இயற்கையை மீறி ஒரு சக்தி இருப்பதை ஒப்புக்கொண்டால் என்ன?

Posted by அகத்தீ Labels:








இயற்கையை மீறி ஒரு சக்தி இருப்பதை
ஒப்புக்கொண்டால் என்ன?

சு.பொ. அகத்தியலிங்கம்


·         நம்மை மீறி ஒரு இயற்கை சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில்அதை நம்புவதில்வழிபடுவதில் - உங்களுக்கு என்ன கஷ்டம் ?

·         உலகில் யாருமே நாத்திகரில்லை ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள்என்பது சரியா ? ஆத்திகர் கடவுளை நம்புகிறார் ஆனால் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது நாத்திகரல்லவா? இல்லாத ஒன்றெனில் பேசிக்கொண்டே இருக்கவேண்டுமா ?

·         கிறுத்துவர் பைபிளை படிக்கிறார் ; முஸ்லீம் குரானைப் படிக்கிறார் ; இந்துக்கள் கீதையைப் படித்தால் என்ன ?

·         பண்பாடு என்பது மதம் சார்ந்ததுதானே! மதத்தைத் துறந்தால் நமக்கேது பண்பாட்டு அடையாளம்? அறிவியல் முன்னேற்றம் கண்ட ஐரோப்பியரும் கிறுத்துவப் பண்பாட்டையன்றோ பிரதிபலிக்கின்றனர்?

·         தமிழர் சமயம் இந்து மதம்தான் என்று சொல்வதில் என்ன பிழை ?தமிழர் போகும் இடமெல்லாம் இந்துக் கோயில்களை அல்லவா நிறுவினர் ? தமிழக அரசர்கள் எல்லொரும் இந்துக் கோயில்தானே கட்டினர் ?

தத்துவ உலகில் விவாதம் முடிவற்றது ; விடை காணாத கேள்விகளை நோக்கியப் பயணத்தில் அவரவர் அனுபவம் ,அறிவு  சார்ந்து தேடல் தொடரவே செய்யும். நாமும் தத்துவ உலகில் சஞ்சரிக்க விழைந்தாலும் அன்றாடம் குறுக்க மறுக்க தடுத்து வீசும்கேள்விகளை எதிர்கொள்வது தத்துவத் தேடலுக்கு முன்பயிற்சி ஆகிறது.  நம் இலக்கு சரியான தத்துவத்தை அடையாளம் காண முயல்வதே !


நம்மை மீறி ஒரு இயற்கை சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில்அதை நம்புவதில்வழிபடுவதில்  உங்களுக்கு என்ன கஷ்டம் ?

