ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

Posted by அகத்தீ Labels:

 

 “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி”

என்று பட்டுக்கோட்டை பாடிய வரிகள் குழந்தைகளுக்கானதுதான். ஆயின் இன்று சில முதியவர்களை பார்க்கும் போது இதையே பாடத் தோன்றுகிறது .

 

முதுமை என்பது வெறுமே வயதோடு சம்மந்தப்பட்டதல்ல .முதிர்ச்சி உடலுக்கு வரும் போது உள்ளமும் முதிர்ச்சி அடைய வேண்டும், சிந்தனையும் முதிர்ச்சி அடைய வேண்டும் ,பண்பாடும் முதிர்ச்சி அடைய வேண்டும் . அப்போதுதான் கொண்டாடப்பட வேண்டிய முதுமையாக அது இருக்கும் .கிட்டத்தட்ட எல்லோரும் தோற்றுப் போகிற இடம் அதுதான்.

 

பக்குவமாதல் எனில் முடங்கிப் போதலும் அல்ல ; எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தலும் அல்ல .  புரிந்து வழிவிடுதலும் ,புன்னகைத்து தட்டிக் கொடுத்தலும் ,புதிய முயற்சிகளுக்கு நம்பிக்கை தருதலும் ,கேட்காதவரை எதுவும் சொல்லாதிருத்தலும் , கேட்டபின் சொன்னாலும் அதையேதான் அவர்கள் செய்ய வேண்டுமென எதிர்பார்க்காதிருப்பதும் அடங்கும் .

 

ஒவ்வொருவருக்கும் மூளை இருக்கிறது .ஒவ்வொருவரிடமும் அவருவருக்கான நியாயத் தராசும் இருக்கிறது . இதனை ஏற்றால் முதுமையோ இளமையோ உறவும் நட்பும் நீடிக்கும் நிலைக்கும் !!

 

[ இப்படி கருத்து கந்தசாமியாய் உளறாதிருப்பதும் முதுமையின் தேவைதானே !]

 

சுபொஅ.

 

‘வீட்டுக்கு ஒரு கடை’

Posted by அகத்தீ Labels:

 


 

 ‘வீட்டுக்கு ஒரு கடை’

ஒவ்வொரு தெருவிலும்

 யார் வகுத்த திட்டம் ?

பிழைப்பின் நிமித்தமோ ?

 

காய்கறிக் கடையில்

கருவாடும் கரம் மசாலாவும்

பெட்டிக் கடையில்

சுடச்சுட பஜ்ஜியும் போண்டாவும்

 

குட்டி டெக்ஸ்டைல் கடையில்

குடையும் செருப்பும்

பூக்கடையில் கீரைக்கட்டும்

டிபன் செண்டரில் பேன்ஸிஐட்டமும்

 

கலந்து கலந்து கடை திறந்தும்

கொள்வாரின்றி குந்தி இருந்து

குட்டி போட்ட வட்டிக் கடனில்

கைமாறி  கைமாறி  முகம்மாறி

 

தொலைந்து போனவர்களையும்

தொலைந்து கொண்டிருப்பவர்ளையும்

எந்தக் கணக்கில் வரவு வைப்பது ?

’ அச்சா தீன்’ கனவுக் கணக்கிலா ?

 

சுபொஅ.

14/07/24.

 

 


Posted by அகத்தீ Labels:

 




 

போராட்டக்காரனின் சுயகதை மட்டுமல்ல ..

 

“ இணுங்கு” என்கிற தலைப்பைப் பார்த்ததும் இது ஓர் நாவல் என்றுதான் நினைப்பார்கள் . முதல் மூன்று அத்தியாயங்களை படிக்கும் போதும் ,கடைசி அத்தியாயத்தைப் படிக்கும் போதும் ; அதே எண்ணம்தான் மேலிடும் . ஆயின் இது சுயசரிதை என்பதுதான் ஆச்சரியமளிக்கும்.

 

மலைகளின் மீது காதல் கொண்ட ஒருவரின் எழுத்தாய் நூல் தொடங்கி வற்றா அந்தக் காதலோடு இந்நூல் நிறைவு பெறுகிறது .

 

தோழர் போஸ்பாண்டியன் பூர்வீகம் ராமநாதபுரம்தான் எனினும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தலையார் தேயிலைத் தோட்டம் . தேவிகுளம் ,பீர்மேடு ,மூணாறு ,இடுக்கி என இவரின் கால் நடந்து கடந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் இவர் நெஞ்சோடு கலந்த நூலில் அருவியாய் வழிந்தோடுகிறது .பூகோள விவரிப்பு அம்மண்ணின் மைந்தர் என பறை சாற்றுகிறது .  “ஓய்வறியா பயணக் காதலன்” என்பதை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வர் .

