புள்ளிவுவரங்கள்
புள்ளிவிவரங்களை கேட்டுக் கேட்டு சலித்துவிட்டோம்
உங்கள்
புள்ளிவிவரங்கள் ஒருபோதும் உண்மையைப் பேசியதில்லை
வளர்ச்சி வந்து விட்டதாய் ஒரு புள்ளிவிவரம்
வறுமை இன்னும் நீடிக்கிறதென இன்னொரு புள்ளிவிவரம்
ஆளும்கட்சியாய் இருக்கையில் ஒரு புள்ளிவிவரம்
எதிர்கட்சியாய் இருப்பின் இன்னொரு புள்ளிவிவரம்
தேர்தல் நேர வாய்ப்பறையில் ஒரு புள்ளிவிவரம்
சிம்மாசனம் ஏறியதும் திருவாய் மலரும் இன்னொரு புள்ளிவிவரம்
புள்ளிவிவரங்களை கேட்டுக் கேட்டு சலித்துவிட்டோம்
உங்கள்
புள்ளிவிவரங்கள் ஒருபோதும் உண்மையைப் பேசியதில்லை
சராசரி வளர்ச்சி விகிதம் கூடியதென ஒரு புள்ளிவிவரம்
சராசரி மனிதன் வாழ்க்கை வீழ்வதை மறந்த புள்ளிவிவரம்
அவரவர் வசதிக்கு ஏற்ப வியாக்கியானம் செய்ய புள்ளிவிவரம்
அடிவயிற்று பசியை ஒரு போதும் போக்காத புள்ளிவிவரம்
பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு பதறுகிற ஊடகம்
அழியும் விவசாயியின் வாழ்வு குறித்து அலட்டிக் கொள்வதில்லை
புள்ளிவிவரங்களை கேட்டுக் கேட்டு சலித்துவிட்டோம்
உங்கள்
புள்ளிவிவரங்கள் ஒருபோதும் உண்மையைப் பேசியதில்லை
அம்பானி அதானி வகையறாக்களின் கால்குலேட்டர்கள் போடும் கணக்கு
அடித்தட்டு மக்களை மறந்த தப்புக்கணக்கு ..
சிதம்பரமோ ஜெட்லியோ வார்த்தை ஜாலத்தின் அடிநாதம் ஒன்றுதான்
பெருமுதலைக்கு ஊட்டிவிடு ! இல்லாதவன் வாயிலிருப்பதையும் பிடுங்கு !
மோடியோ மன்மோகனோ வரைந்த திட்டங்களால்
சாண் ஏறாமலே முழம் சறுக்கும் ஏழைக்கு !
இனியேனும்
எங்கள் வயிற்றின் சுருக்கங்களிலிருந்து
உங்கள் கணக்கீட்டைத் துவங்குங்கள் !
பங்குச்சந்தை எக்கேடாவது கெட்டுத் தொலையட்டும்
பசிவயிறு நிரம்ப வழி காணுங்கள்
மேட்டுக்குடியினரின் பாராட்டுப் பத்திரத்தை கசக்கி எறியுங்கள் !
வீட்டுக்கு வீடு வெம்பியழும் குரலைக் கேளுங்கள் ..
புள்ளிவிவரங்களை கேட்டுக் கேட்டு சலித்துவிட்டோம்
உங்கள்
புள்ளிவிவரங்கள் ஒருபோதும் உண்மையைப் பேசியதில்லை
சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment