அறிவியல் பார்வை என்பது ஒவ்வொருத்தரும் சயின்ஸ் பட்டதாரி ஆவதோ?

Posted by அகத்தீ Labels:








அறிவியல் பார்வை என்பது ஒவ்வொருத்தரும்

சயின்ஸ் பட்டதாரி ஆவதோ?




சு.பொ. அகத்தியலிங்கம்

·         மரபு சார்ந்த,  தொன்மம் சார்ந்த விஷயங்களை கேலி பேசுதல் முறையா ? நம் முன்னோர்கள் ஏதோ காரண காரியமின்றி அவற்றைத் தொடர்ந்திருப்பார்களா ?

·         இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் ! நீங்கள் பகுத்தறிவு முற்போக்கு அறிவியல் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது வீணல்லவா ?

·         தத்துவங்களைப் படித்துவிட்டா சாதாரண மக்கள் செயல்படுகிறார்கள்? தத்துவ விசாரணை என்பது வேலைவெட்டி இல்லாதவர்களின் பொழுது போக்கே ;னபதை மறுக்க முடியுமா ?

·         அறிவியலுக்கும் தத்துவத்திற்கும் தொடர்பு ஏதேனும் உண்டா என்ன ? ஒரு பக்கம் அறிவியல் பார்வை வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே மறுபுறம் மார்க்சியம், தத்துவம், அரசியல் என்று குழப்புவது சரியா ?

·         அறிவியல் பார்வை வேண்டும் என்று சொல்கிறீர்களே, அப்படியென்றால் ஒவ்வொருத்தரும்சயின்ஸ் பட்டதாரியாஆக வேண்டுமா? இது வாழ்க்கையில் நடைமுறை சாத்தியமா ?


கேள்விகள் எந்தப் பக்கமிருந்து எப்படி வரும் என்று யாரால் சொல்ல முடியும்? மெய்யாலுமே சந்தேகம் வந்து எழுகிற கேள்விகளும் உண்டு. தன் தரப்பு செயல்களை நியாயப்படுத்த இடக்கு மடக்காக கேள்வி எழுப்புவாரும் உண்டு .  பெரும்பாலும் மதவாதிகளின் அணுகுமுறை இதுவாகத்தான் இருக்கிறது. பதில் சொல்லாமல் ஒதுங்கினால் அவர்கள்  கை வலுப்பெற்றுவிடும்;  பதில் சொல்லப் புகின் நாமும் கொஞ்சம் அதே பாணியில் இடிக்கவும் நேரலாம் . சரி, விசயத்துக்கு வருவோம் .


 மரபு சார்ந்த,  தொன்மம் சார்ந்த விஷயங்களை கேலி பேசுதல் முறையா ? நம் முன்னோர்கள் ஏதோ காரண காரியமின்றி அவற்றைத் தொடர்ந்திருப்பார்களா ?

