மரங்களைப் பாதுகாப்பதும் மரத்தடி வழிபாடும்..

Posted by அகத்தீ Labels:




மரங்களைப் பாதுகாப்பதும் மரத்தடி வழிபாடும்

சு.பொ. அகத்தியலிங்கம்


·         காடுகளை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என இப்போது உரக்கப் பேசுகிறீர்கள் … மரத்தடியில் அம்மனையும் பிள்ளையாரையும் வைத்து மரத்தை வழிபடச் செய்து மரத்தை வனத்தைப் பாதுகாத்த எம்முன்னோர்களை கேலிபேசாமல் உணர்ந்து பின்பற்றக்கூடாதா? 

·         “ ஒரு கையில் பைபிள் ; மறு கையில் ரைபிள்” என லத்தின் அமெரிக்க மக்கள் போராட முடியுமென்றால், அந்த  “விடுதலை இறையியல்” பார்வையை இந்து மதத்துக்கு ஏன் பொருத்தக்கூடாது ?

·         கோவில்கள் மன அமைதியைத் தருகின்றன . அதை ஆழ்ந்து அனுபவிக்காமல்   அங்கு உள்ள ஆபாச சிலைகளையும் சித்திரங்களையும் மட்டுமே பார்த்துவிட்டு ஆபாசம் அருவருப்பு எனக் கூச்சலிடலாமா? உங்கள் பார்வைக் கோளாறை ஆன்மீகத்தின் மீது சுமத்தலாமா?

·         “இதுவா, அதுவா, அல்லது ஒற்றையா, இரட்டையா” என கறாராகக் கூறாமல் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம்; சரியாகவும் இருக்கலாம் தப்பாகவும் இருக்கலாம் என்றெல்லாம் வளவள கொள கொளவெனப் பேசுவதன் பெயர்தான் சித்தாந்தமா?

·         ஆன்மீகம் மனம் சம்மந்தப்பட்டது; சரித்திரம் என்பது மன்னர்களின் போர்கள் ஆட்சிமுறை சம்மந்தப்பட்டது. இரண்டையும் போட்டுக் குழப்புவதற்குப் பெயர்தான் மார்க்சியமோ ?


ஒரு பக்கம் மதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறவர்கள் கொல்லப்படுகிறார்கள் . மிரட்டப்படுகிறார்கள். விவாதங்களை முறையாக நடத்தவிடாமல் அங்கும் இங்குமாய் தாவித்தாவி சீர்குலைக்கிறார்கள்.  ஆயினும்  மார்க்சியவாதிகள் இதற்கெல்லாம் பின்வாங்கிவிடப்போவதில்லை, எந்தக் கேள்விகளையும் தவிர்க்கப்போவதில்லை.


காடுகளை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என இப்போது உரக்கப் பேசுகிறீர்கள் மரத்தடியில் அம்மனையும் பிள்ளையாரையும் வைத்து மரத்தை வழிபடச் செய்து மரத்தை வனத்தைப் பாதுகாத்த எம்முன்னோர்களை கேலிபேசாமல் உணர்ந்து பின்பற்றக்கூடாதா?


மரங்களை , வனத்தைப் பாதுக்காப்பதில் நம் முன்னோர்கள் நம்மைவிட பலபடி முன்னோடியாக இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை . இயற்கையைக் கொண்டாடிய முன்னோர்கள் மரங்களை , வனத்தைக் கொண்டாடியதில் வியப்பில்லை . 
தமிழ்கூறும் ஐவகை நிலத்தில் ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய மரம் என குறிப்பிட்டுப் போற்றினர். குறிஞ்சி நிலத்துக்குரியன ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில், அசோகம் அல்லது அரசமரம், நாகம், மூங்கில். முல்லை நிலத்துக்குரியன கொன்றை, காயா, குருந்தம். மருதத்துக்குரியன காஞ்சி, வஞ்சி , மருதம். நெய்தல் நிலத்துகுரியன கண்டல், புன்னை, ஞாழல். பாலை நிலத்துக்குரியன உழிஞை , பாலை,  ஓமை ,இலுப்பை  என தொல்காப்பியம் விவரம் தருகிறது .


