வசவும் வதையும் வாழ்க்கையாகிப் போனபின்...

Posted by அகத்தீ Labels:





வசவும் வதையும் 
வாழ்க்கையாகிப் போனபின்...

சு.பொ.அகத்தியலிங்கம்




ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
ஆசிரியர் : கலைவாணன் இ.எம்.எஸ்
வெளியீடு : கீற்று வெளியீட்டகம் ,
1/47 A அழகியமண்டபம் ,
முளகுமூடு அஞ்சல்,
குமரி மாவட்டம் – 629 167 .



 “ குனிந்திருந்து 
 கீழ் பார்த்து  தொங்கும் 
 கொட்டை மயிருகளை 
அரைகுறையாக 
வெட்டித் தள்ளுவது போல் 
 அல்லாமல் 
கண்ணாடியில் முகம் பார்த்து 
கம்பீரமான முறுக்கு மீசை 
மேல் நோக்கி நிற்பதற்கு 
கத்தரிப்பது போல் 
உங்கள்  கவனத்தை 
வேண்டி நிற்கிறது 
இப்பதிவு” 

இந்த முன்னறிவிப்பே வலியையும் , விடுதலை வேட்கையையும் ஒருங்கே பிரகடனப் படுத்துகிறது .

அண்மையில் ,  “லண்டாய்” எனும் ஆப்கன் பெண்கவிஞர்களின் கவிதை தொகுப்பை –மொழிபெயர்ப்பாக படித்தபோது அதிர்ந்தேன்  . கவிதை என்பது கைவாளென கவிஞர் கே சி எஸ் அருணாச்சலம் சொன்னது மெய்யே என உணர்ந்தேன் . அடுத்து    “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” என்னை உலுக்கி எடுத்துவிட்டது .தன் சாதிய சமூகத்தை குறுக்கு வெட்டுத் தோற்றமாய் அவர் பிளந்து காட்டிவிட்டார் . 

“ பண்டிதன் 
முண்டிதன் 
இங்கிதன் 
சங்கிதன் 
நால்விதன் தெரிந்தவனே 
நாவிதன் 
வேறு எவனுக்கும் 
இல்லை இவை” 


என்கிற பெயரின் காரணக்குறிப்பு கற்பிதம் அல்ல .இருந்த நிலையையும் இழந்த நிலையையும் ஒரு சேரச் சொல்வது ,பண்டுதமெனில் மருத்துவம் , முண்டுதமெனில் சவரம் , இங்கிதமெனில் சவரக் கலைகள் , சங்கீதமெனில் இசையும் கலையும் இப்படி பொருள் விளக்க கவிஞர் குறிப்பு தந்ததோடு நில்லாமல்  ;நாலு நிலையிலும் நாவிதர் பட்ட பாட்டை நாஞ்சில் தமிழோடும் - நாஞ்சில் நாட்டு சடங்கு முறைகளோடும் - நரம்பில் விஷமாய் உறைந்து போயுள்ள சாதியநோயினைக் கீறியும் காட்சிப்படுத்தியுள்ளார் .


 “ தொட்டிலில் கிடக்கும் என்னை / சலூனில் / வேலை முடித்துவந்த அப்பா / முத்தமிட்ட கன்னப்பரப்பில் / இரண்டு மூண்று வெள்ளை முடிகள் / ஒட்டியிருக்கின்றன / எந்த ஜாதிக் காரனின் / அழுக்கு மயிரோ” அன்பையும் சமூகவலியையும் பிழியும் வரிகள் இவை . இதைவிட கவிதைக்கு என்ன இலக்கண வரம்பு வேண்டும் ? . 


ஒரு கலயாண வீட்டில் தானும் தாயும் அவமானப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டதை  ,  “இப்பவே யாம்புலே இருந்தியன்னு  /  சோறு விளம்புன ஒருத்தன் / ஓடுங்கல நாசுவத் தாயாளின்னு / எழுப்பி விட்டான் / என்னையும் என் அம்மையும்” என சொல்லிச் செல்லும் கவிதை இந்துபெருமிதத்தின் நெற்றில் பொட்டில் அறைகிறது . 


சுசீந்திரம் காவடி மடத்தில் நான் விரும்பி அழைத்துச் சென்ற என சிநேகிதன் களக்காடு பாலச்சந்திரனை [ வண்டி ஏறி முதுகொடிந்து பின்னர் இறந்து விட்டவன் ] பாதி சாப்பிடும்போது எவண்டா பறதாயளி பயலுகளை உள்ள விட்டதுன்னு ஒற்றைக்கையைப் பிடித்து என் தாய்மாமா தரதரன்னு வெளியே வீச – நானும் கோபித்துக்கொண்டு வெளியேறிய அந்தநாள் என்னுள் இன்னும் உறைந்து போயுள்ளது . எட்டாவதோ ஒன்பதாவதோ படிக்கிற காலம் அது  . அன்று என்னுள் விழுந்த சமூகக்கோபவிதை இன்னும் ஆறவில்லை . இக்கவிதை மேலும் விசிறிவிடுகிறது .


