இதோ இங்கே
ஒரு அரிய புகைப்படம் . 
உற்றுப்பாருங்கள்
.மாவீரன் தோழர் பகத்சிங்கும் தோழர்களும். 
நவ்ஜவான்
பாரத் சபாவின் நூற்றாண்டு இது .
 நூற்றாண்டில் அக்னிக் குஞ்சுகள் .
இன்னும் புரட்சி
நெருப்பை விசிறிக்கொண்டே இருக்கிறது.
1926 மார்ச்
1 அன்று பகத்சிங்கும் அவரது தோழர்களும் அதிகாரபூர்வமாய் நவஜவான் பாரத் சபா என்ற அமைப்பை
முதல் அமைப்பு மாநாட்டில் அறிவித்தனர் .
’நவ் ஜவான்
பாரத் சபா’ [Naujawan bharath sabha  என்ற சொல்
ஹிந்தியும் உருதும் கலந்த ஒரு சொல் . தாருண் பாரத் சங் , [ tarun bharath sangh ]
,அஞ்சுமன் நவ் ஜவானி ஹிந்த் [anjuman nau jawanee hind ] போன்ற பெயர்களை பரிசீலத்த
போதும் இறுதியில் பகத் சிங் முன்மொழிந்த ’நவ் ஜவான் பாரத் சபா’ என்றே பெயரே ஏற்புடையதாயிற்று
. 
முதலில் லெட்டர்
பேட் [ letter pad ] அச்சிட்ட போது நவ் ஜவான் பாரத் சபா என்ற பெயரோடு அடைப்புக் குறிக்குள்
INDIAN YOUTH ASSOCIATION என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார் பகத்சிங் . மேலும்
Service , Sacrifice ,Suffering [தொண்டுசெய் , அர்ப்பணி, பாடுபடு ] என மூன்று முழக்கங்கள்
பொறிக்கப்பட்டிருந்தன .
அமைப்பை உருவாக்குவதில்
பகத் சிங்குடன் , சோகன் சிங் ஜோஸ் , கரம் சிங் மான் ,ராம் சந்தர் ,எம். ஏ.மஜீத் ,எஹ்சான்
அல்லாஹி ,பேராசிரியர் சாபில்தாஸ்.கோபால் சிங் குமாய் ,ஹரி சிங்  உள்ளிட்டோர் இருந்தனர் . இந்த சோகன் சிங் ஏற்கெனவே
மீரட் சதிவழக்கில் சம்மந்தப்பட்டவர் ,பின்னர் கிர்தி கிஷான் கட்சி என்றொரு கட்சியையும்
வழிநடத்தினார் . 
கரம் சிங்
லண்டனில் பார் அட் லா படித்தவர் .கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டவர் . இவர் கிராமப்புறங்களில்
தேசபக்த கனலை விசிறிவிட உழைத்தார் .கேதர் நாத் சைகால்  நவ் ஜவான் பாரத் சபாவில் தானே வந்து இணைகிறார் .
வயது மூத்தவர் என சிலர் அதை ஆட்சேபிக்க , சபாவில் சேர  வயது வரம்பென்ன என்று கேட்கிறார் . கேள்விக்கு
16 – 35 என பகத் சிங் பதில் சொன்னதும் ;  தன்
வயது 34 தான் ஆகவே நானும் சேரலாம் என இணைகிறார் .
லாகூர் [Lahore
], அமிர்தசரஸ் [Amritsar] , லூதியானா [Ludhiana] ,[ ஜலந்தர்] [Jalandhar], மண்டகோமரி
[Montgomery] மற்றும் குஜ்ரன்வாலா [ Gujranwala ] ஆகிய இடங்களில் நவ்ஜவான் பாரத் சபா
செயல்பட்டது .
1922 செளரி
செளரி போராட்டத்தை மகாத்மாகாந்தி திரும்பப் பெற்ற பின்னால் இளைஞர்களிடையே உருவான அதிருப்தியும்
கோபமும் பல்வேறு தீவிரவாத இளைஞர் அமைப்புகள் தோன்ற  செயல்பட சமூக அரசியல் காரணியாயின . அந்த காலகட்டம்
நெருப்பு பொறிகள் பறந்த காலம் .  நவ்ஜவான் பாரத்
சபாவுக்கும் இது பொருந்தும் . 
இளம் தோழர்களே
! என அழைக்கும் அதன் முதல் அறைகூவல் பகத்சிங் ,பகவதி சரண் வோரா இருவர் பெயரால் வெளியான
போது அதன் முதல் பத்தியே இதனை தெளிவு படுத்தும் ;
” இளம் தோழர்களே !
