இருள் படிந்த எண்ணங்கள் மாற ஒரு கவிதை விளக்கு

Posted by அகத்தீ




இருள் படிந்த எண்ணங்கள் மாற
ஒரு கவிதை விளக்கு 

கவிதையின் கருப்பொருள் எது ? காதல் , கடவுள் , இயற்கை ,சமூகம் , அரசியல் தாண்டி முழுக்க முழுக்க அறிவியலாய் அமைய முடியுமா ? இக்கேள்விக்கு விடை காண சிலர் முயன்றுள்ளனர் .

வா. செ.குழந்தைசாமி எழுதிய “மானுடநதி” இவ்வகையில் ஒருகாத்திரமான வரவு . இன்னும் சிலவும் வந்துள்ளன . இ.ராமலிங்கத்தின் “ பால்வெளி” எனும் பேரண்டக் கவிதைகள் மேலும் ஒரு காத்திரமான வரவு என்பதில் ஐயமில்லை.

பால் அண்டத்தை பற்றி நம்மில்எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம் ; அதிலும் நாளது வரை அறிவியல்கண்டு சொல்லும் மெய்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறோம் ;இந்நூல் அந்த வெளியில் நன்கு உள்வாங்கி வெளிவந்துள்ளது .

“ தொடர்ந்து அண்ட பரிணாமம் / பால்வெளி அண்டத்தையும் / சூரிய குடும்பத்தையும் /உருவாக்க /நானூற்று அறுபதுகோடி /ஆண்டுகள் ஆனது /என்று கூறும் / பேரண்டக் கணக்குகள் / நம்மைபிரமிக்க வைக்கின்றன” என்று கூறி .நம்மையும் பிரமிக்க வைக்கிறார் .

பெருவெடிப்பைப் பற்றிய முதல் கவிதை அறிவியலை எளிமையாய் – கவிதையாய் சொல்லும் முயற்சியின் வெற்றியையும் எல்லையையும் நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது .

“ வெண்ணிலா விடுமுறை எடுத்துக்கொண்ட அமாவாசை தினம்” “ தங்கநிகர் தட்டொன்று” இப்படி தன் கவிதைநெஞ்சையும் அறிவியல் உண்மையையும் பிசைந்து கொடுக்க பெரும்பாடுபட்டிருப்பது நூல்நெடுக பளிச்சிடுகிறது .

“ மனதின் வேகத்தை / யோசனை எல்லைகளைக் கடந்து / பால்வெளியில் சஞ்சரிக்கும் /நட்சத்திர வீடுகளின் /ஜன்னல் கதவுகளை /ஆழத்திறந்து அவைகளின் / அந்தரங்க வாழ்க்கையைப் / பதிவு செய்யும் பாத்திரம்” என தொலைக் காட்சி சாதனத்தை வர்ணிக்கிறார் .
“ ஓ! சூரியனே ! / வெப்பமும் நீயே /வெளிச்சமும் நீயே /மழையும் நீயே / உயிரும்நீயே / வண்ணமும் நீயே / வனப்பும் நீயே /இயக்கமும் நீயே / எல்லாமும் நீயே..” என்ற வரிகளை படித்த போது அடடா ! இவர் சூரிய நமஸ்காரம் செய்துவிடுவாரோ என அஞ்சும் நிமிடத்தில் அடுத்த வரியிலேயே நெற்றிப்பொட்டில் அறைகிறார் “ நின்னை நான் கண்டு கொண்டேன்.” இன்னொரு இடத்தில் உண்மையை உரக்கச் சொல்லுகிறார் , “ உண்மையில் ஞாயிறு உதிக்கவும் இல்லை / மறையவும் இல்லை / ஒரே இடத்தில் நின்று ஆட்சி செய்யும் / வெப்பத் தாரகை அன்றோ நீ”
ஒவ்வொரு கிரகத்தையும் அவர் விவரிக்கிற பாங்கு நமக்கு அவற்றை தரிசிக்கும் ஆவலையூட்டும் .நிலவுப் பயண நூலை படித்து அவர் கண்ட “கனவு”(கவிதை) அறிவியல் பேசும் அற்புதம்.