 

இவரின் தந்தை தீவிர காங்கிரஸ்காரர். அக்னிதத் என்கிற பட்டப் பெயரிலே அறியப்பட்டவர் . முற்போக்கான வீட்டுச் சூழல் .தந்தை ஊரார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் . தாய் தாயம்மாள்  தந்தை சீனிச்சாமி என்ற அக்னிதத்தும் ஆசிரியப் பணியில் இருந்தனர்.வீட்டு சூழலே சுதந்திர சிந்தனைக்கும் பொது வாழ்வுக்கும் ஊக்கம்தருவதாக இருந்தது .

 

போஸ்பாண்டியன் படிக்கும் போதே இந்திய மாணவர் சங்கப் போராளி , பின்னர் வங்கிப் பணிக்கு வந்த போது அதே போர்க்குணம் தொடர செயல்பட்டவர் . வங்கி மேலாளர்கள் பொதுவாய் நிர்வாகத்துக்கு ஆதரவாய் இருக்கும் போது  இவர் ஊழியர்கள் நலனுக்காகக் குரல் கொடுத்தவர் . பாண்டியன் கிராம வங்கியின் போர்க்குணமிக்க தொழிற்சங்க வரலாற்றில் சில ஏடுகளை தன் சுயசரிதையோடு புரட்டிக் காட்டியுள்ளார் போஸ்பாண்டியன் .

 

அடுத்து மிக முக்கியமானது அறிவொளி இயக்கத்திலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலும் இவர் ஆற்றிய பணிகளும் பெற்ற அனுபவங்களும் நினைத்து மகிழ்வதற்கானது மட்டுமல்ல .உலகுக்கு உரக்கச் சொல்லப்பட வேண்டிய செய்தியும்கூட .  

 

“முக்கியமாக அறிவொளி இயக்கம் மக்களிடம் கல்வியறிவோடு சேர்த்து ,தலைமைப் பண்பையும் உருவாக்கியது .அறிவொளி இயக்கம் செயல்படத் துவங்கிய பிறகே கிராமங்களிலும் ஊராட்சிகளிலும் சுய உதவிக் குழுக்களின் தலைவராக பெண்கள் முன்னிலை பெறுவது அதிகரித்தது . அறிவொளியின் சாதனையாக ,இந்த முப்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பெண்கல்வி அடைந்திருக்கும் உச்சத்தை சுட்டிக்காட்ட முடியும் . அறிவொளி இந்த மாபெரும் முன்னேற்றத்தின் நம்பிக்கை ஊற்றாக இருந்தது “  என போஸ் பாண்டியன் கூறியிருப்பதை அசை போட்டுப் பார்க்கிறேன். அறிவொளி காலத்தின் தினமலர் ஏடு தினசரி அறிவொளி இயக்கத்தின் மீது சேறுவாரி இறைத்ததையும் இடதுசாரி கம்யூனிஸ்ட் புரட்சிப் பிரச்சாரம் செய்வதாக எழுதி குவித்ததையும் நான் இணைத்துப் பார்க்கிறேன். அறிவொளி இயக்கம் செய்த சாதனை இன்னும் விரிவாக ஆழமாக ஆய்வு பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்தும் வேண்டுகோளும் ஆகும் .

 

இவரின் அன்பு மனைவி இந்திரா மேல்நிலைப் பள்ளி ஆசிரியை .ஆசிரியர் போராட்டங்களில் பங்கேற்றவர் . குடும்பமே இணைந்து களத்தில் நின்றிருப்பது பாராட்டுக்குரியது .

 

அண்மையில் நானும் என் இணையரும் பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் செல்ல நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணப்பட்ட போது அதே பெட்டியில் தோழர் போஸ்பாண்டியன் குடும்பமும் பயணித்தது .நான் அவரை கடந்துசெல்லும்  போது எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என யோசித்து கேட்க , இருவரும் கைகுலுக்கி பழைய நினைவுகளில் மூழ்கினோம் . நூல் எழுதிக் கொண்டிருப்பதாய் அப்போது சொன்னார் .

 

தோழர் மாதவராஜ் அணிந்துரையும் , கார்த்திக் புகழேந்தியின் அன்புரையும் வாசிக்கும் போது கூடுதல் நெகிழ்வு உண்டாகிறது .

 

நூலில் ஒரு குறை. போஸ்பாண்டியன் அவர் மனைவி ,தந்தை ,தாய் உள்ளிட்ட குடும்ப புகைப்படங்கள் சிலவற்றையும் சில போராட்டப் படங்களையும் இணைத்திருக்கலாம் .ஏனெனில் வரலாற்று ஆவணத்துக்கு இவை அவசியமல்லவா ?

