ஏன் இந்தியா எப்போதும் பிரச்சனையில் ..

Posted by அகத்தீ Labels:











படங்கள் சொல்லும் பாடம் ..

ஏன் இந்தியா எப்போதும் பிரச்சனையிலே இருக்கு ……

சு.பொ.அகத்தியலிங்கம் .

இங்கே மூன்று படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன . இவற்றில் இரண்டு படங்கள் சமூக வலைதளங்களில் பிகவும் பிரபலமாக வலம் வருகிறது ;இன்னொன்று பதிலடி என்கிற முறையில் அங்கொன்று இங்கொன்றாகப் பதிவு செய்யப்படுகிறது .

இன்னொரு செய்தி கீழே ;அதுவும் சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் பதியப்படுகிறது .

 “ஏன் இந்தியா எப்போதும்
பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
இதில் 9 கோடி பேர் ஓய்வு
பெற்றவர்கள்
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(ரென்டுபேருமே வேலை
செய்றதில்லை)
1 கோடி IT ஆளுங்க (அவங்க
என்னைக்கு இந்தியாக்கு
உழைச்சாங்க?)
25 கோடி பேர் பள்ளியில படிப்பவர்கள்
1 கோடிபேர் 5வயசுக்கும்
கீழானவர்கள்
15 கோடி பேர் வேலை தேடுவோர்
1.2 கோடி பேர் நோயால்
மருத்துவமனையில் இருப்போர்
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு (ஒரு
புள்ளி விபரத்தின்படி) 79,99,998 பேர்
ஜெயிலில் கம்பி எண்ணுகின்றனர்
மிச்சம் இருப்பது நீங்களும் நானும்
நீங்க எப்ப பார்த்தாலும் ‘ வாட்ஸ் அப்’ [what's app],முகநூலில்
[Facebookல்] பிஸி
அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா
எப்படி இந்தியாவை காப்பாத்துவேன் ?”

வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும் பொழுதைக் கொல்லும் ஒரு வித கலாச்சாரத்தைக் கேலி செய்வதற்காக இந்த நகைச்சுவை எழுதப்பட்டிருக்கலாம் . அந்தக் கோணத்தில் மட்டுமே ஆயின் ரசித்து தொலைக்கலாம் . ஆயின் அதன் உள்ளீடாக ஒரு தத்துவம் பொதிந்துள்ளது . அதனைப் பார்த்தாக வேண்டும்.

 சமூக வலைதளங்களின் பயன் பாட்டையும்பங்கினையும் மறுதலிப்பதோ இப்படி மொக்கையாகப் புரிந்து கொள்வதோ நியாயமல்ல ; நாம் இப்போது பேசவருவது அதுவல்ல ; சமூக வலைதளத்தில் உழைப்புக்கு உரிய இடம் ஏன் தரப்படுவதில்லை என்பதும் சமூகநீதியை வெறுமே தட்டையாக இட ஒதுக்கீடாக மட்டுமே புரிந்து கொண்டிருக்கும் போக்கு குறித்துமே பேச உள்ளோம் .

முதலாவதாக , மேலே உள்ள கணக்கை மீண்டும் படியுங்கள்   அரசு ஊழியர் எண்ணிக்கை வேடிக்கையாகச் சொல்லப்பட்டது என்றே கொள்ளினும் ; அவர்களின் பணிக் கலாச்சாரம் மேம்பாடடைய வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை ;ஆயினும் அவர்கள் 24 மணி நேரமும் சும்மாவே இருந்தால் எப்படி அரசு இயந்திரம் நிற்காமல் எப்படி இயங்கும் ? சரி ! சரி ! அரசு ஊழியர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை அதிகரிக்க இப்படிப்பட்ட நையாண்டிகளும் உதவுமெனில் வரவேற்போம் .அதேசமயம் அதில் நாட்டின் பெரும்பகுதியான விவசாயிகள் , உடலுழைப்புத் தொழிலாளர்கள் கணக்கிலேயே காட்டப்படுவதில்லை .இந்த எண்பது விழுக்காடு மக்களில்லாமல் வாழ்க்கை ஏது ? வளர்ச்சி ஏது ?  அப்படியானால் இவர்கள் வியர்வையும் ரத்தமும்தான் தேசத்தை இயக்குகிறது என்பதை இந்த  “அறிவுஜீவிகள்” மறந்தது ஏன்? மறைத்தது ஏன்? உடலுழைப்பு மூளை உழைப்பு இரண்டுக்கும் உரிய இடமமும் மதிப்பும் வழங்கப்படுகிற சமதுவ சமூகத்தை படைக்க கனவாவது காணவேண்டாமோ!