இயற்கை சக்தி என்று சொல்லி விட்டீர்கள்! இதிலொன்று பகுத்தறிவாளர் மாறுபடுவதில்லையே ! அதனை இறைவனாக கருதி சரணடைவதில்தான்வழிபடுவதில்தான் மாறுபடுகிறோம் . ஆதி நாத்திகர்கள் அதாவது லொகாயவாதிகள் அல்லது பூதவாதிகள் கூட உலகம் பஞ்சபூதங்களினால் ஆனது என்பதை ஒப்புக்கொண்டவர்களே . நிலம் , நீர் , நெருப்பு,காற்று , ஆகாயம் என பஞ்ச பூதங்கள் ஐந்தென வகுத்தனர் .அன்றைய அறிவியல் புரிதலுக்கு உட்பட்டு அவ்வாறு அவர்கள் முடிவுக்கு வந்ததே மிகப்பெரிய முன்னேற்றமே .
பின்னர் வேதியல் புரட்சி ஏற்பட்ட போது லாவோசியர் , ஜோசப் பிரீஸ்ட்லி முதலியோர் நெருப்பு என்பது வெறும் வினை; அடிப்படைப் பொருளல்ல என நிறுவினர் .காற்று என்பது ஆக்ஸிஜன் , னைட்ரஜன் ,கார்பன் என வாயுக்களின் கலவை எனக் கண்டனர். நீரென்பது ஹெச் டூ 2 டீ ] என கண்டு தெளிந்தனர் அதாவது ஹைட்ரஜன் இரண்டுபங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால் நீர் . இரத்தம் , சதை , சிமெண்ட் , கல் , மண்  என எல்லாமே மூலக்கூறுகளின் கலவைதான் என அறிவியல் கண்டது .
இந்த மூலக்கூறுகள் அடிப்படையில் அணுக்களால் ஆனவை . தங்கம் , இரும்பு , சோடியம் , யுரேனியம்  முதலிய 119 வகை அணுக்கள் - தனிமங்கள் உள்ளன . இதில் 96 வகை தனிமங்கள் பூமியில் இயற்கையில் கிடைக்கும் . அணுவே கடைசி கண்ணி - அதைப் பிளக்க முடியாதென்பது டால்டன் கொள்கை. அடுத்த கட்டத்தில் ரூதர் போர்டு, ஜே.ஜே. தாமஸ் முதலானோர் அணுவைப் பிளந்து ஆராய்ந்து எலக்ட்ரான் , புரோட்டான் ,நியூட்ரான் மற்றும் நியூட்ரினோ ,மியூவான், மியூமிசான் என்கிற அணுத்துகள்களே  அடிப்படை அலகு என்பதைக் கண்டு சொன்னார்கள் . அந்த எலக்ட்ரான்தான் இன்றைய கணினிப் புரட்சியின் அடித்தளம் . அதனையும் உடைத்து குவார்க்குகள், க்ளுவான்ஸ்கள் என ஆய்வு முன்னேறுகிறது .
நியூட்ரினோதான் உலகெங்கும் நிறைதுள்ள துகளெனக் கண்டு அதனை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர் . தமிழகத்தில் தேனியில் அமையும் நியூட்டிரினோ நோக்குகூடம் அத்தகையதே . ஆக இயற்கயை வழிபட்டு சரணடைதிருந்தால் இவ்வளவு கண்டுபிடிப்புகளை செய்திருக்க இயலுமா ?பகுத்தறிவு மேலும் விசாலமாக - மேலும் கூர்மையாக முன்னேறுகிறது.
கணினி முன் உட்கார்ந்து கொண்டு மதவெறிப் பிரச்சாரம் செய்வபவரும் இந்த அறிவியலின் பலன் மீது நின்று கொண்டன்றோ செயல்படுகிறார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும் ! எல்லாம்வல்ல ஒரே இயற்கை சக்தியே இறைவனெனில் இத்தனை மதங்கள் ஏன் ? இத்தனை கடவுள்கள் ஏன் ? இவ்வளவு மதவெறிச் சண்டைகள் ஏன் ? இத்தனை மனித உயிர்களை காவு கொடுப்பது ஏன் ? நீங்கள் சொல்லுகிற அந்த ஒற்றைக் கடவுள் எந்த மதம் சொல்லுங்கள் !!!


உலகில் யாருமே நாத்திகரில்லை ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள்என்பது சரியா? ஆத்திகர் கடவுளை நம்புகிறார் ஆனால் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது நாத்திகரல்லவா? இல்லாத ஒன்றெனில் பேசிக்கொண்டே இருக்கவேண்டுமா?