“மனித வாழ்க்கையில் மாற்றத்தைக் / கணிப்பொறிமுறையில் ஏற்றிட முடியாது/ அன்றாட வாழ்வில் அறிவியல் சிந்தனைகள் / ஒன்றாய் கலக்க உருப்படியாய்ச் செய்யாமல் / மனித சாரத்தில் மாற்றம் காண முடியாது” என்கிற நூலாசிரியர் .பேரண்ட அறிவியல் ஆர்வம் ஊட்டபுனைந்துள்ள கவிதைகளை பாராட்டாமல் இருக்க முடியுமா ?

அறிவியல் ஆத்திசூடியும் , மூன்று ஆங்கிலக் கவிதைகளும் மிக நன்று . “ மாறுகின்ற உலகில் மாறா நிலை கொண்ட / எதுவும் இல்லையென்று / ஒருபோதும் எண்ண முடியாது / எல்லாம் மாறும் / இருள் படிந்த எண்ணங்களும் மாறும்” என்கிறார் ராமலிங்கம் . இந்நூலைப் படித்தால் பால்வெளி மற்றும் அண்டம் குறித்த உங்கள் எண்ணமும் தெளியுமே !

பால்வெளி,( பேரண்டக் கவிதைகள்),ஆசிரியர் : சி.ராமலிங்கம் ,வெளியீடு : மேன்மை வெளியீடு ,5/2 , பெர்தோ தெரு , இராயப்பேட்டை ,வி.எம்.தெரு , (கில் ஆதர்ஷ் பள்ளி அருகில் )
சென்னை – 600 014 .பக் :192 , விலை : ரூ.150.
- சு.பொ.அகத்தியலிங்கம்.
நன்றி : தீக்கதிர் , புத்தக மேசை , 19-06-2016



புதிய சிந்தனையை முன் வைக்கும் “ முகிலினி”

Posted by அகத்தீ Labels:





புதிய சிந்தனையை 

முன்வைக்கும் ‘முகிலினி’


சட்ட மன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்தினூடே இரா.முருகவேள் எழுதிய “ முகிலினி” 488 பக்க நாவலைப் படித்து முடித்தேன் . “சமகால அரசியல் சமூக வரலாற்றோடு பிணைந்த இந்நாவல் குறித்த நூல்விமர்சனம் விரைவில் எழுதுவேன் . இங்கே இப்போது இந்நாவலில் ஒரிடத்தில் படித்த வரிகளை கொஞ்சம் அசைபோடுகிறேன்”என்ற குறிப்புடன் கீழ்கண்ட இரண்டு பத்தியையும் பதிவிட்டேன்

.“…….. தமிழ் எனக்குத் துணையிருக்கும் என்ற ராஜூ ,செங்கொடி வெல்லும் என்று போராடிய ஆரான். எப்படி எல்லோரும் தோற்க முடியும் ? அரை நூற்றாண்டுக்குப் பின் தமிழ்ப் பள்ளிகள் மூடப்படுகின்றன .போராடிப் பெற்ற உரிமைகள் பேப்பரில் இருக்க முதலாளித்துவம் தன்னை மாற்றிக் கொண்டது . சிறை போன்ற ஆலைகளில் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறது .தங்கள் போராட்டம் என்ன வாகும் ? எந்த திசையில் நகரும் ? இன்னொரு ஆரானையும் ராஜூவையும் உருவாக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் ? இதுவரை நடந்தது எல்லாம் தோல்விதான் என்று சொல்ல முடியாது .பல நூறு சின்னஞ்சிறிய வெற்றிகள் மக்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துதானிருக்கின்றன .ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது இது அல்ல” (பக்கம் 315 ) 

இதனை பதிவிட்டுவிட்டு மேலும் குறிப்பிட்டேன் , “ தேர்தல் இன்னும் பத்துநாட்களில் கடந்து போய்விடும் ; புது ஆட்சி வந்துவிடும். ஆனால் தேர்தலோடு பிரச்சனைகளும் அரசியலும் முடிந்து போகுமோ ? அப்புறம்தான் சவாலான வேலை காத்திருக்கிறது” அந்த சவாலைச் சந்திக்க அறுபதாண்டு தமிழக சமூக –அரசியல்-பொருளாதார வரலாறு நமக்குத் தெரிந்தால் நல்லது; இந்நாவல் அந்தப் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளதால் இப்போது இதனை வாசிப்பது மிக அவசியமாகிறது என்று சொல்லலாம். 