 யார்யாருக்கோ தப்பான கர்ப்பத்தை கலைக்க உதவிய அம்மா – ஊர் பெண்கள்  சமஞ்சதுக்கெல்லாம் சடங்கு சுற்றி தீட்டுக்களித்த அம்மா -  என விவரமாகச் சேதி சொல்லும் ஒரு கவிதை இறுதியில் “ அக்கா பிராயத்துக்கு வந்ததை / யாருக்கிட்டேயும் சொல்லல” என்கிற வரிகளில் வெளிப்படுத்துவதுவது வெறும் பெருமூச்சு மட்டுமா ? 

 “ ஊரு மருத்துவச்சியாக / அம்மா பிரசவம் பார்த்து / பூச்சு பறக்கிப் போட்ட /எல்லா குந்திராண்டங்களும் / இப்ப வளர்ந்து / பூதங்களாத் தொங்குது” அடேயப்பா உயிர் கொல்லும் வரிகள் ! பாரம்பரிய இந்திய , தமிழக மருத்துவ ஞானம் மங்கியது ஏன் ? மேற்கு ஓங்கியது ஏன் ? விடையை சொல்லுது இக்கவிதை .


கவிஞர் தன் சுயசாதியின் இதயத்து வலியை – சிதைவை – சமூக அவலத்தை – அதிலிருந்து தப்பி ஓட செய்யும் சாகசங்களை சொல்லும் வார்த்தைகள் சவரக்கத்தியைவிட கூர்மையாய் நம் நெஞ்சுக்குள்ளே இறங்குகிறது . 


அக்கா சாதியை மறைத்து வாழுவதை பேசும் ஒரு கவிதையில் அவர் குமுற்கிறார் … “ அவ அம்மைக்கு / ஆயிரம் மாப்பிள்ளைன்னு  /சொல்லட்டு / அவளுக்க தம்பி பொண்டாட்டி / ஓடிப் போயிட்டான்னு  /சொல்லட்டு ” ஆம் இவை எல்லாம் கூட இழிவில்லையாம் ஆனால் எதைச் சொல்லக்கூடாதாம் கடைவரியாய் சுளீரென விழுகிறது , “ அவ நாசுவத்தின்னு மட்டும் / சொல்லாம இருந்தாப் போதும்”


  “ பிச்சையெடுத்தாலும் /பார்பர் ஷாப் வேலைக்கு /போக கூடாதுன்னு / சொல்லிட்டா அம்மா”  அதற்காக்காக லாரி கிளீனரா  போனபின் கிடைத்த அனுபவம் என்ன தெரியுமா ? “நான் குளிச்ச பொறவு / நீ குளில நாசுவத் தாயளின்னுட்டு / சோப்பு நுரையோடு / என்னை வெளியே வரச்சொல்லி / டிரைவர் குளிக்கப் போனான்” சுய அனுபவமும் சுயசாதி ரணமும் நூல் நெடுக வார்த்தைகளாய் நம்மைப் புரட்டிப் போடுகின்றன . வசவுச் சொற்கள் கவிதையாகுமா ? என சில சுயம்புகள் கேட்கக்கூடும் ! வசவும் வதையுமே வாழ்க்கையாகிப் போனபின் அதைக் கவிதையில் கூறிட வேறென்ன வார்த்தை மயிரிருக்கு ?


பொன்னீலனின் முன்னுரைக் கவிதையும் , நட . சிவகுமாரின் பின்னுரையும் கட்டாயம் படித்தாக வேண்டும் .


 “ கலைவாணன் புதிய கவிதை மொழியோடு அறிந்த மனிதர்களின் அறியாத பக்கங்களை வாசிக்கும்படி வைத்திருக்கிறான்” என நட . சிவகுமாரின் கணிப்பை நான் மட்டுமல்ல கவிதைத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வர் .


இந்து ஒற்றுமை பேசும் மதவெறிக்கூட்டம் என்ன புனுகு பூசினாலும் மறைக்க முடியாமல் அழுகி நாறும் சாதிய ரணத்தின் ஸ்கேன் பதிவு இது ..

[ பிப் 26 அன்று எழுதியது . அன்றே செம்மலருக்கு அனுப்பியது . இனி பிரசுரமாகக்கூடும் ]

0 comments :

Post a Comment