யுத்த எதிர்ப்பில் தன்னை பலிதந்தார்

Posted by அகத்தீ Labels:



புரட்சிப் பெருநதி - 41


யுத்த எதிர்ப்பில் தன்னை பலிதந்தார்

சு.பொ.அகத்தியலிங்கம்.




ஜாரெஸ் கொல்லப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பின் -
1924இல் அரசு பணிந்து; அவரது உடலை 
புகழ்பெற்ற மனிதர்களின் கல்லறைகள் உள்ள
 பாந்தியனில் வைக்க அனுமதித்து மரியாதை செய்தது.




‘மேகம் எப்படி இடியை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறது; முதலாளித்துவம் போரை தன் வயிற்றில் சுமந்து திரிகிறது ; எந்த நொடியிலும் பிரசவித்துவிடக்கூடும்’இப்படி முழக்கமிடும் ஒருவரை உயிருடன்விடுமோ ஆளும் வர்க்கம் ? 



ஆகஸ்ட் மேரி ஜோஸப் ஜீன் லியோன் ஜாரெஸ் ஸஹரபரளவந ஆயசநை துடிளநயீh துநயn டுநடிn துயரசநள] 1859இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார்... பாரீஸிலுள்ள வசதிபடைத்த பிள்ளைகள் பயிலும் கல்லூரியில், 1881இல் படிப்பை முடித்தார் .


கல்லூரியில் தத்துவப் பேராசிரியராய்ச் சேர்ந்தார். பிரெஞ்சு மட்டுமல்ல லத்தீன், ஜெர்மன், கிரேக்கம், ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளிலும் நல்ல புலமை பெற்றார்.‘டெவிட்-டி-டெளலெளஸ்’ எனும் குடியரசுக் கட்சி ஏட்டில் எழுதலானார். எழுத்து வன்மையும் பேச்சு வன்மையும் 1885இல் இவரை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக்கியது. தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றக் கோரியபோது குடியரசு கட்சியின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை;


எனினும் ஜாரெஸ் தொழிலாளர்களிடையே பிரபலமானார். ஜாரெஸ் மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார் , டி பெச் டி டெளலெளஸ் ஏட்டில் சமூக மாற்றம் குறித்து எழுதினார் . ஜெர்மனிய சோஷலிசத்தின் வரலாறு, லூபி பிளாங், பிரெளதன், ஜூல்ஸ் கியூஸ்ட், பால் லபார்க், பெர்டினண்ட் லாஸ்ஸல், பெனாயிட் மாலன் எழுத்துகளில் தோய்ந்தார்; மெல்ல மார்க்சை வந்தடைந்தார். 1890இல் எழுதிய ஒரு கட்டுரையில் மார்க்சின் மூலதனத்தைக் குறிப்பிட்டார்; ஆயினும் நன்னெறிப் பார்வையே ஓங்கி இருந்தது.1890இல் நகர்மன்ற உறுப்பினராக, துணை மேயராக தொடர்ச்சியாக சோஷலிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பனாமா கால்வாய் கம்பெனி பங்கு விற்பனையில் நடைபெற்ற மோசடியை அம்பலப்படுத்தினார்.


முதலாளித்துவமும் ஊழலும் ஒட்டிப் பிறந்ததென சுட்டிக்காட்டினார்.1890 களில் அராஜகவாதிகளின் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மிகவும் பிற்போக்கான காசிமிர் பெரியர் குடியரசு தலைவரானார். ஜனநாயக உரிமைகளை அவர் நசுக்க ஆரம்பித்தார். எதிர்த்து ஜாரெஸ் முழக்கமிட்டார். குடியரசு தலைவரை இழிவுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜெரால்டு ரிச்சர்டுக்கு ஆதரவாக ஜாரெஸ் வாதிட்டார். நாடாளுமன்றம் அதிர்ந்தது . காசிமிர் பதவி விலக நேர்ந்தது.ஜாரெஸ் முன்மொழிந்த பொருளாதார நடவடிக்கைகள் பலவகையில் அப்பாவித்தனமாக இருப்பினும்; தொழிலாளர் நலமே அவர் நோக்கமாய் இருந்தது.1898இல் சோஷலிஸ்ட் வேட்பாளராய் போட்டியிட்டு சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டார். நான்காண்டுகள் மட்டுமே அவர் நாடாளுமன்றத்தில் இடம்பெறவில்லை .



‘லாபெட்டிக் ரிபப்ளிக்’ ஏட்டின் ஆசிரியரானார் .நாடு முழுவதும் பயணித்தார் .தன் கருத்தை பிரச்சாரம் செய்தார்.இக்காலக்கட்டத்தில் வால்டெக் ரூசோ அரசமைத்தார். பாரீஸ் கம்யூனை வேட்டையாடிய காலிபெட் யுத்த அமைச்சரானார். சோஷலிஸ்டான மில்ரண்ட்டும் அரசில் இடம் பெற்றார். மில்ரண்ட்டுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பங்கு பெறுவதில் தப்பில்லை என ஜாரெஸ் வாதிட்டார். இதனை விமர்சித்த லெனின்கூட; ஜாரெஸ்ஸின் தொழிலாளிவர்க்க சேவையை பாராட்டவும் செய்தார் .இவர் எழுதிய கட்டுரைகள் ‘ஹிஸ்டயர் சோஷலிஸ்ட் கலெக்டிவ்’ என வெளிவந்தது. மார்க்ஸ், ஏங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கையை பிரெஞ்சுச் சூழலுக்கு பொருத்துவது குறித்தும் - பிரெஞ்சு நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்தும் எழுதினார் .