சேரன் போந்தை (பனை) மலரையும், சோழன் அத்தி மலரையும், பாண்டியன் வேம்பு மலரையும் அடையாள மலராகக் கொண்டிருந்தனர் என்று புறநானூறு இயம்புகிறது. சங்கத்தமிழ்இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின்பெயர்கள் காணப்படுகின்றன. இவை 150 தாவரங்களையே குறிப்பிடும். காரணம் ஒரே தாவரத்துக்கு வெவ்வேறு புலவர்கள் வெவ்வேறு பெயர்களைக் கூறியுள்ளதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


மரங்களோடு அன்றைய மனிதன் உறவு உயிர்துடிப்பு மிக்கது. அதன் ஒரு கூறுதான் தான் மர வழிபாடும். கடவுள்களை தான் விரும்பும் மரத்தோடு இணைத்துப் பார்த்தான். உலகெங்கும் பொதுவாக தொல்குடி மரபில் இயற்கையை வனத்தை மரங்களை செடிகொடிகளை போற்றும் வழக்கமும் வழிபடும் வழக்கமும் உண்டு. இயற்கையோடு இயைன்று வாழ்ந்த மனிதப் பண்பாட்டின் நீட்சி அது .பெரு நிறுவன மதங்களும் கடவுளர்களும் தலையெடுக்கும் முன்பே நாட்டார் மரபிலும் தொல்குடி மரபிலும் தோன்றிய வழிப்பாடாகும். அதனை இன்றைய நிறுவன மதங்கள் சொந்தம் கொண்டாடி தமதாக்க முயல்கின்றன. கடவுள்களை இணைத்ததால்தான் மரங்களை மனிதன் பாதுகாத்தான் என இன்றைக்கு வலிந்து அதற்கு காரணம் கற்பிப்பது சரியல்ல. தொல்குடி மனிதன் மரங்களை காதலித்ததால்தான் - உயிராக நேசித்ததால்தான்அதனை வழிப்பாட்டோடு இணைத்தான் என்பதே சரியான பார்வையாகும் .


இவ்வளவு இருந்தும் மரங்கள், வனங்கள் வேகமாக அழிக்கப்படுவதேன்? எல்லாம் சரி ; இன்று இம்மரங்களின் பெயர்கள்கூட நமக்கு பிடிபடவில்லையே ! ஏன் ? என்ன ஆனது ? எதையும் வெறுமே வழிபாட்டுச் சடங்காக மாற்றும் போது அதன் வீச்சு குறையும் ; குலையும் ; திரியும் . இங்கேயும் அதுவே நடந்தது .நம் முன்னோர்களை சரியாக நாம் உள்வாங்க வேண்டும் . வெறுமே வழிபட்டுப் பயனில்லை .


அம்மன் சிலையோ வேறு ஏதேனும் சாமியோ  ,வழிபடும் நடுகல்லொ இருப்பதாகக் கருதி வழிபட்ட ஒரு மரம் கோடாலிக்குத் தப்பினால் ; சிலையோ வழிபாட்டு நடுகல்லோ இல்லாத  – வழிபடாத நூறுமரங்கள் கோடாலியால் வெட்டுண்டு வீழ்ந்தன. ஒரு வேப்பமரமோ அரசமரமோ அந்த இடத்தில் புனிதமாக மாறியபோது ஏனைய மரங்கள் வெறும் மரங்களாயின என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இப்படி சாமியும் வழிபாடும் ஒரு சில மரங்களோடு குறுக பெருவாரியான மரங்கள் அழிக்கப்பட்டன என்பதே  நிஜம் .  இப்போது கூட புதிய ரியல் எஸ்டேட் மனைகள் உருவாக்கும் போது நடுவில் ஒரு வேப்பமரமோ, அரசமரமோ தனித்து சாமியோடு நிற்கக்காணலாம் ; ஆனால் அதனைச் சுற்றி இருந்த எண்ணற்ற மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு அங்கு காங்கிரீட் காடாக கட்டிடங்கள் எழுவதைப் பார்க்கலாம் .


