“நாசா” சொன்ன பின்பும்
நாத்திகம் பேசலாமா ?
சு.பொ.அகத்தியலிங்கம்.
·
பைபிள் உருவான காலம் தெரியும் ; குரான் உருவான காலம் தெரியும்
ஆனால் வேதம் எப்போது உருவானது என்று சொல்ல இயலாது . “வேதம் அநாதியானது ; சுயம்புவானது”
– இந்தப் பெருமையை உணராமல் அதனை பழிக்க முயல்வதும் ; குறைத்து மதிப்பதும் சரியா ? தமிழர்
தத்துவம் வேத மறுப்பு மரபென்பது நியாயமா ?
·
பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள் திருநள்ளாறுக்கு நேர் மேலே
வரும்போது ஒரு வினாடி நின்று விடுகிறதாமே ! அமெரிக்காவிலுள்ள ஆய்வு மையம் நாசாவே சொல்லிவிட்டது
; இன்னுமா நீங்கள் நாத்திகம் பேசுகிறீர் ? கோவிலில் ஒரு மின் காந்த அதிர்வு இருக்கிறதைக்
கண்டுள்ளனர் .இப்படி ஒவ்வொன்றிலும் அறிவியலைக் கண்ட நம் முன்னோரை எண்ணி வியந்து போற்றாமல்
புழுதிவாரி தூற்றுவது சரியா ?
·
மார்க்சிய தத்துவம் எனச் சொல்லி சில கறாரான விதிகளை முன்வைக்கிறீர்கள்
; தத்துவம் என்பது குறிப்பிட்ட சூத்திரங்களுக்குள் அடக்கிவிடக்கூடியதா என்ன ? மார்க்சியம்
அறிவியல் சூத்திரமா ? மானுட மனதுள் நடக்கும் தத்துவப் போரில் அதன் பங்கு யாது ?
·
எதுவும் இருக்கிற இடத்திலேயே இருப்பதில்லை இயங்கிக் கொண்டே
இருக்கிறது மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறீர்கள் ;எப்படியப்பா ? இமயமலை அசைந்து
கொண்டேவா இருக்கிறது ? மாறிக்கொண்டேவா இருக்கிறது ?
·
அப்படியானால் ஒழுக்கமும் மாறுமோ ! மனிதன் விருப்பம் போல்
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் வாழலாம் என தறிகெட்டு ஓடச்செய்யுமோ – சொல்லுமோ உங்கள்
மார்க்சியம் ?
இப்படி கேள்விக்கணைகள் தொடர்ந்து
வந்து தாக்குகிறது ; மெய்தேடலில் இதுபோல் சமரசமற்ற உரையாடல் மிகமிக அவசியமே . எதையும்
முடிந்து போன ஒன்றாகப் பார்க்காமல் அதன் முன்னும் பின்னும் என்ன என்பதையும் சேர்த்தே
பரிசீலிக்க வேண்டியுள்ளது . செய்வோம் . தேடல் தொடரட்டும் .
பைபிள் உருவான காலம் தெரியும் ; குரான்
உருவான காலம் தெரியும் ஆனால் வேதம் எப்போது உருவானது என்று சொல்ல இயலாது . “வேதம் அநாதியானது
; சுயம்புவானது” – இந்தப் பெருமையை உணராமல் அதனை பழிக்க முயல்வதும் ; குறைத்து மதிப்பதும்
சரியா ? தமிழர் தத்துவம் வேத மறுப்பு மரபென்பது நியாயமா ?
கிறுத்துவர்களின் வேத நூலான
பைபிள் உருவான காலம் குறித்து ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உண்டெனிலும் தோராயமாக
சுமார் 2500 ஆண்டுகளுக்குட்பட்ட ஒரு காலகட்டத்தின் படைப்பு அது என்பதில் மாற்றுக் கருத்தில்லை
. ஏன் இன்னும் சொல்லப்போனால் இயேசுவே மெய்யா கற்பனையா என்பது உள்ளிட்ட ஆய்வு நூல்கள்
பல வெளிவந்துள்ளன .இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. குரான் குறித்து அப்படிப்பட்ட ஆய்வுகளுக்கு
வழிவிடும் ஜனநாயகச் சூழல் இல்லாத போதும் ராபர்ட் ஸ்பென்ஸர் போன்றோர் நபிகளின் வரலாற்றை
ஆய்வு செய்துள்ளனர் . எது எப்படியோ குரான்தான் மிக இளைய வேதம் . ஆம் பைபிள் உருவாக்கப்பட்டு
சுமார் 500 அல்லது 600 ஆண்டுகளுக்குப் பிறகே
குரான் பிறந்தது என்பர் . வருடக் கணக்கில் மாறுபடலாம் ஆனாலும் தோராயமாக சொல்லிவிட இயலும்
. கடைசியாக உருவாக்கப்பட்ட மதநூல் குரான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது
.