 

வாசிப்பீர் ! இது ஓர் போராட்டக்காரனின் சுயகதை மட்டுமல்ல ..நாம் அறிய வேண்டிய வரலாற்று நினைவூட்டலும்கூட …

 

இணுங்கு , [ ஒரு போராட்டக்காரரின் நினைவுக் குறிப்புகள்]

ஆசிரியர் : P.S.போஸ்பாண்டியன் ,

வெளியீடு : SIBA ,எண்- 8 வது தெரு , சிபா இல்லம் , அஜீஸ் நகர் , அருப்புக் கோட்டை -626101 . தொடர்புக்கு : 91 94866 67510 .பக்கங்கள் : 142  , விலை : 200 /

 

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

11/07/2024.

 

 

 

 

 


புதுவைத் தொழிலாளிக்குக் கோவைத் தொழிலாளியின் கடிதம்!

Posted by அகத்தீ Labels:

 




புதுவைத் தொழிலாளிக்குக்

கோவைத் தொழிலாளியின் கடிதம்!

 

கவிஞர் தமிழ் ஒளி

 

[  புதுவையை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆண்டுகொண்டிருந்த போது 1936 ஆண்டு ஜூலை மாதம் பஞ்சாலைத் தொழிலாளர்களும் இதரர்களும் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்கும் படியும் , உழைப்புக் கேற்ற ஊதியம் கேட்டும் போராடினர்.

 

ஜூலை 30 ஆம் நாள் போராட்டக்காரர்கள் மீது பிரெஞ்சு ஏகாதிபத்தியம் போலிஸ் படையை ஏவி தாக்குதல் தொடுத்தது .துப்பாக்கிச் சூடு நடத்தியது . 12 தொழிலாளர்கள் உயிர்பலியாகினர் .

 

 

அதே புதுச்சேரியில் சிலர் தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் விளைக்க எட்டப்பர் ஆகியதும் வரலாறு .இது கண்டு கொதித்து எழுந்து கவிஞர் தமிழ் ஒளி எழுதிய கவிதை .

 

ஆண்டு தோறும் இந்நாள் தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது . 1949 ஆம் ஆண்டு ”முன்னணி” ஏட்டில் கவிஞர் தமிழ் ஒளி எழுதிய கவிதை பிரசுரமானது . அன்றைய அரசியல் சூழலோடு இணைந்த இக்கவிதை வரலாற்றை நமக்கு நினைவூட்டுகிறது .தொழிலாளி வர்க்க உணர்வு ஊட்டுகிறது .]

 

தோழனே, 1936 ஜீலையில் -

 

கார் கடலும் வாயடங்க, காற்றும் விசை குறைய

ஊர் முழுதும் உன்னுடைய உத்வேகப் போராட்டம்!

 

அன்று,

 

சங்காரம் செய்திடுவேன்என்றெழுந்த சர்க்காரை

சிங்கப் படைபோலே சீறி யெதிர்த்தடித்து

ரத்தப் புனல்சிந்தி நாளெல்லாம் போர்செய்தாய்

யுத்தக் கடைசியிலே உன்னுடைய வெற்றியொலி!

 

உனது தியாகத்தால்,

 

பெற்ற உரிமையின்று பேடிகளின் சூழ்ச்சியினால்

குற்றுயிராய்ப் போகும் கொடிய நிலைகண்டு

நெஞ்சு கொதித்து நிலைகுலைந்து சோகித்தாய்!

அஞ்சாத உள்ளம் அயர்வில் விழலாமோ?

 

நாங்கள்,

 

முப்பதுநாள் முப்பதுநாள் முப்பதுநாள் போர் தொடுத்தோம்!

அப்பன் இறந்தான்; அமுதனைய தாய் மடிந்தாள்!

கன்னத்தில் பாலூறும் தேனூறும் கைக்குழந்தை

தன்னைக் கொலை செய்தார் தாயின் விழி முன்னே!

 

அன்றைக்கு,

 

எங்கள் குடிசைகளில் எமன் கூத்து! சாக்காடு!

வெங்குருதி வெள்ளம்! மரண வெடியோசை!

சூழ்ந்த இருளில், தியாகச் சுடர் எடுத்தோம்!

சூழ்ந்த இருள் தன்னைச் சுட்டெரித்தோம் தியாகத்தால்!

சங்கம் அளித்திருந்த சாகாத ஒற்றுமையால்

அங்கத்தில் ஊற்றெடுத்த ஆற்றல் பெருக்கால்

குடிசைகளைக் கோட்டைகளாய்க் கொத்தளமாய் மாற்றி

ஒடித்தோம் பகையெலும்பை! உண்மைப் புகழ் பெற்றோம்!

 

எனினும்,

 

தோல்வியெனும் பள்ளத்தைத் தோண்டி வைத்தார், வஞ்சகர்க்கு

வால்பிடித்துப் போட்டி வளர்க்கின்ற பாதகர்கள்!