நம் நாடு மிகவும் குழப்பமான
சூழலை எதிர்கொண்டிருக்கிறது . விரக்தியும் அவநம்பிக்கையும் எங்கும் சூழ்ந்துள்ளது
. மிகப் பெரும் தலைவர்களும் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள் . மக்களும் தலைவர்கள் மீதான
நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் .  நாட்டு
விடுதலைக்காக உருப்படியான திட்டமோ , உற்சாகமோ , போராட்டமோ இல்லை . எங்கும் பெரும் குழப்பமே
நிலவுகிறது . ஒரு நாட்டை தட்டி எழுப்பும் போராட்ட வரலாறுகளில் குழப்பமும் தவிர்க்க
முடியாததே !இந்த சிக்கலான காலகட்டத்தில்  ஊழியர்களின்
மன உறுதி சோதனைக்குள்ளாகிறது ! விழுமியங்கள் மறுகட்டமைக்கப்படுகிறது ! சரியான செயல்திட்டம்
கருக்கொள்கிறது ! புதிய எழுச்சி முளைவிடுகிறது ! போராட்டம் தொடங்கிவிட்டால் புதிய எழுச்சி
! புதிய நம்பிக்கை ! மேலும் புதிய எழுச்சி ! மேலும் புதிய நம்பிக்கை !”
அந்த அறிக்கை ஒரிடத்தில்
மிகத் தெளிவாகச் சொல்லும் , ”
மதப் பித்து , மூடநம்பிக்கை  ,பாகுபாடு இவை
எல்லாம் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள் 
. அவை நம் பாதையிலுள்ள தடையரண்கள் என்பது நிரூபனமாகிவிட்டவை ; உடைத்தெறிய வேண்டும்
.சுதந்திரமான சிந்தனைக்கு எதிரான அனைத்தும் புதைந்து போகட்டும் !  இந்து பழமைவாதம் ,இஸ்லாமிய குறுகிய வாதம் , இதர
சின்னத்தனமான மத வாதங்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்துவிட்டு ;  நம்மை சுரண்டுகிற ஒடுக்குகிற அந்நியருக்கு எதிராகப்
போராடும் வேளை இது . இதனை சாதிக்க எல்லா சமூகப் பிரிவிலிருந்தும் புரட்சிகர எண்ணங்கொண்ட
இளைஞர்கள் திரள வேண்டும் .”
அந்த அறிக்கை
ஒடுக்குமுறை ,பொருளாதாரச் சுரண்டல் , விவசாயி தொழிலாளர் வாழ்க்கை படும்பாடு இவற்றை
துடைத்தெறிய அந்நியர் ஆட்சி ஒழிய வேண்டும் என வலியுறுத்தி இறுதியில் ,
“நேர்மையுடனும்
உறுதியுடனும்  “தொண்டு செய் ! பாடுபாடு! அர்ப்பணி!  !  என்ற
மும்முழக்கம்  உங்களுக்கு
ஒரே வழிகாட்டியாக ஆகட்டும்.” என முடியும் .
விழிப்புணர்வு
கருத்தரங்குகள் ,விவாத மேடைகள் ,பொதுக்கூட்டம் , வெளியீடுகள் .போராட்டங்கள் , அணிவகுப்புகள்
என செயல்படத்துவங்கினார்கள் . 
தங்கள் மாநாட்டில்
கத்தார் கட்சி [ புரட்சிக் கட்சி] யின் மாபெரும் வீரத்தியாகி கத்தார் சிங் சரபா வின்
திரு உருவப்படத்தை வைத்து வீரவணக்கம் செலுத்தினர் . அது கண்டு வெகுண்ட  பிரிட்டிஸ் போலீஸ் எச்சரித்தது . கண்காணித்தது .
உருவப்படத்தை பறிமுதல் செய்தது . 
போலீஸ் அதிகாரி
சாண்டர்ஸை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பகத்சிங் கைது செய்யப்பட்ட பின் நவ் ஜவான்
பாரத் சபா இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது . சந்திர சேகர் ஆசாத் ,பகவதி சரண் போன்ற
தீவிரவாதிகள் இந்த அமைப்போடு இருந்தனர்.