இவற்றோடு ஒப்பிடும் போது
நான்கு வேதங்களும் பழமையானது . வேத காலம் குறித்தும்
மாறுபட்ட கருத்துகளும் ஆய்வுகளும் இருப்பினும் அதிகபட்சம் கி.மு 1500 வரையே செல்கிறது
; எப்படி கணக்குப் போட்டாலும் உட்சபட்சமாய்
சுமார் இன்றைக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு உட்பட்டதாகே கணிக்கிறார்கள் . அதற்கும்
மேல் இல்லை .
எல்லா மத வேத நூல்களும்
இறைவனால் அருளப்பட்டது என்றே கூறுகின்றன . இந்து மத வேதம் சுயம்புவானது என்பதும் இதன்
தொடர்ச்சியே . ஆனால் எல்லா வேதங்களும் பொதுவாக முதலில் வாய்மொழியாகவே பிறந்துள்ளன.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அவை தொகுக்கப்பட்டு எழுத்து வடிவம் பெற்றுள்ளன .இடைக்காலத்தில்
அதில் பல சேர்க்கப்பட்டிருக்கலாம் ; பல நீக்கப்பட்டிருக்கலாம் ; அந்தக் கால சமூக வாழ்க்கையினைப்
புரிந்து கொண்டால் மட்டுமே அதன் உண்மையான முழுப்பொருளைப் புரிந்து கொள்ள முடியும்
.நிற்க !
வேதத்தைப் பழிக்க முயலுவதாக
குற்றஞ்சாட்டுவதே தவறு ; விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது ஏதுமில்லை . விமர்சனப் பார்வை
வேறு ;பழித்தல் வேறு . தமிழர் மரபு வேதமறுப்பு
மரபே . தமிழ் இலக்கியங்களில் அதற்கானச் சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன .நீலகேசி எனும்
நூலில் தத்துவ விவாதம் நிறைந்திருக்கும் . குறிப்பாக சமணம் சார்ந்த நூலது . சமணத்தையும்
, புத்தத்தையும் இன்று இந்துத்துவாவாதிகள் சொந்தம் கொண்டாடினும் ஆதியில் இவை வேதமறுப்பையே
கொண்டிருந்தன . நீலகேசியில் பல பாடல்கள் வேதத்தை விமர்சிக்கின்றன . வேள்வியில் பலியிடுவதை
எதிர்த்தது - தேவர்களைத் தொழுதால் தீமைகள் எப்படி அகலும் எனக் கேட்டது - வேதம் கடவுளால்
அருளப்பட்டது அல்ல மனிதனால் செய்யப்பட்டது என்றது உட்பட நீலகேசி கடும் விமர்சனங்களை
முன்வைத்துள்ளது .
“ யார் அது செய்தவர் அறியில்
இங்கு
உரை எனில் அங்கொருவன்
ஊரது நடுவண் ஓர் உறையுளில்
மலம் பெய்திட்டு ஒளிந்து
ஒழியின்
பேரினும் உருவினும் பெறல்
இலாதன் இன்றா குறித்து
தேரினும் இனி அது செய்தவர்
இல் எனச் செப்புவே”
ஊரின் நடுவிலே ஒரு வீட்டின்
வாயிலிலே இரவிலே ஒருவன் மலம் பெய்து விட்டு மறைந்து போனான் . தேடிப் பார்த்தும் அவன்
யாரென்று தெரியவில்லை .அதற்காக மலத்தைக் கழித்தவர் யாருமில்லை , அது சுயம்பு என்று
யாரேனும் சொல்வார்களோ ? இப்படி நெற்றியடியாகக் கேட்டது நீலகேசி . அதோடு விடாமல் மேலும்
சொன்னது ;
“ தோற்றமும் நாற்றமும் சுவையுடன்
ஊறு இவற்றால் தொடங்கி
ஆற்றவும் ஆயிரு வேதம் வல்லார்கள்
அஃது அறிந்து உரைப்ப
மேற்குலத்தாரோடு இழிந்தவர்
என்பது மெய்மை பெறா
நூல் செய்தவர் திறம் அறிகுவர்
நுழைந்தறிவு உடையவர்.”
