நாம் மனிதர்கள் ;
பூமி நம் இல்லை
சு.பொ.அகத்தியலிங்கம்
ஜூன் 5 : உலகச் சுற்றுச் சூழல் தினம்
“பந்தயத்தில் இணை; உலகை நல்லிடமாக்க முனை.” [“Join the race to make the world a better place” ] என்கிற முழக்கத்தோடு இந்த ஆண்டு உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது . ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முழக்கத்துடன் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது . 1973 ஆம் ஆண்டு “ஒரே ஒரு பூமி” [only one earth]என்ற முழக்கத்தோடு இத்தினம் தன் கொண்டாட்ட பயணத்தைத் தொடங்கியது . சென்ற ஆண்டு ,700 கோடி மாந்தருக்கும் “ஒரே உலகம் .ஒரே சுற்றுச் சூழல்” [“One World, One Environment”] என முழங்கப்பட்டது .
இவையெல்லாம் வெறும் முழக்கம் தானோ ? ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்த பொருளில்லையோ ?
“சிந்தனை செய் , உண் , பாதுகாத்திடு” [“Think. Eat. Save.”] , “பசுமைப் பொருளாதாரம் உனக்காகவும்தானே?” [“Green Economy: Does it include you?”.]“வனங்கள் ; இயற்கை உனக்களித்த கொடை , [“Forests: Nature at your Service”]. ” அநேக பல்லுயிரிகள் , ஒரு கோள் , ஒரு எதிர்காலம் [“Many Species. One Planet. One Future”].
இந்த கோள் உனக்கு வேண்டும் ; காலநிலைச் சீர்குலைவை ஒன்று சேர்ந்து எதிர்கொள்வோம் [ “Your Planet Needs You – Unite to Combat Climate Change”.] , “தண்ணீர் : மிகமுக்கிய வாழ்வாதாரம் “Water: Vital Resource for Life”. “மனிதர்களின் குடியிருப்புகள்” [“Human Settlements”]. இப்படியாக பல முழக்கங்கள்… 1973 தொடங்கி இன்றுவரை முழங்கித் தீர்த்துவிட்டோம் . இதன் பின்னாலுள்ள ஆழ்ந்த கவலையை அக்கறையை நாம் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை .வெறும் சடங்காக இத்தினங்கள் கழிந்து போவதேன் ?
பூமியைப் பத்தடி அல்லது இருபதடி தோண்டும் முன்பே தண்ணீர் பீச்சியடித்த காலம் மலையேறிவிட்டது . பெருநகரங்களில் ஆயிரமடி தோண்டினாலும் தண்ணீர் இல்லை . பெங்களூரில் 1500 அடியில் தண்ணீர் இல்லை. வெறும் காங்கிரீட் காடுகளாய் உயர்ந்த அடுக்குமாடிகளை எழுப்பிவிட்டு தண்ணீருக்கு அல்லாடுகிறோம். ஆறு, குளம், ஏரி, கண்மாய் என நீர் நிலைகளை ஏப்பம் விட்டுவிட்டு ஒரு வாய் தண்ணீருக்கும் தவிக்கிறோம்.
உலகின் நீரில் 0.5 சதவீதம் மட்டுமே மனிதப் பயன்பாட்டுக்கு உரிய நல்ல நீராக இருக்கிறது. உலகம் முழுக்க நீரை பெருமளவில் வீணடித்துக் கொண்டும், மாசுபடுத்திக்கொண்டும் இருக்கிறோம். இப்போதே 100 கோடிக்கும் மேற்பட்ட உலக மக்களுக்கு சுத்தமான தண்ணீர் குடிக்கவும், குளிக்கவும், பயன்படுத்தவும் கிடைப்பதில்லை. தண்ணீர் வியாபாரமோ கொடிகட்டிப் பறக்கிறது. “நீரின்றி அமையாது உலகென” வள்ளுவன் சொல்லி இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும்; குறளை ஒப்பிக்கிறோம் . உணர்ந்தோமில்லை.ஏன் ?ஏன் ?