மரபு என்பது மதவழியிலமைந்த ஆச்சாரங்களா ? அல்ல ? அல்லது மாற்றவே முடியாத மாற்றவே கூடாத கட்டுத்தளையா ? அல்ல .அல்ல . ஒரு சமூகத்தில் புவியியல் இருப்பு சார்ந்ததுதட்பவெப்பம் சார்ந்துசூழல் சார்ந்துமொழி சார்ந்து பன்னெடுங்கால அனுபவத் தொடர்ச்சியில் அந்ததந்த வட்டார மக்கள்  தொடர்கிற சில வழக்கங்கள் . அவை நிச்சயம் உருவாக ஏதேனும் காரண காரியம் இருந்திருக்கக்கூடும் . அதே சமயம் சமூக வளர்ச்சியில் அறிவு முதிர்ச்சியில் பண்பாட்டு சமத்துவத் தேடலில் அந்த மரபுகள் இன்றைக்கும் பொருந்துவனவாக இருப்பின் நிச்சயம் தொடர வேண்டும் . மாற்றம் வேண்டின் அதற்கும் தயாராக இருக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக ;பெண்கள் பூப்புனித நீராட்டு விழா . குழந்தைத் திருமணம் நடப்பில் இருந்த காலத்தில்; ஆணாதிக்க சமூகத்தில் இச்சடங்கு அவசியமானதாகவும் முக்கியமானதாகவும் இருந்ததில் வியப்பில்லை. ஆயின் பாலின சமத்துவம் விழையும் நாகரிக யுகத்தில்  - அறிவியல் புரிதல் மேம்பட்டுள்ள இக்காலத்தில் இந்தச் சடங்கு தேவையே இல்லை .  அதே நேரத்தில் பருவம் எய்திய பெண்ணின் மனப் பதட்டத்தைக் குறைக்கவும் ஆரோக்கியம் பேணவும் சில நாட்கள் ஓய்வும் ,  இரும்புச்  சத்தும் புரதச்சத்தும் மிகுந்த உணவுகளும் அன்பும் ஆறுதலும் தேவை. இந்த கவனிப்பு தொடர வேண்டும். ஆக மரபின் நற்கூறுகளை முன்னெடுப்பதும் காலத்துக்கு ஒவ்வாதவற்றை ஒதுக்குவதும் மிக அவசியம் .
முதல் பிரசவத்தின் போது தாய் வீட்டில் இருப்பது என்பதையே பெண்கள் விரும்புவர் ஏனெனில் ஒரு பெண் தன் உபாதைகளை விருப்பத்தை தன் தாயிடம் பகிர்ந்து கொள்வதுபோல் வேறு யாரிடம் பகிர முடியும் ?தாய் மடி போல் ஆறுதல் தருவது உலகில் வேறேது ? எனவே முதல் பிரசவம் தாயின் கவனிப்பில் என்பது இயன்றவரை பின்பற்றத்தக்க மரபே !
பெண்ணுக்கு பரிசம் போட்டு திருமணம் முடிக்கும் நல்ல மரபைத் துறந்து விட்டு வரதட்சணை எனும் கொடிய மரபைத் தொடரலாமோ ? அதிலும் பரிசம் போடுகிறேன் பேர்வழின்னு சொந்த சாதிக்குள் உறவுக்குள் மணம் செய்வது பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்ககுறைபாடோடு பிறக்கக் காரணம் ஆகலாம் ! ஆக மரபெனிலும் எச்சரிக்கை தேவை .
மரபோ தொன்மமோ எதுவாயினும் பாலின சமத்துவம் , மனித உரிமை , சுயகவுரவம் ,சாதிஎதிர்ப்பு , அறிவியல் முன்னேற்றம் என்கிற அளவுகோலால் அளந்து கொள்வன கொள்வதும் ;தள்ளுவன தள்ளுவதுமே சரி .மாறததும் எதுவும் இல்லை ; மாற்றக்கூடாததும் எதுவும் இல்லை.


 இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் ! நீங்கள் பகுத்தறிவு முற்போக்கு அறிவியல் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது வீணல்லவா ?