வனத்தை மரத்தைப் பாதுகாப்பதென்பது வழிபாட்டு சமாச்சாரமல்ல ; மாறாக  சுற்றுச் சூழல் பாதுகாப்பு, புவிசமநிலை பேணல் என அறிவியலோடு சம்மந்தப்பட்டது . இந்த விழிப்புணர்வை பொது புத்தியில் ஏற்றினால் மட்டுமே மரம் வளர்ப்பதும் , வனம் காப்பதும் சாத்தியமாகும் .சடங்குகள் மூலம் சமூகத்தை காக்கவும் இயலாது ; முன்னேற்றவும் இயலாது .அதுவும் பன்னாட்டு மூலதன கொள்ளைக்கு இயற்கை வெகுவேகமாக பலியாக்கப்படும் இன்றையச் சூழலில் மரங்களை கும்பிட்டுப் பாதுகாக்க முடியாது ; அறிவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விழுப்புற்று எழுவதே ஒரே வழி . மாறாக சாமி, சடங்கென மடைமாற்றுவது தீர்வல்ல; பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்துவிடும். பெரும் செலவில் ஒரு மரத்தைச் சுற்றி கோயில் கட்டிவிட்டு மொத்தக் காட்டையும் அழிப்பவர்களுக்கே – அந்த  வனக்கொள்ளையர்களுக்கு உதவுவதாகவே அது மாறிவிடும் அபாயமும் உண்டு .கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் முதல் இன்றைய இந்துத்துவ பிரச்சாரகர் வரை தங்கள் மதப்பிரச்சார நோக்கிற்கு மரத்துக்கும் சாமிக்கும் உள்ள முடிச்சுக்கு விதவிதமான வியாக்கியானம் சொல்வதில் சரியான அணுகுமுறையோ தீர்வோ கிடையாது!


“ஒரு கையில் பைபிள்; மறு கையில் ரைபிள்” என லத்தின் அமெரிக்க மக்கள் போராட முடியுமென்றால், அந்த  “விடுதலை இறையியல்” பார்வையை இந்து மதத்துக்கு ஏன் பொருத்தக்கூடாது ?

மதவாதம் தலைதூக்கும் இன்றையச் சூழலில் இக்கேள்வி அதிமுக்கியத்துவம் உடையது . கியூபநாட்டின் பெரும் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோவுடன் பிரேசில் நாட்டுப் பாதிரியார் ஃபிரே பெட்டோ பேட்டி கண்டு புத்தகமாக வெளியிட்டார் (அது தமிழில் ‘மதம்- மக்கள் – புரட்சி’ என்ற பெயரில்  நூலாக வந்துள்ளது).
கியூபாவில் கத்தோலிக்கர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்துக்கொள்ளாத ஒரு காலகட்டம் இருந்ததையும் , தற்போது ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நெருங்கி வருவது குறித்து இந்த பேட்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அனுபவம் சார்ந்த ஒரு வழிகாட்டல் . இதை அப்படியே நகலெடுக்க முடியாது எனினும் வரலாற்றுப் போக்கில் மதநம்பிக்கையாளர்களோடு உள்ள உறவுகளை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்கிற பொதுப் புரிதலைக் குறிக்கிறது.

ஏசு எப்படி ஏழைகளோடு நெருக்கமாக இருந்தார் என்கிற மைய இழையைச் சுற்றியே விவாதம் பெரிதும் நகர்ந்தது.  உரையாடலின் ஒரு கட்டத்தில் கிறிஸ்துவத் துறவி ஃப்ரே பெட்டோ இப்படிக் கூறுகிறார்:  “ஏழைகளிடமிருந்து விலகுகிறவன் எவனோ அவன் ஏசுவிடமிருந்தும் விலகுகிறான் என்று ஒரு முறை நீங்கள் (காஸ்ட்ரோ) சொன்னீர்கள்.  அது ஒரு புகழ் பெற்ற கருத்தாகிவிட்டது என்பது மட்டுமல்ல. –நிச்சயமாக நான் இதைச் சொல்வேன். அதுதான் விடுதலை இறையியல் கோட்பாட்டின் அடிப்படையாகவும் இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. அத்துடன் உங்கள் கருத்து போப் இரண்டாம் ஜான் பால் சுற்றுக்கு அனுப்பிய ‘ லேபரெம் எக்ஸர்சென்ஸ்’ நூலோடு ஒத்துப் போகிறது. மனித உழைப்பு குறித்து ஆராய்கிற நூல் அது. அதில் ஏழைகளுக்குக் கடமைப்பட்டிருப்பதுதான் கிறிஸ்துவின் திருச்சபை மீதான விசுவாசத்திற்கு அடியாதாரம் என்று குறிப்பிடுகிறார் .”