 “கடவுள் கவலை எனக்கில்லைஎன்பார் பாரதிதாசன். “கடவுள் இருக்கு என்பதும் இல்லை என்பதும் கவைக்கிதவாத வெறும் பேச்சு / கஞ்சிக்கில்லாதவன் கதை நூறிருக்கு அதை நீ பேசுஎன்பார் பட்டுக்கோட்டையும் . நாமும் அதையே விழைகிறோம் . ஆயினும் ஆத்திகர் கேள்வி எம்மை அது பற்றி பேச வைக்கிறது .
கேள்வியில் முன்வைக்கும்  வாதம் புதிதல்ல . பண்டைய இந்தியாவில் உதயணர் எனும் ஒரு தத்துவவாதி இருந்தார் . அவர் கடவுள் உண்டென நிரூபிக்க முயலும்நியாயம்என்ற தத்துவப் பிரிவைச் சார்ந்தவர் . அவருடையநியாயகுஸிமாஞ்சலிஎன்ற நூலைத்தான் ஆத்திகர்கள்கடவுளைநிரூபிக்கத் துணையாகக் கொள்கிறார்கள். அவரும் இந்த கேள்வியில் கேட்கப்பட்டதை அதே வார்த்தைகளில் தன் வாதமாக முன்வைத்தார். அதற்கு ஆதாரமாக லொகாயாவாதிகள் சிலரின் வார்த்தைகளை திருத்தி தன் வாதத்துக்கு பயன்படுத்த முயன்றார் . டாக்டர் ராதாகிருஷ்ணன் கூட கம்யூனிசமும் ஒரு மதமே என வாதம் செய்தார் . இது பட்டிமன்ற வாதம் போல் இருக்கிறது .
கடவுளை நம்பாதவர்களை மட்டிலுமே நாத்திகரென பகுத்தறிவாளர் வரையறை செய்கின்றனர்; அதுவே சரியானது .ஆனால் இஸ்லாம் மதம் அல்லாவை ஏற்காத பிறமதத்தவர் உட்பட எல்லொரையும்  நாத்திகரென்று கூறும் ; சனாதன பிராமண மதம் வேதத்தை ஏற்க மறுத்தாலே நாத்திகரென வசைபாடும் . கிருத்துவமும் பிறமத்ததவரை நாத்திகரென்றே கணிக்கும் .இப்படி இவர்களின் வெறுப்பு அளவுகோலால் பிறமத நம்பிக்கையாளரை நாத்திகரென்பதால் மேலே கேள்வியில் ஏற்பட்ட குழப்பம் ஏற்படுகிறது . எந்த மதத்தையும் எந்தக் கடவுளையும் ஏற்காதவரே நாத்திகர் . இதனை உணர்ந்தால்  குழப்பமே இல்லை . எந்தவழியில் கடவுளை நம்பிடினும் அவர் நாத்திகரில்லை
ஆத்திகரென்பவர் கடவுள் பெயரால் பல சடங்குகள் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கைகள்  என மூழ்கிக் கிடக்கின்றனர் ;அதை மறைக்கவே நாத்திகர் கடவுள் பற்றி அதிகம் பேசுவதாகக் பழி போட்டுதப்பிக்க முயல்கின்றனர்; புற்றுநோயில் விழுந்துகிடப்பவனைவிட ; புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை விதைக்கிறவர்தான் அதிகம் பேசவேண்டும் .பேசமுடியும் . இது விழிப்புணர்வுக்கான பேச்சு. இதனையெல்லாம் தெரிந்து கொண்டே திசை திருப்பும் விதமாக சாமர்த்தியமாக ஆத்திகவாதிகள் இப்படி சொற்போராட்டம் நடத்துவது நெடுங்காலமாக நடந்து வருகிறது . இதனை தத்துவ வாதத்தில்  ‘ சாமன்ய சளாஅல்லதுசாமான்ய சாலம்என்பர் புரிகிறமாதிரி சொவதானால்அறிவியல் அயோக்கியத்தனம்என்கிறார்  ஆய்வாளர் நா. வானமாமலை .
கடவுள் என்பது இல்லாததே ; அதை இருக்குதென மற்றவர் பேசும்வரை மறுத்துப் பேசுவது இயல்பானதே . தேவையானதே !  தொலைகாட்சியில் ஒரு ஆன்மீகப் பேச்சாளர் மினசாரத்தை கண்ணால் பார்க்கமுடிவதில்லை என்பதால் மின்சாரம் இல்லை என்று சொல்லமுடியுமா ? அது போலத்தான் கடவுளும் என்றார் ? மின்சாரம் இருப்பதை விளக்கு எரிவதைக் கொண்டு அறியலாம் ; தொட்டுப் பார்த்தால் ஷாக் அடிக்கும் . மின்சாரத்தை உண்டாக்க முடியும்  ? எங்கே எப்படி உண்டாக்கப்பட்டது என்கிற விவரம் உண்டு ? கடவுளை உண்டாக்கிக் காட்டுங்கள்  என சவால் விடலாமே ! இப்படி இடக்கு மடக்கு வாதம் பயனில்லை . நாத்திகரைப் பொறுத்தவரை கடவுள் இல்லை . ஏனெனில் அறிவியல் பூர்வமாக இதுவரை கடவுள் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை . அவ்வளவே !