அந்த மலத்தை எடுத்து அதன்
நிறம் ,மணம் , சுவை எனும் தன்மைகளை எல்லாம் ஆயிரு வேதம் எனும் ஆயுர்வேத மருத்துவர்
ஆராய்ந்தால் அதைக் கழித்தவருக்கு ஏதேனும் வியாதி இருந்ததா இல்லையா என்பதை அறியலாம்
.ஆனால் அம்மலம் மேல்குலத்தான் மலம் அல்லது
கீழ்க்குலத்தான் மலம் என்பதை அறிய முடியாது .
வேதத்தை செய்தவன் அறிவுடையோரா அறிவற்றவரா எனதை வேண்டுமானால் சொல்லலாம் என ஒரே
போடாகப் போடுகிறார் .
நீலகேசியை மேற்கோள் காட்டி
அக்காலத்திலேயே மருத்துவ ஆய்வு இருந்திருக்கிறது என்கிற செய்தியைக் கண்டு வியக்கும்
அருணன் “ வேதத்தை படைத்தவரின் யோக்கியதையைக் கண்டு கொள்ளலாம் ;ஆனால் குலத்தை கூறமுடியாது என்கிறார் நிலகேசி ஆசிரியர்
. இதன் மூலம் வேதம் நிறைகுறை உடையது என்று சொன்னது மட்டுமல்லாது ; அது பரிந்துரைத்த
பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பித்தக் கொடுமையையும் அம்பலப் படுத்திவிட்டார் . சமணம்
வேத மறுப்பு சமயமே என நீலகேசி உறுதி படக் கூறிவிட்டது .” என்கிறார் . இன்னும் ஐயம்
இருப்பின் நீலகேசி நூலிலும்- இதர தமிழிலக்கிய நூல் பரப்பிலும் பயணம் செய்து தமிழ்ச்
சமூகத்தில் ஓங்கி ஒலித்த வேதமறுப்பு மரபை அறிக
!
பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள் திருநள்ளாறுக்கு
நேர் மேலே வரும்போது ஒரு வினாடி நின்று விடுகிறதாமே ! அமெரிக்காவிலுள்ள ஆய்வு மையம்
நாசாவே சொல்லிவிட்டது ; இன்னுமா நீங்கள் நாத்திகம் பேசுகிறீர் ? கோவிலில் ஒரு மின்
காந்த அதிர்வு இருக்கிறதைக் கண்டுள்ளனர் .இப்படி ஒவ்வொன்றிலும் அறிவியலைக் கண்ட நம்
முன்னோரை எண்ணி வியந்து போற்றாமல் புழுதிவாரி தூற்றுவது சரியா ?
முதலில் நாசா என்பது அறிவியல்
உலகின் தலைமையோ அல்லது “சுப்ரீம் அத்தாரிட்டி”
என ஆங்கிலத்தில் சொல்வார்களே அப்படி “உச்ச
அதிகாரம்” எதுவும் அதற்கு வழங்கப்படவில்லை . இஸ்ரோ என்கிற இந்திய ஆய்வு மையம் போல்
அது அமெரிக்க ஆய்வு மையம். அவ்வளவே . நாசா பெயரில் உலாவரும் தகவல்கள் பெரும் பகுதி
பொய்யே .நாசாவின் இணைய தளத்திலோ வெளியீடுகளிலோ இத்தகவல்கள் இடம் பெறுவதில்லை . பொய்
பரப்புவோர் சும்மா நாசா என அடித்துவிடுகின்றனர் .
சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க ராமர் பாலம் இருக்கிறதென
நாசாவே சொல்லிவிட்டதென கதை அளந்தனர் ; ஒரு கட்டத்தில் நாசா மறுக்க அது எங்கள் நம்பிக்கை
என்று நழுவினர் . திருநள்ளார் சமாச்சாரமும் அப்படியே ; ஆதாரம் இல்லை .அதில் துளியளவு
உண்மையும் இல்லை. நாசா சொன்னதெனில் அதனை இஸ்ரோ
ஏன் உறுதிப் படுத்த வில்லை – வேறெந்த ஆய்வு மையமும் ஏன் உறுதிப்படுத்தவில்லை என கேட்டாலே
பொய்மை விளங்கும்.
