புரட்சிப் பெருநதி - 42
யுத்தம் மூண்டது: அகிலம் தகர்ந்தது
சு.பொ.அகத்தியலிங்கம்
ஆம்ஸ்ட்ர்டாமில் - அகிலத்தின் ஆறாவது மாநாட்டில்
இந்தியாவின் சார்பில் பெரும் தலைவர் தாதாபாய் நெளரோஜி
பங்கேற்றார். இதில் இந்திய சுதந்திரம் குறித்து பேசினார்.
“தொழிலாளர்களுடைய போராட்டங்களின் உண்மையான பலன் உடனடி விளைவுகளில் அல்ல ; விரிவடைந்து கொண்டே போகும் பாட்டாளி வர்க்க ஐக்கியத்திலிருக்கின்றது.”காரல் மார்க்சால் வழிகாட்டப்பட்ட முதலாவது அகிலம் சீர்குலைவாளர்களால் செயலிழந்தது . ஆயினும் உலகளாவிய பாட்டாளி வர்க்க ஒற்றுமையின் தேவையும் நெருக்கடியும் தொடர்ந்தன .1883 மார்ச் 14 அன்று மார்க்ஸ் மறைந்தார். ஏங்கெல்ஸ் அவர் விட்டபணியை தன் தோள் மீது சுமந்தார் .இதில் அகிலமும் ஒன்று ,
1889 ஜூலை 14 ல் பாரீஸ் நகரில் 20 நாடுகளின் சோஷலிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் சார்பில் ஏங்கெல்சும், சோசலிசத் தலைவர்களான ஆகஸ்ட் பெபல், வில்லியம் லீப்க்னெக்ட் உள்ளிட்ட 393 பிரதிநிதிகளும் கூடி விவாதித்தனர் .இரண்டாவது அகிலம் உருவானது.
முதல் அகிலத்தைப் போலன்றி உறுப்பினர் வலுவுள்ள சோஷலிஸ்ட் கட்சிகள் ,தொழிற் சங்கங்களின் பங்கேற்போடு உருவானது . 11 ஆண்டுகாலம் மையப்படுத்தப்பட்ட தலைமை நிர்வாகக்குழு இன்றியே செயல்பட்டது. பிரஸல்சில் தலைமையகம் இயங்கியது . 1895 ஆகஸ்ட் 5 அன்று ஏங்கெல்சும் மரணமடைந்தார்.1896 இல் லண்டன் மாநாட்டில்தான் பக்கூனின் , பிரெளதான் ஆதரவாளர்களான அராஜகவாதிகள் முற்றாக வெளியேற்றப்பட்டனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தன் நம்பிக்கையை அகிலம் வெளிப்படுத்தினும் புரட்சிகர மார்க்சிய வழியை இன்னும் கைவிட்டுவிடவில்லை.
1904 ஆகஸ்ட் 14 - 20 தேதிகளில் ஆம்ஸ்ட்ர்டாமில் - அகிலத்தின் ஆறாவது மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பெரும் தலைவர் தாதாபாய் நெளரோஜி பங்கேற்றார்;இதில் இந்திய சுதந்திரம் குறித்து பேசினார் .ஆசிய ,ஆப்பிரிக்க ,தென் அமெரிக்கா நாடுகள் பலவும் காலனியாக இருந்தன .இவற்றின்பால் சோஷலிஸ்ட் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் குறித்து அறிக்கை தயாரிக்க துணைக்குழுவை இம்மாநாடு அமைத்தது.
1905 இல்தான் ரஷ்யா இதில் உறுப்பினரானது .1907 ஆகஸ்ட் 18-24 தேதிகளில் ஜெர்மனியில் ஸ்டட்கார்ட்டில் ஏழாவது மாநாட்டில்தான் லெனின் முதன்முதலில் பங்கேற்றார் . ஐந்து கண்டங்கள் சார்பில் 25 நாடுகளிலிருந்து 884 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியப் பிரதிநிதிகளும் இதில் அடங்குவர் . முந்தைய மாநாட்டில் அமைக்கப்பட்ட துணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையினடிப்படையில் நகல் தீர்மானம் முன்மொழியப்பட்டது; “மாநாடானது கொள்கை அடிப்படையில் அனைத்துச் சமயங்களிலும் அனைத்துக் காலனியக் கொள்கையையும் நிராகரிக்கவில்லை.
சோஷலிச ஆட்சியில் காலனியக் கொள்கையானது ‘நாகரிகப்படுத்தும்’ தன்மை கொண்டிருக்கலாம்.” இப்படி ஒரு கேவலமான வாசகத்தைத் தாங்கி இருந்தது. “சோஷலிசக் காலனி” என்ற பொருந்தாச் சொல்லாடலுடன் படுபிற்போக்கான இத்தீர்மானத்தை ஜெர்மனி சோஷலிஸ்ட்டுகள் ஆதரித்தனர். அவர்கள் சார்பில் பேர்ன்ஷ்டைன் பகிரங்கமாக ஆதரித்தார். லெனின் தலைமையில் ஒரு பகுதியினர் கடுமையாக எதிர்த்தனர். “காலனிகளில் முதலாளிகள் உண்மையில் அடிமைமுறையை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாடுகளது மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாதபடி கொடூரங்களையும் வன்முறைகளையும் நடத்திவருகிறார்கள் .