1926 மார்ச்
1 ஆம் தேதி நவ்ஜவான் பாரத் சபா அதிகாரபூர்வமாகத் துவக்கப்பட்டாலும் இதன் ஆரம்ப கட்டப்
பணிகள் 1923 ன் இறுதியிலே துவங்கி விட்டதென தோழர் ராம் சந்திரா எழுதிய ‘ History
of Naujawan Jawan Bharath Sabha’ எனும் ஆங்கில நூலில் தெரிவிக்கிறார் . வாய்ப்புள்ளோர்
அந்நூலைத் தேடிப் படிக்கவும் . [கூகிளில் கிடைக்கிறது . ]
உண்மையில்
’இந்துஸ்தாஸ் சோஷலிஸ்ட் குடியரசுக் கழகம்’ என்கிற புரட்சிகர அரசியல் இயக்கத்தின் வெகுஜன
முகமாகவே நவ் ஜவான் பாரத் சபா இருந்தது எனில் மிகை அல்ல . வாயிருந்தும் பேசமுடியாத
ஊமைகளாய் ஆமைகளாய் அடங்கி ஒடுங்கிக் கிடந்த இளைய சமூகத்தை எழவைத்து உரிமை முழக்கமிட
வைத்த மாபெரும் எழுச்சியின் தொடக்கமே நவ் ஜவான் பாரத் சபா.
மார்க்சியம்
,சோசலிசம் ஆகிய கருத்துகள் முழுமையாக பரவாத நிலையிலும் அதன் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தினர்
. அதனையே தங்கள் இலக்காககவும் கொண்டனர் . ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு என்பதில்
சோஷலிசம் இணைந்தே இருந்தது .
 
இந்த அமைப்பில்
இருந்த பலர் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி முகமாயினர் . தொடங்கி மூன்றே ஆண்டுகளில்   1929 இல் நவ்ஜவான் பாரத் சபா தடை செய்யப்பட்டது
. பின்னர் பல்வேறு முகங்களோடு இடதுசாரி இளைஞர்கள் செயல்பட்டனர் . பகத்சிங் ,ராஜ்குரு
, சுகதேவ் மூவரும் மார்ச் 23 ,1931 இல் பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டனர் . இந்திய
விடுதலைப் போரின் மாபெரும் தியாகத்தின் உருவமானார்கள் . இளைஞர்களின் நம்பிக்கை ஒளி
ஆனார்கள்.
போராட்டம்
எங்களால் தொடங்கப்படவும் இல்லை ; எங்களோடு முடிவதுமில்லை என்பதுதானே புரட்சியாளர்கள்
நமக்குச் சொல்வது .
 
1936 இல்
அனைத்திந்திய மாணவர் சம்மேளனம் துவக்கப்பட்டது . நவ் ஜவான் பாரத் சபாவின் தொடர்ச்சிதான்
இதுவும் . இளைஞர்களும் இதில் அங்கமாயிருந்தனர் . 1959 இல் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
துவக்கப்பட்டது . நவ்ஜவான் பாரத் சபா செயல்பட்ட பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1980
இல் DYFI இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  தன்
அமைப்பு மாநாட்டை நடத்தியது . இந்த 1926 இல் உருவாக்கப்பட்ட நவ் ஜவான் பாரத் சபாவின்
தொடர்ச்சிதான் வாரிசுதான்  AISF ,AIYF
,1980 இல் கிளைத்த DYFI யும் அதன் தொடர்ச்சியே ஐயமில்லை . பகத்சிங்கின் வாரிசுகளே இடதுசாரிகள்
!
45 வது அமைப்பு
தினத்தைக் கொண்டாடும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தம் தொப்புள்கொடி உறவான நவ்ஜவான்
பாரத் சபாவின் நூற்றாண்டை பகத்சிங் பிறந்த 
பங்கா கிராமத்தில் [ பஞ்சாபில் லாயல்பூர் மாவட்டத்தில் உள்ளது பங்கா கிராமம்
[ Banga in the Lyallpur
district of the Punjab ] நவம்பர் 3 ஆம் தேதி
கொண்டாடுகிறது . 
ஆயிரம் ஆயிரம் பக்த்சிங்குகள் ராஜகுருக்கள் சுகதேவ்கள் அணி வகுக்க
வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தேசம் இருக்கும் வேளையில் …
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொண்டாடும் நவ்ஜவான் பாரத் சபாவின்
நூற்றாண்டு விழா மிகமிக முக்கியமான தேசபக்த அரசியல் எழுச்சியாகட்டும் ! என் தோழமை மிக்க
வாழ்த்துகள் !!!
[ நவ் ஜவான் பாரத் சபா படம்   Sikh Encyclopedia  விலிருந்து எடுக்கப்பட்டது ]
முன்னாள் வாலிபர்
சு.பொ.அகத்தியலிங்கம்.
31/10/25.
 
 


0 comments :
Post a Comment