கண்ணம்மா நாயுடு ,கஸ்தூரி நாயுடு, கிருஷ்ணகுமார் என மூன்று தலைமுறை முதலாளிகளோடும் டெக்ஸ்டைல் தொழில்வளர்ச்சி மற்றும் அதன் பிரச்சனைகளோடும் பின்னப்பட்டுள்ளது இந்நாவல் .பண்ணையாளுக்கும் தொழிலாளிக்கும் வித்தியாசம் தெரியாத கண்ணம்மா நாயுடுவின் அடக்குமுறையால் தொழிலாளர்கள் பட்ட அடி , வலி,இழப்பு அதிகம் .செங்கொடி முன் அவர் பணிய நேர்ந்தது. 

“ கம்யூனிஸ்ட்டுகளுக்கு வேண்டுமானால் புரட்சி செய்து ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற கனவு இருக்கலாம்.தொழிலாளிக்கு அது கிடையாது.நல்ல சம்பளம் , நியாயமான வேலை கொடுத்தால் போதும். எங்கள் மில் என்று பேசத்தொடங்கி விடுவார்கள்...”இப்படி சரியாக புரிந்து கஸ்தூரி நாயுடு செயல்பட்டது ; இரண்டாவது உலகயுத்தத்துக்கு பின் ஏற்பட்ட பஞ்சுத் தட்டுப்பாட்டை தொடர்ந்து செயற்கை இழைக்கு மாறியது ; 1969 ல் அந்நிய செலாவணி நெருக்கடியைத் தொடர்ந்து மரக்கூழ் தயாரிப்பில் இறங்கியது; வடக்கத்தி முதலாளியை எதிர்கொள்ள முடியாமல் ஆலை கை மாறியது.லாபவெறியில் பவானி ஆறு நச்சுச் சாக்கடையாய் ஆனது - ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியாய் அமைந்த அரசியல் – பொருளாதாரம் ; அதன் சமூக தாக்கம்.… அடடா ! ஒரு ஒருங்கிணைந்த பார்வையோடு அனைத்தையும் ஊடுருவுகிறது இந்நாவல் . 

தமிழார்வலராய் மிலிரிட்டிரியிலிருந்து ஓய்வுபெற்றுவந்த ராஜூ – அவரின் திமுக அனுதாபம் ;அவரின் நண்பரும் தொழிற்சங்கப் போராளியுமான ஆரான் ஆக இரண்டு பாத்திரச் சித்திரிப்பும் அவர்களது குடும்பம் மூன்றுதலைமுறையாய் மாறிக் கொண்டிருப்பதும் - இரண்டு அரசியல் பண்பாட்டுக் கூறுகளை இயல்பாய் படம் பிடிக்கிறது . 

நாவலின் மைய இழையே கண்மூடித்தனமான தொழில்மயமாக்கம் நீரையும் நிலத்தையும் நாசப்படுத்தியதை அரசியல் பொருளாதார நுட்பத்தோடு முன்வைப்பதுதான் . அதில் இந்நாவல் வெற்றிபெற்றுவிட்டது .

பவானி ஆறும் - ராஜூ அதற்கு செல்லமாய் இட்டபெயரான முகிலினியும் உயிர்துடிப்பான பாத்திரங்களாய் உலாவருகின்றது . மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் ரமணியின் சாயலில் வடிவமைக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் பாத்திரத்தோடு சுற்றுச்சூழல் போராளிகள் ஆவேசத்தோடு உரையாடும் இடம் (பக்கம்276,277.278) மிக முக்கியம் .

