விதி எனப்படுவது....

Posted by அகத்தீ Labels:




விதி எனப்படுவது ..

சு.பொ.அகத்தியலிங்கம்.

எல்லாம் எல்லாம்
எல்லாமும்
சரியாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது !


எத்தனை முறை
நீ கூப்பாடு போட்டாலும்
ஆகப்போவது ஒன்றுமில்லை!


எதை யாருக்கு எப்போது
எப்படி வழங்க வேண்டுமோ
அப்படித்தான் வழங்கப்பட்டிருக்கிறது !


நீயாக கற்பனைசெய்துகொண்டு
நீதி, நிர்வாகம் , அதிகாரம் , ஊடகம்
எல்லாம் பொதுவானது என்றால்
அதற்கு அவர்களா பொறுப்பு!


ஆதிமுதல் இந்த நொடிவரை
ஏன் நாளையும் அதற்கு அடுத்தநாளும்கூட
அவர்களுடையதே !


ஜெர்மானிய தாடிக்காரக் கிழவன் சொன்ன
அரசியல் அரிச்சுவடியை அறியாதவரை
நீ ஏமாளியே
நேற்றும் இன்றும் நாளையும்
நீ ஏமாளியே !


நீ விழித்தெழாமலிருக்க
உன்னை மயக்கும் கலை
அவர்களுக்கு  அத்துப்படி !


உன்னை மிதித்துத் துவைப்பவர்களை
நீயே தோளில் சுமந்து
கோட்டைக்கு கொண்டு செல்வாய் !


உனக்கு அனுக்கிரகம் ஒருபோதும் வழங்காத
தெய்வங்களிடம் நீ மண்டியிடுவாய் !
அனுக்கிரகம் அனைத்தையும் அவர்களுக்கே
வழங்கி உன்னை இழிச்சவாயனாக்கினும்
ஒருபோதும் நீ உணரமாட்டாய் !


எதிரியை நண்பனென்கிறாய்
வில்லனை நாயகனாய் கொண்டாடுகிறாய்!
உயிரைப் போக்கிக் கொள்வதுமடுமா தற்கொலை ?


ஆயினும், நம்பிக்கையோடு
ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் கவிதை ஒன்றை
சமர்பிக்கிறேன்;
உருது எனக்குத் தெரியாதெனினும்
ப.கு.ராஜனின் தமிழாக்கத்திலிருந்து ;

 “அதிகாரத்திலிருப்போர் அனைவருக்கும் எச்சரிக்கை
உங்கள் செயல்பாட்டைத் திரும்பிப்பார்ப்பீர்
பழிக்கு பழியென
மக்கள் திரள் வீதிக்கு வரும்போது
உங்கள் கருணை மனுக்களும்
மன்னிப்புப் பிதற்றல்களும்
புறங்கையால் ஒதுக்கப்படும்
நண்பர்களின் செல்வாக்கும்
காப்பாளர்களின் உதவியும் பயனற்றுப் போகும்”

இன்குலாப் ஜிந்தாபாத்!





1 comments :

  1. Chitra

    நம் மக்கள், போராட வீதிக்கு ஒருகாலும் வர மாட்டார்கள் ஐயா.

Post a Comment