இருள் படிந்த எண்ணங்கள் மாற ஒரு கவிதை விளக்கு

Posted by அகத்தீ




இருள் படிந்த எண்ணங்கள் மாற
ஒரு கவிதை விளக்கு 

கவிதையின் கருப்பொருள் எது ? காதல் , கடவுள் , இயற்கை ,சமூகம் , அரசியல் தாண்டி முழுக்க முழுக்க அறிவியலாய் அமைய முடியுமா ? இக்கேள்விக்கு விடை காண சிலர் முயன்றுள்ளனர் .

வா. செ.குழந்தைசாமி எழுதிய “மானுடநதி” இவ்வகையில் ஒருகாத்திரமான வரவு . இன்னும் சிலவும் வந்துள்ளன . இ.ராமலிங்கத்தின் “ பால்வெளி” எனும் பேரண்டக் கவிதைகள் மேலும் ஒரு காத்திரமான வரவு என்பதில் ஐயமில்லை.

பால் அண்டத்தை பற்றி நம்மில்எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம் ; அதிலும் நாளது வரை அறிவியல்கண்டு சொல்லும் மெய்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறோம் ;இந்நூல் அந்த வெளியில் நன்கு உள்வாங்கி வெளிவந்துள்ளது .

“ தொடர்ந்து அண்ட பரிணாமம் / பால்வெளி அண்டத்தையும் / சூரிய குடும்பத்தையும் /உருவாக்க /நானூற்று அறுபதுகோடி /ஆண்டுகள் ஆனது /என்று கூறும் / பேரண்டக் கணக்குகள் / நம்மைபிரமிக்க வைக்கின்றன” என்று கூறி .நம்மையும் பிரமிக்க வைக்கிறார் .

பெருவெடிப்பைப் பற்றிய முதல் கவிதை அறிவியலை எளிமையாய் – கவிதையாய் சொல்லும் முயற்சியின் வெற்றியையும் எல்லையையும் நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது .

“ வெண்ணிலா விடுமுறை எடுத்துக்கொண்ட அமாவாசை தினம்” “ தங்கநிகர் தட்டொன்று” இப்படி தன் கவிதைநெஞ்சையும் அறிவியல் உண்மையையும் பிசைந்து கொடுக்க பெரும்பாடுபட்டிருப்பது நூல்நெடுக பளிச்சிடுகிறது .

“ மனதின் வேகத்தை / யோசனை எல்லைகளைக் கடந்து / பால்வெளியில் சஞ்சரிக்கும் /நட்சத்திர வீடுகளின் /ஜன்னல் கதவுகளை /ஆழத்திறந்து அவைகளின் / அந்தரங்க வாழ்க்கையைப் / பதிவு செய்யும் பாத்திரம்” என தொலைக் காட்சி சாதனத்தை வர்ணிக்கிறார் .
“ ஓ! சூரியனே ! / வெப்பமும் நீயே /வெளிச்சமும் நீயே /மழையும் நீயே / உயிரும்நீயே / வண்ணமும் நீயே / வனப்பும் நீயே /இயக்கமும் நீயே / எல்லாமும் நீயே..” என்ற வரிகளை படித்த போது அடடா ! இவர் சூரிய நமஸ்காரம் செய்துவிடுவாரோ என அஞ்சும் நிமிடத்தில் அடுத்த வரியிலேயே நெற்றிப்பொட்டில் அறைகிறார் “ நின்னை நான் கண்டு கொண்டேன்.” இன்னொரு இடத்தில் உண்மையை உரக்கச் சொல்லுகிறார் , “ உண்மையில் ஞாயிறு உதிக்கவும் இல்லை / மறையவும் இல்லை / ஒரே இடத்தில் நின்று ஆட்சி செய்யும் / வெப்பத் தாரகை அன்றோ நீ”
ஒவ்வொரு கிரகத்தையும் அவர் விவரிக்கிற பாங்கு நமக்கு அவற்றை தரிசிக்கும் ஆவலையூட்டும் .நிலவுப் பயண நூலை படித்து அவர் கண்ட “கனவு”(கவிதை) அறிவியல் பேசும் அற்புதம்.

“மனித வாழ்க்கையில் மாற்றத்தைக் / கணிப்பொறிமுறையில் ஏற்றிட முடியாது/ அன்றாட வாழ்வில் அறிவியல் சிந்தனைகள் / ஒன்றாய் கலக்க உருப்படியாய்ச் செய்யாமல் / மனித சாரத்தில் மாற்றம் காண முடியாது” என்கிற நூலாசிரியர் .பேரண்ட அறிவியல் ஆர்வம் ஊட்டபுனைந்துள்ள கவிதைகளை பாராட்டாமல் இருக்க முடியுமா ?

அறிவியல் ஆத்திசூடியும் , மூன்று ஆங்கிலக் கவிதைகளும் மிக நன்று . “ மாறுகின்ற உலகில் மாறா நிலை கொண்ட / எதுவும் இல்லையென்று / ஒருபோதும் எண்ண முடியாது / எல்லாம் மாறும் / இருள் படிந்த எண்ணங்களும் மாறும்” என்கிறார் ராமலிங்கம் . இந்நூலைப் படித்தால் பால்வெளி மற்றும் அண்டம் குறித்த உங்கள் எண்ணமும் தெளியுமே !

பால்வெளி,( பேரண்டக் கவிதைகள்),ஆசிரியர் : சி.ராமலிங்கம் ,வெளியீடு : மேன்மை வெளியீடு ,5/2 , பெர்தோ தெரு , இராயப்பேட்டை ,வி.எம்.தெரு , (கில் ஆதர்ஷ் பள்ளி அருகில் )
சென்னை – 600 014 .பக் :192 , விலை : ரூ.150.
- சு.பொ.அகத்தியலிங்கம்.
நன்றி : தீக்கதிர் , புத்தக மேசை , 19-06-2016



0 comments :

Post a Comment