கிண்டி மாடி அறை நினைவலைகள்....
கிண்டி ரயில் நிலையம் கேண்டின் அருகிருந்து அண்ணாந்து பார்த்தால்
ஒரு மொட்டை மாடியும் ஒற்றை அறையும் தெரியும்!
அந்த ஒற்றை அறை வரலாற்றுத் துகள்களைப் பேசும்.
தோழர் அண்ணாமலே கீழே குடியிருந்தார். மாடியில் யார் குடி இருந்தார் எனச் சொல்வது சிரமம். அது சிபிஎம் இளம் தோழர்களின் வேடந்தாங்ககலானது.
அங்கே நான் சந்தித்த பழகிய தோழர்களின் பட்டியல் மிகப்பெரிது.
விஜயன், ஹரிபரந்தாமன், ராஜாமணி,வி.பா.கணேசன், வரதராஜன், சின்னராஜு, ராதாகிருஷ்ணன், ஜீ.மணி நினைவுகள் நீள்கிறது.
ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த மாணவர் விடுதியில்தான் ஹரிபரந்தான் தங்கிப் படித்தார். ஐஸ் ஹவுஸ் அருகே அறநிலையத்துறை விடுதியில் கணேசன்.ஆனால் நான் குறிப்பிட்ட மாடி அறையில் பெரும்பாலான பொழுது கரைந்தது.
அவசரகால சிபிஎம் தகவல் தொடர்பு மையமாகவும் அவ்வறை திகழ்ந்தது. தோழர் ஏ.கே.பி அடிக்கடி வந்து போகும் அறை.
தேடப்பட்டு வந்த ஓர் நக்சலைட்டை அந்த மாணவர் விடுதியில் இரண்டு நாட்கள் தங்க வைத்ததும், அப்போது ஜீமணி முன்னெடுப்பில் இரவு முழுவதும் நக்சல் -சிபிஎம் என விவாதப் பொறி பறந்ததும் மறக்க இயலாதவை.
அந்த வேடந்தாங்கலுக்கு சந்துருவும் வந்து போவார். அவசரகால இருட்டிலும் சுவர் முழுக்க கட்சி முழக்கம். சுவரெழுதும்போது வந்த இரவு ரோந்து போலீசை சந்துரு அசால்ட்டாக மிரட்டி அனுப்பியதும் ; ஒரு முறை மகன் வீ பா கணேசனை சந்திக்க வந்த அவன் அப்பா கிண்டி ரயில் ரயில் நிலைய சுவரெழுத்தைப் பார்த்து என் மகனை இதுக்கா படிக்க வைக்கிறேன் என மனம் நொந்ததும் மறக்க முடியாத நினைவுகள்.
கட்சி, தத்துவம், காதல், சோகம், அமைப்பின் பிரச்சனை, இலக்கியம், புத்தகம் இவைகளைப் பரிமாறிக்கொண்டு டீயும் பட்டர் பிஸ்ட்டும் சாப்பிட்ட நாட்கள் அவை.
பின்னர் இருவர் நீதிபதி ஆகிவிட்டனர், கணேசன் அதிகாரி ஆகிவிட்டார்.விஜயன் மின் வாரியம் போனார், ராஜாமணி கொஞ்சம் தடம்மாறி மீண்டு வந்தார். ராதாகிருஷ்ணனும் மணியும் முழுநேர ஊழியர்கள்.விடை பெற்றுவிட்டனர்.
ஒரு நாவலுக்கான களம் அந்த மாடி அறையில் உண்டு. ஆனால் என்ன சிகப்பின் வாசம் ஒங்கி நிற்கும்!
ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டரில் அப்ரெண்டீஸாக இருந்த நான் பின் கட்சி ஊழியர் ஆனேன். இந்த அறை, பழவந்தங்கல், சைதாப்பேட்டை ஆகியவையே என் ஆரம்ப இடதுசாரி அரசியல் களமாகும்.
ஜீ.மணி இந்நினைவுகளை கிளறிவிட்டுவிட்டு விடைபெற்றுவிட்டான்..
0 comments :
Post a Comment