 உலகமயத்தை டெக்ஸ்டைல்துறையில் முதலில் ஆளும் வர்க்கம் பரிட்சித்துப் பார்க்கத் தொடங்கி இருப்பதன் குரூர முகத்தை சுட்டுகிறார் .பாடுபட்டு ஒழித்த குழந்தைத் தொழிலாளி முறை , கொத்தடிமைமுறையெல்லாம் நவீன வடிவத்தில் திரும்பி வந்திருப்பதை விளக்கிவிட்டு சொல்லுவார் , “ நீங்கள் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை .இனி வருங்காலத்தில் கட்சி இவை குறித்து கவனத்துடனிருக்க வேண்டும் . நாம் எதிரிகள் அல்ல. சேர்ந்து போராடுவதற்கான களத்தை இனி விழிப்புடனிருந்து உருவாக்குவோம். ஏதாவது ஓரிடத்தில் நமது பாதைகள் இணையும்.” 

இந்தி எதிர்ப்புப் போராட்டம் , அரிசிப் போராட்டம் , குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிக்க அலைந்த கொடுமை என பல அரசியல் நிகழ்வுகளும் நாவலின் நிகழ்வுகளோடு கலந்து நிற்கின்றன . நம்மாழ்வார் , இயற்கை விஞ்ஞானம் ,நதிகள் காப்பு எல்லாம் மாற்றங்களை மட்டுமா சொல்லியது அல்ல. 

உண்மையான அக்கறையோடு சமூக ஆர்வலர் சிலர் முயல மறுபுறம் என்ன நடக்கிறது?” ஆனால், அரசும் ,பெருநிறுவங்களும் தங்கள் வழக்கமான தந்திரத்தின்படி இதை இன்னொரு லாபமீட்டும் வியாபாரமாக மாற்றி வருகின்றன…” மறுபுறம் கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகும் போக்கு ;இப்படி சமூக வளர்ச்சிப் போக்கின் ஸ்கேன் ரிப்போர்ட்டாகவே இந்நாவல் சொல்லும் சேதிகள் அதிகம் . 

மூடப்பட மில்லை சூறையாடும் மக்கள் ; அதற்கான சமூக நியாயம், அடடா ! கொலை வழக்கு எல்லாம் வெறும் கற்பனை அல்ல நிகழ்வின் பதிவே ! ராஜூவின் பேரனான கௌதம் வழக்கறிஞராகி வர்ஷினி காதலில் விழுவது; மறுபுறம் அவனின் சமூக அறச்சீற்றம் எல்லாம் ஒரு மாற்றத்தின் குறியீடு ; அவன் தன் திருமண அழைப்பிதழை முகிலினி நதியை தன் உறவாய் நட்பாய் கொஞ்சி கொடுப்பதுடன் நாவல் நிறைகிறது .

 புதிய சிந்தனை முகிழ்க்கிறது . இலக்கியச் செறிவு குறித்து சிலர் கருத்து மாறுபடலாம் . ஆயினும் பொருளடர்த்தி, பார்வை ஒழுங்கு குறித்து வியக்காமல் இருக்க முடியாது . “ ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” எனும் ஆழமான புத்தகத்தை தமிழில் தந்த இந்நூலாசிரின் பார்வைக் கூர்மை இந்த நாவலை வழிநடத்தி இருப்பதை அவதானிக்க இயலுகிறது . முந்தைய நாவலான “ மிளிர்கல்” உடனே படிக்க ஆர்வம் எழுகிறது.


முகிலினி (புதினம்),
ஆசிரியர் : இரா.முருகவேள் ,
வெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம் .
4/413 பாரதி நகர் . 3- ஆவது வீதி,
பிச்சம்பாளையம் அஞ்சல் ,
திருப்பூர் – 641 603.
பக் : 488 , விலை: ரூ.375.