கிறுத்துவர் பைபிளை படிக்கிறார் ; முஸ்லீம் குரானைப் படிக்கிறார் ; இந்துக்கள் கீதையைப் படித்தால் என்ன?


எதையும் படிக்கக்கூடாதென அறிவியலாளர் தடை போடமாட்டார் . நான் மூன்றையும் படித்திருக்கிறேன் . மூன்று நூலையும் வைத்திருக்கிறேன் .  “ கீதை தரும் மயக்கம்என்றொரு நூலும் எழுதியிருக்கிறேன் .எல்லொரும் அவரவர் மதம் சார்ந்த நூலை மட்டுமல்ல ; பிற நூல்களையும் படியுங்கள் . தடையே இல்லை . ஆனால் அவற்றில் சொல்லப்பட்டிருப்பவற்றை அறிவியல் கல்லில் உரசி உண்மையை உணருங்கள்
சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்அதாவது நாலு வருணங்களை நானே படைத்தேன் என்றும், ஒரிடத்தில் குண அடிப்படையில் வர்ணம் என்பேசி விட்டு அடுத்து குலதொழிலை அதாவது பிராமணர் வேதம் ஓதுவதும் சக்கிலியர் மதம் அள்ளுவதும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமை; அதைச் செய்வதே உயர்வானது என்றும் சாதிச் சேற்றில் அழுத்துவதே கீதையின் சாரம் .
பெண் பாவயோனியில் பிறந்தவரென பெண்களை இழிவு படுத்துவது கீதை . இன்னும் பல சொல்ல முடியும் . ஆகவே சாதியையும் பெண்ணடிமைத்தனதையும் போதிக்கும் நூலே கீதை என்பதை நினைவில் கொள்வீர் !. இப்போதும் படிக்காதே என எந்த நூலையும் தடுப்பது தவறு. எந்த நூலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதநூலென்பதையும் ஏற்க இயலாது.கீதையையும் படியுங்கள் அதனை விமர்சித்து எழுதியவற்றையும் படியுங்கள் . இதனையே அனைத்து மத நூல்களுக்கும் -ஆம் குரானுக்கும் பைபிளுக்கும்  சேர்த்தே சொல்கிறோம் .  நீங்களே முடிவெடுங்கள் .


    பண்பாடு என்பது மதம் சார்ந்ததுதானே! மதத்தைத் துறந்தால் நமக்கேது பண்பாட்டு அடையாளம்? அறிவியல் முன்னேற்றம் கண்ட ஐரோப்பியரும் கிறுத்துவப் பண்பாட்டையன்றோ பிரதிபலிக்கின்றனர்?