 கிறிஸ்துவம் – மார்க்சியம் இவைகுறித்து லத்தின் அமெரிக்க அனுபவம் அப்படியே இந்தியாவில் இந்து மதத்திற்குப் பொருந்துமா ? ஆம் என்றோ இல்லை என்றோ ஒற்றை வரியில் பதிலளிப்பது சரியாக இருக்காது.  நெடிய விவாதம் தேவை.

இந்திய சமூகத்தில் அடிநாதமாக இருப்பது சாதியக் கருத்தோட்டமா? மதக் கருத்தோட்டமா? பைபிள் கதைகளில் கருப்பர் வெள்ளையர் நிற வேற்றுமைக்கு ஒரு கதைக் கூறப்பட்டிருப்பினும் அது பைபிளின் அடிப்படை போதனையாக மாறவில்லை .ஆனால் அதையும் , சதுவர்ணம் மயா சிருஷ்டம் (நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்) என்று பகவானே சொல்லுவதாகக் கீதையில் கூறப்பட்டிருப்பதையும் ஒப்பிட முடியாது. மநு போன்று அங்கு யாரும் மனிதனை மனிதன் இழிவு படுத்துவதை நியாயப்படுத்தி அதற்கொரு  “வர்ண வியாவஸ்தம்” என்கிற படிநிலை வாழ்க்கை முறையையும், கட்டாய ஒழுங்கையும் கற்பித்துவிடவில்லை. இது அடிப்படையானது அல்லவா? இதைக் கூறுவதன் மூலம் இந்து மதத்தையும் கிறிஸ்துவ மதத்தையும் ஒப்பிடுவதாக கருதிவிடக்கூடாது. இரண்டின் மீதும் எமக்கு விமர்சனம் உண்டு .மாறாக ,  இங்கு நம் நாட்டிலே வேரோடிப் போயிருக்கிற சாதி அகம்பாவம் குறித்த பார்வையை உதறிவிட்டு மதம் சார்ந்த உரையாடலை நிகழ்த்த முடியுமா என்பதுதான் அடிப்படையான கேள்வி.

காஸ்ட்ரோ ஒரு இடத்தில் சுட்டுவதை இங்கு அடிக்கோடிடுவது பொருத்தமாக அமையும் என்று கருதுகிறேன். “உங்களுக்கு 3000 கலொரி ஒதுக்கப்படவேண்டும் .ஆனால்  1500 கலோரிகள்தான் கிடைக்கிறது என்பதால் மட்டும் நீங்கள் துன்பப்படுவதில்லை. வேறொரு துன்பமும் இருக்கிறது. அதுதான் சமுதாய சமத்துவமின்மை [ அழுத்தம் எமது ]அது உங்களை அடித்தளமே இல்லாதவராக – மனிதர் என்ற மரியாதைகூட மறுக்கப்பட்டவராக உணரச் செய்கிறது . ஏனென்றால் எவரும் உங்களைப் பற்றி நினைப்பதில்லை. நீங்கள் குப்பை போல , நீங்கள் இல்லவே இல்லாதது போல நடத்தப்படுகிறீர்கள். சிலர் எல்லாமுமாக இருக்கிறார்கள் . நீங்களோ எதுவுமே இல்லாதவராக நிற்கிறீர்கள்”

இந்த ‘ சமூக சமத்துவமின்மை’ என்பது இந்திய சமூகத்தின் அடித்தளமாக உள்ளது. அது இங்கு இந்து மதத்தில் மட்டுமல்ல , கிறுத்துவத்திலும் – இஸ்லாமிலும் - எல்லா மதத்திலும் ஊடும் பாவுமாய் கிடப்பது இந்த சமூக சமத்துவமின்மை என்பது உண்மை அல்லவா?


ஆகவே இங்கு இந்தியாவில் கிறுத்துவ விடுதலை இறையியலொ அல்லது இந்து விடுதலை இறையியலொ அல்லது வேறெந்த மதவிடுதலை இறையியலொ சாத்தியமல்ல .