தற்போது நாசா சொல்லிவிட்டது
15 நாள் சூரியன் தெரியாது என வாட்ஸ் அப்பில் , முகநூலில் , டிவிட்டரில் வரும் தகவலோ
அல்லது ; சூரியனின் சப்தத்தை நாசா பதிவு செய்துவிட்டது
, அது ஓம் என்று ஒலிக்கிறது என்கிற செய்திகளோ அது போன்ற செய்திகளோ வெறும் வதந்தி பரப்பலே
! நாசா சொல்லிவிட்டது உங்கள் அலைபேசியை இன்று இரவு நிறுத்தி வையுங்கள் என்றெல்லாம்
சொல்லுவது எவ்வளவு மோசடித்தனம் என்பதை அனுபவம் உணர்த்த வில்லையா ?
பிள்ளையார் பால் குடிக்கிறார்
என்கிற செய்தி முதலில் வெளிநாட்டு வாழ் சிலரால் அங்கிருந்து மின்னணு ஊடகங்கள் மூலம்
பரப்பப் பட்டது ; பின்னரே இந்தியா முழுவதும் தொற்றியது ; வெளிநாட்டிலிருந்து வந்ததால்
; அதுவும் ஆங்கிலத்தில் முதலில் வந்ததால் எளிதில் நம்பினர் .
ஆம், முதலாவதாக வெளிநாட்டு
மோகம் மிக்க நம்மிடம் வெளிநாட்டாரே ஒப்புக் கொள்கின்றனர் என்றால் யோசிக்கவே மாட்டோம் ; இரண்டாவதாக , ஆங்கிலமே அறிவின் அளவுகோல் என்கிற
மயக்கம் நம்மிடம் மிகுதி எனவே ஆங்கிலத்தில் முதலில் சொல்லும் போது எளிதில் மயங்கிவிடுவோம்
; மூன்றாவதாக தற்போது அமெரிக்க மோகம் உள்ள
சூழலில் நாசா சொன்னது என்கிற போது அதற்கு அறிவியில் மற்றும் வல்லரசு முத்திரை வேறு
கிடைத்துவிடுகிறது ; மேலும் போட்டோ ஷாப் மற்றும் இதர தொழில் நுட்பங்கள் இதற்குப் பயன்
படுத்தப்படுகின்றன .இப்படி வஞ்சகமாய் மிக நுட்பமாய்
திட்டமிட்டு இந்துத்துவவாதிகள் இத்தகு பொய்களைத் துணிந்து பரப்புகின்றனர் . நாம் தான்
விழிப்பாய் இருக்க வேண்டும் .கோவிலில் மின் காந்த அதிர்வு உள்ளதாகக் கூறுவதும் அப்படியே
! அறிவியல் ரீதியா நிரூபிக்கப்பட்டிருப்பதாகக்
கூறி காதிலே பூ சுற்றுவதும் இதன் நீட்சியே !
கோவில் ,மசூதி , தேவாலயம்
எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் அது உங்கள் விருப்பம் . உரிமை. ஆயின் அதற்கு ஆன்மீக
விளக்கம் கொடுப்பது தேவையற்றது ; ஆன்மீகம் அதன் சொந்த வலுவில் - நேர்மையோடு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை
என்பதன் வெளிப்பாடே இவ்வாறு பொய்யாய் அறிவியல் முலாம் பூசும் வேலைகள் எனில் மிகை அல்ல
.மூடநம்பிக்கை எந்த ரூபத்தில் வரினும் அதனை
சோதித்து அறிவதே அறிவியல் பார்வையாகும் .
மார்க்சிய தத்துவம் எனச் சொல்லி சில
கறாரான விதிகளை முன்வைக்கிறீர்கள் ; தத்துவம் என்பது குறிப்பிட்ட சூத்திரங்களுக்குள்
அடக்கிவிடக்கூடியதா என்ன ? மார்க்சியம் அறிவியல் சூத்திரமா ? மானுட மனதுள் நடக்கும்
தத்துவப் போரில் அதன் பங்கு யாது ?
மார்க்சியம் அருளப்பட்டதல்ல
; ஆய்ந்து அறிந்த தத்துவம் . மார்க்சியம் சுயம்புவாக
உதித்ததல்ல ; மார்க்சுக்கு முந்தைய தத்துவஞானிகள் உரைத்தவற்றை ஆய்ந்தறிந்து ; அதுநாள்
வரையிலான அறிவியல் கண்டு பிடிப்புகளோடு உரசிப் பார்த்து ; உருவாக்கப்பட்ட சமூக அறிவியலே
மார்க்சியம் .
