தலைப்பு நீங்களே சூட்டிக் கொள்ளுங்கள்

Posted by அகத்தீ Labels:



தலைப்பு நீங்களே
சூட்டிக் கொள்ளுங்கள்
----------------------------------------
சு.பொ.அகத்தியலிங்கம் .
----------------------------------------------

இப்போதெல்லாம்
பொய் எனக்கும் உனக்கும்
ரொம்பவே பிடித்துப் போகிறது ..

பொய்யில்லாமல்
வாழ்க்கை நகர மறுக்கிறது ..

பொய் சூழ் உலகில்
மெய்சொல்லி பிழைத்தவரில்லை
பொய் சொல்லாது
பிழைப்பு நடப்பதில்லை ..


அரசியல் , சரித்திரம் , ஆன்மீகம்
எங்கும் பொய் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது ..

வர்த்தகத்தின் அடிநாதமே
பொய்யென பொழிப்புரை எழுதியாயிற்று ..

பொய்யைக் கேட்டுக்கொண்டிருக்கவே
தொலைகாட்சியும் , கணினியும்
அலைபேசியும் , ஊடகங்களும்
இப்போதெல்லாம்
24 X 7 மணி நேரமும் நம்மோடு ….


கடன்காரனிடம் சொல்லும் பொய்களும்
விடுப்பெடுக்கச் சொல்லும் பொய்களும்
ஒருபோதும்
பொய்யென கொள்ளப்பட மாட்டாது ..


செத்தவருக்கு அஞ்சலி செலுத்த
சொல்லும் பொய்களை
எந்தக் கணக்கில் வைப்பதென
இதுவரை எந்த முடிவுமில்லை …

பாராட்டிப்பேச பொய்யே துணை
பதவியும் பணமும்
பொய்யின்றி வந்து சேராது ..



வீட்டில் சொல்லும் பொய்
அலுவகத்தில் சொல்லும் பொய்
நண்பர்களிடம் சொல்லும் பொய்
இவற்றில் வேறுபாடுகளுண்டு
ஆயினும்
சொல்லுவது பொய்யென்பதில்
எல்லோரும் அறிவோம்

மெய்யே பேசுவதாய் சத்தியம் செய்து
பொய்யே பேசிக்கொண்டிருக்கிறோம்

கொஞ்சம் மெய்யை பேசத்துவங்கினால்
வீட்டில் தொடங்கி வீதிவரை
முட்டலும் மோதலும்
தொடர்கதையாகும்..

மெய் ஒரு போதும்
யாருக்கும் எப்போதும்
ஜீரணமாவதே இல்லை .

ஆனாலும்
மெய்யே பேசவேண்டுமென
பொய்யே பேசிக்கொண்டிருகிறோம்.

அது சரி !
எது மெய் ?
எது பொய்?

புரைதீர்ந்த நன்மை
பயப்பதைச் சார்ந்தது விடை ..



0 comments :

Post a Comment