மதம் , கடவுள் , மூடநம்பிக்கை இவற்றை மக்கள் அவ்வளவு சீக்கிரம் உதறிவிடமாட்டார்கள் என்பது உண்மையே. இன்னும் எத்தனை நூற்றாண்டு இதற்காக காத்திருக்க வேண்டுமோ என்பதும் முக்கியமான கேள்வியே! படித்தவர்கள்கூட மதவுணர்வில் மூழ்கிக்கிடப்பதும் மெய்யே! பெரும்பாலொர் மதத்தில் மூழ்கிக் கிடப்பதையே ஒழுக்கமான செயலாகக் கருதுவதும் உண்மையே ! அந்தப் போக்கு தொடரவே செய்யும் .
நம்பணி சவால் மிக்கதே ! ஆனால் மக்களிடம் இந்த நம்பிக்கைகள் அப்படியே அன்றுபோல் இன்றும் அழியாமல் - மாற்றமே இல்லாமல் தொடர்கிறது என்பதும் உண்மையல்ல. நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தபடியா எல்லா நம்பிக்கைகளும் தொடர்கிறது ? நரபலி இப்போது மக்களால் ஏற்கப்படுவதில்லையே ! கடலைத் தாண்டுவது ஒரு இந்துவைப் பொறுத்தவரை பாவச் செயலாகவே இருந்த காலம் இருந்தது. மகாத்மாகாந்தி சுயசரிதையிலேயே இதனைக் காணலாம். கணித மேதை ராமானுஜத்துக்கு இதனால் ஏற்பட்ட தொல்லைகள் அறிவோம் . ஆயின் இன்று படிப்பு வேலை இவற்றுக்கு வெளிநாடு போவதில் முன்னிற்கவில்லையா ? வைசூரியும் பிளேக்கும் கடவுளின் சீற்றம் எனக் கருதிய மனிதன் இன்று தடுப்பூசி போடாமலா இருக்கிறான் ?  ஜெபத்தின் மூலம் சகல வியாதிகளையும் குணமாக்க முடியும் எனப் பிரச்சாரம் பண்ணுகிறவர்களே மருத்துவ சேவை செய்ய முன்னிற்பது கண்கூடு.
வாழ்க்கையில் நடைமுறையில் கடவுளையும் மதத்தையும் மறுத்தே பல காரியங்களை ஒவ்வொருவரும்செய்துகொண்டிருக்கிறார்கள் .படிக்கிறார் . வேலை செய்கிறார் . மருத்துவரை நாடுகிறார் . இதன் பொருள் என்ன உலகம் மாயை என்பதை அவர்கள் ஏற்கவில்லை என்பதுதானே ! சொர்க்கம் நரகம் என்ற கற்பிதங்களிலும் மனிதர் முன்னைப்போல் நம்பிக்கை கொண்டவராகவோ பயங் கொண்டவராகவோ இல்லை என்பது யதார்த்த மல்லவா ?
இதன் பொருள் மனிதர்கள் மதத்திலிருந்து மீண்டு விட்டானர் என்பதல்ல . வறுமையும் தோல்வியும் துயரமும் அவரை அந்தப் பக்கம் துரத்தியபடியே இருக்கிறது ; மறுபுறம் அறிவியல் வளர்ச்சியும் அனுபவமும் மறுபக்கம் இழுக்கிறது . அவர் மத போதையில் இருக்க வைத்திட ஆளும் வர்க்கம் முன்னைவிட பெரும் முயற்சி எடுக்கிறது . அறிவியல் சாதனங்கள் வழி அவரை மதத்தில் இருக்கவைத்திட முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன . எனவே இந்த கருத்துப்போர் மேலும் வலுப்பெறும் . தீவிரமடையும் . ஆயினும் மெல்ல மெல்ல மக்கள் விழிபடைவது தவிர்க்க இயலாது . தாமதிக்கலாம் . தடுக்கமுடியாது . அதுவரை பொறுமையாய் கருத்துப்போர் செய்வது மிகமிக அவசியம் .

 தத்துவங்களைப் படித்துவிட்டா சாதாரண மக்கள் செயல்படுகிறார்கள்? தத்துவ விசாரணை என்பது வேலைவெட்டி இல்லாதவர்களின் பொழுது போக்கே ;னபதை மறுக்க முடியுமா ?


வீடு வரை உறவு; வீதிவரை மனைவி; காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?” இது போல் திரைப்படப் பாடல்களில் பேசுவதே தத்துவம் என்ற புரிதல் பொதுப் புத்தியில் உறைந்து போயுள்ளது .மரணத்தை எதிர்கொள்ளவோதுயரத்தில் ஒத்தடம் கொடுக்கவோ பேசும் சொற்களையே தத்துவம் என சாதாரண மனிதர் புரிந்து வைத்திருப்பர்
மதபண்டிதர்கள் பேசும் தத்துவத்தை எத்தனை மனிதர்கள்படித்திருப்பார்கள் ?படிக்காமலே சில கருத்தோட்டங்கள் கதைவழியாகவோ; பேச்சுவழக்கிலொ மக்கள் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டதுன்டு. விதி என்பது அப்படித்தான். மறுபிறவி என்பது அப்படித்தான். எல்லாம் மாயை என்ற சங்கரின் அத்வைதத்தை எத்தனைபேர் அறிவர் ? ஏற்பர் ? எனினும்  ‘உலகே மாயம்என்ற சொல்வழக்கை மக்கள் அதிகம் புழங்குவதுண்டு . ஏதேனும் ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும் போது அதுவும் ஒரு  இயற்பியல் சக்தியாகிவிடுமல்லவா ? அப்படி பல தத்துவங்கள் மக்கள் வாழ்வோடு கலந்துவிட்டதுண்டு. இப்படி சாக்குருவி வேதாந்தமாக வாழ்க்கையை வெறுக்கச் சொல்லித்தருவது மட்டுமா தத்துவம் ? அல்ல .
பிரபஞ்சம் எங்கிருந்து எப்படித் தோன்றியது ? நாம் எங்கே போகிறோம் ?நாம் வாழ்க்கை எதற்கு ? ஏன் இவ்வளவு சிக்கல்கள் ? இது போன்று எழும் கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சியே தத்துவம். இந்த முயற்சி மனித குல முன்னேற்றத்துக்கு தேவையாக இருக்கிறது. “எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்பித்து சாதிக்க விரும்புகிறோமோ அவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் ஞானம்தான் தத்துவம்என்பார் ஜார்ஜ் பொலிட்ஸர்
தத்துவம் என்பது வெட்டி வேலை அல்ல .தத்துவ ஞானமில்லாமலே பழகிப்போன போக்கில் திரும்பத் திரும்ப ஒரு வேலையை ஒருவர் செய்ய முடியும் . தின்று, இன்புற்றிருந்து மடியவும் முடியும் .ஆயினும் மனித குலத்தை நேசிக்கிறஅதன் முன்னேற்றத்தை விழைகிற யாரும் அதற்கான தத்துவத்தைத் தேடாமல் இருக்க முடியாது . இந்த தத்துவம் ஒன்றாகவும் இல்லை . ஒரே மாதிரியாகவும் இல்லை . காலந்தோறும் நாடுதோறும் தத்துவ மோதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது . அவற்றை பொதுநல அக்கறையுள்ளோர் அறிவது அவசியம்.