“ சமூக வளர்ச்சிக்கான தேவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளி வர்க்கத்தின்
தேவைகள் ஆகியவற்றினைத் தொடர்ந்தும் – ஹெகலின் கருத்து முதல் வாத இயக்கயியல் மற்று பாயர்
பர்க்கின் இயக்க மறுப்பியலான பொருள் முதல் வாதம் ,சமூகரீதியான செயல்முறைகள் , அறிவியல்
கண்டு பிடிப்புகள் , ஆகியவற்றைச் சார்ந்தும் மார்கஸ் ஏங்கெல்ஸும் இயக்கயியல் மற்றும்
பொருள் முதல் வாதத்தை உருவாக்கினர் ; இது , இயற்கை , சமுதாயம் ,சிந்தனை ஆகியவற்றின்
வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மிகவும் பொதுவான வளர்ச்சி விதிகள் குறித்த அறிவியலாகும்.”
என்கிறார் ‘ மார்கசிய லெனினிய தத்துவம்’ எனும் பயிற்சி ஏட்டில் விக்டர் ஆஃபேன் .
பிரெஞ்சு சோஷலிசம் , பிரிட்டிஷ்
பொருளாதாரம் , ஜெர்மன் தத்துவம் என பல மூன்று முக்கிய கூறுகளின் சாரத்தை வடித்தெடுத்து
கூட்டிய சர்வதேச தத்துவமே மார்க்சியம் .
“ தத்துவவியலாளர்கள் , இந்த
உலகை பல்வேறு வழிகளில் விளக்க மட்டுமே செய்தனர் ;ஆனால் பிரச்சனை என்னவெனில் இதனை மாற்ற
வேண்டும் என்பதாகும்” என்பார் மார்க்ஸ் .
இந்த மார்க்சிய கோட்பாடு
இயங்கியல் பொருள் முதல்வாதம் , வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என இரு பெரும் கூறுகளை
உள்ளடக்கியது . மார்க்சிய பொருளாதாரம் இவ்வகையில் பொருளாதாரத்துக்கு புதிய அறிவியல்
கண்ணோட்ட மளித்தது .
எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது , 2] எதிர்மறைகளின் ஒற்றுமையும் முரண்பாடும் ,
3] நிலைமறுப்பின் நிலை மறுப்பு , 4] அளவு மாறுதல் குண மாறுதல் என அடிப்படையான நான்கு
கூறுகளைக் கொண்டது இயங்கியல் பொருள் முதல்வாதம் . இதனை ஒவ்வொன்றாக பின்னர் பார்ப்போம்
.
இந்த அறிவியல் அணுகுமுறை
கணம் தோறும் விளையும் மாறுதல்களையும் உள்வாங்கும் தன்மையுடைத்ததே . எனவே வறட்டு சூத்திரம்
அல்ல ; அவ்வாறு வறட்டு சூத்திரமாக மார்க்சியத்தைக் குறுக்குவதே தவறானது .பிழையானது
.
மானுட மனதுக்குள் நடக்கும்
தத்துவப்போர் என்ற வாதமே தத்துவம் என்பது மனம் சம்மந்தப்பட்டது என்ற புரிதல் சார்ந்ததன்றோ
? ஆனால் மனித உணர்வு சமூக நிலையைத் தீர்மானிக்கவில்லை ; சமூகவாழ்நிலைதான் உணர்வைத்
தீர்மானிக்கிறது என்கிறது மார்க்சியம் . மனதுக்குள் நடப்பதாகக் கருதினும் அது மூளையின்
செயல்பாடே ! மார்க்சியம் சமூகத்தை , நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் புரிந்து கொள்ள ;
அதற்கொப்ப செயலாற்ற நமக்கு வழிகாட்டுகிறது .மார்க்சியமானது வெறுமே புத்தகப் படிப்பல்ல
;செயலுக்கானது ; அரசியலுக்கானது மட்டுமானது அல்ல தனிப்பட்ட வாழ்வையும் செம்மையாக முன்னெடுத்துச்
செல்ல உதவும் உலகக் கண்ணோட்டம் மற்றும் வாழ்வியல் கண்ணோட்டமாகும் ; மார்க்சிய புரிதல் உள்ளோர் பாலின சமத்துவம் ,சுற்றுச்சூழல்
மேம்பாடு , சாதி,மத , குறுகிய வேலிகளைத்தாண்டிய விரிந்த உள்ளம் கொண்டவராவார் . புதியமானுடரை சிருஷ்டிக்கும் பேராற்றல் கொண்ட
வழிகாட்டியே மார்க்சியம் .