1.3 பில்லியன் டன் உணவு ஒரு வருடத்தில் மட்டும் உலகம் முழுக்க வீணாக்கப்படுகிறது. நூறு கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், இன்னொரு நூறு கோடி மக்கள் மூன்று வேளை உணவில்லாமல் துன்புறுகிறார்கள். நில, நீர் வள இழப்பு, கடல்வள பாதிப்பு ஆகியவற்றால் உணவுப் பற்றாக்குறை பெருகிக்கொண்டே போகிறது என்பது இன்னமும் கவலை தருகிறது. வயல்களை ரியல் எஸ்டேட்டுகளாய் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறோம். “உழவினார் கைமடங்கின்” என வள்ளுவன் எச்சரித்ததும் எம் செவியில் ஏறவில்லை. ஏன் ? ஏன் ?
சாலையை நிறைத்து வாகனங்கள் ஓடுகின்றன . மேலும் மேலும் வாகனங்கள் சந்தையில் குவிகின்றன .வருடந்தோறும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது . ஐந்தாண்டில் சரிபாதி கூடும் . நடக்கவும் இடம் இருக்குமோ ?பெட்ரோல் , டீசல் பற்றாக்குறை நம் வீட்டுக் கதவைத் தட்டாதோ ? ஆற்றல் தீர்ந்தபின் என் செய்வோம் ? என் செய்வோம் ?
நம் தாத்தா காலத்திலும் குப்பை உண்டு . மண்ணில் வீசினால் மண் தின்று செரித்து எருவாகிவிடும். இன்று பிளாஸ்டிக் குப்பை . அது மக்காது. நம்மை மிரட்டுகிறது. நிலத்தடி நீரை கெடுக்கிறது . அதுமட்டுமா ? கம்ப்யூட்டர் குப்பை, தொழிற்சாலைகள் துப்பும் இரசாயன குப்பை, மருத்துவ குப்பை .குப்பைகளை தரம் பிரிக்கவே படாதபாடுபட வேண்டுமோ என்னவோ ?
மொத்தப் பெட்ரோலியத்தில் 5 விழுக்காடு பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது. 1 லட்சம் கோடி ரூபாய் புழங்கும் பெரிய தொழிலாக முன்னணியில் நிற்கிறது பிளாஸ்டிக் தொழில். “பெண்சிசுக் கொலையைப் போல / மன்னிக்க இயலா /பெரிய குற்றம் / மண்சிசு கொலை” என கவிஞர் குமுறுவது நியாயமே !
2012ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 லட்சம் டன் மின்னணுக் குப்பைகள் குவிந்துள்ளன. பெங்களூரில் ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் டன் மின்னணுக் குப்பை சேர்ந்துவருவதாக அசோசெம் அமைப்பு தெரிவிக்கிறது.இந்திய அளவில் மின்னணுக் குப்பைகள் உருவாக்கத்தில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் ஒவ்வொரு நாளும் சேரும் மின்னணுக் குப்பைகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள். தமிழகத்தில் மட்டும் 2011ம் ஆண்டு கணக்கின்படி, 28,789 டன் மின் குப்பைகள் சேர்ந்துள்ளது. இதில் 60 சதவீதம் பழுதடைந்த கம்ப்யூட்டர் கழிவுகள்தானாம். சென்னை சுற்றுப் பகுதிகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் 21 பெரிய நிறுவனங்களும், 100 சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 789 டன் மின்கழிவுகள் உருவாகிறது. 2016 ல் நிலைமை சீரடையவில்லை. மேலும் சீரழிந்திருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் ?
வன ஆராய்ச்சியாளரும், காந்திகிராமப் பல்கலைக்கழக உயிரியல் துறை உதவி பேராசிரியருமான ஆர்.ராமசுப்பு கூறியதாக சமீபத்தில் தமிழ் இந்து குறிப்பிட்டுள்ள செய்தியும் நம் கவலைக்குரியதே!