அறிவியலுக்கும் தத்துவத்திற்கும் தொடர்பு ஏதேனும் உண்டா என்ன ? ஒரு பக்கம் அறிவியல் பார்வை வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே மறுபுறம் மார்க்சியம், தத்துவம், அரசியல் என்று குழப்புவது சரியா ?

ஆதியில் தத்துவத்தேடல் , அறிவியல் , மதம் எல்லாம் ஒன்றாகக் குழம்பித்தான் கிடந்தது. .காலவெளியில் அததற்குரிய தனித்த பாதையை செப்பனிட்டுக்கொண்டன.  பிரபஞ்சம் பற்றிய கண்ணோட்டத்தை அறிவியல் கண்டுபிடிப்புகள் தலைகீழாக மாற்றிப்போட்டன ; ஆயினும் தன் பழைய புரிதலில் இருந்து விடுபட முடியாதவர்கள் தங்கள் தத்துவத்தை அதற்கொப்ப விளக்கினர்.  அறிவியல் மாற்றங்களை ஏற்றுக்கொண்டோர் தங்கள் தத்துவப் பார்வையையே அறிவியலாக விளக்க முயன்றனர் .இப்படி தத்துவ முகாம் பிளவு பட்டது .
மார்க்சியம் தத்துவ உலகில் புதிய தடத்தைப் பதித்தது . இதுவரை உலகைப் பற்றி வியாக்கியானம் செய்வது மட்டுமே தத்துவவாதிகளின் பணி என்றிருந்ததை மார்க்ஸ் மாற்றினார். உலகை மாற்றி அமைப்பதே தத்துவங்களின் பணி என்றார் .  ஜார்ஸ் பொலிட்ஸர் விளக்குகிறபடி சொல்வதானால் : சர்வரோக நிவாரணி மாதிரி எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தயாராக  - பரிகாரம் அளிக்கும்படியான ஒரு வறட்டுத் தத்துவமோகுருட்டு சூத்திரமோ தேவை இல்லை .  பின் எப்படிப்பட்ட தத்துவம் தேவை? என்றைக்கும் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கிறவிஷயங்களையும் நிலைமைகளையும் கணித்துஅலசி ஆராயும் ஒரு ஆய்வுமுறை அணுகுமுறைதான்  தேவை. தத்துவத்தை நடைமுறையிலிருந்து பிரிக்காத ஆய்வுமுறைதத்துவ விவாதத்தை வாழ்க்கையிலிருந்து பிரிக்காத ஒரு ஆய்வு முறை தேவை. எனவேதான் அறிவியல் ரீதியான தத்துவ ஞானமான மார்க்சியத்தை பற்றி பேசுகிறோம் . அதன் தவிர்க்க முடியாத அம்சமான அரசியலும் வருகிறது . அதுகுறித்து பிறகு பார்ப்போம் . மார்க்சியம் தத்துவம் என்றும் சொல்லலாம்; சமூக விஞ்ஞானம் எனச் சொன்னாலும் பிழையில்லை.

 அறிவியல் பார்வை வேண்டும் என்று சொல்கிறீர்களே, அப்படியென்றால் ஒவ்வொருத்தரும்சயின்ஸ் பட்டதாரியாஆக வேண்டுமா? இது வாழ்க்கையில் நடைமுறை சாத்தியமா ?