எதுவும் இருக்கிற இடத்திலேயே இருப்பதில்லை இயங்கிக் கொண்டே
இருக்கிறது ;மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறீர்கள் ;எப்படியப்பா ? இமயமலை அசைந்து
கொண்டேவா இருக்கிறது ? மாறிக்கொண்டேவா இருக்கிறது ?
முன் கேள்விக்கான பதிலில்
குறிப்பிட்ட மார்க்சிய தத்துவத்தின் – இயங்கியியல் பொருள்முதல் வாதத்தின் முக்கிய நான்கு
விதிகளில் ஒன்றை விளக்கினாலே இக்கேள்விக்கான விடை தெளிவாகும் . “ எதுவும் இருக்கிற
இடத்திலேயே இருந்து கொண்டிருப்பதில்லை . எதுவும் இருக்கிற தன்மையிலேயே இருந்து கொண்டிருப்பதில்லை.”
என்ற கூற்றுடன்தான் இவ்விதி தொடங்குகிறது என்பார் ஜார்ஜ் பொலிட்ஸர் .
இயக்கம் இன்றி எதுவுமில்லை
.அது சரி ! இயக்கம் என்று இங்கு எதைச் சொல்லுகிறோம் ? ஒரு தேங்காயை
உருட்டினால் உருண்டோடும் ; அதனை இயக்கம் என நாம் இங்கு சொல்லவில்லை .
இயக்கம் என்பது ஒவ்வொன்றிலும்
உள்ளுறையாக இருக்கிறது . இங்கு நாம் காணும் தேங்காய் முன்பு என்னவாக இருந்தது ; நாளை
என்னவாகும் ?ஒரு லடசம் வருடங்களுக்கு முன்பு தென்னைமரம் எப்படி இருந்தது ? இப்படி முன்னும்
பின்னுமாய் எழும் கேள்விகளுக்கு விடைதேடப் புகின் மாற்றமும் இயக்கமும் தெளிவாய் புலப்படும்
. நாம் கண்டுபிடித்த சில கணித சூத்திரங்கள் மாறாமல் இருக்கலாம் ; ஆயின் அதிலும் இன்னும்
நுணுக்கமான முடிவுகள் தேவைப்படின் அதற்கொப்ப மாறும் . மாறாதது எதுவுமில்லை .
நேற்று இருந்த நீயா இன்றிருக்கிறார்
; பொதுவாய் சொன்னால் ‘ஆம்’ . ஆனால் தத்துவ
ரீதியாக நெருங்கிச் சொன்னால் ‘இல்லை’. எனெனில்
உன்னுள் பழைய செல்கள் பல அழிந்து புதியன உண்டாகிவிட்டன .நேற்றைவிட இன்று வயது கூடிவிட்டது
. நேற்று புரியாத ஒன்று இன்று புரிந்திருக்கலாம் ; ஒன்றை மறந்திருக்கலாம் ; உன்னுள் ஒவ்வொரு நொடியிலும் மாற்றம்
நிகழந்து கொண்டே இருக்கும் . பிரபஞ்சத்திலும் அப்படித்தான் .சகலமும் அப்படித்தான்
.
இமய மலை மாறுமா ? இயங்குமா
? ஆம் .மாறிக்கொண்டே இருக்கிறது .இயங்கிக்கொண்டே இருக்கிறது .இமயமலை என்பது இந்தப் பூமிக்கிரகத்தில் உள்ள இளம் மலைத் தொடர்களில் ஒன்றாகும். நவீன டெக்டோனிக் கொள்கையின் படி வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது . 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகம் அதிகரித்துமலையை உருவாக்கியது..இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது, இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு ஆசியத் தகடுகள் நுழைவதால் இப் பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது . அண்மையில் நேப்பாள நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிவோம்
. இதுமட்டுமல்ல மலையின் தடப ,வெப்பம் , புவியியல் அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது
. நகம் வளர்வது கண்ணுக்குத் தெரிவது போல் மலைவளர்வதோ அதில் ஏற்படும் துல்லிய
மாற்றங்களோ உடனடியாகக் கண்ணுக்குத்
பளிச்செனப் புலப்படாதிருக்கலாம் ; அவ்வளவுதான் .