உடல் உழைப்பை மதிக்காத – கேவலமாகக் கருதும் மனோநிலை இளைஞர்கள் நெஞ்சில் விதைக்கப்படுவது எவ்வளவு ஆபத்தானது .

பரோட்டா மாஸ்டர் மற்றும் மென்பொருள் பொறியாளர் குறித்த -இரண்டு விளம்பரங்கள் இணைந்த படத்தைப் பாருங்கள் . இதனைப் பகிர்ந்தவர்கள்    நோக்கம் நகைச் சுவை அல்லவே அல்ல . படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதும் ; அப்படி கிடைக்கும் வேலைகளுக்கும் உரிய ஊதியம் தரப்படுவதில்லை என்பதும் ; சமூகப் பாதுகாப்பு அறவே இல்லை என்பதும் – கவலை அளிக்கும் போக்கே – அது புதியப் பொருளாதாரக் கொள்கையின் கோரமுகம் . இதற்கு எதிராய் இளைஞர்களை அணிதிரட்டிப் போராட முயற்சிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளை அடையாளம் காட்டுவதே சரி. ஆனால் இங்கு அந்த கோபம் மடை மாற்றம் செய்யப்படுகிறது .

ஒரு பரோட்டா மாஸ்டருக்கு அதிகச் சம்பளம் வழங்குவதாக வயிற்றெரிச்சலோடு பார்க்க வைக்கிறது ! இந்த சமூக உளவியல் பார்வை மிகவும் ஆபத்தானது . பரோட்டா மாஸ்டர் நெருப்பில் வெந்து ; வியர்வை சிந்தி ; உடல் வருந்தி உழைத்து பெறுகிறான் . இதிலென்ன குற்றம் உள்ளது ? அந்த உழைப்பை மதிப்பதுதானே சரியான செயல் .பரோட்டா மாஸ்டர் சம்பளத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிவோரின் சம்பளத்தோடு ஒப்பிடுவதுதானே முறையாகும் ? மென் பொருள் துறையில் பொறியியல் படித்தவரை எப்படிச் சுரண்டுகின்றனர் என ஒப்பிட்டுக் காட்ட ; அந்த சர்வதேசப் பணியை வேறு நாட்டில் செய்யும் போது எவ்வளவு சம்பளம் என்பதைச் சுட்டி உழைப்புச் சுரண்டலை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது .மாறாக உடலுழைப்பை துச்சாமாகக் க்ருதுவது எவ்வளவு பிழையான பார்வை .

அடுத்து இன்னொரு படம் பாருங்கள் . இட ஒதுக்கீட்டால் தலித்துமக்கள் பெரும் பலனடைந்து வீங்கி விட்டதாகவும் ; பொதுவான மக்கள் ஏங்குவதாகவும்  சித்தரிக்கப்பட்டுள்ளது . இது எவ்வளவு ஆபத்தான கருத்து என்பது மட்டுமல்ல யாதார்த்த உண்மைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத கருத்துமாகும் . ஏழை இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று தமிழக பாஜக குரல் கொடுப்பதும் இத்தகைய குசும்பே . நாம் திருப்பிக் கேட்க வேண்டும் ; தமிழகத்தில் அமலாகும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் பயன் பெறும் தலித்துகள் , பழங்குடியினர் , பிற்படுத்தப் பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் யாருமே இந்து இல்லையென்று தமிழக பாஜக கூறுமா ? மேல்சாதியினருக்கு இடஒதுக்கீடு வேண்டுமெனில் பச்சையாகக் கேட்கட்டும் , அதைவிடுத்து குறுக்கு சால் ஓட்டக் கூடாது .

இடஒதுக்கீடு என்பது வெறும் சலுகையோ பிச்சையோ அல்ல ; பூர்விக சொத்தில் அனைத்து பிள்ளைகளும் பங்கும் உரிமையும் கொண்டாடுவது போன்றதே .இப்படிச் சொன்னதும் அப்படியானால் இடஒதுக்கீட்டால் சமபங்கு கிடைக்காததுபோல் வேஷம் போடுவர் ; அவர்களுக்கு ஒரு உண்மைச் சொல்லுவோம் ; இப்போது பங்கீடு எப்படி உள்ளது என்பதை ..

“ சமூகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்று உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் [ பிராமணர்கள் , சத்திரியர்கள் , வைசியர்கள் ] அரசியல் பிரதிநிதித்துவத்தில் 66.5 சதவீதத்தையும் ,கல்வியில் 43 சதவீதத்தையும் ,வேலைவாய்ப்பில் 87 சதவீதத்தையும் , வணிகத்தில் 97 சதவீதத்தையும் , நில எஸ்டேட்களில் 94 சதவீதத்தையும் எவ்விதமான சட்ட ஒதுக்கீடுகளும் இல்லாமலே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் ; ஆனால் அதே சமயத்தில் மக்கள் தொகையின் இதர பகுதியினர் சூத்திரர்கள் , தலித்துகள் மற்றும் பழங்குடியினர் , முஸ்லீம்களுடன் சேர்த்து , மொத்த மக்கள் தொகையில் 85 சதவீதமாக இருப்பவர்கள் மீதமுள்ளவற்றை மனிதாபிமானமற்ற சமத்துவமின்மையுடன் மிகவும் நம்பிக்கை இழந்த நிலையில் பங்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள்”

என , “மோடி அரசாங்கம் : வகுப்புவாதத்தின் புதிய அலை ” நூலின் தமிழ் பதிப்புக்கான முன்னுரையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி   சுட்டிக்காட்டியுள்ளது பொருள் பொதிந்தது.

இட ஒதுக்கீட்டால் மேல்ஜாதியினர் எல்லாவற்றையும் இழந்துவிட்டனர் என்றும் ; தகுதியற்றவர்கள் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிவிட்டனர் என்றும் ;சமூகநீதி காலாவதியாகிப்போனத் தத்துவம் என்றும்; ஓயாமல் உடுக்கை அடித்துக் கொண்டிருக்கும் அதிமேதாவிகள் வாதம் எவ்வளவு பொய்யானது என்பதை மேலே உள்ள கூற்று நிரூபிக்கும் .

அந்த வாக்கு மூலத்திலுள்ள சொற்றொடரை நன்கு கவனியுங்கள் . “எவ்விதமான சட்ட ஒதுக்கீடுகளும் இல்லாமலே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் ” அப்படியாயின் இடஒதுக்கீடும் கைவிடப்படுமாயின் அல்லது பொதுத்துறையை ஊற்றி மூடி அனைத்தையும் தனியார் மயமாக்கினால் அங்கே இடஒதுக்கீடு தானாக மடிந்துவிடுமே ! அதன் பின்னர் இந்தியா என்பது மேல்ஜாதி இந்துக்களுக்கு மட்டுமே என்கிற சூழல் உருவாகிவிடும் . ஆர் எஸ் எஸ் சங்பரிவார் விரும்பும் இந்துராஷ்டிரம் அதுவல்லவோ !


அடுத்து சமூகநீதியின் தேவையை வலியுறுத்தும் ஒரு கருத்துப்படம் . மிக நன்று . ஆனால் இது போன்ற கருத்துப் படங்கள் சமூகவலைதளங்களிம் அதிகம் உலாவரச் செய்ய வேண்டாமோ ? இடஒதுக்கீட்டின் தேவை இன்னும் நீடிக்கிறது என்பதே இமலாய உண்மை . அதனை இன்னும் வலுவாக சமூக வலைதளங்களில்  மற்றும் அனைத்து ஊடகங்களிலும் சொல்ல வேண்டியுள்ளது .

சமூகநீதியை வெறும் இடஒதுக்கீடாக மட்டுமே பார்ப்பதும் பிழையானதே . சமூகநீதியில் இடஒதுக்கீடு ஒரு முக்கிய அம்சம் .அதேசமயம் உழைப்பைப் போற்றுகிற ; அதாவது உடலுழைப்பாயினும் மூளை உழைப்பாயினும் அதனை போற்றுகிற – மதிக்கிற சமூக அமைப்பை நோக்கி முன்நகர்தலே முழுமையான சமூகநீதியாகும் .


ஆக , நம் மூளையில் அன்றாடம் விதைக்கப்படுகிற சமத்துவதுக்கும் சமூகநீதிக்கும் எதிரான கருத்துகளை வலுவாய் எதிர்கொள்ள – பதிலடி கொடுக்க நாம் தயங்கக்கூடாது ; தாமதிக்கக் கூடாது .

0 comments :

Post a Comment