அறிவியல் பார்வை வேண்டும் என்று சொல்வதை  எல்லொரும் அறிவியல் பட்டதாரியாக வேண்டும் இருக்க வேண்டுமென்று சொல்வதாக சிலர் தப்பா புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல . எண்பதுகளில் பிள்ளையார் பால்குடிப்பதாக ஒரு வதந்தி இணையம் மூலம் பரவி நாட்டையே கலக்கியது .அப்போது பாஜக தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி அதனை நம்பினார்.  பிரச்சாரம் செய்தார். அந்த நேரத்தில் பிரதமராக இருந்த வி.பி. சிங், “கல்லூரியில் என்னுடைய இயற்பியல் பேராசிரியராக இருந்தவர் முரளிமனோகர் ஜோஷி. அப்போது அவர் சொல்லிக்கொடுத்த இயற்பியல் விதிகளை இப்போது புறக்கணிக்கிறார்,” என்றார் . அந்த நேரத்தில் ஒரு ரிக்ஷா ஒட்டுபவர் சொன்னதை என் காதால் கேட்டேன், “சும்மா ரீலு விடுறாங்க! பிள்ளையாரு ஏன் பாயாசத்தைக் குடிக்கல? வழியுறது தெரிஞ்சிரும்ல...”
அந்த ரிக்ஷாக்காரர் பார்வை ஜோஷி பார்வையை விட மேலானது - அறிவியல்பூர்வமானது. வாழ்க்கையில் ஒவ்வொரு நகர்வையும் சந்திக்கிற ஒவ்வொன்றையும் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள முயற்சித்தல் அறிவியல் பார்வையாகும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக எல்லொரும் இருக்க முடியாது. ஆனால் ஏன், எதற்கு, எப்படி, எங்கு, எவ்வாறு, யாரால், எதுக்கு,  என்ன... இப்படி கேள்விகளைக் கேட்டு விடைதேட முயல்வதே அறிவியல் பார்வை. சரி என்று நீரூபிக்கப்பட்டதை சரி என்று ஏற்கவும் தவறென்று நிரூபிக்கப்பட்டதை தவறென்றும் சொல்லவும் ; அப்படி இல்லாத போது இன்னும் எனக்கு தெரியவில்லை என ஒப்புக்கொள்ளவும் தைரியம் வேண்டும் .
இரத்ததிற்கு சாதி இல்லை ; இரத்த தானம் செய்ய ; உறுப்புதானம் செய்ய சாதியோ மதமோ  இல்லை . இதனை மருத்துவ அறிவியல் மெய்பித்துவிட்டது . அப்படி இருந்தும் டாக்டர் பட்டம் படித்தவர் சாதி மத அமைப்புகளில் வெறியோடு செயல்படலாமோ ! அறிவியல் பார்வையை தொலைத்துவிட்ட ஞானக்குருடர்கள் அவர்கள் எனில் தப்பா ? ஒரே தாய் வயிற்றில் தான் ஆணும் பிறக்கிறார் பெண்ணும் பிறக்கிறார். அப்படியிருக்க பெண் மட்டும் பாவ யோனியில் பிறந்தவளெனச் சொல்வதை ஏற்க இயலுமா? இப்படி எதையும் கூர்ந்து நோக்கும் வழக்கம் வந்தாலே போதும் அறிவியல் பார்வை வாழ்க்கை நெடுக கைகூடும் !
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணச் சொன்ன வள்ளுவனே நம் வழிகாட்டி .வாழ்க்கையில் அறிவியல் பார்வை வேண்டும் என்று சொல்வது மத, சாதி மறுப்பு மற்றும் பாலின சமத்துவப் பார்வை மட்டுமா ? இப்பார்வை முக்கியம்.
இது மட்டுமே அறிவியல் பார்வை ஆகாது. பொருட்கள் வாங்குவது , பணம் செலவு செய்வது , ஆரோக்கியம் பேணுவது , உண்பது , உடுத்துவது , படிப்பது , உறவு கொள்வது என சகல கூறுகளிலும் அறிவியல் சார்ந்த அணுகுமுறை தேவை . இதனை சமூகத்திலிருந்து நாம் கற்றுத் தெளியலாம் .


நன்றி : வண்ணக்கதிர்   தீக்கதிர்     ஏப்ரல் 5 , 2015
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif



1 comments :

  1. Samikkannu

    வினா--விடை பாணியில் , எவரும் புரிந்து கொள்ளத் தக்க மிக எளிய நடையில் அமைந்த எழுத்து! நன்றி!

Post a Comment