 

அதனால்

 

எண்ணற்ற துன்பங்கள் இன்னும் தொடர்ந்தனவே!

கண்ணீர் உலரவில்லை! காயங்கள் ஆறவில்லை!

ரத்தம் சொரிந்த உடல் இன்னும்நல மாகவில்லை!

முத்தம் பொழிந்து, முதுமையென்றால் வேண்டாத

கசப்பாய் வெறுக்கவைத்த காதல் மனைவி

தசைகிழித்த குண்டு தாக்குதலால் மண்சுவர்கள்

வாய்பிளந்து நின்ற வடுவின்னும் மாறவில்லை!

வாய்விட்டுச் சொல்லாத சோகவடிவம் இவை!

 

இத்தனையும்,

 

கண்டு மலைத்தோமா? கையலுத்துப் போனோமா?

பண்டுதொட்டுப் பாட்டாளி வர்க்கப் படையெதுவும்

தோல்விப் படுகுழியில் தூர்ந்தொழிந்து போனதுண்டோ?

கால் தடுக்கி நின்றதுண்டோ? காரியத்தில் தாழ்ந்ததுண்டோ?

குகைக்குள் அகப்பட்ட கோவை முதலாளி

தொகையாக எம்மைத் தொலைக்கஆள்குறைப்பு

வேலைப்பளுவென்று வேட்டுக் கிளப்புகிறான்!

ஆலைக் கரும்பெனஎம் அங்கம் பிழிகின்றான்!

 

அவன் தலைக்கு மேல்,

 

வெடித்துவிட்ட பாறை விழுந்தருணம்! மற்றோர்

அடியெடுத்து வைக்குமுனம் ஆள்நிலைமை என்னாமோ?

புதுவை முதலாளி போக்கிவிட்ட தூதர்

எதுகண்டு போய்ச் சொல்ல இங்கு வருகின்றார்!

சாவோலை கொண்டு செல்ல தந்தி, தபால் உண்டு!

பாவோலை தீட்டுதற்குப் பத்திரிகை பக்கமுண்டு!

பின்னர் எதற்கந்தப் பேதையர்கள் இங்குற்றார்?

தின்னும் புலையெச்சில் சோற்றுக் கடன்தீர்க்கும்

நன்றியெண்ணி வந்தனரோ நாய்போன்ற தன்மையினால்?

 

நன்று நன்று தூதுவரே! நாமுரைத்தல் கேளுங்காண்;

யாருக்கு நீங்கள் பிரதிநிதி? அஃதன்றி

யாருக்கு நீங்கள் அமைத்திட்ட சங்கங்கள்?

போட்டியிடச் சங்கம் வைத்தால் பொல்லா எமதூதன்

போட்டியிடும் வழக்கம் பூதலத்தில் உண்டன்றோ!

 

இந்த சரித்திரம் தெரியாதா?

 

நீங்கள் படித்ததெல்லாம் சோற்று நிகண்டுகளும்

வாங்குகின்ற லஞ்சம் வளர்க்கும் சரித்திரமும்

 

அதுவுமன்றி,

 

தேசீயக் காங்கிரஸூம் சோஷலிச தீரர்களும்

பேசியதைக் கேட்டும் பெரியகுபேர்துரையின்

செல்வாக்கைக் கண்டும், சிரத்திற்கு மேல்தொங்கும்

கல்பாறை தன்னைக் கவனிக்க நேரமின்றி

ஆடைகுலைய அவசரமாய் ஓடிவந்தீர்!

பாடைகுலையாதோ? பாவி அவன் மாளானோ?’

என்ற அமங்கலச் சொல் எங்கும் ஒலிக்குங்கால்

நின்றுதான் வந்தீரா? நேர்வதையார் கண்டார்கள்?

வந்த வழிபார்த்துச் செல்லுங்காண்! வையத்தில்

எந்த மனிதர்க்கும் துன்பம்வரில் இப்படித்தான்!”

 

புதுவைப் பாட்டாளி வர்க்கமே!

 

உன்னுடைய கைகளிலே எஃகின் உரமுண்டு!

மன்னர்களை ஓட்டும் மகத்தான சக்தி உண்டு!

சோஷலிசம் பேசிச் சுரண்டலுக்குக் கால்பிடிப்போர்

வேஷங் கிழித்தெறியும் வீரமுண்டு; வன்மையுண்டு!

அன்று புரிந்த சமர் ஆற்றல் உணர்ந்திடுக!

இன்றைக்கே போர் முரசம் எண்டிசையும் கேட்கட்டும்!