பண்பாட்டில் மதக்கூறுகள்  உண்டு. ஆயினும் பண்பாடு முழுவதும் மதம் சார்ந்ததல்ல . இன்றைக்கு சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு சற்று முன்னரே மதங்கள்  வேரூன்றத் துவங்கின . சுமார் ஐம்பது லட்சம் வருட வரலாறு கொண்ட மனித இனத்தின் வரலாற்றில் மதம் வருவதற்கு முன்பே பண்பாடு கருக்கொள்ளத்துவங்கிவிட்டது . அந்தந்த புவியல் , தடபவெப்பம் மற்றும் இயற்கை சூழல் சார்ந்தும் அவர்கள் உற்பத்திமுறைசார்ந்தும் வடிவம் கொண்டதே பண்பாடு . எதை உண்ணுவது, எதை உடுத்துவது, எந்தக் கருவியை உபயோகிப்பது, எதை எப்படி உற்பத்தி செய்வது என்பதையெல்லாம் மதமா முடிவெடுத்தது ?
இல்லை அவனுடைய வாழ்க்கைச் சூழல் எது கிடைத்ததோ, எது அவனுக்கு உகந்ததோ அதை பரிசோதித்து , பரிசோதித்து  பழக்கப்படுத்தினான் . ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இயற்கையோடு மல்லுக்கட்டி மல்லுக்கட்டி தனகென சில வாழ்க்கை முறைகளை வார்த்தெடுத்தான் . அவையே பண்பாட்டின் அடித்தளமானது .எந்தெந்த மதம் எந்தெந்த நாட்டில் தோன்றியதோ அந்தந்த நாட்டின் பண்பாட்டையும் சூழலையும் உள்வாங்கியே பிறந்தன . கிருத்துவமும் அப்படியே ! பிராமண சனதன மதமும் அப்படியே !ஆயினும் மதம் சுரண்டும் வர்க்கத்தின் கேடயமாக மாறியபின்மதம் பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்தியது . ஏனெனில் மக்களை அடக்குமுறை மூலம் அடக்குவதைத் தவிர பண்பாட்டின் மூலம் முடக்குவதே வலுவான வழி என ஆளும் வர்க்கம் கண்டு கொண்டது . மதம் பண்பாட்டை தன் நோக்கங்களுக்கு ஏற்ப பயன்படுத்தின - விளக்கம் அளித்தன . எங்கும் இதுவே நடந்தது.
ஆகவே அறிவியல் முன்னேற்றம் கண்ட ஐரோப்பாவின் பண்பாட்டிலும் மதத்தின் சார்பு நிறையவே உண்டு . எனினும் ஐரோப்பிய மறுமலர்ச்சியும் , பிரெஞ்சுப் புரட்சியும் , அமெரிக்க விடுதலைப் போரும் , ரஷ்ய , சீனப் புரட்சிகளும் உருவாக்கிய தாக்கமும் ; அறிவியல் வளர்ச்சியின் தாக்கமும் சுதந்திரம்ஜனநாயகம்சமத்துவம் என்பவை பண்பாட்டிலும் பிரதிபலித்தன .அதன் எதிரொலிதான் மதச்சார்பின்மை எனும் உயர் சிந்தனை மேலைநாடுகளில் வலுவாக பேசப்படலாயின.கிறுத்துவம் ஐரோப்பிய சிந்தனைகளில் பண்பாட்டில் விரவி இருப்பினும் அங்கே அறிவியல் முன்னேற்றம் காணும் சூழலும்  அடித்தள மக்களின் பண்பாட்டு எழுச்சிக்கான விதையும்  வரலாற்று ரீதியாக கருக்கொண்டது .ஆளும் வர்க்கம் எப்போதும் மதத்தை தூக்கிப் பிடிப்பது இயல்பு . அதில் எந்த நாடும் விலக்கல்ல . மேலை நாடும் விலக்கல்ல
பண்பாடு என்பது எப்போதும் மேட்டுக்குடியின் பண்பாட்டையே சார்ந்தது போன்று தோற்றம் ஏற்படுத்தப்பபடுவதுண்டு .ஆயினும் அனைத்தையும் மீறி ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு மேலொங்கி எழும் . இதற்கு இந்தியாவும் விலக்கல்ல ; மேலைநாடும் விலக்கல்ல . மேலை நாட்டுப் பண்பாடெல்லாம் கீழானவையும் அல்ல ; இந்தியப் பண்பாடெல்லாம் மேலானவையும் அல்ல . மேற்கானாலும் நம் சொந்தப் பண்பாடாயினும் மேட்டிக்குடி பண்பாடாயினும் ஒடுக்கப்பட்டோர் பன்பாடாயினும் நல்லதும் உண்டு , தீயதும் உண்டு . அதில் உள்ள  பழுதான அம்சங்களை துடைத்தெறிந்து விட்டு நல்லகூறுகளை சமத்துவக் கூறுகளை முன்னெடுப்பதே மானுடத்துக்கு உகந்தது .


தமிழர் சமயம் இந்து மதம்தான் என்று சொல்வதில் என்ன பிழை ?தமிழர் போகும் இடமெல்லாம் இந்துக் கோயில்களை அல்லவா நிறுவினர் ? தமிழக அரசர்கள் எல்லோரும் இந்து கோயில்தானே கட்டினர்?