கோவில்கள் மன அமைதியைத் தருகின்றன . அதை ஆழ்ந்து அனுபவிக்காமல்   அங்கு உள்ள ஆபாச சிலைகளையும் சித்திரங்களையும் மட்டுமே பார்த்துவிட்டு ஆபாசம் அருவருப்பு எனக் கூச்சலிடலாமா? உங்கள் பார்வைக் கோளாறை ஆன்மீகத்தின் மீது சுமத்தலாமா?


மனநிம்மதிக்காகவோ , சுயதிருப்திக்காகவோ  ஒருவர் கோவிலுக்குப் போவதை யாரும் இங்கு கேள்விக்கு உட்படுத்தவில்லை . அது அவரின் உரிமை . விருப்பம் . ஆனால் அவர் விரும்பும் மன நிம்மதியோ சுயதிருப்தியோ கோயிலில் கிடைக்குமா ? கிடைக்கிறதா? இவையே நமது கேள்வி . சமூக நெருக்கடியிலிருந்தும்  -சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு நெருக்கடிகளிலிருந்தும் விடுபட்டு தனிநபர் நிம்மதி எங்ஙனம் என்பதே அடிப்படைக் கேள்வி . 
கோவில் கொடியவர்களின் கூடாரமாக – வெறும் வியாபார மையமாக மாறிக்கொண்டிருக்கிறது என நாத்திகரல்ல ; மகாத்மா காந்தி போன்ற பழுத்த ஆத்திகர்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்தது நடப்பு அனுபவம் . 
அது இருக்கட்டும் மேலே கேட்ட கேள்விக்கு வருவோம்.

சிற்பமும் ஓவியமும் அவை படைக்கப்பட்ட காலத்தின் வெளிப்பாடு . பாலியலை மனித சமூகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாய்ப் புரிந்து கொண்டது. கலைப் படைப்புகளில் அவை வெளிப்பட்டன . இவற்றை ஆபாசம் அருவருப்பு என ஒதுக்காமல் கலைக் கண்ணோடு அந்தந்த காலத்தோடுப் பொருத்திப் பார்த்து ரசிப்பதில் பிழையில்லை எனக் கருதுகிறேன்.

அதே சமயம் புராணப் புனைவுகளுக்கு அதீத புனிதம் கற்பித்து அதனை நம்பச் சொல்லும் போது எதிர்வினையாய் இந்த ஆபாசம் பொது அரங்கில் விவாதத்துக்கு வருவது தவிர்க்க இயலாது.  ஆயினும் இத்தகைய வறட்டு விவாதம்  அறியாமையிலிருப்பவனை வென்றெடுக்க உதவாது என்பதை நாத்திகர்கள் உணரவேண்டும் . மனதில் பதிய வேண்டும். 

பாலியல் மற்றும் ஆபாசம் குறித்த பார்வை என்பதும் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் . சும்மா போகிற போக்கில் சொல்வதானால் ‘வெண்ணிற ஆடை’ என்ற திரைப்படம் வயதுவந்தோர் மட்டும் பார்ப்பதற்குரியது என்ற ‘ஏ’ சான்றிதழுடன் வந்தது. ஆபாசம் எனப்பேசப்பட்டது . சிவாஜி கணேசன் நடித்த ‘செல்வம்’ படம் வந்த போது அப்போது பதின் பருவத்திலிருந்த என்வயதொத்தவர்கள் அப்படத்தைப் பார்க்கக் கூடாதென பெரியவர்கள் தடை போட்டனர். இப்போது திரைப்படம் எப்படி உள்ளது? குடும்பமே டி.வி. பெட்டி முன்னால் உட்கார்ந்து முகத்தைச் சுழிக்காமல் பார்த்து ரசிக்கிறதே. பண்பாடு என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே இருப்பதாகும் . 


இதைப் புரிந்து கொள்ளாமல் மதவெறி பிடித்த கலாச்சார அடியாட்கள் கொலைவாளைச் சுழற்றும்போது எதிர்வினையாய் கோவில் மற்றும் புராண ஆபாசங்களைக்  கிளறவேண்டியிருக்கிறது. மனம் திறந்த அறிவியல் பூர்வமான விவாதத்திற்கு சமூகம் பக்குவப்படும்போது இப்பிரச்சனை எழாது.