பிரெஞ்சுப் புரட்சி குறித்து ஜாரெஸ் எழுதியவை பயனுள்ளவை என்றார் லெனின்.1901இல் வரலாற்றுப் போக்கில் அங்கு உருவான இரு சோஷலிஸ்ட் கட்சிகளும் இணைந்து - பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியானது; ஜாரெஸ் படிப்படியாய் அதில் முன்னிலை பெற்றார்.1902இல் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார். மதவாதத்தை எதிர்த்து சங்கநாதமிட்டார். மதபீடங்கள் மிரண்டன. எல்.ஹ்யூமானைட் எனும் ஏட்டைத் துவக்கினார்.ரஷ்யப் புரட்சிக்கு ஐந்தாண்டுகளுக்கு முன் ஜாரெஸ் எழுதினார். ‘ருஷ்ய நாடு அதன் தொழிலாளி வர்க்கத்தின் வெல்லற்கரிய வலிமையால் – நேர்மையும் நாகரீகமுமிக்க அரசமைக்க தயாரித்துக் கொண்டிருக்கிறது. ‘அவரின் தீர்க்க தரிசனம் 1917இல் கைக்கூடும் போது பார்த்து மகிழ ஜாரெஸ் உயிரோடு இல்லை.



1907இல் இரண்டாவது அகிலத்தின் மாநாடு ஸ்டாட்கர்ட்டில் நடைபெற்றபோது லெனினை சந்தித்தார். சீர்திருத்தவாதத்தையும் வர்க்க சமரசத்தையும் ஜாரெஸ் பிரச்சாரம் செய்துவந்த போதிலும் லெனினோடு ஏற்பட்ட தொடர்பும் விவாதமும் அவரை உறுதியான சோஷலிஸ்ட் ஆக்கியது. சித்தாந்தப் பிழைகள் இருப்பினும் தன்னலமற்ற முறையில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடினார் .1895இல் டெபுடிகளின் சேம்பரில் உரையாற்றும் போது போருக்கு எதிராய் முழக்கமிட்டார்; அதன் ஒரு சில வரிகளையே துவக்கத்தில் பார்த்தோம்.1913இல் கட்டாய ராணுவ சேவையை இரண்டாண்டிலிருந்து மூன்றாண்டாக உயர்த்தும் முயற்சிக்கு எதிராய் வலுகொண்ட மட்டும் அனைவரையும் திரட்டிப் போராடினார். மசோதா எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.ஜெர்மனியின் உளவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை வழங்கவும் அரசு முயன்றது .


முதல் உலகப்போர் கருக்கொள்ளும் சூழலில் 1912இல் பாஸ்ஸில் நடைபெற்ற சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸில் உரையாற்றும் போது, ‘யுத்தத்தைத் தடுக்க சமாதானத்தை வலியுறுத்தி அனைத்து நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் குரல் கொடுக்க வேண்டும்’ என்றார். யுத்தத்திற்கு எதிராக 1914 ஜூலையில் வேலை நிறுத்தம் செய்ய இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டது .ஜூலை 25இல் வெய்ஸில் ஜாரெஸ் ஆற்றிய உரையே இவரின் இறுதி உரையானது அதில், ‘சமாதானத்தைப் பாதுகாக்க ஒரே வழிதான் எஞ்சி நிற்கிறது; யுத்தத்தை எதிர்த்த போராட்டத்தில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ருஷ்ய நாட்டுப் பாட்டாளிகள் ஒன்றுபடுவதே அவ்வழி’ என்றார்.


இதனை ஏகாதிபத்திய யுத்தம் என்று கூறி ; தொழிலாளிவர்க்கம் இதற்கு எதிராக அந்தந்த நாட்டில் திரள வேண்டுமெனச் சொன்னதில் லெனினும் ஜாரெஸ்சும் ஒரே குரலில் பேசினர்.ஜாரெஸுக்கு பதவி, பணம் எனஆசை காட்டினர். மிரட்டினர். ஆயினும் எதற்கும் அஞ்சாமல் யுத்த எதிர்ப்பில் முன்நின்றார். 


1914 ஜூலை 31இல் ஜாரெஸ் ஒரு உணவு விடுதியில் கொலை செய்யப்பட்டார்.நாடே கொந்தளித்தது. ஒப்புக்காக கொலைகாரர் கைது செய்யப்படினும் பின்னர் விடுதலையாகிவிட்டார்.மக்களின் தொடர் போராட்டத்துக்கு பிறகே - ஜாரெஸ் கொல்லப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பின் -1924இல் அரசு பணிந்து; அவரது உடலை புகழ்பெற்ற மனிதர்களின் கல்லறைகள் உள்ள பாந்தியனில் வைக்க அனுமதித்து மரியாதை செய்தது.


புரட்சி தொடரும் ..


நன்றி : தீக்கதிர் , 14/08/2017.



0 comments :

Post a Comment