காரணம் தேவையாய் இருக்கவில்லை

Posted by அகத்தீ Labels:


காரணம் தேவையாய் இருக்கவில்லை


- சு.பொ.அகத்தியலிங்கம்.


நேசிக்கக் கற்றுக் கொடுப்பதாய்த்தான் பேச்சு
 வெறுக்க பழக்கிக் கொண்டிருந்தனர் ஒவ்வொருவரையும்….


பக்கத்து வீட்டை ! பக்கத்து தெருவை !
பக்கத்து ஊரை ! பக்கத்துச் சேரியை !
அண்டை அயலானை , சக மனிதனை
வெறுக்க கற்றுக் கொண்டனர் ஒவ்வொருவரும் !


நேசிப்பதற்குக் காரணம் தேவை இல்லை
என்பது பழங்கதை ஆயிற்று
வெறுக்க காரணம் தேவைப்படவில்லை .


வெறுப்பு அரசியலில் வெற்றி ரகசியம் இருப்பதாய்
ஹிட்லரிடமிருந்து கற்றுக் கொண்டனர் .
முசோலினியும் சொல்லிக் கொடுத்தார்


புனித சுலோகங்களும் புனித வசனங்களும்
வெறுப்பை வளர்க்க எருவாக்கப்பட்டன
வெறுப்பு  ‘புனிதமானது’ என ஒப்புக்கொள்ளத் தயங்கவில்லை .


வெறுப்பின் மீது அதிகார பீடங்கள் கட்டமைக்கப்பட்டன
காதலின் மீது வெறுப்பு
கருணையின் மீது வெறுப்பு
மனிதன் மீது வெறுப்பு
ஒற்றுமையின் மீது வெறுப்பு
எழுத்தின் மீது வெறுப்பு
கருத்தின் மீது வெறுப்பு
அறிவியல் மீது வெறுப்பு
வரலாறு மீது வெறுப்பு
என எங்கும் வெறுப்பு
வெறுப்பு பற்றிப் படர்ந்து கொண்டே இருந்தது
பெட்ரோலில் பிடித்த நெருப்பென


ஒரு நாள்
தம் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும்
வெறுப்பின் உச்சத்தில்
ஓங்கி குத்துவிட!
வழியும் குருதியை நக்கியபடியே
வெறுப்பு உமிழும் கண்களோடும்
கடுஞ்சொற்களோடும்
மீண்டும் மீண்டும்
ஓங்கி ஓங்கி
குத்தி குத்தி……..

நேசிக்கக் கற்றுக் கொடுப்பதாய்த்தான் பேச்சு
 வெறுக்க பழக்கிக் கொண்டிருந்தனர் ஒவ்வொருவரையும்…..

0 comments :

Post a Comment