இதுவா, அதுவா, அல்லது ஒற்றையா, இரட்டையா” என கறாராகக் கூறாமல் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம்; சரியாகவும் இருக்கலாம் தப்பாகவும் இருக்கலாம் என்றெல்லாம் வளவள கொள கொளவெனப் பேசுவதன் பெயர்தான் சித்தாந்தமா?

இது மேம்போக்காகப் பார்த்தால் ஒரு அசட்டுக் கேள்வி ; ஆனால் உற்று நோக்கின் ஆழமான தத்துவக்  கேள்வி .தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் , அது தெளியாமல் போனாலே வேதாந்தம் என ஒரு பாடலில் கண்ணதாசன் சொல்லிவிட்டுப் போவான் .அப்படி எளிய சூத்திரத்தில் அது அடங்குவதல்ல . 


“ ஒவ்வொன்றும் அது எதுவாக இருக்கிறதோ அதுவாகவே இருக்கிறது, வெறொன்றாக இருப்பதில்லை...” இப்படி சில ஆன்மீகவாதிகள் முத்துகளை உதிர்க்கும் போது சாமானியன் பிரமித்துப் போகிறான் .  

“இது பகலா ? இரவா ? ஒன்றில் பகலென்று சொல் அல்லது இரவென்று சொல் . குழம்பாமல் தெளிவாக இருக்கவேண்டும் . திட சித்தம் வேண்டும்...” – இப்படி ஆன்மீகவாதி வார்த்தைத் தோரணம் கட்டுகிறபோது அது மெய் போன்ற தோற்ற மயக்கம் ஏற்படும். உலகில் ஒரு பகுதியினருக்கு இரவாய் இருப்பது இன்னொரு பகுதியினருக்கு பகலாய் இருக்கிறது என்கிற உண்மை அவர்களுக்கு ஒருவேளை தெரியாமல் இருக்கலாம், அல்லது தெரிந்தே பொய் சொல்லலாம். அங்கு பகலும் அப்படியே குத்துக்கல்லாட்டம் நிற்கவில்லை. இரவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதும் மெய்யல்லவா? இது மயிர் பிளக்கும் வாதமல்ல உண்மை .

இங்கே இந்த அறையில் எத்தனை பேர் வழுக்கைத் தலையர்கள் . வழுக்கைத் தலையர் / முடியுள்ளோர் என இரண்டாகப் பிரிக்க முடியுமா ? இது அல்லது அது என பிரிக்கமுடியுமா? முடியாது முழுவழுக்கை , அரைவழுக்கை , கால்வழுக்கை , பின் வழுக்கை , முன் வழுக்கை என எத்தனை எத்தனை வேறுபாடுகள்? ஒவ்வொருவர் தலையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றனவே ! முடி உதிர்ந்துகொண்டும் வளர்ந்து கொண்டும் இருகின்றனவே, உதிர்தல் அதிகமானால் வழுக்கையை நோக்கி – வளர்தல் அதிகமானால் கிராப் /கூந்தலை நோக்கி;  இதுதானே யதார்த்தம்!
இது அல்லது அது என மாறாத அசையாத நிலையில் உலகம் இருப்பதாய்க் கருதுவது பிழையானது ; பலதவறான விழைவுக்கு இட்டுச் செல்லும் .  இதனை  “ மீ பொருண்மைவாதம்” அல்லது  “ மாறா நிலை வாதம்” என்பர். இதனை மார்க்சியம் நிராகரிக்கிறது. 

எதையும் இயங்கு நிலையிலும் - மாறிக்கொண்டே இருக்கிறது என்கிற சாராம்சத்திலும் புரிந்து கொள்வதே நல்லது. எதையும் முடிந்து உறைந்து போன ஒன்றாகக் கருதாமல் சந்தேகத்தோடு அணுகுவதும் ஆய்வதும் அறிவியலின் வாசலைத் திறக்கும் அல்லவா?


ஆன்மீகம் மனம் சம்மந்தப்பட்டது; வரலாறு என்பது மன்னர்களின் போர்கள் ஆட்சிமுறை சம்மந்தப்பட்டது. இரண்டையும் போட்டுக் குழப்புவதற்குப் பெயர்தான் மார்க்சியமோ ?