 “ பிறப்பொக்கும் எல்லா உயிக்கும்என்பதும் ; “ எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்..” என்பதுமே தமிழர் சமயத்தின் அடிநாதமாகும் . மதம் என்ற சொல்லே தமிழுக்கு வெகு தாமதமாக வந்த சொல்தான் . சமயம் என்ற சொல்லே தமிழர் வரலாற்றோடு இணைந்தது . நமது அகப் பாடல்களும் புறப்பாடல்களும் பெரிதும் இயற்கை சார்ந்து யதார்த்த வாழ்வினிலிருந்தே பேசுகிறது. எடுத்துக்காட்டாக புறநானூற்றில் குடபுலவியனார் எழுதிய பாடல் இடம் பெற்றுள்ளது :
 “ நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உனவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர்
ஈண்டு உடம்பும் உயிரும் படைத்த சினோரே”  
-இந்த பாடல் வரிகளை சுட்டி பேராசிரியர் அருணன் தொடர்கிறார் , “பாண்டிய நாட்டின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த இந்தப்புலவர்அங்கே வறட்சியையும் வறுமையையும், அதனால் ஏற்பட்ட நோவையும் சாவையும் கண்ணாறக் கண்டு நொந்து போனார். ஆனால் இதற்குக் காரணம் விதி என்றோ முன் வினைப் பயன் என்றோ வாளாயிருக்கவில்லை . நேரே மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் வருகிறார். ‘ நீர் நிலை பெருகஏற்பாடு செய்யுமாறு கூறவருகிறார் … ….அரசரிடம் புலவர் தத்துவம்  போதிக்கிறார்உண்டி முதற்றே உணவின் பிண்டம்என்கிறார் .இந்த உடம்பு தற்காலிகமாகஆன்மாவாசம் செய்யும் இல்லம் என்று சொல்லவில்லை . மாறாக உணவு என்கிற பருப்பொருளால் ஆனது இந்த உடம்பு என்று இயற்கைவழி பேசுகிறார்….நீரின் முக்கியத்துவத்தைச் சொல்லி நீர் நிலையைப் பெருக்கச் சொல்கிறார்இத்தகைய இயற்கை தத்துவமே தமிழரின் ஆதிமரபில் இருந்தது”  என  தன் நூலில் அருணன் நிறுவுகிறார்
நீலகேசியும் , மணிமேகலையும் விவாதித்த தத்துவ களம் மிகப்பெரிது .பரந்து விரிந்தது . தமிழர் தத்துவ மரபு பெரிதும் வர்ணாஸ்ரம எதிர்ப்பு மரபே .” கி.பி. ஆறாம் நூற்றாண்டு பக்தி இயக்கத்தின் துவக்க காலம் எனில் அதுவே தமிழக வரலாற்றிலும் ஒரு திருப்புமுணையாக அமைந்தது .தத்துவ வளர்ச்சி இறையியல் என்ற சிறைக்குள் அடைக்கப்பட்டு பின்னடைவைக் கண்டது . ஆனமிகம் மட்டுமே தத்துவம் என்ற மயக்கம் ஏற்படுத்தப்பட்டு சமணம் , உலகாயுதம் போன்ற தத்துவங்கள் அற்ப நுகர்வுத் தத்துவங்களாகத் தூற்றப்பட்டன . பௌத்தம் மொத்தமாக அழிக்கப்பட்டு மக்களின் நினைவிலிருந்தே துடைத் தெறியப்பட்டது.” என்கிறார் தேவ பேரின்பன் . இவர் எழுதியதம்ழர் வளர்த்த தத்துவங்கள்எனும் நூலும்  ,அருணன் எழுதிய  ‘தமிழரின்  தத்துவ மரபுஎன்னும் நூலும் இன்னும் விவரமாய் நம்மோடு பேசும் . ஆர்வமுள்ளோர் தேடிப் படிக்க வேண்டுகிறேன்.
தமிழரின் செழுமையான தத்துவ மரபு பெரிதும் லொகாயாதமே அதாவது பொருள்முதல்வாதமே . பக்தி இலக்கிய காலத்திற்குப் பின் அரசர்கள் ஆதரவுடன் சைவம் , வைணவம் முதலியன திணிக்கப்பட்டன. சமணர்கள் எண்ணாயிரம் பேர் கழுவிலேற்றிக்கொல்லப்பட்டனர் . ஆயினும் சித்தர் மரபும் ,  நாட்டார் வழக்கியலும் இன்னும் தமிழரின் இன்னொரு மரபை சொல்லிக்கொண்டிருக்கிறது . பெருந்தெய்வ வழிபாடு , சிறுதெய்வ வழிபாடு என இரு மரபும் இன்னும் தொடர்கிறது . என்னதான் பெருந்தெய்வ வழிபாட்டில் தமிழன் ஈடுபடினும் நல்லது கெட்டத்தில் குலதெய்வத்துக்கு  படையல் செய்வது நமது  மரபின் இன்னொரு கூறு இன்னும் நீடிப்பதின் சாட்சி ..அரசர்கள் கட்டிய ஆலயங்களை வைத்து மட்டுமே ஒரு நாட்டின்இனத்தின் மரபை முடிவு செய்ய இயலுமா? கிராம தேவதைகளும் நாட்டார் வழக்கும் வேறு வரலாற்றைச் சொல்லுமே!
இப்படி சமயம் மேலொங்கியது. ஆயினும் சுமார் நூறாண்டுக்கு முந்தைய நில ஆவணங்கள் உள்ளிட்டவைகளில் சிவமதம் , விஷ்ணு மதம் என்றே காணப்படும் . இந்து என்ற சொல்லும் கருத்தும் பின்னர் நம்மிடம் வந்து சேர்ந்தவையே !