நம் பூமி நம் அனுபவம்

Posted by அகத்தீ Labels:



நாம் மனிதர்கள் ; 
பூமி நம் இல்லை

சு.பொ.அகத்தியலிங்கம்

ஜூன் 5 : உலகச் சுற்றுச் சூழல் தினம்

“பந்தயத்தில் இணை; உலகை நல்லிடமாக்க முனை.” [“Join the race to make the world a better place” ] என்கிற முழக்கத்தோடு இந்த ஆண்டு உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது . ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முழக்கத்துடன் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது . 1973 ஆம் ஆண்டு “ஒரே ஒரு பூமி” [only one earth]என்ற முழக்கத்தோடு இத்தினம் தன் கொண்டாட்ட பயணத்தைத் தொடங்கியது . சென்ற ஆண்டு ,700 கோடி மாந்தருக்கும் “ஒரே உலகம் .ஒரே சுற்றுச் சூழல்” [“One World, One Environment”] என முழங்கப்பட்டது .
இவையெல்லாம் வெறும் முழக்கம் தானோ ? ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்த பொருளில்லையோ ?
“சிந்தனை செய் , உண் , பாதுகாத்திடு” [“Think. Eat. Save.”] , “பசுமைப் பொருளாதாரம் உனக்காகவும்தானே?” [“Green Economy: Does it include you?”.]“வனங்கள் ; இயற்கை உனக்களித்த கொடை , [“Forests: Nature at your Service”].                  ” அநேக பல்லுயிரிகள் , ஒரு கோள் , ஒரு எதிர்காலம் [“Many Species. One Planet. One Future”].
இந்த கோள் உனக்கு வேண்டும் ; காலநிலைச் சீர்குலைவை ஒன்று சேர்ந்து எதிர்கொள்வோம் [ “Your Planet Needs You – Unite to Combat Climate Change”.] , “தண்ணீர் : மிகமுக்கிய வாழ்வாதாரம் “Water: Vital Resource for Life”. “மனிதர்களின் குடியிருப்புகள்” [“Human Settlements”]. இப்படியாக பல முழக்கங்கள்… 1973 தொடங்கி இன்றுவரை முழங்கித் தீர்த்துவிட்டோம் . இதன் பின்னாலுள்ள ஆழ்ந்த கவலையை அக்கறையை நாம் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை .வெறும் சடங்காக இத்தினங்கள் கழிந்து போவதேன் ?
பூமியைப் பத்தடி அல்லது இருபதடி தோண்டும் முன்பே தண்ணீர் பீச்சியடித்த காலம் மலையேறிவிட்டது . பெருநகரங்களில் ஆயிரமடி தோண்டினாலும் தண்ணீர் இல்லை . பெங்களூரில் 1500 அடியில் தண்ணீர் இல்லை. வெறும் காங்கிரீட் காடுகளாய் உயர்ந்த அடுக்குமாடிகளை எழுப்பிவிட்டு தண்ணீருக்கு அல்லாடுகிறோம். ஆறு, குளம், ஏரி, கண்மாய் என நீர் நிலைகளை ஏப்பம் விட்டுவிட்டு ஒரு வாய் தண்ணீருக்கும் தவிக்கிறோம்.
உலகின் நீரில் 0.5 சதவீதம் மட்டுமே மனிதப் பயன்பாட்டுக்கு உரிய நல்ல நீராக இருக்கிறது. உலகம் முழுக்க நீரை பெருமளவில் வீணடித்துக் கொண்டும், மாசுபடுத்திக்கொண்டும் இருக்கிறோம். இப்போதே 100 கோடிக்கும் மேற்பட்ட உலக மக்களுக்கு சுத்தமான தண்ணீர் குடிக்கவும், குளிக்கவும், பயன்படுத்தவும் கிடைப்பதில்லை. தண்ணீர் வியாபாரமோ கொடிகட்டிப் பறக்கிறது. “நீரின்றி அமையாது உலகென” வள்ளுவன் சொல்லி இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும்; குறளை ஒப்பிக்கிறோம் . உணர்ந்தோமில்லை.ஏன் ?ஏன் ?