 

நாங்கள்,

 

இங்கு வருகின்ற எண்ணற்ற தாக்குதலை

சங்காரம் செய்வோம்! ‘ஜயங்கொண்டார்

 

ஆகிடுவோம்!ஆகையால் நீ தளர்வுறாதே

 

முன்கை எடுத்திடுவாய்! முன்னேறித் தாக்கிடுவாய்!

நின் பெருமை வாழ்க! நிலைபெறுக சோஷலிசம்!

 

முன்னணி– 1949


தூரத்து சொந்தமாகிவிட்டேன்.

Posted by அகத்தீ Labels:

 






13/07/2024 சனிக்கிழமை அன்று தமுஎகச பொன்விழா ஆண்டு தொடக்க விழா மதுரையில் நடை பெறும் செய்தியை அறிந்து மகிழ்ந்தேன். தூரத்து சொந்தம் என்பார்களே அது போல தூரத்து ஆர்வலனாய் நெஞ்சம் நிறைந்து மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

 

அவசரகாலத்தில் [1975-76 ] சிகரம் செந்தில் நாதன் ,தணிகைச் செல்வன் , இளவேனில் , என்.ஆர்.தாசன் ,கி,தா.பச்சையப்பன் ,சுப.செல்வம் போன்றோர்களோடு தோள் இணைந்து தமுஎச [அப்போது தமுஎகச அல்ல]வில் இயங்கிய நினைவுகள் பசுமையானவை .

 

சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியை பழவந்தங்கலில் நாங்கள் துவக்கி இயங்கிய காலம் அது . நான் ,உ.ரா.வரதராசன் ,அல.கந்தன் , தீனதயாளன் ,இளங்கோ என் அண்ணன் சு.பொ.நாராயணன் [ அப்போது அவர் செந்தில்நாதனின் டைப்பிஸ்ட் ]போன்றோர் தமுஎசவாக செயல்பட்டோம் .கவியரங்கம் ,பட்டிமன்றம் மறக்க முடியுமா ? பெரம்பூரில் டிஆர்இயு இளங்கோவும் வேறு சிலரும் கவின்கலைமன்றம் என்கிற பெயரில் நெல்வயல் சாலையில் நடத்திய பட்டிமன்றம் ,கவியங்கம் போன்றவற்றில் பங்கேற்றதை மறக்க முடியுமா ? மயிலாப்பூரில் எஸ்.கே.சீனிவாசனும் புதுவண்ணையில் கி.தா.பச்சையப்பனும் ,திருக்கழுகுன்றத்தில் தணிகையும் தமுஎச வை இயக்கினர் .நாங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். சிகரம் மாத  இதழில் என் கவிதைகள் வெளிவந்தன .சு.பொ.அலி என்பதுதான் தமுஎசவில் நான் செயல்பட்ட போது என் புனைப்பெயர் . [ அகத்திய லிங்கத்தின் முதல் எழுத்துகள் இணைந்து அலியானது ]

 

அவசராலத்தில் நாமக்கல்லில் நடைபெற்ற தமுஎச பயிற்சி முகாமில் நான் பங்கேற்றது சிறப்பான அனுபவம்   .  பயிற்சி முடிந்ததும் போலீஸார் கண்ணில் படாமல்  இரவு சேலத்திலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஜென்ரல் கம்பார்ட்மெண்டில் தோழர் .கே.முத்தையாவை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்னை திரும்பியது ஓர் சாகசக் கதை போன்றது.

 

தோழர் இளவேனிலுக்கு பெண் பேசி முடிக்க தோழர்கள் கே.முத்தையா ,செந்தில்நாதன் உடன் நான் என மூவரும் சைதையிலிருந்து வேளச்சேரிக்கு அவசர காலத்தில் சென்று வந்த அனுபவம் தனி .

 

நான் சென்னை மாவட்ட தமுஎச இணைச் செயலாளராய் இயங்கிய காலத்தில் சென்னை நூலகக் கட்டிடத்தில் மாதந்தோறும் நடத்திய இலக்கிய சந்திப்பில் பேராசிரியர் கோ.கேசவன் ஆற்றிய உரைகள் பின்னர் “ மண்ணும் மனித உறவுகளும்” எனும் நூலாய் வெளிவந்தது .

 

கோலார் தங்கவயலுக்கு ச,செந்தில்நாதனுடன் நானும் சென்று இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற நினைவுகள் இனிமையானவை .

 

இந்திரா பார்த்தசாரதியின் “ குருதிப்புனல்” நாவலைச் சுற்றி மிகப்பெரிய விவாதம் நடந்தது . செந்தில்நாதன் , தணிகை ,இளவேனில் ,நான் எல்லாம் அந்நாவலை கடுமையாக விமர்சிக்கும் முகாம் , அஸ்வகோஷ் ,இளங்கோ நேர் எதிர். சூடு பறந்த விவாதம் . சிக்மண்ட் பிராய்டையும் அவர் தத்துவத்தையும் நான் அறிந்த காலம் அது .