“அதிகப்படியான வகைகளில் தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் இருக்கும் நிலப்பரப்புகள், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதியாக இருக்கிறது. உலக அளவில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த நாடுகள் வரிசையில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு தாவரங்களில் மட்டும் 55 ஆயிரம் வகைகளுக்கு மேல் இருக்கின்றன. இந்தியா 9-வது இடத்தில் இருக்கிறது. பல்லுயிர் பெருக்கம் தாவரப் பல்லுயிர் பெருக்கம், விலங்குகள் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நுண்ணுயிர் பல்லுயிர் பெருக்கம் ஆகிய 3 வகையாக இருக்கிறது. குறிப்பிட்ட இட சூழ்நிலைகளில் மட்டுமே வாழக்கூடிய அரிய வகை உயிரினங்கள், இந்தியாவில் அதிகமாக இருக்கின்றன. பல்லுயிர் பெருக்கம், தட்பவெப்பம், மழை, மண் அமைப்பை வைத்துதான், ஒரு இடத்தின் பல்லுயிர் பெருக்கம் அமைகிறது.
இந்தியாவில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்கள், 55 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் இருக்கின்றன. அதுபோல, குறிப்பிட்ட இடச் சூழலில் மட்டும் வாழக்கூடிய அரியவகை தாவரங்கள் 5 ஆயிரம், விலங்குகள் 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இரு இடங்களில் ஒன்று மேற்குத்தொடர்ச்சி மலை. மற்றொன்று கிழக்கு இமாலயக் காடுகள். இங்கு தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் அதிகம் இருக்கின்றன.
வன உயிரினங்களின் வாழிடம், வழித் தடங்களை அழித்தல், கட்டிடங்கள், வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, அறிமுகப்படுத்தப்படும் சிற்றினங்கள், மக்கள்தொகை அதிகரிப்பு, இயற்கைக்கு மீறிய அதிகமான அறுவடைக்காக பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் உள்ளிட்டவை இந்தியாவில் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் முக்கிய காரணிகள் ஆகும்.”
காட்டை அழிக்கிறோம், நீர் நிலைகளைத் தூர்க்கிறோம், மக்காத குப்பைகளால் மண்ணை மலடாக்குகிறோம், இரசாயனக் கழிவுகளாலும் புகையாலும் காற்றையும் நிலத்தையும் நீரையும் விஷமாக்குகிறோம். புவியை சூடேற்றி பருவநிலையை தாறுமாறாக்குகிறோம். வெள்ளமும் வறட்சியும் இயற்கையின் விளையாட்டு என்பது போய் விலை கொடுத்து வாங்குகிறோம். நாம் வாழும் பூமியின் பசுமையை சிதைக்கிறோம். நம் மூதாதையர்கள் நமக்களித்த பூவுலகை பாழாக்குகிறோம். இது சரியா ? இது முறையா?
விதவிதமாக முழக்கமிட்டுப் பயனில்லை . ஆண்டு தோறும் நீத்தார் நினைவுபோல் சுற்றுச் சூழல்தினம் கொண்டாடியும் பயனில்லை. இதன் மூலவேர் எது என்பதை சிந்திக்க வேண்டும் .
தன் லாபவெறிக்காக எதையும் செய்யும் மூர்க்க மூலதனச் சுரண்டலின் உச்சகட்டமே, கண்மூடித்தனமாக இயற்கை வளங்களைச் சுரண்டும்- சூறையாடும் கொடுமை. உழைப்பாளி மக்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, இயற்கையைப் பாதுகாக்க – பசுமையைக் காக்க சமரசமற்ற போரினை இன்றே – இப்போதே தொடங்க வேண்டும். இன்னும் மீதமிருக்கும் நம்பிக்கையை வற்றவிடாமல் சூற்றுச் சூழல் காக்க ஓர் ஒருங்கிணைந்த போர் அவசியம்.
“பந்தயத்தில் இணை; உலகை நல்லிடமாக்க முனை. இதன் பொருள் இயற்கையைச் சுரண்டும் சூறையாடும் பந்தயத்தில் பன்னாட்டு மூலதனத்தோடு கைகுலுக்குவது அல்ல ; உலகைப் பாதுகாக்க – சுற்றுச் சூழலைப் பாதுகாக்க போராடுவோரோடு இணைந்து போராட்டப் பந்தயத்தில் இணைவோம் . உலகை நல்லிடமாக்குவோம். உழைப்போரின் இல்லமாக்குவோம்.
“சுற்றுச்சூழல்தான் ஒவ்வொன்றும் ; அது எனக்கானதல்லவா ?.” [“The environment is everything that isn’t me”. – Albert Einstein] என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஆம் நமக்கானதும்தான்.
0 comments :
Post a Comment