1.3 பில்லியன் டன் உணவு ஒரு வருடத்தில் மட்டும் உலகம் முழுக்க வீணாக்கப்படுகிறது. நூறு கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், இன்னொரு நூறு கோடி மக்கள் மூன்று வேளை உணவில்லாமல் துன்புறுகிறார்கள். நில, நீர் வள இழப்பு, கடல்வள பாதிப்பு ஆகியவற்றால் உணவுப் பற்றாக்குறை பெருகிக்கொண்டே போகிறது என்பது இன்னமும் கவலை தருகிறது. வயல்களை ரியல் எஸ்டேட்டுகளாய் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறோம். “உழவினார் கைமடங்கின்” என வள்ளுவன் எச்சரித்ததும் எம் செவியில் ஏறவில்லை. ஏன் ? ஏன் ?
சாலையை நிறைத்து வாகனங்கள் ஓடுகின்றன . மேலும் மேலும் வாகனங்கள் சந்தையில் குவிகின்றன .வருடந்தோறும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது . ஐந்தாண்டில் சரிபாதி கூடும் . நடக்கவும் இடம் இருக்குமோ ?பெட்ரோல் , டீசல் பற்றாக்குறை நம் வீட்டுக் கதவைத் தட்டாதோ ? ஆற்றல் தீர்ந்தபின் என் செய்வோம் ? என் செய்வோம் ?
நம் தாத்தா காலத்திலும் குப்பை உண்டு . மண்ணில் வீசினால் மண் தின்று செரித்து எருவாகிவிடும். இன்று பிளாஸ்டிக் குப்பை . அது மக்காது. நம்மை மிரட்டுகிறது. நிலத்தடி நீரை கெடுக்கிறது . அதுமட்டுமா ? கம்ப்யூட்டர் குப்பை, தொழிற்சாலைகள் துப்பும் இரசாயன குப்பை, மருத்துவ குப்பை .குப்பைகளை தரம் பிரிக்கவே படாதபாடுபட வேண்டுமோ என்னவோ ?
மொத்தப் பெட்ரோலியத்தில் 5 விழுக்காடு பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது. 1 லட்சம் கோடி ரூபாய் புழங்கும் பெரிய தொழிலாக முன்னணியில் நிற்கிறது பிளாஸ்டிக் தொழில். “பெண்சிசுக் கொலையைப் போல / மன்னிக்க இயலா /பெரிய குற்றம் / மண்சிசு கொலை” என கவிஞர் குமுறுவது நியாயமே !
2012ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 லட்சம் டன் மின்னணுக் குப்பைகள் குவிந்துள்ளன. பெங்களூரில் ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் டன் மின்னணுக் குப்பை சேர்ந்துவருவதாக அசோசெம் அமைப்பு தெரிவிக்கிறது.இந்திய அளவில் மின்னணுக் குப்பைகள் உருவாக்கத்தில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் ஒவ்வொரு நாளும் சேரும் மின்னணுக் குப்பைகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள். தமிழகத்தில் மட்டும் 2011ம் ஆண்டு கணக்கின்படி, 28,789 டன் மின் குப்பைகள் சேர்ந்துள்ளது. இதில் 60 சதவீதம் பழுதடைந்த கம்ப்யூட்டர் கழிவுகள்தானாம். சென்னை சுற்றுப் பகுதிகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் 21 பெரிய நிறுவனங்களும், 100 சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 789 டன் மின்கழிவுகள் உருவாகிறது. 2016 ல் நிலைமை சீரடையவில்லை. மேலும் சீரழிந்திருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் ?
வன ஆராய்ச்சியாளரும், காந்திகிராமப் பல்கலைக்கழக உயிரியல் துறை உதவி பேராசிரியருமான ஆர்.ராமசுப்பு கூறியதாக சமீபத்தில் தமிழ் இந்து குறிப்பிட்டுள்ள செய்தியும் நம் கவலைக்குரியதே!
“அதிகப்படியான வகைகளில் தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் இருக்கும் நிலப்பரப்புகள், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதியாக இருக்கிறது. உலக அளவில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த நாடுகள் வரிசையில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு தாவரங்களில் மட்டும் 55 ஆயிரம் வகைகளுக்கு மேல் இருக்கின்றன. இந்தியா 9-வது இடத்தில் இருக்கிறது. பல்லுயிர் பெருக்கம் தாவரப் பல்லுயிர் பெருக்கம், விலங்குகள் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நுண்ணுயிர் பல்லுயிர் பெருக்கம் ஆகிய 3 வகையாக இருக்கிறது. குறிப்பிட்ட இட சூழ்நிலைகளில் மட்டுமே வாழக்கூடிய அரிய வகை உயிரினங்கள், இந்தியாவில் அதிகமாக இருக்கின்றன. பல்லுயிர் பெருக்கம், தட்பவெப்பம், மழை, மண் அமைப்பை வைத்துதான், ஒரு இடத்தின் பல்லுயிர் பெருக்கம் அமைகிறது.
