இலக்கியத்தில் மார்க்சியத் திறனாய்வு இன்றைக்கும் பொருந்துவதா?
மார்க்சியமும்
இலக்கியத்திறானாய்வும்,
ஆசிரியர்
: டெரி ஈகிள்டன்,
தமிழாக்கம்:
அ.குமரேசன் ,
வெளியீடு
: பாரதி புத்தகாலயம் ,
7,இளங்கோ
சாலை ,
சென்னை
600 018.
பக்: 90 .
விலை : ரூ.45/
மார்க்சியத் திறனாய்வு என்பதை கல்வித்துறை ஆய்வுமுறை ஆவணக்கூடத்துடன் சுருக்குவது தவறு...” “கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல் என்பது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வதேயாகும்...” “மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் காலம் முதல் இன்றைய காலம் வரையில் வரலாறு மாறுகிறபோதெல்லாம், அதிலே வேர்கொண்டுள்ள திறனாய்வும் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று வரலாற்றுப்பூர்வமாக ஆராய்வது மார்க்சியத் திறனாய்வு குறித்து விவாதிப்பதற்கான சிறந்த வழிமுறையாக இருக்கும்...”-இவை 1976ம் ஆண்டு இந்நூலின் முதற்பதிப்பிற்கான முன்னுரையில் நூலா சிரியர் டெரி ஈகிள்டன் தெரிவித்த சில கருத்துக்கள். இந்நூல் இதற்கு நியாயம் வழங்கியிருக்கிறது எனில் மிகையல்ல.1980களில், குறிப்பாக சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர், வேறு சில போக்குகள் தலைதூக்கி மார்க்சியத்துக்கும் அது சார்ந்த திறனாய்வு முறைக்கும் இனி எதிர்காலம் இல்லை என்கிற குரல் வலுவாக முன்வைக்கப்பட்ட சூழலில், 2002ல் வெளியிடப்பட்ட இப்புத்தகத்தின் புதிய பதிப்பிற்கெனப் புதிதாக எழுதிய முன்னுரையில் டெரி ஈகிள்டன் இவ்வாறு பிரகடனம் செய்கிறார் : “மார்க்சியத் திறனாய்வு வளம் மிக்கது, உயிர்ப்பு மிக்கது. மற்ற பல ஆய்வு முறை களைப் போல கலை ஆக்கங்கள் குறித்து எந்த அளவுக்கு தெளிவை ஏற்படுத்துகிறது என்பதைக் கொண்டுதான் மார்க்சியத் திறனாய்வை மதிப்பிட வேண்டுமே அல்லாது; அதன் அரசியல் லட்சியங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டனவா இல்லையா என்பதைக் கொண்டல்ல...” “ மானுட அறிவுத் தளத்தில் ஒரு மையமான பகுதியில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.” ஆசிரியரின் பிரகடனமும் நம்பிக்கையும் வெறும் வார்த்தைகளல்ல, உண்மைகள். “இலக்கியமும் வரலாறும்” என்கிற முதல் அத்தியாயம் வழக்கமான மார்க்சிய வாதமாக முன் வைக்கப்படுகிற மேல்கட்டுமானம், அடித்தளம் சார்ந்து பேசப்புகுகிறது என்றாலும், பார்வையில் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது. பெருங்காப்பியங்கள், இதிகாசங்கள் காலத்தை மீறி நிற்பதன் ரகசியத்தையும், இக்காலத்தில் அது போன்றவை ஏன் சாத்தியமும் இல்லை, ஏன் அதற்குத் தேவையும் எழவில்லை என வாதிடுகிறது. மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் சிந்தனைத் தெளிவை இதில் தரிசிக்க முடிகிறது.