இந்த வாதமே அடிப்படையில் தவறானது. ஒவ்வொன்றுக்கும் ஒரு  வரலாறு உண்டு . அறிவியலாகட்டும் – ஆன்மீகமாகட்டும் – பண்பாடாகட்டும் – அரசியலாகட்டும் – பழக்க வழக்கங்களாகட்டும் – கடவுளாகட்டும் – மதங்களாகட்டும் – எதுவாகட்டும் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உண்டு .  வரலாற்றோடு ஒவ்வொன்றையும் ஊடுருவிப் பார்க்கும்போது மட்டுமே அதனை சரியாக உள்வாங்க முடியும். பல கேள்விகளுக்கு மார்க்சியவாதிகள் இவ்வாறாக விடைதேடி  அணுகியிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம் .

அதே சமயம் வரலாற்றை எப்படி அணுகுவது என்பதிலும் தத்துவப் பார்வை உண்டு . வரலாறு என்பதை வெறும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக பார்க்காமல் அதன் ஊடும்பாவுமாய் அதனை இயக்கிய சக்தி எது என்பதும் அடிப்படையான கேள்வியாகும் . அதற்கு விடை கண்டதே மார்க்சியம்.

மார்க்சியவாதிகள்  “வரலாற்றுப் பொருள் முதல் வாதம்” எனக் குறிப்பிடுவதைத்தான் கேள்வியாளர் குழப்பியிருக்கிறார். அது குறித்து இத்தொடரில் கடைசிப் பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம். ஆன்மீகம் என்பது வெறும்  மனம் சம்மந்தப்பட்டதாகக் கூறுவதேகூட தவறானதாகும் . அது ஒரு தத்துவ நிலை . அது சமூக அமைப்பை எப்படிப் பார்க்க வேண்டும் , எப்படி அணுக வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும் . அதாவது சமூகம் என்கிற பொதுவெளியிலிருந்து தனிமனிதனாகப் பிரித்து கூண்டுக்குள் ஒடுங்கச் சொல்வதன் மூலம் ஆன்மீகம் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுரண்டும் வர்க்கத்தின் கேடயமாகிறது .

வரலாறு, தத்துவம் , அரசியல் , பொருளாதாரம் எதுவுமே ஒன்றோடொன்று தொடர்பற்ற தனித்தனி கூடுகளல்ல; மாறாக ஒன்றையொன்று சார்ந்தும் ஊக்குவித்தும் வினையாற்றியும்இயங்குவனவே !

நன்றி : தீக்கதிர் , வண்ணக்கதிர் 20-09-2015
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


2 comments :

  1. இளங்குமரன்

    ///தொல்குடி மனிதன் மரங்களை காதலித்ததால்தான் - உயிராக நேசித்ததால்தான்அதனை வழிப்பாட்டோடு இணைத்தான் என்பதே சரியான பார்வையாகும் ./// தங்களின் இந்தக் கருத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன்...

  1. இளங்குமரன்

    //தொல்குடி மனிதன் மரங்களை காதலித்ததால்தான் - உயிராக நேசித்ததால்தான்அதனை வழிப்பாட்டோடு இணைத்தான் என்பதே சரியான பார்வையாகும் ./// இந்தக் கருத்து மிகத் தெளிவாகப் புரிகின்றது... பல கருத்துகள் குறிப்பாக மார்க்சியம் குறித்த கருத்துகள் முதல் முறை படிக்கும் போது புரிவது போல இருந்தாலும் அவற்றினை விவாதித்து விளக்கிச் சொல்ல என்னால் முடியவில்லை...
    ///சமூக நெருக்கடியிலிருந்தும் -சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு நெருக்கடிகளிலிருந்தும் விடுபட்டு தனிநபர் நிம்மதி எங்ஙனம் என்பதே அடிப்படைக் கேள்வி . /// உண்மைதான் ஐயா... சமூகத்தை நேசிக்கும் ஒருவன் இன்றைய சூழலில் எங்கு சென்றாலும் நிம்மதியாக இருக்க முடியாத நிலைதான் உள்ளது.

Post a Comment