இந்தியாவில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்கள், 55 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் இருக்கின்றன. அதுபோல, குறிப்பிட்ட இடச் சூழலில் மட்டும் வாழக்கூடிய அரியவகை தாவரங்கள் 5 ஆயிரம், விலங்குகள் 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இரு இடங்களில் ஒன்று மேற்குத்தொடர்ச்சி மலை. மற்றொன்று கிழக்கு இமாலயக் காடுகள். இங்கு தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் அதிகம் இருக்கின்றன.
வன உயிரினங்களின் வாழிடம், வழித் தடங்களை அழித்தல், கட்டிடங்கள், வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, அறிமுகப்படுத்தப்படும் சிற்றினங்கள், மக்கள்தொகை அதிகரிப்பு, இயற்கைக்கு மீறிய அதிகமான அறுவடைக்காக பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் உள்ளிட்டவை இந்தியாவில் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் முக்கிய காரணிகள் ஆகும்.”
காட்டை அழிக்கிறோம், நீர் நிலைகளைத் தூர்க்கிறோம், மக்காத குப்பைகளால் மண்ணை மலடாக்குகிறோம், இரசாயனக் கழிவுகளாலும் புகையாலும் காற்றையும் நிலத்தையும் நீரையும் விஷமாக்குகிறோம். புவியை சூடேற்றி பருவநிலையை தாறுமாறாக்குகிறோம். வெள்ளமும் வறட்சியும் இயற்கையின் விளையாட்டு என்பது போய் விலை கொடுத்து வாங்குகிறோம். நாம் வாழும் பூமியின் பசுமையை சிதைக்கிறோம். நம் மூதாதையர்கள் நமக்களித்த பூவுலகை பாழாக்குகிறோம். இது சரியா ? இது முறையா?
விதவிதமாக முழக்கமிட்டுப் பயனில்லை . ஆண்டு தோறும் நீத்தார் நினைவுபோல் சுற்றுச் சூழல்தினம் கொண்டாடியும் பயனில்லை. இதன் மூலவேர் எது என்பதை சிந்திக்க வேண்டும் .
தன் லாபவெறிக்காக எதையும் செய்யும் மூர்க்க மூலதனச் சுரண்டலின் உச்சகட்டமே, கண்மூடித்தனமாக இயற்கை வளங்களைச் சுரண்டும்- சூறையாடும் கொடுமை. உழைப்பாளி மக்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, இயற்கையைப் பாதுகாக்க – பசுமையைக் காக்க சமரசமற்ற போரினை இன்றே – இப்போதே தொடங்க வேண்டும். இன்னும் மீதமிருக்கும் நம்பிக்கையை வற்றவிடாமல் சூற்றுச் சூழல் காக்க ஓர் ஒருங்கிணைந்த போர் அவசியம்.
“பந்தயத்தில் இணை; உலகை நல்லிடமாக்க முனை. இதன் பொருள் இயற்கையைச் சுரண்டும் சூறையாடும் பந்தயத்தில் பன்னாட்டு மூலதனத்தோடு கைகுலுக்குவது அல்ல ; உலகைப் பாதுகாக்க – சுற்றுச் சூழலைப் பாதுகாக்க போராடுவோரோடு இணைந்து போராட்டப் பந்தயத்தில் இணைவோம் . உலகை நல்லிடமாக்குவோம். உழைப்போரின் இல்லமாக்குவோம்.
“சுற்றுச்சூழல்தான் ஒவ்வொன்றும் ; அது எனக்கானதல்லவா ?.” [“The environment is everything that isn’t me”. – Albert Einstein] என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஆம் நமக்கானதும்தான்.