நன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர்   3 மே 2015
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


6 comments :

  1. விஸ்வேஸ்வரன்

    நடு நிலையான விளக்கம். ஆதியில் தமிழன் மதம் ஆன்மா என்ற கட்டுக்குள் இல்லை என்பதை முறையாக புறநானூறுப் பாடல்கள் மூலம் காட்டியது சரியான விளக்கத்தின் அடிப்படை. நன்றி.

    கீதை வருணத்தை விளக்குகையில் குழப்பம் என்பதை காட்டியது நல்ல பதிவு. பெண்களை மதிக்காத கீதையின் கருத்தையும் கோடிட்டு உள்ளீர்கள். ஒரு வகையில் முழுமையான பதிவு.
    ஆயினும் தமிழ்மறையைப பற்றிக் கூறாதது கறையாகப் படுகிறது. கீதை திருக்குறளை முன்மாதிரியாக வைத்து எளழுதப் பட்ட நூல். அதன் அடிப்படையி் பார்த்தால் திருக்குறள் ஒன்றே இந்தியாவின் ஒரே உயர்ந்த, நடைமுறைக்கு ஏற்ற தத்துவ நூல் ஆகும்.
    இது பற்றிய முழு வவவிளக்கம் என் வலைப் பதிவில் காணலாம். தமிழ்/ ஆங்கிலம் இருமொழிப் பதிவு. ஒவ்வொரு மொழியிலும் 20 பக்கம் கொண்ட பதிவு . அதப் படிதது கருத்து அளிக்க வேண்டுகிறேன். குறைந்த பட்சம் முன்னுரை படியுங்கள். சில பிரிவுகளைப் படியுங்கள். நன்றி.
    www.philosophyofkuralta.blogspot.in

  1. விஸ்வேஸ்வரன்

    "தமிழ்மறையைப் பற்றிக் கூறாதது குறையாகப் படுகிறது்" என்று திருத்தி வாசாக்கவும். கறை என்பு அச்சுப் பிழை. மன்னியுங்கள்

  1. Chitra

    நோயாளி, நோயுற்ற போது மட்டும் மருத்துவமனை சென்றால் போதும். ஆனால் மருத்துவர் தினமும் சென்று தானே ஆகவேண்டும் , அதுபோலத்தான் நாத்திகர் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது தவிர்க்க இயலாத ஒன்று

  1. Chitra

    நோயாளி, நோயுற்ற போது மட்டும் மருத்துவமனை சென்றால் போதும். ஆனால் மருத்துவர் தினமும் சென்று தானே ஆகவேண்டும் , அதுபோலத்தான் நாத்திகர் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது தவிர்க்க இயலாத ஒன்று

  1. Stats Guruji
    This comment has been removed by the author.
  1. Stats Guruji

    Hahahaha super

Post a Comment