“ மாற்றத்தை
தவிர மாறாதது எதுவுமில்லை எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் பொருட்களில்
மாற்றமும் அம்மாற்றத்தின் விதிகளையுமன்றி
மாறாதது எதுவுமில்லை . இயல் பொருள் [ MATTER ] தன்னுடைய அனைத்து நிலைமாற்றங்களிலும் முடிவின்றி அதுவேயாக
இருக்கிறது .. அதனுடைய இயல்புகளில் [attributes ] எதுவும் ஒரு போதும்
இழக்கப்படுவதில்லை .” என்றார் பிரடெரிக் எங்கெல்ஸ் .
“இயக்கத்திலுள்ள பொருட்களைத் தவிர , உலகத்தில்
எதுவும் இல்லை ; இயக்கத்திலுள்ள பொருளானது காலம் [ time ] வெளி
[space] தவிர வேறு எதிலும் இயங்க முடியாது.” என்றார் லெனின் . ஆம்
சூன்யத்திலிருந்து எல்லாம் உருவானதாய் சொல்லும் ஆன்மீக மயக்கத்தை இக்கூற்று
போட்டுடைக்கிறது . தேவைப்படின் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இது குறித்து இன்னும் உரையாடலாம்
.
அப்படியானால் ஒழுக்கமும் மாறுமோ ! மனிதன் விருப்பம் போல்
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் வாழலாம் என தறிகெட்டு ஓடச்செய்யுமோ – சொல்லுமோ உங்கள்
மார்க்சியம் ?
எல்லாம் மாறுமெனில் ஒழுக்கம்
பற்றிய பார்வையும் மாறும் ; காலந்தோறும் மாறிக்கொண்டுதானே இருக்கிறது ; மாறவே இல்லை
என்பது அறியாமையே . ஆதியில் தாய்வழி சமுதாயத்தில் பெண்ணே தலைமயாய் இருந்தாள்.ஆதியில்
யாரோடு உறவு கொள்வதென பெண்ணே தீர்மானித்தாள் .அங்கு உறவு முறை வேறாக இருந்தது . தனிநபர்
சொத்துடைமையைத் தொடர்ந்தே தந்தைமைய சமுதாயமும் , ஒருதாரா மணமும் அமலுக்கு வந்தது .
அதுவும் எல்லா சமூகத்திலும் ஒருபோல் இல்லை . நாளை என்ன மாறுதல் வரும் இப்போது சொல்ல
இயலாது . நேற்று இருந்த கூட்டுக் குடும்ப வாழ்வு இன்று கேள்விக்குறியாகிறது ? இன்றைய
சமூகச் சூழல் அத்தகையது .
ஒழுக்கம் குறித்து பேசாத
மதங்களோ, நீதிநெறி இலக்கியங்களோ,
சமூக சிந்தனையாளர்களோ இருக்கவே
முடியாது. பொய்சொல்லக்கூடாது, திருடக்கூடாது,
குடிக்கக்கூடாது, கொலைசெய்யக்கூடாது, ஏமாற்றக்கூடாது,
வஞ்சகம் செய்யக்கூடாது, புறம்பேசக்கூடாது
இது போன்ற
பொதுவான கட்டளைகளை காலம்
காலமாக கேட்டு
வருகிறோம் . ஆயின் அதன் பொருள் காலம் ,இடம் பொறுத்து மாறுகிறதே !
பொய்சொல்லக்கூடாது என்பது
சரியே. ஆனால்
மத நூல்கள்
சொல்வது எல்லாம்
பொய்தானே. சொர்க்கம், நரகம்
என்பது பொய்தானே. கடவுள்
என்பது பொய்தானே. பாவம்
புண்ணியம் என்பது
வெறும் கற்பிதம் தானே.
பொய் சொல்லக்கூடாது என்று
சொல்லி விட்டு
மதநம்பிக்கையை கைவிடக்கூடாது என்று
சொல்வது முரண்பாடானது அல்லவா ? ஒருவர் சொல்லும் பொய் புனிதமாகிறது ;
இன்னொருவர் சொல்லும் மெய்யும் ஏற்கப்படாமல் ஒதுக்கப்படுகிறது .தூற்றப்படுகிறது .