காரணம் தேவையாய் இருக்கவில்லை

Posted by அகத்தீ Labels:






காரணம் தேவையாய் இருக்கவில்லை


- சு.பொ.அகத்தியலிங்கம்.


நேசிக்கக் கற்றுக் கொடுப்பதாய்த்தான் பேச்சு
 வெறுக்க பழக்கிக் கொண்டிருந்தனர் ஒவ்வொருவரையும்….


பக்கத்து வீட்டை ! பக்கத்து தெருவை !
பக்கத்து ஊரை ! பக்கத்துச் சேரியை !
அண்டை அயலானை , சக மனிதனை
வெறுக்க கற்றுக் கொண்டனர் ஒவ்வொருவரும் !


நேசிப்பதற்குக் காரணம் தேவை இல்லை
என்பது பழங்கதை ஆயிற்று
வெறுக்க காரணம் தேவைப்படவில்லை .


வெறுப்பு அரசியலில் வெற்றி ரகசியம் இருப்பதாய்
ஹிட்லரிடமிருந்து கற்றுக் கொண்டனர் .
முசோலினியும் சொல்லிக் கொடுத்தார்


புனித சுலோகங்களும் புனித வசனங்களும்
வெறுப்பை வளர்க்க எருவாக்கப்பட்டன
வெறுப்பு  ‘புனிதமானது’ என ஒப்புக்கொள்ளத் தயங்கவில்லை .


வெறுப்பின் மீது அதிகார பீடங்கள் கட்டமைக்கப்பட்டன
காதலின் மீது வெறுப்பு
கருணையின் மீது வெறுப்பு
மனிதன் மீது வெறுப்பு
ஒற்றுமையின் மீது வெறுப்பு
எழுத்தின் மீது வெறுப்பு
கருத்தின் மீது வெறுப்பு
அறிவியல் மீது வெறுப்பு
வரலாறு மீது வெறுப்பு
என எங்கும் வெறுப்பு
வெறுப்பு பற்றிப் படர்ந்து கொண்டே இருந்தது
பெட்ரோலில் பிடித்த நெருப்பென


ஒரு நாள்
தம் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும்
வெறுப்பின் உச்சத்தில்
ஓங்கி குத்துவிட!
வழியும் குருதியை நக்கியபடியே
வெறுப்பு உமிழும் கண்களோடும்
கடுஞ்சொற்களோடும்
மீண்டும் மீண்டும்
ஓங்கி ஓங்கி
குத்தி குத்தி……..

நேசிக்கக் கற்றுக் கொடுப்பதாய்த்தான் பேச்சு
 வெறுக்க பழக்கிக் கொண்டிருந்தனர் ஒவ்வொருவரையும்…..









நானின் ஜாதகம்

Posted by அகத்தீ Labels:




 
நானின் ஜாதகம்



ஏணியை உடைத்துவிடு
எனக்கு போட்டியாய் இன்னொருவர்
இங்கு வர வேண்டாம் !


பாலத்தை தகர்த்துவிடு
என் தனிமையை குலைக்க
ஒற்றையாளும் வேண்டாம் !


நான் , நான்மட்டுமே
எனக்கு , எனக்குமட்டுமே
எல்லாமும் வேண்டும் !


ஏன் யாருமே என்னை
புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் ?
நான் சரியாகத்தானே இருக்கிறேன் !


அதோ! எனக்கு குரு கிடைத்துவிட்டார் !
தியானம் , யோகா ,ஆழ்நிலை தியானம்
என்னை நான் கண்டு கொள்வேன் !


அங்கென்ன ஒரே பெரும் கூச்சல் ?
அன்னதானக் கூடத்தில் அடிதடியா?
சாந்தி நிலவ கதவைச் சாத்து!


விளக்குத் தீ வீட்டை எரிக்கிறது!
ஐயையோ ! ஐயையோ !
யாராவது காப்பாற்ற வாருங்கள் !



[ பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் உயர் ஊதிய தீவுத்திடல்களின் மனநிலையைக் கண்டு மனம் வெதும்பி எழுதியது ]