என்ன செய்வது ? சொல் !

Posted by அகத்தீ Labels:



என்ன செய்வது ? சொல் !



சடங்காய் வாழ்த்துச் சொல்ல சம்மதமில்லை !
மன்னித்துவிடு சுதந்திரத் தாயே !
நெஞ்சுக் கூட்டுக்குள் பற்றி எரியும் நெருப்பை
என்ன செய்வது ? சொல் !


கையில் தீப்பந்தத்தோடு கள்குடித்த குரங்காய்
மதம்பிடித்த அரசாங்கம் …
சீழ்பிடித்த ரணமாய் தேசத்தை அழுகவைக்கும்
சாதிய புற்றுநோய் …
உன்மணிவயிற்று வளங்களை விழுங்க வட்டமிடும்
பன்னாட்டுக் கழுகுகள்
அங்குலம் அங்குலமாய் தேசத்தை ஏலமிடுவதையே
சாதனையாய் சொல்லும் சதிகாரர் அதிகாரம்

சடங்காய் வாழ்த்துச் சொல்ல சம்மதமில்லை !
மன்னித்துவிடு சுதந்திரத் தாயே !
நெஞ்சுக் கூட்டுக்குள் பற்றி எரியும் நெருப்பை
என்ன செய்வது ? சொல் !


உழவர் தற்கொலை ; பாதாளச் சாக்கடையில்
தூய்மை பணியாளர் படுகொலை
காதல் கொலை சாதி ஆணவக்கொலை
மாட்டுக்காய் நடக்கும் மனிதவதைக் கொலை
அழுகையும் பற்கடிப்பும் எங்கும் ஓங்காரமாய்
நீதி,நிர்வாகம், ஆட்சி ,காவல் என அனைத்தும்
மநுவையும் சுரண்டலையும் காக்கவே தினம்தினம்
ஒவ்வொரு நொடியும் புதுப்புது அவதாரம் ..

சடங்காய் வாழ்த்துச் சொல்ல சம்மதமில்லை !
மன்னித்துவிடு சுதந்திரத் தாயே !
நெஞ்சுக் கூட்டுக்குள் பற்றி எரியும் நெருப்பை
என்ன செய்வது ? சொல் !



கார்ப்பரேட்டுகளுக்கும் மேட்டுக்குடிக்கும் மட்டுமே
சேவகம் செய்வதோ இங்கு தேசபக்தி ?
ஒடுக்கப்பட்டோரும் உழைப்போரும் ஓயாது
கண்ணீர் சிந்தி ஓய்வதோ சமூகநீதி ? - எங்கள்
வியர்வையில் குருதியில் உதித்தெழுந்த தேசமே !
எமக்குரிய நீதியைப் பங்கைக் கேட்பதென்ன குற்றமோ !
இனிபொறுப்பதில்லை எரிதழல் கொண்டுவா !
எனச் சொல்வதில் பிழையென்ன சொல் தாயே !

சடங்காய் வாழ்த்துச் சொல்ல சம்மதமில்லை !
மன்னித்துவிடு சுதந்திரத் தாயே !
நெஞ்சுக் கூட்டுக்குள் பற்றி எரியும் நெருப்பை
என்ன செய்வது ? சொல் !

- சுபொஅ







0 comments :

Post a Comment