சாராயம் மற்றும் பால்வினை நோய்களைப் பரப்பி ‘நாகரிகப்படுத்தி’ வருகிறார்கள்!” என்று லெனின் ,ரோஸா லக்சம்பர்க் ,மார்ட்டோவ் மற்றும் சிலரும் இடித்துரைத்தனர் .தீர்மானத்தை ஆதரித்து 108 வாக்குகளும் . நடுநிலையாக 10 வாக்குகளும் பதிவாக; 128 வாக்குகள் எதிராகப் பதிவானதால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. ஆறுதல் தந்தாலும்; பெரும் ஆபத்தான பார்வையும் உள்ளுக்குள் வலுவாக இருப்பது கவலை அளிப்பதாக லெனின் கருதினார் . நாடுகளுக்கேற்ப வாக்கு பலம் தீர்மானிக்கப்பட்டிருந்த அடிப்படையில் இது இன்னும் கடுமையானச் சிக்கலை முன்னுணர்த்தியது.பெண்கள் வாக்குரிமை பற்றிய விவாதத்தில் பங்கேற்ற ஒரே பெண் உறுப்பினரான – ஜெர்மன் ஃபேபியன் சொசைட்டி உறுப்பினர் எதிர்த்தார் என்பது முரண்நகையாகும். சீமாட்டிகளுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்க வேண்டும் ;
உழைப்பாளிப் பெண்களுக்குக் கூடாது என்பது அவர் வாதம் .அகிலத்தின் மாநாடு நடைபெற்றபோது “அகிலத்தின் முதல் சோஷலிசப் பெண்கள் சிறப்பு மாநாடும்” நடைபெற்றது. பெண்கள் வாக்குரிமை பற்றிய பிரச்சனையில் முதலில் அனைத்து ஆண்களின் வாக்குரிமைக்கு போராடுவோம் என ஆஸ்ட்டிரிய சோஷலிஸ்ட்டுகள் திசை திருப்ப முயன்றனர். “இது கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்யும் குயுக்தி” என கிளாரா ஜெட்கின் உட்பட பலர் ஆவேசமாய் கண்டித்தனர். “வயதுவந்த ஆண்கள் ,பெண்கள் என இருபாலருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று ஒரே நேரத்தில் கோருவோம்” எனத் தீர்மானம் நிறைவேறியது .
மே முதல்நாளை அனைத்துலகத் தொழிலாளர் தினமாக 1889 ல் அகிலம் அறிவித்தது
• மார்ச் 19-ம் நாளை அனைத்துலகப் பெண்கள் தினமாக 1910 ல் அகிலம் அறிவித்தது .1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு இது மார்ச் 8 ஆனது .
• 8 மணி நேர வேலை நேரத்திற்கான கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது .
இவ்வாறு இரண்டாவது அகிலம் ஆற்றிய சாதனைகளும் நிறைய உண்டு.
1910 இல் ஐரோப்பா ,அமெரிக்கா ,ஜப்பான் ,கனடா உள்ளிட்ட 90 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளின் ஆதிக்கம் அகிலத்தில் ஓங்கியது.பெண்கள் மாநாடு ,சோஷலிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மாநாடு என பல மாநாடுகள் ,அகிலத்தின் மாநாடுகளுடன் நடத்தப்பட்டன.முதல் உலகயுத்தம் மூண்டபோது முதலில் யுத்தத்தை எதிர்த்தே சோஷலிஸ்ட் கட்சிகள் பேசின.
1912 இல் பாஸ்ஸில் நடந்த சோஷலிஸ்ட் கட்சிகளின் மாநாட்டில் யுத்த முயற்சிகளைக் கண்டித்து குரல் எழுப்பப்பட்டது ; தொழிலாளிவர்க்கம் யுத்தத்திற்கு எதிராக சமாதானத்திற்காக வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என பிரெஞ்சு சோஷலிஸ்ட் ஜீன் ஜாரெக்ஸ் முன்மொழிந்த யோசனை பரவலாக ஏற்கப்பட்டது .
1914 இல் ஜீன் ஜாரெஸ் படுகொலை செய்யப்பட்டார் இரண்டாவது அகிலத்தில் பலமான செல்வாக்குமிக்க ஜெர்மன் சமூக ஜனநாயக் கட்சியானது யுத்தச் செலவுகளுக்கு ஆதரவாக வாக்களித்தது. பிரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் முதலாளிகள் உதிர்க்கும் தேசிய வெறியை எதிரொலித்தன. தேசபக்திப் போர்வையில் சோஷலிஸ்ட் கட்சிகள் யுத்த ஆதரவு நிலையை மேற்கொண்டன.
“பிற நாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக அல்ல தத்தம் நாட்டு முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராக துப்பாக்கியைத் திருப்புங்கள்” என லெனின் விடுத்த அர்த்தச் செறிவுமிக்க வேண்டுகோளை ரஷ்யத் தொழிலாளர்கள் பெரிதும் ஆதரித்தனர் .வெவ்வேறு நாட்டு சோஷலிஸ்ட்டு கட்சிகள் தேசிய வெறிக்கு இரையாகி – பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தைக் கைவிட்ட சூழலில் 1916 இல் இரண்டாவது அகிலம் கலைக்கப்பட்டது .
லெனின் முன்வைத்த போர் எதிர்ப்பு – சமாதான முயற்சியே சரி என்பதை வரலாறு மெய்ப்பித்தது .ஆரம்பத்தில் சுட்டிய மார்க்சின் அளவுகோல் அடிப்படையிலேயே அகிலத்தின் செயல்பாடுகளை கணிக்க வேண்டுமல்லவா?
புரட்சி தொடரும்
நன்றி : தீக்கதிர் ,21/08/2017 .
0 comments :
Post a Comment