ஏழை சொல் அம்பலம் ஏறுவதில்லை . இதனை அனுபவம் உணர்த்துமே ! அறிவியல் பார்வை விசாலமானால் ஒழுக்க கோணம் மாறத்தானே செய்யும் !
மாறிக்கொண்டுதானே இருக்கிறது .
திருடக்கூடாது மிகச்சரி. நாகரிக
சமூகத்தில் திருட்டு என்பது
எந்த வகையிலும் ஏற்கத்தக்கது
அல்ல. ஆனால்
சொத்துடமையின் வேர்எங்கே என்று
அலசினால் அது
பிறர்சொத்தை - பிறர்உழைப்பை - பிறர்சேமிப்பை
திருடியது என்கிற
பேருண்மை பளிச்சிடும். இது சுரண்டலின் கூறாக
உள்ளது. அப்படியானால் இந்த
திருட்டை எதிர்ப்பது தேவையா
இல்லையா? பிறர்
பொருளுக்கு ஆசைப்படாதே என இழப்பதற்கு எதுவும்
இல்லாத உழைப்பாளியைப் பார்த்து
ஒழுக்க உபதேசம்
செய்பவர்கள்; சுரண்டலின் அடிப்படையே
அடுத்தவருக்கு உரியதை
அபகரிப்பது என்பதை
உணர்வார்களா? அப்படியானால் இந்த
சுரண்டலை எதிர்க்க வேண்டாமா? எழுகிறது போராட்டம் . சமூகம் மாறுகிறது .ஒழுக்கமும் மாறுகிறது .
கணவனுக்கு அடங்கியவளாகவே மனைவி
இருக்க வேண்டும் அதுவே
பெண்ணுக்குரிய ஒழுக்கம் என்று
இன்றும் நடைமுறையில் சமூக
பொது புத்தியில் வலுவான
கருத்து உள்ளது.
ஆனால் இது
பெண்ணடிமைத்தனத்தின் குரல் அல்லவா?
ஒழுக்கம் என்பது
மனைவிக்கு கணவன்
அடங்குவதோ அல்லது
கணவனுக்கு மனைவி
அடங்குவதோ அல்ல
இருவரும் ஒருவரை
ஒருவர் புரிந்து கொண்டு;
குறை நிறைகளை
அங்கீகரித்து - விட்டுக் கொடுத்து
வாழ்வதே ஆகும்.இப்படி நவீன
ஒழுக்கம் விரிகிறதே !
இதன் பொருள் பொய்சொல் என்பது அல்ல. திருடு என்பது அல்ல. பிறன்மனை திருடு
என்பது அல்ல. மாறாக சமத்துவம், சகோதரத்துவம், தோழமை மிகுந்த; ஜனநாயகம் சார்ந்த
புதிய பார்வை தேவை என்பது தான். எந்த ஒரு பழக்கம், வழக்கம், ஒழுக்கம் ஆனாலும் அது
சாதிய ஆதிக்கத்தை எதிர்க்கிறதா அல்லது மறைமுகமாகவோ, நேரடியாகவோ
கெட்டிப்படுத்துகிறதா? என்ற அளவுகோலால் மதிப்பீடு செய்ய வேண்டும். அதேபோல பெண்
சமத்துவத்திற்கு உகந்ததா எதிரானதா என்கிற தராசில் எடைபோட வேண்டும். சாதி
ஆதிக்கத்தை உடைக்க - பெண் அடிமைத்தனத்தை நொறுக்க நம்மிடம் உள்ள பல பழக்க
வழக்கங்களை ஒழுக்க நியதிகளை தலைகிழாக மாற்றியாக வேண்டும்.காலமும் கள்மும் அதனை உறுதி செய்கிறது . அதற்கான போராட்டம் துவங்கிவிட்டதே !
இப்படிப் போராடுகிற போது உன்னை கலகக்காரன் அடங்காதவன் வில்லங்கமான பேர்வழி என
சனாதன பேர்வழிகள் வசைமாரி பொழியலாம். அதனை ஏற்றுக் கொண்டு தான் இந்த
சமூகத்தை மாற்ற முடியும். ஒழுக்கம்
பற்றிய பார்வையும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது .. இனியும் அப்படித்தான் சமூகத்
தேவைக்கு ஒப்ப மாறும் …
நன்றீ : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 11 அக்டோபர் 2015
1 comments :
பல விளக்கங்கள் தரும் தெளிவான கட்டுரை..
Post a Comment