 

கோவை நகராட்சி அரங்கில் நடைபெற்ற ஒரு தமுஎச மாநாட்டுக்கு இலங்கையைச் சார்ந்த க.சிவதம்பி சிறப்பு விருந்தினர் .அவரைக் கூட்டிவருவதும் திருப்பி அனுப்பி வைப்பதும் பாட்டாளி பதிப்பக பாண்டியன் மற்றும் கவிஞர் ஏ.தே ,சுப்பையா பொறுப்பு. நானும் கூடவே இருக்குமாறு பணிக்கப்பட்டேன். அவரோடு நீண்ட நேரம்  நாங்கள் உரையாடியது மிகப்பெரும் வாய்ப்பு . பெரிய அறிவுத் திறப்பு எனலாம் .

 

கோமல் சுவாமிநாதன் வரவேற்புக்குழு தலைவராய் இருந்து சென்னையில் நடத்திய மாநில மாநாட்டில் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்ட நினைவுகள் கண்முன் படமாய் ஓடுகின்றது.

 

அவசரகாலம் விலக்கப்பட்டு தீக்கதிர் 1977 ஆம் ஆண்டு மே தின சிறப்பிதழில்  முதல் பக்கத்தில் அரைப்பக்கம் “வாழ்க்கைப்  பாடலில் சில வரிகள்” எனும் தலைப்பில் கேஷுவல் லேபர்கள்  தினக்கூலிகள் பற்றி நான் எழுதிய கவிதையை தோழர் .கே.முத்தையா பிரசுரித்தார் . அப்போது நான் பெஸ்ட் அண்ட் கிராம்டன் லிப்ட் பேக்டரியில் கேஷுவல் லேபர் . அங்கு சிஐடியு சங்கம் . தோழர் .வி.பி.சிந்தன் தலைவர் . என் கவிதையை பேக்ட்ரி முழுக்க சுவற்றில் ஒட்டிவிட்டார் சங்கச் செயலாளர் கோபிநாத் . ஊதியத்துக்கான சம்பளப் பேச்சுவார்த்தை . தினக்கூலிகளை நிரந்தரம் செய்ய கோரியது சங்கம் .பட்டியலில் முதலில் இருந்த என் பெயரை தவிர்த்தால் எல்லோரையும் நிரந்தரமாக்குவோம் என நிர்வாகம் நிர்ப்பந்தம் .என் கவிதை எதிரொலி .அவன் கட்சி முழுநேர ஊழியராகப் போகிறான் .அவனை விட்டுவிடுங்கள் என்று வி.பி.சி சொல்லிவிட ஒப்பந்தம் கையெழுத்தானது . “ வேலை பறிபோனதும் “ “கட்சி முழுநேர ஊழியரானதுமே” என் கவிதைக்கு கிடைத்த முதல் விருதும் சிறப்பான பரிசும் அங்கீகாரமும் ஆகும் .என் கவனமும் ஈடுபாடும் வாலிபர் சங்கம் நோக்கி முழுமையாக  திரும்பிவிட்டது .தீக்கதிர் பணிக்கு மீண்ட பின் எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபடலானேன். வாலிபர் சங்கத்தில் இருந்த போது “ இளைஞர் முழக்கம்” ஆசிரியராய் இயங்கினேன். இலக்கிய ஆர்வமும் தொடரத்தான் செய்தது .

                       -

நான் சென்னையில் கலைஇலக்கிய அரங்கிற்கு பொறுப்பாக செயல்பட்ட காலத்தில்  “சென்னைக் கலைக்குழு” பிரளயன் பயிற்சி அளிக்க 13 கலைக் குழுக்கள் உதயமானது .  நெல்சன் மண்டேலா சேர்ந்திசைக்குழுவும்  , வெற்றி வளவனின் புதுயுகம் இசைக்குழுவும் முக்கியமானது .என் இணையர் ஆசிரியை பாடகராய் இசைக்குழுலில் இயங்கினார் .சில இசைப் பேழைகளில் அவர் பாடிய பாடலும் இடம் பெற்றது . அதில்  உருவான விடியல் கலைக்குழு தமிழகத்தில் பல ஊருக்கு சென்று வந்தது .

 

சொல்லச் சொல்ல நீளும் …

 

கடைசியாக திருப்பரங்குன்றத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்றேன் .அதன் பிறகு தீக்கதிர் பணிச் சுமை .அ.குமரேசன் ,மயிலை பாலு ,நான் மூவரும் தமுஎச பணிக்கு போவதால் ஏற்படும் நெருக்கடியை தலைவர்கள்  சுட்டிக்காட்டியபின் தீக்கதிர் பொறுப்பாசிரியராக செயல்படும் நான் தமுஎகச விலிருந்து விடுபடுவது என்பது அமைப்பின் முடிவானது .அதன் பின் உறுப்பினராகக்கூட நான் அங்கு இல்லை. தூரத்து சொந்தமாகிவிட்டேன்.

