படுவோர் - கதிரியிக்க பாதிப்பு , புற்று நோய் உட்பட நடமாடும் நோய்க்கிடங்காய் வதைபடுவர் .


இந்த அணுகுண்டு தேவையா ? அணுகுண்டு வல்லரசு பெருமையா ?சென்னை சென்ட்ரலில் ஒரு அணுகுண்டு வெடித்தால் அதன் பாதிப்பு பக்கத்து எழும்பூரோடு நிற்காது வியாசர்பாடி வண்ணாரப்பேட்டை ,கே கே நகர் வரை மட்டுமா இருக்கும் திருவான்மியூர் தாம்பரம் என புறநகர் வரை அதாவது சென்னை பெருநகருக்கு அப்பாலும் அதன் கொடுங்கரம் நீளும்.யோசிக்கவே நெஞ்சு பதறும்


இந்த அணுகுண்டு எப்போது யாரால் எப்படி உருவாக்கப்பட்டது ? எப்படிச் செயல்படுகிறது என்கிற கேள்விகளுக்கு இந்நூலில் விடையுண்டு . வரலாறும் விஞ்ஞானமுமாய் இந்நூல் நம்முள் அதிர்வுகளை ஏற்படுத்தும் .


கிட்டத்தட்ட இரண்டாம் உலகயுத்தம் முடிந்துவிட்டது; ஜெர்மன் வீழ்ந்துவிட்டது .`ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான் . அப்படியிருக்க அமெரிக்கா திடீரென ஜப்பானின் `ஹிரோஷிமா ,நாகசாகியில் அணுகுண்டு வீசவேண்டிய அவசியம் என்ன ? பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதற்கு பதிலடி என்று சொன்னால் சரியாகிவிடுமா ?


போரில் இரண்டு கோடி மனிதஉயிர்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களையும் முற்றாய் பறிகொடுத்தே ரஷ்யா பாசிஸ்ட்டுகளை முறியடித்தது. அதற்குப் பழிவாங்குவதென ரஷ்யா புறப்பட்டிருந்தால் ஜெர்மன் தாங்கியிருக்குமா ? ஏனெனில் முதல் அத்தியாயத்திலும் சரி ஆங்காங்கு ஊடுபாவாய் சொல்லும் அரசியல் செய்திகளிலும் பார்வையிலும் ஏதோ போதாமையும் குறைபாடும் இருப்பதை இந்நூல் படித்தபோது எனக்குப் பட்டது . எனினும் அதற்கும் மேல் அணுயுத்தத்துக்கு எதிரான கோபத்தை ஊட்டுவதில் இந்நூல் வெற்றி பெற்றுள்ளது .


அதுவும் மூன்றாம் உலக யுத்தம் மூளுமோ எனும் அச்சம் சூழும் சூழலில் ;இங்கே சங்பரிவார் அணுகுண்டு யுத்தத்தை ஏதோ சோளப்பொரி சாப்பிடுவதுபோல் சொல்லித் திரியும் சூழலில் உரக்கப் பேசவேண்டிய செய்தியே இந்நூல்.


நாமும் ஷிபாகுஷா ஆகாமலிருக்க ….. படிப்போம் . தெளிவோம்.

விழிப்போம்.அணுவுலைக்கு எதிராகவும் இந்நூலில் ஒரு அத்தியாயம் சேர்க்கப் பட்டிருக்கலாமோ ?


ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சொன்னதை நினைவுகூர்வோம், “ அணுசக்தியை அதன் சமுதாயப் பாதிப்புகளைப் பற்றிய புரிதலை நம்சக குடிமக்களுக்கு எடுத்துச் சொல்லும் தவிர்க்க முடியாத பொறுப்பை விஞ்ஞானிகளாகிய நாம் உணர்ந்திருக்கிறோம். நம் பாதுகாப்பும் நம்பிக்கையும் இது ஒன்றில்தான் அடங்கியுள்ளது. விவரம் அறிந்த குடிமக்கள் வாழ்வுக் காகச் செயல்படுவார்களே அன்றி சாவுக் காக அல்ல என்று நம்புகிறோம்.”

ஹிபாகுஷா : அணுகுண்டு - மரணம் -கதிர்வீச்சு

ஆசிரியர் : . ஜெகதீஸ்வரன் .

வெளியீடு : ஜெ எஸ் ஆர் பதிப்பகம் ,
கியூ 191 ,தொல்காப்பியர் தெரு , எம் எம் டி ஏ காலனி ,
அரும்பாக்கம் , சென்னை - 600 106.

பக் : 216 , விலை : ரூ.180 / 

நன்றி : தீக்கதிர் , 06/08/2017 . புத்தகமேசை


1 comments :

  1. vimalavidya

    certainly we must propagate against the Atom/Nuclear weapons
    ---vimala vidya

Post a Comment