கவிதைகளாய் மட்டும் இருந்து விடவில்லை ..
சு.பொ.அகத்தியலிங்கம்.
இதனை எழுதிய மீனா முஸ்காவின் வயது சுமாராக 17 இருக்கும் . அது என்னசுமாரா? ஆப்கனில் பெண்களுக்குப் பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. நிலக்கண்ணிவெடிப்பில் இவள் காதலன் இறந்துவிட்டான். அங்குள்ள வழக்கப்படி காதலனின் தம்பியை இவள் மணந்தாக வேண்டும்.விருப்பமில்லை. பேசமுடியாது. தன்கோபத்தை குமுறலை ரகசிய வானொலி அமைப்பு மூலம் கவிதையாய்ப் பதிவு செய்கிறாள்.
ஆப்கன் பெண்களுடைய நாட்டுப்புற கவிதை வடிவமே லண்டாய் . இந்த வீரியம் மிக்க கவிதை வடிவில் மறைக்கப்பட்ட சொற்களுக்குள் வரலாறும் எழுச்சியும் கைகோர்க்கும் . யுகத்தின் மௌனத்தை உடைத்து கனத்த சோகத்தை உரக்கப் பேசும். இந்நூல் கவிதையை மட்டுமே பேசவில்லை. கவிதை பூத்த களத்தை, நீக்கமறநிறைந்திருக்கும் நிஜக் கண்ணிவெடிகளுக்கும் கலாச்சார கண்ணிவெடிகளுக்கும் மத்தியிலான பயணத்தைப் பேசுகிறது .
“ஐயோ ! என்னை இறுகப்பற்றாதே / நேற்றிரவு நான் பெண்ணாக மாறத் துவங்கியதிலிருந்து என் முலைகள் எரிந்து கொண்டிருக்கின்றன” இந்த லண்டாய் கவிதை வரிகள் ஆப்கனின் பெண்கள் குரல் மட்டுமா ? உலகம் முழுவதற்குமான பெண்ணியக் குரல் அல்லவா ? இதன் ஆழத்தைப் புரிந்துகொள்ள மூளை மட்டும் போதாது; இதயமும் தேவை . பெண்கள் விழிக்கத் துவங்கிவிட்டனர். அதன் குறியீடே இக்கவிதை.
முல்லாவிற்கு ஆட்டை காணிக்கை கொடுத்து மந்திரம் ஜெபித்தால் நினைத்தது கைகூடும் என்பது அம்மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையையையும் கேள்விக்கோடாரியால் பிளக்கின்றது ஒரு லண்டாய் : “ முல்லா/ என் ஆட்டினைத் திருப்பிக் கொடு / நீ எவ்வளவு மந்திரத்தை எழுதியும்/ எனக்கு ஒரு முத்தம் கூட கிடைக்க வில்லை
”ரணகளமாக்கப்பட்டுள்ள ஆப்கன் யுத்தபூமியில் விளையும் லண்டாய் அதன் வலியை பேசாதிருக்குமா ? “என் காதலன் தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுத்தான் /என் கூந்தலின் ஒற்றை இழையில் அவன் மீது போர்த்தப்படும் சவச்சீலையை நெய்வேன்” என சோகம் கொப்பளிக்கிறாள் ஒரு பெண்; “ என் தாயகத்தை எரித்தழிக்கும் குரூயிஸ் ஏவுகணைகளை அனுப்பியவன் யாரோ/ வெள்ளை மாளிகையை அழித்து அவனையும் கொன்றுவிடு கடவுளே !” என மன்றாடுகிறார் இன்னொரு பெண்; “அவனின் கடவுள் தலிபான்களை அழித்து அவர்களது போருக்கு முடிவு கட்டட்டும் / அவர்கள் ஆப்கன் பெண்களை விதவை யாகவும் பாலியல் தொழிலாளியாகவும் ஆக்கியவர்கள்”என சபிக்கிறார் இன்னொரு பெண் . இப்படி அரசியல் பார்வை சார்ந்தும் வாழ்நிலை சார்ந்தும் வெடிக்கும் வரிகளில் நெருப்பு தகிக்கிறது .