 

எங்கிருந்தாலும் தமுஎகச பொன்விழா எனும் செய்தி அறிந்த மகிழ்வில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் என் நினைவுகளைப் பகிர்ந்தேன் ஆர்வக் கோளாறால்…

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

09/08/2024.

 

 

அடடா ! அந்த நாட்கள்

Posted by அகத்தீ Labels:

 


டவுசர் பாக்கெட்டில்

முறுக்கை ,அதிரசத்தை , ஆரஞ்சு மிட்டாயை

அள்ளிப் போட்டுக்கொண்டு

விளையாடப் போக …

பக்கத்து வீட்டு ராணி பாவடையில் மறைத்து

வெல்லம் ,தேங்காய் கீறல் , மாய்காயும் உப்பும்

கொண்டுவர வட்டமாய் உட்கார்ந்து

பகிர்ந்து உண்டு எல்லோரும் மகிழ

அடடா ! அந்த நாட்கள் இனிமையானவை

வீட்டுக்குத் தெரியாமல்தான் கொண்டு வந்தோம்

திருட்டு அல்ல  பகிர்ந்துண்ணும் பாசம் பேரன்பு.

எந்த வயதில் அந்த அன்பை

எங்கு தொலைத்தோம் ?

 

சுபொஅ.

07/07/24.

 


சுதந்திரம் பற்றி சொல்லப்படாத கதைகள் …..

Posted by அகத்தீ Labels:

 






 

 

சுதந்திரம் பற்றி சொல்லப்படாத கதைகள் …..

 

இந்நூலுக்கு புதிதாய் யாரும் மதிப்புரை எழுதத் தேவை இல்லை. ஏனெனில் அறிஞர் பெருமக்கள் பலரும் இதற்கு தகுந்த பாராட்டுரை வழங்கி இருக்கின்றனர் .  இந்நூலின் முன்பகுதில்  12 பக்கங்களில்  அவற்றின் சாரம் சுருக்கமாக இடம் பெற்றுள்ளன .பேராசிரியர் ஜக்மோகன் அருமையான முன்னுரை வழங்கி இருக்கிறார் .

 

“ சுதந்திரப் போராட்டம் பற்றிய மக்களின் வரலாறு” என பேராசிரியர் ஜக்மோகனின் வரிகள் இந்நூலின் அட்டையின் மேல் பகுதியில் பொறித்திருப்பது அலங்காரச் சொல் அல்ல .அத்தனையும் உண்மை .

 

மெய்யான போராளிகளை புறந்தள்ளி மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட சாவர்க்கரை எல்லாம் கொண்டாடும் ஆட்சியாளர் வாழும் காலத்தில் இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது .

 

இந்நூலில் சுட்டப்பட்டுள்ள தோழர் என் சங்கரய்யா தலைமையில் நான் மக்களுக்காகப் பணியாற்றி இருக்கிறேன் . தோழர் ஆர் .நல்லகண்ணுவோடு நெருங்கிப் பழகி இருக்கிறேன். கர்நாடாகவைச் சார்ந்த மூத்த போராளி H .S. துரைசாமி அவர்கள் பெங்களூரில் கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்வுகளில் நானும் ஓர் ஓரமாய் பார்வையாளர் வரிசையில் இருந்துள்ளேன்.

 

இந்நூலில் சுட்டப்பட்டுள்ள ஆர் .நல்லகண்ணுவைத் தவிர இதரர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை ; ஆயினும் அவர்களின் கடைசி காலத்திலேனும் அவர்களைத் தேடித்தேடி விபரம் சேகரித்து வாய்மொழி வரலாற்றை நுட்பமாய்ப் பெற்று இந்நூலில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது .

 

பகத் சிங்கிற்கும் அவர் தோழர் சிவ வர்மாவுக்கும் நடந்த உரையாடலில் சொல்லப்பட்ட வரிகள் முக்கியமானவை ;

 

“ சுதந்திரத்துக்கான சிப்பாய்களாக நாம் போராட்டச் செயல்பாட்டை விரும்புவோம்.போராடுகையிலும் சிறையில் இருக்கும் போதும் உயிர் இழந்து தியாகிகள் ஆகிறவர்கள் பெரிதும் மதிக்கப்படுவார்கள் . அவர்கள் கட்டிடத்தின் உச்சியில் இருக்கும் முத்துகள் மட்டும்தான் .அவை அந்தக் கட்டிடத்தில் அழகைக்கூட்ட மட்டுமே பயன்படும் .ஆனால் அடித்தளத்தைக் கட்டிய கற்கள் ரொம்பவே முக்கியம் .அவைதாம் அடித்தளத்துக்கு வலு கொடுப்பவை.அவைதாம் பல வருடங்களுக்கு சுமையைத் தாங்கப் போகிறவை.”

