நினைவலைகள்....3

Posted by அகத்தீ

 இன்று காலை ஓர் தோழர் அழைத்தார் அன்பான தோழர்கள் பலரை கொரானா கொண்டு போவதை எண்ணி வேதனை தாங்காமல் புலம்பினார். நானும் புலம்பினேன்.

புலம்பலூடே , "வாழும் போது உரிய அங்கீகாரமும் கொடுக்காமல் பாராட்டவும் செய்யமாமல் செத்த பிறகு வாழ்த்துப்பா பாடுவதைச் சுட்டி " அவர் வருந்தினார்.
அவரோடு உரையாடியதின் சாரம் கீழே!
நான் சொன்னேன் அதுவே உலக இயற்கை. இளம் வயதில் செயலில் வேகமும் புதுமையும் இருக்கும். நிறுவனமோ இயக்கமோ கட்சியோ அப்போது ஊக்கம் கொடுக்கும். அவர்களின் தேவை அது.நமக்கும் ஊக்கம் கூடும்.
நடுத்தர வயதை நெருங்கும் போது ஓர் செக்குமாட்டுத்தனம் வந்துவிடும். அதே நேரம் தேவையும் எதிர்பார்ப்பும் கூடிவிடும்.
உயர் மட்டம் எப்போதும் (விதி விலக்குகளைத் தவிர) தனக்கு கையடக்கமானவர்களையே துணை சேர்க்கும். விருப்பு வெறுப்பு ஒப்பீட்டளவில் மேல்மட்டத்திலேயே அதிகம் நிரம்பி வழியும்.
இந்தச் சூழலில் எந்தக் கட்சி ஆயினும் நிறுவனமாயினும் மேல்மட்டதோடு இணக்கமாகச் செல்ல முடியாதோரும், தவிர்க்க முடியாதபடி தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாதோரும், மாற்றங்களூடே தன்னை மாற்றிக் கொள்ளாதோரும், விருப்பு வெறுப்பு வேண்டியவர் வேண்டாதவர் என்கிற காய்நகர்த்தலில் வெட்டப்படுவர் அல்லது ஓரங்கட்டப்படுவர். நீங்களோ நானோ அதில் விதிவிலக்கல்ல.எங்கும் எல்லா இடத்திலும் இதுவே விதி.
உங்களுக்கான ஓர் தனித்திறமை ஓங்கி நிற்பின் நீங்கள் அனைத்தையும்
மீறி சுடர்வீர். மேல்மட்ட அங்கீகாரம் அப்போது பிரச்சனையே அல்ல.
மரணத்திற்கு பின்னரும் நினைவுகூர அழுத்தமான காலடிச் சுவடுகளை பதிக்க முயல்வீர்! அதுவே மெய்யான அங்கீகாரம் தரும்! அல்லாதோர் எவ்வளவு பெரிய பொறுப்பிலிருந்தாலும் கீழே இறங்கிய நொடியில் நினைவிலிருந்து மறைந்து போவது திண்ணம்.
உங்களின் குருதியில் கலந்த கொள்கைப் பற்றும் அதற்கான உங்களின் தனித்த பங்களிப்பும் மட்டுமே உரிய அங்கீகாரம். மற்றவை நாடக மேடை கிரீடமே!

0 comments :

Post a Comment