“விடியலுக்கான காத்திருப்பில் ..” என்றதலைப்பிலுள்ள முன்னுரையில் ஆர்.விஜயசங்கர் பெண்களுக்கு எதிராக தலிபான்கள் விதித்துள்ள முப்பதுக்கும் மேற்பட்ட தடைகளை பட்டியலிடுகிறார் . “ இத்தகைய மொழிபெயர்ப்புகள் பல்வேறு மத கலாச்சார அடிப்படை வாதிகளால் பாதிக்கப்பட்டு போராடிவரும் பெண்களை இணைக்கும் பாலமாக இருக்கும்” என்று விஜயசங்கர் கூறுவது மிகையல்ல.
“ பெண்களின் வீரவாளும் வரலாறும்” என மகுடமிட்ட அணிந்துரையில் பாலபாரதி சரியாக மதிப்பிடுகிறார் , “சின்னச் சின்னச் சொற்களில் வந்து விழுகிற லண்டாய் குறுவாளென்று கொண்டால் ;நெடுங்கவிதைதரும் அனுபவமும் அடர்த்தியும் மதம் கட்டமைக்கிற பால்பேதத்தை வீழ்த்த ஏந்திய பெண்களின் நெடுவாளாகத் தோற்றம் தருகிறது .”
2012 ஏப்ரல் 14 ஆம் நாள் காபூலில் குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பரித்த வேளையில் சுவரொட்டியாய் - உரக்கப் பாடிய பாடலாய் வெளிப்பட்டது ஒரு கவிதை . அதை எழுதியவர் பெயர் தெரியாது . முகமும் முகவரியும் மறுக்கப்பட்ட ஆப்கன் பெண்களின் ஆவேசக் கொந்தளிப்பானது அக்கவிதை .
“ கடவுளே ! நீ பெண்ணாக இருந்தால்ஒரு ஆப்கன் பெண்ணாக இருந்திருந் தால்நீ வருத்தப் பட்டிருப்பாய்நீ ஏன் பெண்களைப் படைத்தாய் ?நீ ஏன் பெண்களைப் படைத்தாய்”
இப்படி கேள்வியில் தொடங்கி .ஆப்கன் பெண்களின் வலிகளை குத்தூசிகளாய் அடுத்தடுத்து நெஞ்சில் சொருகிவிட்டு; கடைசியில் அப்பெண்கள் சபதமெடுக்கிறார்கள்:
“கடவுளே ! நான் சபதமிடுகிறேன்பெண்களுக்கு எதிரான அணுகுமுறை யை நீ நிறுத்தும் வரையில்உன்னை மீண்டும் தொழுவதற்கு கையேந்தமாட்டேன் !நான் உம் குரானைத் தொடமாட்டேன்!உம்மை இறைவா என்றழைக்க மாட் டேன் !நான் இறைவா என அழைக்க மாட் டேன்!”
இதற்கும் மேல் என்னத்தைச் சொல்ல .கண்ணீரும் , வலியும் , கவிதையாய் ;வரலாறும் அடக்குமுறையும் சொல் வீச்சாய் நம்மை பிசைகிறது .அழகியலும் அதிர்ச்சிவைத்தியமும் ஒரு சேர தகிக்கும் இக்கவிதைகளையும் ; அது தொடர்பான செய்திகளையும் வீரியம் குன்றாமல் தமிழில்தந்துள்ளார் ச. விசயலட்சுமி. இந்நூலைதமிழுலகிற்கு தந்த அவர் பாராட்டுக்குரியவர்.
லண்டாய் ,
[ஆப்கன் பெண்களின்
வாய்மொழிப் பாடல்களும் கவிதைகளும் ]
தமிழில் : ச.விசயலட்சுமி,
வெளியீடு : தடாகம்,
112 , திருவள்ளுவர் சாலை , திருவான்மியூர் ,
சென்னை – 600 014.
பக் : 112 , விலை : ரூ.120 /
0 comments :
Post a Comment