 

 அப்படிப்பட்ட பலரை வரலாறு சொல்லாமல் விட்டுவிடும் .தேடித்தேடி சொல்வது அவசியம் .அதனை இந்நூல் செய்துள்ளது .புகழ்மிகு இதழியலாளர் பி.சாய்நாத்  ஆங்கிலத்தில் எழுதிய நூலை நன்கு தமிழாக்கம் செய்திருக்கிறார் ராஜசங்கீதன்.

 

மகாராஷ்டிராவில் டூபான் சேனா [சூறாவழிப்படை] வைச் சார்ந்த ஹெளசாபாய் பாடில் , ஒரிசாவில் சபர் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த தெமத்தி தெய் சபார் , ராஜஸ்தானைச் சார்ந்த ஷோபாராம் கெஹெர்வர் , தெலுங்கானா வீரப்போராளி தோழர் மல்லு ஸ்வராஜ்யம் , மகாராஷ்டிரா சூறாவளிப்படையைச் சார்ந்த கேப்டன்பாவு ,ராமச்சந்திரா ஸ்ரீபதி லாத் , காந்தியின் தொண்டர் ஒடிசா நபரங்பூரைச் சார்ந்த பாஜி முகமது , நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்காகாக வன முகாம்களில் உணவு சமைத்துக் கொண்டிருந்த ஒடிசா  லஷ்மி பாண்டா , ரவுடி கிராமம் என ஓர் கிராமத்தையே அழைக்கும் அளவுக்கு சமர் புரிந்த ஒடிசா சமாரு பரிதா , அதே கிராமத்தில் ஜிதேந்திர பிரதான் , ரயிலைக் கொள்ளையடித்து பிரிட்டிஷாரை கலங்க வைத்த சூறாவளிப் படையின் கணபதி பால் யாதவ் , கணவர்  பைத்யநாத் மஹாதாவுக்கு துணையாக ஆபத்தையும் பொருட்படுத்தாது  தலைமறைவுப் போராளிகளுக்கு தொடர்ந்து உணவளித்த மேற்கு வங்க புருலியாவைச் சார்ந்த பபானி மஹாதா ,புரூலியாவின் இன்னொரு பழங்குடிப் போராளி தெலு மஹாதோ , தோழர்கள் என் .சங்கரய்யா ,ஆர்.நல்லகண்ணு , H.S ,துரைசாமி என 16 பேர்களின் வீரகதைகள் இந்நூலில் உள்ளன .

 

 

1997 விடுதலை பொன்விழா ஆண்டை யொட்டி ஒரு ஆண்டு முழுவதும் நான் தீக்கதிரில் தொடராக எழுதி பின்னர் 1998 ல் நூல் வடிவம் பெற்ற [ 2021ல் இரண்டாம் பதிப்பு ] “ விடுதலைத் தழும்பு” எனும் 592 பக்க நூலில் விடுதலைப் போரின் மறைக்கப்பட்ட வரலாற்றின் பல முகங்களைக் காட்டி இருப்பேன். சில நூறு போராளிகளைச் சுட்டி இருப்பேன் . நான் அதை எழுதிகிற போது என் முன் கிடந்த நூல்கள் ,தரவுகளிலிருந்து பல செய்திகளைச் சொன்னேன் .ஆயினும் சொல்லப்படாத செய்திகள் இன்னும் அதிகம் உண்டு என முன்னுரையில் சொன்னேன் . இந்நூலில் மேலும் பல செய்திகளை முகங்களை நமக்கு உயிரோட்டமாய் பெரும் இதழியலாளர் பி.சாய்நாத் தந்துள்ளார் . வாசிப்போம் .கற்றுணர்வோம். நான் அன்று முன்னுரையில் சொன்ன சில வரிகளோடு இந்த அறிமுகத்தை முடித்துக் கொள்கிறேன்.

“தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அதன் பல முகங்களை பல கிளைகளை பலங்களை பலகீனங்களை ; எப்போது இளைய தலைமுறைக்கு ஒளிவு மறைவு இன்றிச் சொல்லித் தருகிறோமோ அப்போதே வெற்றிப் பாதையில் முதல் அடியை வைத்துவிட்டோம் என்று பொருள் .”

 

இறுதி நாயகர்கள் , ஆசிரியர் : பி.சாய்நாத், தமிழில் : ராஜசங்கீதன்.

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,

E mail :  bharathiputhakalayam@gmail.com   / www.thamizhbooks.com

பக்கங்கள் : 296 , விலை : ரூ.290 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

04/07/2024.