“ அல்தூசர், மாஷேரே கருத்துகளின் முக்கியக் கூறுகள் பலபொருள் கொள்ளத்தகையவையாக, புதிரானவை யாக இருப்பதை நான் காண்கிறேன்; ஆனால் அவர்கள் முன் மொழிகிற இலக்கியத்துக்கும் சித்தாந்தத்துக்கும் இடையேயான உறவு ஆழ்ந்த சிந்தனைக்குரியது.” -இப்படி அழுத்தமான சித்தாந்த விவாதத்தை இந்த அத்தியாயம் முன்வைக்கிறது. “உருவம்- உள்ளடக்கம்” என்ற இரண்டாவது அத்தியாயமும் தொடர்ந்து விவாதக்களத்தில் உள்ள விவகாரமே. ஜார்ஜ் லூக்காஸ், கோல்ட்மான், பியாமாஷே என குறிப்பிடத்தக்கவர்கள் முன்வைத்த கோட்பாடுகளின் சித்தாந்த உள்ளடக்கத்தையும் முரண்பாடுகளையும் மிக நுட்பமாக அலசுகிறார். படைப்பாளி இதனையெல்லாம் தெரிந்துகொண்டுதான் படைக்கவேண்டும் என்றில்லை; ஆயினும் அவர் படைப்பும் இந்த விவாதத்தில் சிக்கும். ஒரு கட்டத்தில் அவரும் இதனை பயில வேண்டிய நிலை ஏற்படலாம். இது மிக முக்கிய மையமான விவாதம். உடல் இல்லா ஆன்மா பேய்; உயிர் இல்லாத உடல் பிணம். இலக்கியத்தில் உருவம் இல்லாவிடில் பேய்; உள்ளடக்கம் இல்லாவிடில் பிணம்; இரண்டும் இயைந்த இலக்கியமே உயிர்ப்புடன் உலவும் . “ எழுத்தாளரும் கடப்பாடும்” என்ற மூன்றாவது அத்தியாயம் ரஷ்யப் புரட்சிக்கு முன்னும் பின்னும் லெனினின் காலத்தில் “போல்ஷ்விக் கட்சி கலைப் பண்பாட்டின் மீது எவ்விதக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை” ஆனால் ஸ்டாலின் காலத்தில் மாற்றம் ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டுவதுடன்; இதனையொட்டியே நூலின் விவாதமும் நீள்கிறது. பெரும் கலையாக்கங்களை உருவாக்குவதற்கு உணர்வுப்பூர்வமான, முற்போக்கான அரசியல் கடப்பாடு ஒரு கட்டாயத் தேவையாக இருந்தாக வேண்டியிராத காலகட்டங்களும், சமுதாயங்களும் உண்டு,” என்று கூறுவதோடு நில்லாமல், “ஒரு கலைஞராய் உயிர்த்திருப்பதற்கும் உருவாக்குவதற்கும் வெளிப்படையான கடப்பாடாக முடியக்கூடிய வகையிலான கேள்விகளை எழுப்பியாக வேண்டியுள்ள, எடுத்துக்காட்டாக பாசிசம் போன்ற காலகட்டங்களும் இருக்கின்றன,” என்கிறார் டெரி ஈகிள்டன். “நாமே கூட அத்தகைய ஒரு கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா என்ற கேள்வி ஆழ்ந்த சிந்தனைக்குரியது,” என்றும் கூறுகிறார். மெய்யன்றோ? “எழுத்தாளரே உற்பத்தியாளராக” என்ற கடைசி அத்தியாயம் கலையாக்கம் ஒரு தொழிலாகவும் இருக்கிறது என்கிற யதார்த்தத்தில் காலூன்றி சமகாலப் பிரச்சனைகளைப் பேசுகிறது. அதே நேரத்தில் ‘தொழில் நுட்பவாத அபாயம்’ குறித்தும் எச்சரிக்கிறது. மார்க்சியத் திறனா ய்வு என்பது சில பிரச்சனைகளுக்கு விளக்கமளிக்கிற மாற்றுத் தொழில் நுட்பமல்ல. “ஒடுக்குமுறைகளிலிருந்து நாம் விடுதலை பெறுவதன் ஒரு பகுதி அது. ஆகவேதான் அது ஒரு புத்தக நீளத்திற்கு விவாதிக்கத் தகுதியுடையதாகஇருக்கிறது,” என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த இந்த பேராசிரியர். “மானுடத்தின் முழு விடுதலைக்குப் போராடும் உறுதியை வலுப்படுத்தவே மார்க்சியத் திறனாய்வு என்பதை வாதத்திற்கான கருத்தாக அல்லாமல் வரலாற்றுச் சான்றாகவும் விளக்கி வாழ்க்கைப் பாடமாக்கியிருக்கிறார் ஆய்வாளர் டெரி ஈகிள்டன்.” -இவ்வாறு மொழிபெயர்ப்பாளரின் குறிப்பாக அ. குமரேசன் கூறியிருப்பது உயர்வு நவிர்ச்சி அல்ல. முற்றிலும் உண்மை. கடினமான ஆய்வு நூலை கருத்தும் சிதையாமல், மொழிநடையும் சரளமாக அமையுமாறு தமிழாக்கம் செய்துள்ளமைக்குப் பாராட்டுகள். கலை இலக்கியக் களத்தில் இயங்குவோர் மட்டுமல்லாமல் மக்களுக்கான அரசியல், சமூகக் களங்களில் செயல்படுவோரும் படித்து விவாதிக்க வேண்டிய புத்தகம் இது.
-சு.பொ.அகத்தியலிங்கம்
0 comments :
Post a Comment